the outsider (25)

பலவிதமாக ஆலோசித்தார்கள் கமாண்டோக்கள்.  அதில் ஒரு யோசனை: ஒரு ட்ரக்கை வாங்கி, அதில் ஆயுதங்களை வைத்து மேலே காய்கறிகளால் மூடி விடுவது.  ஒவ்வொரு வீடாகப் போய் காய் வேண்டுமா என்று கேட்பது.  இலக்கு வெளியே வரும்போது ட்ரக்கில் இருந்தபடியே தாக்குவது.  உடனே ஒரு சந்தேகம் வந்தது, சொமோஸாவின் பென்ஸ் குண்டு துளைக்காத காராக இருந்தால்? மேலும், ட்ரக் என்றால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.  எனவே ட்ரக் யோசனை உடனடியாகக் கைவிடப்பட்ட்து.  என்ன செய்ய வேண்டும் என்றால், யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வகையில் எங்காவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.  இலக்கு வெளியே வந்ததும் போட்டுத் தள்ள வேண்டும். 

மீண்டும் ஒரு யோசனை ஆலோசிக்கப்பட்டது.  சொமோஸா இங்கேதான் இருக்கிறான் என்று தீர்மானமாகத் தெரிந்தால், அவனுடைய பங்களாவினுள் நுழைந்து சுடுவது.  அதாவது, தற்கொலைத் தாக்குதல்.  ஆனால் கமாண்டோக்கள் தம் உயிரை விடத் தயாராக இருந்தாலும், அந்தத் திட்டம் சாத்தியமானது அல்ல.  ஏனென்றால், சாந்த்தியாகோ சொமோஸா பங்களாவின் பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்ததுமே போலீஸ்காரர்கள் வந்து அடையாள அட்டையைக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவர்கள் அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.  அது, சொமோஸா அசுன்ஸியோனிலிருந்து புந்த்தா தெல் எஸ்த்தே (Punta del Este) (உருகுவாய்) போய் விட்டான் என்பதுதான்.  அப்படியானால் இப்போது என்ன செய்வது? ஒவ்வொரு நிமிடத்தைத் தள்ளுவதும் பெரும்பாடாக இருந்தது. 

ஒருநாள் ஆஸ்வால்தோ தனக்குப் பிறந்த நாள் என்றான்.  அன்றைய தினம் எல்லோரும் மது அருந்திக் கொண்டாடினார்கள்.  நண்பர்கள் அவனுக்குப் பரிசு அளித்தார்கள்.  அப்போது ஆர்மாந்தோ அவனுக்கு ஒரு டேப் ரெக்கார்டரைப் பரிசளித்த போது புரட்சிக்காரனான ஆஸ்வால்தோவினால் அதற்கும் மேல் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  டேப் ரெக்கார்டரைத் திருப்பிக் கொடுத்து, “நம் வாழ்க்கை மிகவும் மந்தமாகச் செல்வதால் நானேதான் அப்படி ஒரு பிறந்த நாளை உருவாக்கினேன், இந்தப் பரிசுகளையெல்லாம் நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.  ஆனாலும் நண்பர்கள் கொடுத்த பரிசைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். 

ஆஸ்வால்தோவை மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள்.  அவன்தான் குழுவின் மற்ற உறுப்பினர்களோடு இல்லாமல் தனியாக பெட்டிக்கடையில் இருக்கிறான்.  உண்மையில் அவன்தான் பலரிடமும் பேசுகிறான். ஆனாலும் தனிமையில் இருப்பவன் அவன்தான்.  தினசரிகளும் சிகரெட்டும் வாங்க வருபவர்களோடு அவன் என்ன பேச முடியும்? அவனுடைய சகாக்களோடு அவனால் பேச முடியவில்லையே?

அப்போது ஒருநாள் ரமோன் சொன்னான், சொமோஸா இங்கே இருக்கிறானோ இல்லையோ, அவன் இங்கே இருக்கிறான் என்ற எண்ணத்தில் நாம் நம்முடைய திட்டத்தின்படியேதான் செல்ல வேண்டும், சொமோஸா இல்லையென்று நினைத்துக் கொண்டு ஒரு விஷயத்தைக் கூட கைவிட்டு விடக் கூடாது. 

அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கையாக சொமோஸா செல்லும் பாதையில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்.  சொமோஸா எப்போது வெளியே வந்தாலும், வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் நேராக நகர மையத்தை நோக்கிச் செல்வதை அவர்கள் கவனித்திருந்தார்கள்.  ஆகவே இப்போதைய உடனடித் தேவை, அந்தத் தெருவில் ஒரு நல்ல வீட்டை வாடகைக்கு எடுப்பதுதான்.  அங்கே இரண்டு வீடுகள் காலியாக இருந்தன.  ஒன்றில் அத்தனை வசதி இல்லை.  இன்னொரு வீடு, ஒரு தூதரின் வீட்டைப் போல், அரண்மனையைப் போல் இருந்தது.  அந்த வீடு அவர்களின் நடவடிக்கைக்குத் தோதாக இருக்கும். 

அத்தனை பெரிய அரண்மனை போன்ற வீட்டை எதற்காக வாடகைக்கு எடுக்கப் போகிறீர்கள்?  அதற்கான கவர் ஸ்டோரி என்ன?

ரமோன் கேட்டான். 

அப்போது ஜூலியா ஒரு திட்டத்தைச் சொன்னாள். 

அக்கால கட்டத்தில் ஹூலியோ இக்லேஷியஸ் (Julio Iglesius Sr) சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக இருந்தார்.  இப்போது 79 வயது ஆகிறது.  (வயதை கவனியுங்கள்) இந்தக் கதை நடந்து கொண்டிருந்த 1980இல் இக்லேஷியஸ் குவாரனி மொழியில் பராகுவாய் பற்றிப் பாடிய மூன்று பாடல்கள் பராகுவாயில் மிகவும் பிரபலம் ஆகியிருந்தன.  இப்போது லூயிஸ் ஃபோன்ஸி பாடிய தெஸ்ப்பாஸீத்தோ பாடல் எத்தனை பிரபலமோ அந்த மாதிரி.  லூயிஸ் ஃபோன்ஸி புவெர்த்தோ ரீக்கோ நாட்டைச் சேர்ந்தவர்.

பராகுவாய் தேசத்தில் பேசப்படும் ஸ்பானிஷை ஸ்பானிஷ்காரர்கள் புரிந்து கொள்வதே சற்று கடினம்.  காரணம், பராகுவாயின் தேசிய மொழியான குவாரனியும் அவர்களின் ஸ்பானிஷில் கலந்திருக்கும்.  அதே சமயம், குவாரனியும் சுத்தமாக இருக்காது.  அதில் ஸ்பானிஷின் கலப்பு இருக்கும். (இந்தியைத் தமிழ்நாட்டுக்குள் விட்டால் இப்படித்தான் ஆகும்.)  ஆக, பராகுவாய்வாசிகள் பேசுவது ஸ்பானிஷும் குவாரனியும் கலந்த ஒரு மொழி.  குவாரனியைக் கேட்டால், அது ஸ்பானிஷை சற்று கொச்சைப்படுத்தியது போல் இருக்கும்.  ஸ்பானிஷும் குவாரனியும் பக்கத்துப் பக்கத்து மொழிகள். 

உங்களில் யாருக்காவது புவெர்த்தோ ரீக்கோ என்று சொன்னதும் அதை என்னோடு தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறதா?  ஒருவருக்கு ஞாபகம் வந்தாலும் நான் புண்ணியம் செய்தவன் ஆவேன்.  அப்படி ஞாபகம் வருபவர்கள் எனக்கு ஒரு வரி எழுதுங்கள். 

என்னுடைய இருபத்தெட்டாவது வயதில் லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலை எழுதினேன்.  அதில்தான் இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் ரிகபர்த்தோ லோபஸ் பெரஸின் கடைசிக் கவிதையை மொழிபெயர்த்திருந்தேன்.  அதில்தான் சொமோஸாவின் கதையை எழுத ஆரம்பித்தேன்.  இப்போது எழுபதாவது வயதில் முடிக்கிறேன்.  இன்றைய காலகட்ட்த்தில் சொமோஸாவின் கதையை ஒருவர் ஆயிரம் பக்கம் எழுதலாம்.  அத்தனை விஷயங்கள் இணையத்தில் கிடைக்கிறது.  ஆனால் நான் 1980இல் மூன்றாம் சொமோஸா கொல்லப்பட்ட ஆண்டில் சொமோஸா குடும்பம் பற்றி எழுதினேன்.  அந்த விஷயங்கள் எனக்கு எங்கே கிடைத்திருக்கும்?  அந்த அளவுக்குத் தேடினேன், படித்தேன்.

பிறகு பத்தாண்டுகள் கழித்து, லா வீதா (La Vida) நாவல் பற்றி எழுதினேன்.  மட்டுமல்ல.  அந்த நாவலிலிருந்து ஒரு பகுதியை “என் அம்மா விபச்சாரி” என்ற தலைப்பில் மொழிபெயர்த்தேன்.  ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுதியில் அக்கதை இடம் பெற்றுள்ளது.  லா வீதா ஒரு மானுடவியல் ஆய்வாகத் தொகுக்கப்பட்ட நூல்.  வெளிவந்த பிறகு அது நாவலாகவும் அறியப்பட்டது.  ஆஸ்கார் லூயிஸ் என்ற மானுடவியல் ஆய்வாளர் எழுதிய ஆயிரம் பக்க நூல்.

இப்போது இலவசமாகவே இணையத்தில் கிடைக்கும் இந்த நூலில் ஒரு பத்து பக்கத்தையாவது படித்துப் பாருங்கள்.  இல்லாவிட்டால், ஊரின் மிக அழகான பெண் தொகுதியில் உள்ள என் அம்மா விபச்சாரி என்ற கதையைப் படியுங்கள். 

புவெர்த்தோ ரீக்கோவில் ஒரு சேரியில் உள்ள குடும்பங்களைப் பற்றிய கதைதான் லா வீதா (வாழ்க்கை).  இப்போது அது தெஸ்ப்பாஸீத்தோ பாடல் வரை வந்து நிற்கிறது. 

ஆக, என்னையும் லத்தீன் அமெரிக்காவையும் இணைப்பது, வெறும் அரசியல் வரலாறு மட்டும் அல்ல. என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலிருந்தே – தில்லியில் 1979 ஜனவரியில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியான லத்தீன் அமெரிக்க சினிமா என்ற பிரிவில் நான் பார்த்த Battle of Chile, The Hour of the Furnaces போன்ற படங்களைப் பார்த்த்திலிருந்தே – எனக்கும் லத்தீன் அமெரிக்காவுக்குமான கலாச்சாரத் தொடர்பு ஆரம்பித்து விட்டது. 

அதனால் நம்முடைய ஆவணப்படத்தில் புவெர்த்தோ ரீக்கோவின் தலைநகர் சான் ஹுவானையும் (San Juan) சேர்க்க வேண்டியிருக்கும்.  நிகாராகுவாவையும் சேர்க்க வேண்டியிருக்கும். நிகாராகுவா பற்றிய ஒரு காணொலி கீழே:

த அவ்ட்ஸைடர் ஆவணப்படத்தில் என்னைப் பேட்டி காணும் போது உங்களுக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் சரியாக பதில் சொல்லத் தெரியாமல் உளறுவேன்.  எனக்கு லா வீதா பற்றியெல்லாம், புவெர்த்தோ ரீக்கோவின் சேரிகள், நான் மொழிபெயர்த்த என் அம்மா விபச்சாரி எதுவும் அந்தப் பேட்டியின்போது – அதாவது, நான் பேசும் போது, ஞாபகம் இருக்காது.  என் மூளை எழுதும் போது மட்டுமே சீராகவும் கூர்மையாகவும் வேலை செய்யும்.  பேசும் போது செய்யாது.  கொஞ்சம் வைன் அருந்தி விட்டுப் பேசினால் பேச்சு கூர்மை அடையும்.  ஆனால் வைன் அருந்துவது என் அந்தரங்க விஷயம்.  அதை ஒரு பொதுப் பேட்டியில் எப்படி சேர்ப்பது? 

ஹூலியோ இக்லேஷியஸின் மகன் இக்லேஷியஸ் ஜூனியரும் இப்போது பிரபலமான பாடகர்.

தந்தையும் மகனும் சேர்ந்து பாடும் காணொலி கீழே:

ஜூலியாவின் கவர் ஸ்டோரி: நான் ஒரு கோடீஸ்வரி.  இக்லேஷியஸ் பராகுவாய் பற்றி ஒரு படம் எடுக்கிறார்.  நான்தான் தயாரிப்பாளர். அதற்கு உங்கள் வீடு வேண்டும். இங்கே தங்கிக் கொண்டுதான் இக்லேஷியஸ் தன் படத்தை முடிக்க இருக்கிறார். நான் இன்ன ஓட்டலில் தங்கியிருக்கிறேன்.  இதுதான் என் அறை எண். 

”என்னது?  இக்லேஷியஸ் என் வீட்டில் தங்கப் போகிறாரா?  என்னால் நம்ப முடியவில்லையே?  அப்படியானால் இக்லேஷியஸிடம் நான் நட்பு கொள்ள வாய்ப்பு கிடைக்குமா?”

“வேண்டாம், வேண்டாம்.  தயவுசெய்து வேண்டாம்.  ஏனென்றால், விஷயம் வெளியே தெரிந்து விட்டால் இந்த வீடு ரொம்பவும் பிரபலம் ஆகி விடும்.  இக்லேஷியஸாலும் ஒழுங்காகப் படப்பிடிப்பை நடத்த முடியாது.  அதனால் தயவுசெய்து யாரிடமும் இந்த விஷயத்தை வெளியே சொல்லி விடாதீர்கள்.”

“எப்படியிருந்தாலும் படப்பிடிப்பு முடிந்த பிறகாவது என் வீடு பிரபலம் அடைந்து விடும்தானே?”

’ரொம்பவே பிரபலம் அடைந்து விடும்.  ஆனால் வேறு ஒரு காரணத்துக்காக’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் ஜூலியா.  (ஒரு பொது உச்சரிப்புக்காகவே ஜூலியா என்று எழுதுகிறேன்.  சரியான உச்சரிப்பு, ஹூலியா. அர்ஜெண்டினா அல்ல.  அர்ஹெந்த்தினா.)   

ஜூலியா ஏஜண்டிடம் தன் அறை எண்ணைக் கொடுத்தாள்.  ஒரு சராசரி பராகுவாய் தொழிலாளி ஒரு ஆண்டு சம்பாதிக்கும் தொகைதான் அந்த ஓட்டலின் ஒருநாள் வாடகை. 

ஏஜண்ட் ஓட்டலுக்கு ஃபோன் செய்து சோதிப்பாள் என்று ஜூலியாவுக்குத் தெரியும்.  அதனால்தான் அறை எண்ணைக் கொடுத்து விட்டு வந்திருந்தாள்.  அவள் யூகித்த்து போலவே ஏஜண்ட் ஓட்டலுக்கு ஃபோன் செய்து ஜூலியாவிடம் பேசினாள்.   அதற்கு மேல் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.  சுலபத்தில் வீடு கிடைத்த்து மட்டும் அல்லாமல், வீட்டின் சொந்தக்காரி ஒரே ஒரு நாள் இக்லேஷியஸைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். ஒரு மாத வாடகை 1500 டாலர்.  மூன்று மாத வாடகை முன்பணம்.   

பக்கத்து வீட்டில் பராகுவாயின் சுற்றுலாத் துறை அமைச்சர் இருந்தார்.   

எல்லா ஏற்பாடுகளும் செய்தாயிற்று.  ஆகஸ்ட் 20.  ஆனால் இன்னமும் சொமோஸாவின் நிழலைக் கூட காண முடியவில்லை.  எங்களின் (ஆர்மாந்தோ, சூஸானா) கவர் ஸ்டோரி நீர்த்துக் கொண்டே வந்தது.  ஆர்மாந்தோ கட்டிடத் தொழில் செய்கிறேன் என்று ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன.  எல்லோரும் எப்போது எப்போது என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.  

“இந்த நாட்டில் எதுவும் வேகமாக நடக்க மாட்டேன் என்கிறது.  மேலும், பராகுவாயை எனக்குப் பிடிக்கவில்லை.  ப்ரஸீல் போய் விடலாம் என்று நினைக்கிறோம். ப்ரஸீல் அருமையான நாடு.  அழகான நகரங்கள்.  அங்கே நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி வாழ முடியும்.  அதற்கான வாய்ப்புகள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன.  இங்கே பணம்தான் செலவழிகிறதே ஒழிய காரியம் நடப்பதில்லை” என்று அவர்களிடம் சொன்னேன்.    

இதைக் கேட்டதும் பெண்களெல்லாம் எங்கள் மீது பொறாமை கொள்ள ஆரம்பித்தார்கள்.  

வெளியே இப்படிப் பேசி சமாளித்தோமே ஒழிய எங்கள் அனைவருக்கும் நாளுக்கு நாள் பதற்றம் கூடிக் கொண்டே போனது என்பதுதான் உண்மை.    

இப்போது நாங்கள் இருந்த வீட்டைக் காலி பண்ண வேண்டும்.  சாவியைக் கொடுத்து விட்டுக் கிளம்புவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  ஆனால் ஆயுதங்களை எங்கே கொண்டு போய் ஒளித்து வைப்பது? 

கடைசியில் சாந்த்தியாகோவும் ஆனாவும் தங்கியிருந்த வீட்டில் ஆயுதங்களை வைப்பது என்று முடிவு செய்தோம். ரமோனும் ஜூலியாவும் ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறினார்கள். 

ஆர்மாந்தோவும் சூஸானாவும் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர்கள் அவர்கள் இருவருக்கும் ப்ரஸீல் கிளம்புவதற்கு முன் தினம் விருந்து கொடுத்தார்கள். 

ஆர்மாந்தோ சொல்கிறான்: 

செப்டம்பர் முதல் வாரம்.  நானும் சூஸானாவும் தெற்கு ப்ரஸீல் வந்து சேர்ந்தோம்.  ப்ரஸீலின் மிக மோசமான தட்பவெப்ப நிலை உள்ள காலம்.  ஒரு சுற்றுலாப் பயணி கூட அந்த மாதத்தில் ப்ரஸீல் பக்கம் வர மாட்டான்.  ஒரு இடத்திலும் மனித நடமாட்டமே இல்லை.  கடுமையான குளிர்காலம்.  மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.  எல்லா கடைகளும் எல்லா விடுதிகளும் எல்லா உணவகங்களும் மூடியிருந்தன.  அந்தப் பருவத்தில் மழை ஆரம்பித்தால் மாதக் கணக்கில் பெய்யும் என்றார்கள்.  அதோடு, அந்த ஆண்டின் குளிர் காலம் அன்றைய தினம்தான் தொடங்கியிருந்த்து.

எங்களுக்கு ஒரு சிறிய வீடு வாடகைக்குக் கிடைத்த்து.  வீட்டுக்காரப் பெண்மணியும் பக்கத்தில்தான் குடியிருந்தாள்.  அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.  இந்தக் குளிர்காலத்தில் இங்கே யார் வருவார்கள்? அவள் மனதில் ஓடியதை நான் கண்டு பிடித்து விட்டேன்.  ஒரே ஒரு சாத்தியம்தான் இருக்கிறது.  என்னுடைய மனைவிக்குத் தெரியாமல் ஒரு குட்டியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.  அவளுடைய பார்வையிலேயே அவள் எண்ணம் தெரிந்தது. 

நான் அவளிடம் சொன்னேன், அம்மணி, எனக்குக் கடல் என்றால் உயிர்.  அதனால் மழையோ புயலோ எப்படியிருந்தாலும் விடுமுறையில் மனைவியை அழைத்துக் கொண்டு கடல் பக்கம் வந்து விடுவேன்.  (மனைவியை என்பதை கொஞ்சம் அழுத்திச் சொன்னேன்).    

பல இடங்களில் தேடி அலைந்ததில் ஒரே ஒரு மளிகைக்கடையைக் கண்டு பிடிக்க முடிந்தது.

ஒரு வாரம் ஆகியும் ஜூலியா அசுன்ஸியோனிலிருந்து வரவில்லை.  ஜூலியாவை ஆர்மாந்தோவும் சூஸானாவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அதுதான் திட்டம்.   

ஜூலியாவை அசுன்ஸியோன் விமான நிலையத்தில் ப்ரஸீல் செல்லும் விமானத்தில் ஏற்றி விடுவதற்காக வந்திருந்தான் ரமோன். அப்போது அங்கே புவனோஸ் அய்ரஸ் விமானத்திலிருந்து சொமோஸா இறங்கிக் கொண்டிருந்தான்.  கூடவே நான்கு மெய்க்காப்பாளர்கள்.  வெளியே வெண்ணிற பென்ஸும் ஃபோர்ட் ஃபால்கனும் நின்று கொண்டிருந்தன.  ஆக, இருபது நாட்களாக சொமோஸா ஏதோ மருத்துவ சிகிச்சைக்காக புவனோஸ் அய்ரஸ் போயிருந்திருக்கிறான்.  

உடனடியாக அடுத்த விமானத்திலேயே ஆர்மாந்தோவையும் சூஸானாவையும் அழைத்துக் கொண்டு வா என்று சொல்லி ஜூலியாவை ப்ரஸீலுக்கு அனுப்பி வைத்தான் ரமோன்.

ஜூலியா சொல்கிறாள்: 

அசுன்ஸியோனிலிருந்து கிளம்பும்போது ஆர்மாந்தோவையும் சூஸானாவையும் ப்ரஸீலிலேயே தங்கியிருக்கச் சொல்ல வேண்டும் என்றே நினைத்தேன்.  ஆனால் விமான நிலையத்தில் வெண்ணிற பென்ஸைப் பார்த்ததும் திட்டம் மாறி விட்டது.  ஆர்மாந்தோவையும் சூஸானாவையும் ப்ரஸீலில் சந்தித்தேன்.  ஆளைக் கொல்லும் குளிர்.  மறுநாளே மூவரும் இகுவாஸு நீர்வீழ்ச்சி சென்று அதன் பராகுவாய் எல்லைக்கு வந்து சேர்ந்தோம்.  நான் மட்டும் அசுன்ஸியோன் வந்தேன்.  ஆர்மாந்தோவும் சூஸானாவும் ஸ்த்ரோஸ்னர் சிட்டியில் ஒரு அறையை எடுத்தார்கள்.

அதற்குப் பிறகு பல தினங்கள் வரை சொமோஸாவைப் பார்க்க முடியவில்லை.   

ஆனா ப்ரஸீல் கிளம்பி விட்டாள்.  இனி அவள் அசுன்ஸியோனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இனி அவளுடைய பொறுப்பு சம்பவம் முடிந்ததும் சாந்த்தியாகோவை தப்பிக்க வைப்பதுதான். 

ஆர்மாந்தோவும் சூஸானாவும் ஸ்த்ரோஸ்னர் சிட்டியிலிருந்து அசுன்ஸியோன் கிளம்பினார்கள்.  அந்த நகரத்திலிருந்து அசுன்ஸியோன் 330 கி.மீ. தூரம் இருந்தது.  இருவரும் அசுன்ஸியோனில் ரமோனை சந்தித்தார்கள். 

செப்டம்பர் 15 திங்கள் கிழமை அன்று எல்லோரும் சம்பவ வீட்டில் சந்தித்தார்கள்.  ஆர்மாந்தோவையும் சூஸானாவையும் அசுன்ஸியோன்வாசிகள் அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் அவர்கள் இருவரும் தினமுமே ஸ்த்ரோஸ்னர் சிட்டியிலிருந்துதான் வந்து போக வேண்டும்.  வருவதற்கு 330 கி.மீ.  திரும்புவதற்கு 330 கி.மீ. அது தவிர அவர்கள் எடுத்துக் கொண்ட மற்றொரு ஏற்பாடு, ஆர்மாந்தோ ஒரு விக் அணிந்திருந்தான்.  சூஸானா ஒரு கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள்.

”சம்பவம் நடக்கும் வரை தினமும் இப்படித்தான் செய்ய வேண்டும்.  வேறு வழியில்லை.  அதோடு, நீ உன்னுடைய விக்கை சரி செய்தால் கொஞ்சம் நல்லது, அது இயல்பாக இல்லை” என்றான் ரமோன் ஆர்மாந்தோவிடம்.   

ஆர்மாந்தோவும் சூஸானாவும் சூப்பர் மார்க்கெட்டில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆர்மாந்தோவின் விக்கைப் பார்த்து சத்தமாகக் கிண்டல் செய்தார்கள்.  ஸ்த்ரோஸ்னர் சிட்டிக்குத் திரும்பும்போது பெட்ரோல் போடும் இடத்திலும் அங்கேயிருந்த சிறுவன் ஆர்மாந்தோவைப் பார்த்து சிரித்தான்.  ஆர்மாந்தோ கோபத்துடன் ”பார், இந்த விக்கினால்தான் எல்லோரும் என்னை கவனிக்கிறார்கள்” என்று சூஸானாவிடம் சொன்னான்.

விக்கைக் கழற்றி காரின் பின்பக்கம் எறிந்து விட்டு, சம்பவம் நடக்க இருந்த தருணம் வரை அதை அவன் அணியவில்லை.  ஆர்மாந்தோவும் சூஸானாவும் சரியான ஜோடி இல்லை.  ஆர்மாந்தோவும் ஆனாவும், சாந்த்தியாகோவும் சூஸானாவும்தான் ஆரம்பத்தில் போட்டிருந்த திட்டம்.  ஆனால் ஆனா காலை உடைத்துக் கொண்டதால் ஜோடியை மாற்ற வேண்டியிருந்த்து. 

ஆர்மாந்தோவுக்கும் சூஸானாவுக்கும் ஒத்தே வரவில்லை.  ஆர்மாந்தோ வெளிப்படையானவன்.  சூஸானாவோ புரட்சிகர செயல்பாட்டுக்காகவே பிறந்தவள் போல் இருப்பாள்.  நிச்சயமாக இருவருக்கும் ஒத்துப் போகாதுதான்.  அதோடு ஆர்மாந்தோவின் விக்கைப் பார்த்த உடனேயே எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது, என்ன செய்ய?

சூஸானா:

அந்த நான்கு மாதங்களில் நான் ஆர்மாந்தோவிடம் மிக மோசமாகவே நடந்து கொண்டேன்.  ஆனால் நாங்கள்தான் எங்கள் கமாண்டோ குழுவுக்கும், சலிப்பூட்டக் கூடிய அசுன்ஸியோன் வாழ்க்கைக்கும் ஒரு சுவாரசியத்தை கொடுத்தோம்.  ஆர்மாந்தோ ஒரு ஜாலி பேர்வழி.  அவனுக்குப் பிடித்த்தெல்லாம் டான்ஸ், ம்யூஸிக், பார்ட்டி, விதவிதமான உணவு வகைகள்… மிகவும் உணர்ச்சிகரமான பேர்வழி வேறு.  கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டால் பொது இடமாக இருந்தாலும் அழுது விடுவான்.

அப்படியெல்லாம் இருந்தாலும் நானும் ஆர்மாந்தோவும்தான் தினமும் அசுன்ஸியோனிலிருந்து ஸ்த்ரோஸ்னர் சிட்டிக்கு தினமும் 660 கி.மீ. தூரம் போய் வந்து கொண்டிருந்தோம்.

ஆர்மாந்தோ:

என்னால் தொடர்ந்தாற்போல் இருபது மணி நேரம் கண்ணயராமல் கார் ஓட்ட முடியும்.  ஆனால் ஒரு வார காலம் தினமும் 660 கி.மீ. கார் ஓட்டுவதை என்னாலேயே தாங்க முடியவில்லை.  காரை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கியதும் நின்றவாக்கிலேயே தூங்க ஆரம்பித்து விடுவேன். 

சூஸானா:

எங்கள் இருவராலும் அசுன்ஸியோனில் தங்க முடியாது.  வேறு இடத்திலும் தங்க இடம் இல்லை.  வேறு என்ன செய்வது?  அசுன்ஸியோனில் ரமோனையும் சாந்த்தியாகோவையும் பார்க்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் கார் ஓட்டிக் கொண்டேதான் இருந்தான் ஆர்மாந்தோ.  அவ்வப்போது நானும் ஓட்டுவேன்.  ஆனால் பெரும்பாலும் ஆர்மாந்தோதான்.  எப்போதாவது காஃபிக்காக வண்டியை நிறுத்துவோம்.  அவ்வளவுதான். 

செப்டம்பர் 10, 1980.  ஆர்மாந்தோவும் சூஸானாவும் செய்து வந்த புனித யாத்திரையின் மூன்றாம் நாள்.  பெட்டிக் கடையில் அமர்ந்திருந்த ஆஸ்வால்தோ சாவகாசமாக எழுந்து ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான்.  அவன் கண்ணெதிரே வெண்ணிற பென்ஸும் அதைத் தொடர்ந்து ஃபோர்ட் ஃபால்கனும் சென்று கொண்டிருந்தன.  21 தினங்களுக்குப் பிறகு ஆஸ்வால்தோ அந்த சர்வாதிகாரியைப் பார்க்கிறான்.  வழக்கம்போல் முன்னாள் சர்வாதிகாரி டிரைவர் இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான்.  பென்ஸும் ஃபோர்ட் ஃபால்கனும் ஆஸ்வால்தோவின் கடையை நோக்கி வருகின்றன.  

இப்போது இன்னும் ஒரே ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.  சம்பவத்தை நிகழ்த்த எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்.  அடுத்து, சம்பவத்தை முடித்து விட்டு எப்படி, எந்த காரில் தப்பிப்பது? 

கார் வேண்டாம்.  ட்ரக் என்று முடிவு செய்யப்பட்டது.  ஆர்மாந்தோதான் டிரைவர்.  சம்பவம் முடிந்த பின் ரமோன் ட்ரக்கில் ஏறி அமர்ந்து கொள்வான்.  சாந்த்தியாகோ ட்ரக்கின் பின்னால் ஏறிக் கொண்டு சுட்டுக் கொண்டே வர வேண்டும். 

எந்த வண்டியை வாங்குவது என்று முடிவு செய்ய வேண்டியது சாந்த்தியாகோ.  வாங்குவது ஆஸ்வால்தோ.  குறிப்பிட்ட நாளில் ஆஸ்வால்தோ ட்ரக்கை வாங்கச் சென்ற போது அது ஏற்கனவே ஒருவருக்கு விற்கப்பட்டிருந்தது.  விஷயம் ரமோனிடம் தெரிவிக்கப்பட்ட்து. 

ரமோன்: நான் சாந்த்தியாகோவிடம் சொன்னேன், நம்முடைய திட்டம் நடக்கலாம், நடக்காமல் போகலாம்.  ஆனால் ட்ரக் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக நடக்காமல் போய் விடக் கூடாது.  என்ன செய்வீர்களோ தெரியாது, திங்கள் கிழமை அன்று ட்ரக் கிடைத்தாக வேண்டும். 

அதன் பிறகு வேறொரு கடையில் சாந்த்தியாகோ போய் ட்ரக்கைப் பார்த்து முடிவு செய்தான்.  சில மணி நேரம் சென்று ஆஸ்வால்தோ போய் அந்த ட்ரக்கை வாங்கினான்.  சாந்த்தியாகோவையும் ஆஸ்வால்தோவையும் கடைக்காரன் ஒன்றாகப் பார்க்கவில்லை என்றாலும், சம்பவம் முடிந்து போலீஸ் விசாரணையின் போது இரண்டு பேரையும் இணைத்துப் பார்த்து, இருவரின் உருவ அடையாளத்தையும் போலீஸிடம் சொன்னான் ட்ரக் விற்றவன். 

ட்ரக்குக்குப் புதிய வர்ணம் பூசப்பட்ட்து.  கடைசியில்தான் ஒரு விஷயம் தெரிந்தது, ட்ரக்கை ’ஸ்டார்ட்’ செய்யும் போது சட்டென்று கிளம்ப மாட்டேன் என்கிறது.  ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.  கொஞ்ச நேர முயற்சிக்குப் பிறகுதான் வண்டி கிளம்பியது.  இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை, இந்த வண்டியைக் கொண்டுதான் சம்பவத்தை நடத்த வேண்டும் என்று சொல்லி விட்டான் ரமோன். 

செப்டம்பர் 15, 1980.  திங்கள் கிழமை.  ரமோனும் ஜூலியாவும் ஓட்டலை மாற்றி விட்டார்கள்.  ஆனால் ஆர்மாந்தோவும் சூஸானாவும் 14-ஆம் தேதி இரவு கூட ஸ்த்ரோஸ்னர் சிட்டிக்குத்தான் போய் வந்தார்கள்.  வேறு வழியே இல்லை.  ஒரு இரவுக்காக அசுன்ஸியோனில் அறை போட்டு விட்டு உடனடியாகக் காலி செய்தால் அதுவே போலீஸுக்குக் காண்பித்துக் கொடுத்ததாகி விடும். 

செப்டம்பர் 15, திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து கண்காணிப்பை ஆரம்பிக்க வேண்டும்.

செப்டம்பர் 15, திங்கள் கிழமை காலை ஐந்து மணிக்கு எழுந்தான் ஆர்மாந்தோ.  ஓட்டல் லாபியில் யாருக்கும் கேட்காதவாறு வெளியே வந்தான்.  ஸ்த்ரோஸ்னர் சிட்டியில் அந்தக் காலை நேரத்தில் ஒரு ஆத்மாவைக் காணோம்.

காரை 120 கி.மீ. வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் ஆர்மாந்தோ.  சூஸானா ஓட்டலிலேயே இருந்தாள்.  அவன் இரவு 9 மணிக்கு மேல்தான் இனிமேல் அந்த ஓட்டலுக்குப் போவான்.

அசுன்ஸியோனில் காலை ஐந்தரை மணிக்கு சாந்த்தியாகோவின் வீட்டுக்கு வந்தான் ரமோன்.