வணக்கம் சாரு,
பதினேழாம் தேதி உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஒரு கலையில் நிபுணத்துவம் பெற்ற மனிதரை நேரில் சந்தித்து, உரையாடும் வாய்ப்பு கிட்டும் பொழுது, அதை எப்படிப் பயன் படுத்தவேண்டும் என்பதை இந்தச் சந்திப்பு எனக்குக் கற்றுக் கொடுத்தது. நான் எந்தக் கேள்வியையும் தயார் செய்துகொண்டு வரவில்லை. நீங்கள் எழுதிய புத்தகங்களில், ஒருவருக்கு எழும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், வலைதளத்திலும் உங்கள் வாழ்க்கையை திறந்துகாட்டி விடுகிறீர்கள். அதற்கு மேல் என்ன வேண்டும். இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு, ஒரு படைப்பை உள்வாங்கிக் கொண்டு கேள்வி கேட்பது ஒரு கலை என்று எனக்குத் தோன்றியது. மற்றும் இச்சந்திப்பில், அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர், தொடர்ந்து தன்னுடைய கருத்துக்கு மற்றவர்கள் “ஆமாம் சாமி” போட வேண்டும் என்று எதிர்பார்த்த போது, நான் எந்த வயதிலும் அப்படி ஆகிவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். இந்த மாதிரி ஆட்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்துகொண்டு மற்றவர்களை இம்சை செய்கிறார்கள். இவர்களை “காலாவதியானவர்கள்” என்ற பெட்டியில் அடைத்துவிடலாம்.
உங்களுக்கு என் கையால் உணவு பரிமாறியதில் சந்தோஷம். உங்களின் அசோகா மற்றும் தியாகராஜா நாவல்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி
அப்துல் ரஹ்மான்.
***
செப்டம்பர் பதினேழாம் தேதி ஆரோவில் கிராமத்தில் நடந்த சந்திப்புக்கு சுமார் முப்பத்தைந்து பேர் வந்திருந்தார்கள். இதில் பழைய நண்பர்கள் ஐந்து பேர். மற்ற யாவரும் புதியவர்கள். பெரும்பாலும் இளைஞர்கள். ஒருவர் கூட பெண் இல்லை.
எனக்கு எப்போதும் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். அதிலும் புதிய சூழல் என்றால் தாகம் இரட்டிப்பாக இருக்கும். எத்தனை தண்ணீர் குடித்தாலும் அடங்காது. கோக் குடித்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். முப்பத்தைந்து பேரில் இருபது பேர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள். எப்படியாவது யாரேனும் ஒருவராவது கொஞ்சம் மோர் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று சொன்னேன்.
அதன் பிறகு சந்திப்புக்கு வந்தவர்களில் ஒரு நண்பர் ஸ்விக்கி மூலம் எல்லோருக்குமாக லஸ்ஸி தருவித்தார். இனிப்பு லஸ்ஸி என்பதால் நான் குடிக்கவில்லை. கொஞ்சமாக உப்பு போட்ட நீர்மோர்தான் அந்நேர தாகத்துக்கு உகந்ததாக இருந்திருக்கும். அடுத்த ஆரோவில் சந்திப்பில் அப்படி யாரேனும் நீர்மோர் கொண்டு வந்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
நான் தாகம் என்று சொல்வதை நீங்கள் காட்சி ரூபமாகப் பார்க்க வேண்டுமானால், அல்ஜேப்ரா சந்திப்பில், மேடையில் போய் அமர்ந்ததும் எத்தனை அவசர அவசரமாகத் தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடிக்கிறேன் என்பதை கவனியுங்கள். தண்ணீரைக் குடித்து விட்டுத்தான் ஷோமா பேசுவதையே கவனிக்கத் தொடங்குகிறேன். ஏனென்றால், ஒரு மணி நேரம் தாகமாகக் கிடந்தேன். இத்தனைக்கும் மது வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு சந்திப்பு அது.
கூட்டத்தின் தொடக்கத்திலேயே என்னை யாரும் புகழ வேண்டாம் புகழ்ச்சி மொழிகளை மொத்தமாகத் தவிர்த்து விடுங்கள் என்று சொல்லி விட்டேன். ஒரு சாதனையாளனைப் புகழ வேண்டுமானால் நீங்கள் அவனுக்கு மேலானவனாக இருக்க வேண்டும். அதே துறையில் கூட அல்ல. வேறு துறையாகவும் இருக்கலாம். அல்லது, குறைந்த பட்சம் அவனுக்கு சமமாகவாவது இருக்க வேண்டும். அதனால்தான் கணியன் பெரியோரை வியத்தலும் இலமே என்றான்.
புகழ்ச்சி வார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை. பயனுறும் வகையில் செய்ய வேண்டுமானால், எக்ஸைல் பற்றி ஒரு கட்டுரையோ ஒரு அனுபவப் பதிவோ எழுதலாம்.
எனக்கு பிரியாணி பரிமாறிய அப்துல் ரஹ்மானுக்கு நன்றி. அவருக்கும் மற்றவர்களுக்கும் அவர்களின் வாழ்வு சிறக்க ஒரு அறிவுரை தருகிறேன். கூட்டம் நடக்கும்போதே அவந்திகாவிடமிருந்து போன் வந்தது. இரண்டு மணிக்கு மதிய உணவுக்கான இடைவெளி. அதனால் மதிய இடைவேளையில் அவந்திகாவை அழைத்துப் பேசியதில் இரண்டே முக்கால் ஆகி விட்டது. அவசர அவசரமாக பிரியாணியை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது சீனி என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே, பந்திக்கு முந்து என்று நாடக பாணியில் சொன்னார். எனக்கு சொரேர் என்றது. போய்ப் பார்த்தால் எனக்குக் கிடைத்தது பிரியாணி அல்ல. குஸ்கா. பாத்திரத்தில் ஒரு துண்டு இறைச்சி கூட இல்லை. வெறும் குஸ்கா. அடப் பாவிகளா, அந்த முப்பத்தைந்து பேரில் சாருவுக்கு என்று ஒரே ஒரு துண்டை எடுத்துப் போட்டு ஒரு டப்பாவில் ஒதுக்கி வைத்திருந்தால் நான் மிகவும் நன்றி சொல்லியிருப்பேன் இல்லையா?
அதனால்தான் நான் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே என்னை யாரும் புகழாதீர்கள் என்று வலியுறுத்திக் கூறினேன். ஏனென்றால், யாருக்குமே புகழ்ச்சியை, புகழ் மொழிகளை செயலில் காண்பிப்பது என்று தெரிவதில்லை. யாரும் கற்பிக்கவில்லை.
பாருங்கள், அந்த முப்பத்து நான்கு பேரில் ஒருத்தருக்குக் கூட எனக்கு பிரியாணி எடுத்து வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஏன் முப்பத்தைந்து முப்பத்து நான்காக மாறி விட்டது என்றால், ”கடந்த பத்து ஆண்டுகளாக நானே எல்லாவற்றையும் ஒண்டியாளாக செய்ய வேண்டியிருக்கிறது, நீங்கள் எல்லோரும் எல்லா வேலையையும் என் தலையிலேயே கட்டுகிறீர்கள், அதனால் இனிமேல் நான் இம்மாதிரி வேலைகளைச் செய்ய மாட்டேன்” என்று அறிவித்து விட்டு ஒதுங்கி விட்டார் சீனி. அதனால் வந்த வினைதான் பிரியாணிக்குப் பதிலாக எனக்குக் கிடைத்த குஸ்கா. இத்தனைக்கும் குஸ்கா நல்ல ருசியாகவும் இருந்தது. இத்தனைக்கும் இப்படி ஆகும் என்று வேறு சீனிக்குத் தெரியும். ஆனாலும் இதைச் செய்து முடிக்க அங்கே ஒரு ஆள் இல்லை. அதனால்தான் வீண் புகழ்ச்சி வேண்டாம் என்றேன். ’நான் தாகமாக இருக்கிறேன், எனக்கு நீர்மோர் கொண்டு வர யாருக்கும் தோன்றவில்லை, அப்புறம் என்ன புகழ்ச்சி வார்த்தைகள்’ என்பதே என் எண்ணம். ஆனால் பாருங்கள், அந்த இட்த்தில் ஒரே ஒரு பெண் இருந்திருந்தால் எனக்கு பிரியாணி கிடைத்திருக்கும். இன்னும் இந்திய ஆண்களுக்கு உணவு விஷயத்தில் கவனம் வரவில்லை. எல்லோருமே தின்பதில் மட்டுமே சிந்தனை கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், எல்லா ஆண்களுமே வாழ்நாள் முழுவதும் உணவு விஷயத்தில் பெண்களால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த விஷயம் அவர்களின் சிந்தனையிலேயே இல்லை. இது ஆண்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம். இதில் என்னை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். இது போன்ற விஷயங்களில் நானும் ஒரு பெண்தான். கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறேன்.
இதையெல்லாம் மீறி இந்த முறை நடந்த ஆரோவில் சந்திப்புதான் இதுவரை நடந்த வாசகர் வட்ட சந்திப்புகளிலேயே ஆகச் சிறந்தது என்று தோன்றுகிறது. ஏனென்றால், கலந்து கொண்ட அத்தனை பேருமே என்னுடைய எழுத்து தங்களை, தங்கள் வாழ்க்கையை, வாழ்க்கைப் பார்வையை எப்படி பாதித்திருக்கிறது என்பது பற்றி விரிவாகவே பேசினார்கள். காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்த சந்திப்பு, மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் விட்டு, பிறகு மாலை ஆறு மணி வரை நடந்தது.
என் வாழ்வில் நான் மிகவும் ஆச்சரியப்பட்ட, மகிழ்ச்சி அடைந்த தருணம் அது. எனக்கு முன்பின் அறிமுகமே இல்லாத பலரும் நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகத்திலிருந்து இன்றைய ஔரங்ஸேப் வரை படித்து, அதிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசினார்கள். இத்தனைக்கும் நாங்கள் இந்தச் சந்திப்புக்காக எந்த விளம்பரமும் தரவில்லை. தொடர்ந்து எழுதவில்லை. இரண்டொரு முறை என் ப்ளாகில் அழைத்ததோடு சரி. வினித்திடம் கேட்டபோது கூட பத்துப் பதினைந்து பேர் வருவார்கள் என்றுதான் சொன்னார். ஆனால் வந்தது முப்பத்தைந்து பேர்.
“நம் எழுத்தை இத்தனை பேர் இவ்வளவு கவனமாக, இவ்வளவு உன்னிப்பாகவா வாசிக்கிறார்கள்” என்று வியந்து போனேன்.
அந்த வகையில் இந்த ஆரோவில் சந்திப்பு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
சந்திப்புக்கு வந்திருந்த பவித்ரன், அழகராஜா, சிவகுருநாதன், கமலேஷ், உதயா, அப்துல் ரஹ்மான், Dennis ராஜன், கமாலுத்தீன், அரசு, ரவிக்குமார், ராஜா, அரவிந்த், பகுத்தறவு, லக்ஷ்மி நாராயணன், நவீன், ராஜசேகரன், நிர்மல் (கத்தர்), சிவபால கணேசன், செந்தில் குமார், அஷ்வின், கமால் பாய் மற்றும் பெயர் கொடுக்காத எல்லா நண்பர்களுக்கும், இந்த ஏற்பாடுகளை செவ்வனே நடத்திய வினித், அராத்து, ஒளி முருகவேள் ஆகிய நண்பர்களுக்கும் என் நன்றி.