ஈகோ

பொதுவாக மனிதர்களோடு சேர முடியவில்லை.  சேர்ந்து கூட்டாக வெளியூர் செல்ல முடியவில்லை.  அடுத்த மனிதனே பெரும் துன்பமாக இருக்கிறான்.  ஏன் இப்படி என்று பதினைந்து ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பதினைந்து ஆண்டுகள் என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது.  பதினைந்து ஆண்டுகளாகத்தான் சீனியை எனக்குத் தெரியும்.  சீனி என் வாழ்வில் நுழைந்த பிறகுதான் இந்தப் பிரச்சினை ஸ்தூலமாகத் தெரிய ஆரம்பித்தது.  அதாவது, பிரச்சினை சீனியின் மூலமாக அல்ல. சீனியும் நானும் அடுத்த மனிதரை எங்களோடு சேர்த்துக் கொள்ளும்போது பிரச்சினை உருவாகிறது.  இப்படி ஒருமுறை உருவான பிரச்சினையில்தான் என் வாசகர் வட்டமே இரண்டாகப் பிரிந்தது. 

மனிதர்களுடனான பிரச்சினையின் காரண ஊற்று பற்றித்தான் பதினைந்து ஆண்டுகளாக எனக்குள் குழப்பம்.  அது இன்று காலை சற்று முன்பு தெளிவாகியது.

என் வீட்டில் இப்போது ஒரு புதிய உறுப்பினர்.  வயது நான்கு மாதம்.  பெயர் வேதவ்யான்.  நான் வைத்த பெயர் அல்ல.  கார்த்திக் வைத்த பெயர்.  ஏன் வைத்தான் எப்படி வைத்தான் என்று தெரியாது.  வேதா என்று அழைக்கிறார்கள்.  நான் ரவுடி, பட்டாணி, பிஸ்க்கான் என்று பல பெயர்களில் அழைக்கிறேன்.  அவனைப் பார்த்துக் கொள்ள ஒரு செவிலித் தாயும் உண்டு.  அவருக்கு ஒரு முப்பத்தைந்து வயது இருக்கும். 

மனிதர்களோடு என்ன பிரச்சினை என்ற இத்தனை ஆண்டுக் குழப்பத்துக்கு இன்று விடை கிடைத்தது.  அவந்திகாவுக்கு வேதாவின் காரணத்தால் வேலை அதிகமாகி விட்ட்து.  பத்து ஆள் வேலையை அவள் ஒருத்தியே பார்க்கிறாள்.  அப்படியென்றால், நாம் நம்மால் முடிந்தவரை அவளுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதுதான் மனிதாபிமானம். 

குளிப்பாட்டுவதற்காக அவந்திகா குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.  குளிப்பதற்கான தளவாடங்களை எடுத்துக் கொள்ள வேண்டியது செவிலிப் பெண்ணின் வேலை.  பிளாஸ்டிக் ஸ்டூல்களும் வேண்டும். 

“இந்த ரெண்டு ஸ்டூலையும் எடுத்துக்கோங்க.”  இது அவந்திகா.

“ரெண்டு ஸ்டூல் எதுக்குமா?  ஒண்ணு போதுமே?” இது செவிலி.

உடல் வலியினால் நொந்து போயிருந்த அவந்திகா “ரெண்டு வேணும்மா, ரெண்டையும் எடுத்துக்கோங்க” என்று திரும்பவும் சொன்னாள். 

செவிலி ரொம்பவும் பணிவான குரலில் “ரெண்டு ஸ்டூல் தேவைப்படாதுமா, ஒண்ணே போதும்” என்றார்.

அவந்திகா கடுப்பாகி விட்டாள்.  குரலை உயர்த்தி “ரெண்டு ஸ்டூலையும் எடுத்துக்கோங்க.  தயவுசெஞ்சு விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காதீங்க.  ப்ளீஸ்” என்றாள். 

நானாக இருந்தால் அந்தக் கணமே துரத்தி விட்டிருப்பேன்.  நான் பார்த்த நூற்றுக்கு நூறு மனிதர்களுமே இந்த செவிலிப் பெண்ணைப் போல்தான் இருக்கிறார்கள்.  இரண்டு ஸ்டூல் எதற்கு என்றால், இரண்டு பேர் குளிப்பாட்டப் போகிறார்கள், அதனால் அல்ல.  ஒரு ஸ்டூலில் அவந்திகா அமர, இரண்டாவது ஸ்டூலில் குளியலுக்குத் தேவையான சாமான்செட்டுகள் வைக்க. 

தெரியாவிட்டால் சொல்வதையாவது கேட்க வேண்டும்.

எனக்கு ஏன் சீனியோடு பிரச்சினை வருவதில்லை என்றால், எனக்கு இலக்கியம் தவிர வேறு ஒரு மயிரும் தெரியாது என்று மிகத் தெளிவாகத் தெரியும்.  அதனால் சீனி சொல்வதைச் செய்து விடுவேன்.  மற்றவர்களோ சீனியை விடவும் தமக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.  அங்கேதான் பிரச்சினை எழுகிறது.  தெரிந்தால் சீனிக்கு ரொம்பவும் நல்லது.  அவருக்கு இந்தக் கேப்டன் வேலை மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது.  எனக்காகத்தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்.  அவர் செய்யவில்லை என்றால் முக்கியமாக நான் பாதிக்கப்படுவேன்.

எங்களோடு உள்ள பலரும் மேலே குறிப்பிட்ட செவிலித்தாய் மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள்.  இது பற்றி நான் எழுதும் நூறாவது பதிவு இது.  ஆனாலும் ஒருத்தர் கூட கற்றுக் கொள்ளவில்லை.  ஏதோ சீனிக்கு நான் சப்போர்ட் செய்வதாக நினைக்கிறார்கள்.  ஐயா, இந்தக் கேப்டன் வேலையை சீனி வெறுக்கிறார்.  ஆனால் செய்ய ஆள் இல்லை. 

உதாரணமாக, இரவு உரையாடலின் போது சாப்பிட பழம் தேவை.  டவுனுக்குப் போயிருக்கும் குழுவிடம் பழம் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொல்வார் சீனி.  அவர்கள் முழு பலாப்பழம், வெள்ளரிப்பழம் போல் சில பழங்களை வாங்கி வருவார்கள்.   பிறகு சீனிதான் போய் ஆயிரம் ரூபாய்க்கு அன்றைய தேவைக்கான பழங்களை வாங்கி வருவார்.  சீனி வந்ததும் அந்தப் பழங்கள் ஒரே மணி நேரத்தில் தீர்ந்து விடும்.  இது கூடத் தவறான உதாரணம்தான்.  மேலே குறிப்பிட்ட செவிலிப் பெண் போலவே செய்வார்கள். 

இனிமேலாவது நமது சந்திப்புகளில் செவிலிப்பெண் செய்தது போல் செய்து டார்ச்சர் கொடுக்காதீர்கள், ப்ளீஸ்.