வணக்கம் சாரு.
விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதும் சொல்ல நினைத்தேன். தாவித் திரியும் மனநிலையில் அப்பொழுது சொல்லவில்லை. வாழ்த்துகள்.
ஓய்வு நேரங்களின் பெரும்பகுதியை வாசிப்பிற்குத் தருவதற்கான நெருக்கடிகள் இல்லாது இருந்த காலகட்டத்தில் எங்கள் ஊர் நூலகங்களே அதற்கு உதவின. ஆனால், அங்கிருந்து கிடைத்த பெரும்பாலான நூல்களை வாசிப்பதற்கான மனநிலையை நான் கடந்திருந்தேன். ஆரம்பகால வாசகனுக்கு, பொழுதுபோக்கு சார்ந்த வாசிப்புகளுக்கான புத்தகங்களே நூலகங்களை அடைத்து நின்றன. இப்போதும் அத்தனை முன்னேற்றம் இல்லை என்றபோதும் இலக்கியம் சார்ந்த ஆளுமைகளின் படைப்புகளைத் தேடினால் எடுக்கும் நிலை இன்று இருக்கிறது. அதனால் கடைகளில் வாசிப்பதற்காக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். புத்தகக் கடை ஒன்றிற்குச் சென்றிருந்த போது ஆசிரியர் பெயர் வித்தியாசமாக இருந்த காரணத்தால் புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்ததும் உடன் வந்திருந்த என்னை விட வயதிலும், வாசிப்பிலும் மூத்த நண்பர், ”இப்போதைக்கு இந்த மாதிரி புத்தகம் எல்லாம் வேண்டாம்” என்று கையில் இருந்ததை வாங்கி மீண்டும் ரேக்கில் வைத்தார். அந்தப் பெயர் தந்த வித்தியாசமும் அவரின் மறுப்பும் சாரு நிவேதிதா என்ற பெயரை என்னுள் காயாமல் தங்கிப் போக வைத்தது. காலசுழற்சியில் உங்களின் நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். விலகி ஓடும் அளவுக்கு எதுவும் இல்லை என்று தோன்றியது. ஒருவித பொதுப்புத்தி நிலையே படைப்பின் மீதும், படைப்புகளின் மீதும் மறுப்பும், வெறுப்புமான மனநிலை கொள்ள காரணம் என நினைக்கிறேன். ஏனென்றால் விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு அறிவிக்கப்பட்டதும் எழுதப்பட்ட எதிர்வினைகள், பாராட்டுகள், விமர்சனங்கள் உள்ளிட்ட எல்லா இத்யாதிகளிலும் சொல்லப்படுபவைகளை வாசிக்கும் போது உங்களின் படைப்பு வாசித்தவர்களுக்கு ஏதோ ஒன்றைக் கொடுத்திருக்கிறது; கண்டடைய வைத்திருக்கிறது; (உங்களின் பயணக் கட்டுரைகளை வாசித்த பின்புதான் என்னளவில் நான் வாசித்திருந்த பயண நூல்கள் எல்லாம் சுற்றுலா கையேடு ரகம் என்பதைக் கண்டு கொண்டேன். அடுத்த நாளே என் நூலக அடுக்கில் இருந்த அப்படியான நூல்களைக் களை எடுத்தேன்). அவர்கள் மூச்சு முட்டிக் கிடந்தவைகளிலிருந்து மீளுருவாக்கம் செய்திருக்கிறது என்பதும், அதை அனுபவித்து உணர்ந்தவர்கள் கூட பொதுப்புத்தி மனநிலையில் அசிங்கம் – காமம் என மனதுக்குள் கூடை போட்டு மூடி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் அப்பட்டமாகவே தெரிகிறது. விருது அறிவிப்பு தந்த முரண் அந்த அப்பட்டத்தை அடித்து நொறுக்கி உங்கள் படைப்பு தந்த அல்லது அதன் வழி பெற்ற இலகு நிலையை வெளிச்சமிட வைத்திருக்கிறது. இந்த சூழலில் எனக்கொரு கேள்வி எழுகிறது.
முன்முடிபுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் வாசகர்களின் கட்டுகளை அவிழ்த்து விடவும், சம்பந்தப்பட்ட படைப்பு தந்த உள்ளார்ந்த நிலையை முகமூடி போட்டு மறைக்காமல் வெளிக்காட்டவும் விருது, நேர்காணல் உள்ளிட்ட ஏதோ ஒன்றின் வழியாக கிளர்த்தப்படும் விவாதங்களும், எதிர்வினைகளும் அவசியம் என நினைக்கிறீர்களா? அதனால்தான் தமிழ் இலக்கியப் பரப்பில் படைப்பாளி – வாசக சந்திப்புகளை நிகழ்த்த வேண்டியது மறுதலிக்கக் கூடியதல்ல என்கிறீர்களா?
சிநேகமுடன்
மு. கோபி சரபோஜி
21.9.2022.
அன்புள்ள கோபி சரபோஜி,
உங்கள் கடிதத்தின் உள்ளடக்கம் மிகவும் எளிமையான விஷயங்களைத்தான் தாங்கியுள்ளது. அதற்குப் போய் இத்தனை கடின நடை தேவையா? பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சிறுகதைகளின் மொழி அடர்த்தியாக இருக்கும். ஆனால் கடிதங்களில் கூட இது தேவையா? விஷயம் ஆழமானதாக இருந்தால் மொழியும் அடர்த்தியாக இருக்கலாம். ஆனால் எளிய விஷயங்களை எளிமையாகச் சொல்லலாமே?
உங்கள் கடிதத்தில் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நான் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
வாழ்த்துக்கு நன்றி.
சாரு