பிரியாணி

சாரு,

உங்களுக்குத் தனியாகக் கொஞ்சம் பிரியாணியை எடுத்து வைக்காதது பற்றி எழுதியிருந்தீர்கள். வருத்தமாகத்தான் இருந்தது. கறி நிறையவே இருப்பதாக யாரோ கூட்டத்தில் சொன்னதும், அதனால் உங்களுக்கு இருக்கும் என்று நம்பினேன்.

கடைசியில் பார்த்தால் , உங்களுக்குக் கறி இல்லாமல் போய் விட்டது. அது மட்டும் இல்லாமல், நானும் குஷ்கா மட்டும்தான் சாப்பிட்டேன். அடுத்த சந்திப்பில் இம்மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

சந்திப்பில், சில பேர், பிரியாணியை இப்பொதுதான் கண்ணால் பார்ப்பது போல் வெளுத்து வாங்கினார்கள். பல இடத்தில்  இதை கவனித்திருக்கிறேன். எனக்கு ஆச்சரியமாக இருக்கும் இவர்களைப் பார்க்கும் பொழுது.

அடுத்த தடவை, நீங்கள் பாண்டி வரும்பொழுது, முன்கூட்டியே சொன்னால், என் வீட்டில் இருந்து, சீரகச் சம்பா அரிசியில் செய்த பிரியாணியும், கத்திரிக்காய் கட்டாவும் கொண்டுவந்து தருகிறேன்.

எனக்கு ஹோட்டலில் போடுகிற பாஸ்மதி அரிசி அவ்வளவு ருசியுள்ளதாகத் தோன்றவில்லை.

நன்றி

அப்துல் ரஹ்மான்.

அன்புள்ள ரஹ்மான்,

நான் நல்ல பிரியாணி சாப்பிட்டு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன.  இடையில் ஹைதராபாதில் சில தடவைகள் சீனி நல்ல பிரியாணி வாங்கித் தந்திருக்கிறார்.  அது உலகத் தரமான பிரியாணி என்பதில் ஐயமில்லை.  ஆனால் எனக்கு ஹைதராபாத் பிரியாணியை விட நீங்கள் குறிப்பிடும் சீரகச் சம்பா பிரியாணிதான் பிடிக்கும். 

இருபத்தைந்து வயது வரை நாகூரில் என் முஸ்லிம் நண்பர்கள் வீடுகளில் அற்புதமான பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன்.  அதே போன்ற பிரியாணியை அதற்குப் பிறகு இரண்டொரு முறை மட்டுமே – நான் இதற்கு முன் மைலாப்பூரில் அப்பு முதலி முதல் தெருவில் பத்து ஆண்டுகள் வசித்த போது – சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தெரு பணக்கார முஸ்லிம்கள் வசிக்கும் தெரு.  அவர்கள் வீட்டுத் திருமணங்களில் அதே நாகூர் பிரியாணி கிடைக்கும்.  முக்கியமாக, கறியின் நடுவேதான் சோறைப் பார்க்க முடியும்.  பண்டிகைகளின் போதும் கொடுப்பார்கள்.  ஆனால் ஹிந்துக்களின் வீடுகளுக்கு பிரியாணி கொடுக்காமல் வேறு ஏதேனும் இனிப்பு கொடுங்கள் என்று குருமார்கள் சொன்னதால் அதற்குப் பிறகு ஆனந்த பவன் இனிப்புகளே கிடைக்க ஆரம்பித்தன.  துபாயில் மால் வைத்திருக்கும் எதிர்வீட்டுக்காரர் மட்டுமே பயமில்லாமல் கொடுத்துக் கொண்டிருந்தார்.    

மற்றபடி ஊர் பெயர்களில் உள்ள பிரியாணி பிரியாணி கணக்கிலேயே சேராது.  இங்கே வேளச்சேரியில் பாய் வீட்டுக் கல்யாண பிரியாணி சுமார் என்று சொல்லலாம்.  சுமார்தான்.

மேலும், நான் உணவு, தேநீர் விஷயத்தில் நாகூர் நாகூர் என்று சொல்லும் போது ஒரு விஷயம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.  என் எழுத்தைப் படிக்கும் பலரும் நாகூரில் உலகத் தரமான தேநீரும் பிரியாணியும் கிடைக்கும் என்று நினைத்து விட்டார்கள்.  முற்றிலும் தவறு.  நாகூரில் உள்ள உணவகங்களில் இந்த உலகிலேயே மோசமான சாப்பாடும் தேநீரும்தான் கிடைக்கும்.  அதே சமயம் நாகூர் வாழ் முஸ்லிம்கள் வீட்டில் கிடைக்கும் தேநீருக்கும் உணவுக்கும் பிரியாணிக்கும் ஈடு இணை கிடையாது. 

மற்றபடி தமிழக அ-பிராமணர்கள் வீட்டுத் திருமண விசேஷங்களில் போடப்படும் பிரியாணி பிரியாணியே அல்ல.  அதுவும் குஸ்காதான்.  ஒரே ஒரு துண்டு இறைச்சியைக் கூட அதில் நீங்கள் கண்டு பிடிக்க முடியாது.  குஸ்காதான் பிரியாணி என்ற பெயரில் பரிமாறப்படுகிறது.  பல திருமணங்களில் மற்றும் விசேஷங்களில் இப்படி ஏமாந்திருக்கிறேன்.  அதிலிருந்து அபிராமணர் வீட்டு விசேஷங்களில் நான் சாப்பிடுவதில்லை.  சைவ உணவும் கூட திராபையாகத்தான் இருக்கிறது.  பிராமண வீட்டு விசேஷங்களில் மட்டுமே அருமையான விருந்து கிடைக்கிறது.  சமீபத்தில் கூட ஒரு கோடீஸ்வர நண்பர் வீட்டு விசேஷத்தில் பிரியாணி சாப்பிட்டேன்.  குப்பை.  அன்றைய தினம் நான் பட்டினிதான்.  பணம் இருந்தாலும் நல்ல முஸ்லிம் சமையல்காரரை வைக்காவிட்டால் இப்படி குப்பைதான் கிடைக்கும்.    

மேலே நான் விவரித்த காரணங்களால்தான் எல்லோரும் மட்டன் பிரியாணி என்றால் அடித்து மோதுகிறார்கள்.  சிக்கன் பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லை.   பிடிக்காது.  அன்றைய தினம் ஆரோவில் குஸ்கா நன்றாகவே இருந்தது.   

ஆனால் சீனி இந்த சந்திப்புகளையெல்லாம் நிர்வகித்து நடத்திக் கொண்டிருந்த போது நான் நள்ளிரவு இரண்டு மணிக்குத் தூங்கப் போகும்போது தயிர் சாதம் கேட்பேன்.  அது தெரிந்து எனக்காக ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்து வைத்திருப்பார் சீனி.  அப்போதெல்லாம் நான் எந்நேரத்தில் உறங்கச் சென்றாலும் கொஞ்சம் தயிர்சாதம் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.  இப்போது இரவில் எதுவும் சாப்பிடுவதில்லை.  அதனால்தான் இந்தக் காலை நேரக் கொலைப்பசி கொடூர அனுபவங்கள். 

வீட்டில் அவந்திகா நாகூர் மாதிரி பிரியாணி செய்வாள்.  ஆனால் சில ஆண்டுகளாக வீட்டில் மீனைத் தவிர வேறு எதுவும் சமைப்பதில்லை. 

அடுத்த முறை ஆரோவில் வரும்போது முன்கூட்டியே சொல்கிறேன்.  ஆனால் வீட்டில் உள்ள பெண்களை சிரமப்படுத்துவதும் எனக்குப் பிடிக்காத விஷயம்.  பார்க்கலாம். 

தங்கள் அன்புக்கு நன்றி.

சாரு