முந்தாநாள் சீனி ஒரு கதை அனுப்பியிருந்தார். ஐந்தே நிமிடத்தில் படித்து விட்டு சூப்பர்ப் என்று வாட்ஸப் செய்திருந்தேன். இன்று சீனி ஃபோன் பண்ணி, கதை படிக்க நேரம் இருந்ததா என்று கேட்டார். அப்போதே பதில் அனுப்பி விட்டேனே என்றேன். என் பதில் அவருக்குப் போய்ச் சேரவில்லை போல. இது போன்ற சிறிய விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் நம் வாசகர் வட்ட நண்பர்களுடன் தகவல் தொடர்பில் பிரச்சினையே வந்ததில்லை. இதற்கு வெளியே தகவல் தொடர்பில் எனக்கு மன உளைச்சல் அளிக்காமல் இருப்பவர் ஜெயமோகன். பயங்கர பிஸியான ஆள். ஆனாலும் ஏதாவது கேட்டாலோ, ஃபோன் பண்ணினாலோ, ரெண்டு மணி நேரத்தில் பதில் வந்து விடும். அல்லது, அழைத்து விடுவார். இப்போது மட்டும் அல்ல. எப்போதும். ஒருமுறை “நான் மேடையில் இருக்கிறேன்” என்று கூட பதில் மெஸேஜ் அனுப்பினார். தகவல் தொடர்பில் நம்பர் ஒன்னான நான் கூட மேடையில் இருக்கும்போது தகவல் தொடர்புக்காக ஃபோனைத் தொட மாட்டேன்.
விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களில் நாலைந்து பேர் எனக்கும் நண்பர்கள். அல்லது, பரிச்சயம் கொண்டவர்கள். ஆனால் மீனாம்பிகை தவிர மற்ற யாரோடுமே என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அல்லது, தகவல் தொடர்பில் குழப்பம் உண்டாகிறது. ஒரு சின்ன தகவல் கேட்பதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு நண்பரை (விஷ்ணுபுரம் வட்டம்) அழைத்தேன். இன்று வரை பதில் அழைப்பு இல்லை. பல சந்தர்ப்பங்களில் ஃபோனை உடனே எடுக்க முடியாது. அது பிரச்சினையே இல்லை. ஆனால் இரண்டு தினங்களாகவா பதில் அழைப்பு கொடுக்க முடியாது? அவரோடு இது மூன்றாவது முறையோ நான்காவது முறையோ இப்படி ஆகிறது. சரி, அவருடைய தொலைபேசி எண்ணை நீக்கி விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
இன்னும் கூட வேறு சிலருடன் (விஷ்ணுபுரம் வட்டம்) சில சின்ன பஞ்சாயத்துகள் உள்ளன. அது பற்றியெல்லாம் அவர்களுடன் நான் பேசக் கூடாது. ஆனால், என்னுடைய 35 ஆண்டுக் கால நட்பில் – எத்தனை சண்டைகள் போட்டுக் கொண்டிருந்த நாட்களிலும் கூட – ஜெயமோகனுடன் இப்படி ஆனதே இல்லை என்பதை நினைவு கூர்கிறேன். இரவு பத்து மணிக்கு அவருடைய அபிப்பிராயம் கேட்டு நான் எழுதியிருந்த முக்கியமான ஒரு மின்னஞ்சலுக்குக் காலை நான்கு மணிக்கு நாலு பக்கம் பதில் எழுதினார். ஜெயமோகனின் வாசகர்களே, அவ்வளவு எல்லாம் உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. தகவல் தொடர்பில் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.
இவ்விடத்திலும் ஜெயமோகனுக்கும் எனக்குமான வித்தியாசத்தை எழுதி விடுகிறேன். சமீபத்தில் ஒரு நண்பர் தன் புத்தக வெளியீட்டு விழாவில் என்னைக் கலந்து கொள்ள அழைத்தார். வாட்ஸப். இன்னுமா இவரை நாம் ப்ளாக் பண்ணாமல் வைத்திருக்கிறோம் என ஆச்சரியப்பட்டேன். பதில் சற்று விளக்கமாக எழுதினேன். அல்லது வாய்ஸ் மெஸேஜ்.
விஷ்ணுபுரம் விருது அறிவித்ததும் அவர் ஜெயமோகனை விமர்சித்து எழுதியிருந்தார். என்னைப் பற்றி எதுவும் இல்லை. ஆனாலும் அது என்னை அவமதிப்பதாகவே எடுத்துக் கொண்டேன். விருது கொடுத்தால் விருது கொடுத்தவரை வசை பாடினால் அது எனக்கும் சேர்த்துத்தானே? ஆனால் ஜெயமோகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவர் சென்றார். அதனால்தான் ஜெ.வைச் சுற்றி எப்போதும் இருபது முப்பது பேர் இருக்கிறார்கள். திருமாவளவனுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தொண்டர் படையும் நட்பு வட்டமும் கொண்டவர் ஜெயமோகன் என்று நினைக்கிறேன். அதற்கு ஜெயமோகனின் மனோபாவமே காரணம். நீ என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்ல்லாம், அந்த உரிமை உனக்கு உண்டு, ஆனாலும் நீ என் நண்பன்.
நான் அதற்கு எதிர். என்னோடு ஹலோ சொல்ல வேண்டுமானால் கூட அதற்கு ஒரு முன் நிபந்தனை உண்டு.
விஷ்ணுபுரம் வட்ட நண்பர் ஒருவர் ஃபோனில் அழைத்தார். வாழ்த்து சொன்னார். நான் பொதுவாக யாரிடமுமே ஜென்ம ஜென்மாந்திரமாகப் பழகியவனைப் போல் பேச ஆரம்பித்து விடுவேன். (ஆனால் அது ஒருநாள் கூட நிலைக்காது என்பது வேறு விஷயம். கதையை கவனியுங்கள்.) பேசி முடிக்கும்போது “என் எழுத்து பற்றி காயத்ரி எழுதியதைப் படித்தீர்களா?” என்று கேட்டேன். இல்லை என்றார். “என் புனைவு எழுத்து உங்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். காயத்ரியின் கட்டுரையைப் படியுங்கள். என் எழுத்து பற்றிய அறிமுகத்துக்கு அது மிக முக்கியமான ஒரு திறப்பாக இருக்கும்” என்றேன். படித்து விட்டு அழையுங்கள் என்றும் சொன்னேன்.
இரண்டு மாதம் ஆகிறது. படித்துக் கூட இருக்கலாம். ஆனால் தகவல் தொடர்பில் நம் மக்கள் பூஜ்யம். என்னை அவர் அதற்கு மேல் தொடர்பு கொள்ளவில்லை. படித்தாரா இல்லையா என்று கிட்டத்தட்ட பத்தாயிரம் முறை மனதில் நினைத்திருப்பேன். இது ஒரு வீணான மன உளைச்சல்தானே எனக்கு?
பிரச்சினை அது அல்ல. அவருடைய தொலைபேசி எண்ணை ஏன் என் தொலைபேசியில் வைத்திருக்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஏதாவது கேட்போம். பதிலே இருக்காது. மன உளைச்சல். எதற்கு?
பின்குறிப்பு: அஜிதன் வேறு விதம். அவருடன் நான் கொண்ட சில உரையாடல்கள் தியாகராஜா நாவலின் போக்கையே மாற்றி அமைத்தது. அந்த அருமையான உரையாடல் சட்டென்று முடிவுக்கு வந்த்து. அவருக்கு நான் எழுதிய ஒரு கடிதத்துக்கு அவரிடமிருந்து பதிலே இல்லை. அதனால் எனக்கு நஷ்டம்தான் என்றாலும் ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. எல்லா விஷயத்திலும் பிள்ளைகள் தந்தை மாதிரியே இருந்தால் எனக்குப் பிடிக்காது.