கல்யாண மாலை ஒழிக! : அபிலாஷ் சந்திரன்

விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வுகளின் அரசியலின்மை பற்றி தோழர் புலியூர் சொன்னதை குளச்சல் யூசுப் திசைதிருப்பி அங்கு மதுவும், போதையும், அரைகுறை ஆடைகள், ஆரவாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என சிலர் வருத்தப்படுவதாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன், திரும்பவும் சொல்கிறேன் – பழைய சிறுபத்திரிகை இலக்கிய அரங்குகள் குடித்துக்கொண்டு வேட்டியை அவிழ்த்துப் போட்டு பரஸ்பரம் அடித்தும் கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்கள் எனும் மனப்பதிவு சிலருக்கு உண்டு. என் அனுபவத்தில் அப்படி இல்லை. அந்த அரங்குகள் பற்றின பதிவுகள் அந்த கால இதழ்களில் வெளியாகி உள்ளன. படித்துப் பார்க்கலாம். செறிவான எத்தனையோ கோட்பாட்டு விவாதங்கள், அரசியல் கூர்மை கொண்ட விவாதங்கள் முன்பு நடந்துள்ளன. ரெண்டாயிரத்துக்குப் பின்பு தான் இவை மறைந்து தனிமனித புரொமோஷன் உரைகளாக, பட்டிமன்ற உரைகளாக, கதை சொல்லும் அரங்குகளாக இலக்கிய மேடைகள் மாறின. இன்று சிறிய அமைப்புகளின் அரங்குகளில் ஆழமான உரைகளைக் கேட்கலாம் – அண்மையில் சி.மோகனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கும் விழாவில் சங்கர ராமசுப்பிரமணியன் 15 நிமிடங்களில் அவ்வளவு செறிவாக இருத்தலியல் முறையில் சி.மோகனின் புனைவுலகில் வரும் பாத்திரங்களை அலசியிருந்தார். சில குறைகளைத் தொட்டுக்காட்டி இறுதியில் சி.மோகனிடத்து தனக்குள்ள பற்றை நெகிழ்வாகக் குறிப்பிட்டு கட்டுரை வாசித்திருந்தார். இதைப் போன்றொரு உரையை நீங்கள் விஷ்ணுபுரம் அமர்வுகளில் கேட்க முடியாது. சாருவுக்கு விருது வழங்கும் அமர்வில் ஒரு உரை கூட இப்படி செறிவாக, ஆழமாக, தத்துவார்த்தமாக இல்லை.விஷ்ணுபுரம் கூட்டங்களில் பொதுவாக எழுத்தாளனைப் புகழ்வது, எழுத்தாளனை வைத்து அவன் படைப்பை புகழ்வது, தங்களைப் புகழ்வது மட்டுமே நடக்கும். பிரதியின் நுணுக்கங்களை, சிக்கல்களைப் பேச மாட்டார்கள். பிரதியின் அரசியலை, தத்துவத்தை பேச மாட்டார்கள். அது கூச பரவாயில்லை, தெரிந்ததைப் பேசுகிறோம் எனச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் அப்படிப் பேசவோ கேள்வி எழுப்பவோ அனுமதி இல்லை எனும் ஒரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். மாறாக கர்நாடக சபா கச்சேரிகளில் வரிசையில் உட்கார்ந்து மடியில் தட்டி ரசிப்பார்களே அந்த ரசானுபவமே இலக்கிய வாசிப்பு எனக் கற்றுக் கொடுக்கிறார்கள். இலக்கிய வாசிப்பு என்பது ரசனை அல்ல. அது மொழியின், சிந்தனையின், பண்பாட்டின், வரலாற்றின் இருமைகளை உடைத்தெறிவது, இப்படி உடைப்பதை தர்க்கப்படுத்தி சிந்தனையாக்குவது, இச்சிந்தனையை பேச்சிலோ எழுத்திலோ கொண்டு வருவது – ஒரு reverse constructive process தான் வாசிப்பு, இது தான் வாசிப்பின் அரசியல். இதைத் தான் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக உலகளவில் பேசி வருகிறார்கள்.உணர்ச்சிவசப்பது, ஒரு கதையாக எல்லாவற்றையும் தொகுத்துக் கொள்வது, எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்ப்பது அல்ல வாசிப்பு.
விஷ்ணுபுரம் அரங்கில் இலக்கியம் அரசியல் படுத்தப்பட, விவாதம் நடத்தப்பட அனுமதி இல்லை எனும் போது அங்கு எழுத்தாளனை மையப்படுத்தி அவனை வாசிக்கவும், அவன் படைப்புகளை அர்த்தப்படுத்தவும் ஊக்குவிக்கிறார்கள். எழுத்தாளன் இறந்து போதலே வாசிப்பு எனப் பேசி பல ஆண்டுகள் கடந்த பின்னர் இவர்கள் ஏன் எழுத்தாளனைக் கட்டியெழுப்பி பிம்ப அரசியல் செய்கிறார்க்ள், ஏன் அவனுடைய தனிப்பட்ட வாழ்வுக்கு வெளியே அவனது சிந்தனைகளை அரசியல், சமூகம், தத்துவம் என எந்த வகையிலும் விவாதிக்க தடையெழுப்புகிறார்கள் எனக் கேட்டால் அது ஒழுங்கீனத்தை ஏற்படுத்தும், கூச்சலுக்கு இட்டுச் செல்லும் என காரணம் சொல்லுகிறார்கள். இப்படி விவாதம் என்பதையே கூச்சலாக உருவகப்படுத்தி விட்டார்கள். குளச்சல் யூசுப் விவாதம் என்றாலே குடித்துக்கொண்டு ஆணும் பெண்ணும் அரைகுறை ஆடையில் கத்துவது என புதுவிளக்கம் அளிக்கிறார். பாஜக அறிவுஜீவிகளை நகர்ப்புற நக்சல்கள், தேசவிரோதிகள், அரசுக்கு எதிரான கலகக்காரர்கள் எனச் சொன்னது நினைவுக்கு வருகிறதா? பொதுவெளியில் சித்தாந்த எதிரிகளை களங்கப்படுத்த, மற்றமையாக்க சிறந்த உத்தி இதுவே!
 அதற்கும் மதுவுக்கும் என்ன சம்மந்தம்? எந்த இலக்கிய விவாதங்களில் குடித்து சத்தம் போடுகிறார்கள்? தனிப்பட்ட சந்திப்புகளை நான் சொல்லவில்லை. இலக்கியத்தை கோட்பாட்டளவிலோ அரசியல் சித்தாந்த அளவிலோ பார்க்கக் கூடாது என்று கடந்த நூறாண்டுகளில் எந்த இலக்கியவாதியாவது உலகளவில் கூறியுள்ளர்களா? இதற்கும் தனிமனித ஒழுக்கத்துக்கும் எந்த உறவுமில்லை. நான் நேரடியாகவே கேட்கிறேன்: தெரிதா, பூக்கோ, லகான், டெலூஸ் போன்றோரை ஏன் விஷ்ணுபுரம் அமைப்பில் விவாதிக்க மறுக்கிறார்கள்? சிந்தனைகளே இல்லாத இலக்கிய வாசிப்பு தான் சரியென இவர்கள் எப்படி முடிவுக்கு வந்தார்கள்? அல்லது இவர்களை விட பெரிய சிந்தனையாளர்கள் அங்கிருக்கிறார்களா? யார் அவர்கள்? மீறல் என்றால் தத்துவார்த்த அளவில் பொருளே வேறு. குடிப்பதும் கத்துவதும் அல்ல. மீறல் என்றால் இருமையை மீறுவது, அர்த்த அமைப்பை மீறுவது, படிநிலையை மீறுவது, ஒவ்வொன்றாக எதிர்ப்பு மறுத்து புத்திருவாக்கம் பண்ணுவது. அதை குடி, போதை மருந்து, அரைகுறை ஆடையில் ஒரு பெண் கத்துவது என பொருள்படுத்துவதைக் காண அருவருப்பாக இருக்கிறது. நான் இதைப் பற்றி கேள்வி எழுப்பி நான்கு கட்டுரைகளை வெளியிட்டேன். கல்விப்புல விமர்சகர்கள் இலக்கியம் அறியாத முட்டாள்கள் என ஒற்றைவரியில் கடந்துவிட்டார்கள். தமிழில் எது பெரிதாக பிரம்மாண்டமாக நடந்தாலும் அது சீரழியும் என்பது ஒரு சாபக்கேடு!
நான் ஏன் திரும்பத் திரும்ப இதை விமர்சிக்கிறேன் என்றால் தனிப்பட்ட பகையோ காழ்ப்போ அல்ல. என்னையும் கூடத்தான் விஷ்ணுபுரம் அமர்வுக்கு அழைத்து மரியாதை செய்தார்கள். எனக்கு அங்கு யாரிடத்தும் வருத்தம் இல்லை. ஆனால் இலக்கிய வாசிப்பை கல்யாண மாலை நிகழ்ச்சி போல மாற்றுவதை அவர்கள் நிறுத்தும் வரை நான் விமர்சித்துக் கொண்டு தான் இருப்பேன். அதுவல்ல இலக்கிய வாசிப்பு, மீறலும், அதிகார எதிர்ப்புமே வாசிப்பு, தர்க்க சிந்தனையெ விமர்சனம், ஆஹா ஓஹோ வகை ரசிகமணி டி.கெ.சி பாணியல்ல என பத்து பேராவது தெரிந்து கொள்ளட்டும் என்பதே என் நோக்கம். இலக்கியத்தின், எதிர்-சிந்தனையின், தர்க்கத்தின், தத்துவத்தின் மீது நம்பிக்கை உள்ளவரையில் நான் இப்படி டி.கெ.சியின் ஆவிக்கெதிராக எழுதிக்கொண்டே தான் இருப்பேன்.