அபிலாஷுக்கு ஓர் எதிர்வினை

அபிலாஷின் கல்யாண மாலை ஒழிக கட்டுரையின் பெரும்பகுதியோடு எனக்கு உடன்பாடுதான். ஆனால் நான் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சியும் அடிதடி இல்லாமல் – எனக்குக் கொலை மிரட்டல் விடப்படாமல் நடந்ததே இல்லை – விஷ்ணுபுரம் விழா மட்டுமே விதிவிலக்கு. விவாதங்களும் உரைகளும் இன்னும் செறிவாக இருந்திருக்கலாம்தான். ஆனால் அதை சாக்காக வைத்து எனக்குக் கொலை மிரட்டல் விடுவதும் நடந்து கொண்டேதானே இருந்தன. இப்போது மனுஷின் கவிதை வெளியீட்டு விழாவில் பேசுகிறேன். பவுன்ஸர்களோடுதான் செல்ல வேண்டும். அந்த பயம் எனக்கு விஷ்ணுபுரம் விழாவில் இல்லை. இப்படியும் ஒரு விழா நடக்கட்டுமே அபிலாஷ், அதில் என்ன பிரச்சினை? இந்த விழாவை முன்வைத்து எத்தனையோ எழுத்தாளர்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். இன்னொரு முக்கிய விஷயம், கூட்டத்தில் பாதிப் பேர் பெண்கள். நீங்கள் சொல்வது போல் – குற்றாலம் சந்திப்பு போல் நடந்தால் நாலு பெண்கள்தான் வருவார்கள். வேட்டி அவிழ அவிழ ஒருவர் குடி போதையில் கண்ணதாசனைப் பழ்ழிப் பேசுழா என்று உளறுவதையெல்லாம் மீண்டும் கேட்க வேண்டுமா?

விஷ்ணுபுரம் விழா இதே மாதிரியே நடக்கட்டும். நீங்களும் நானும் வேறு மாதிரி நடத்துவோம். எல்லோருமே நீங்களும் நானும் நினைக்கும் வண்ணம் இலக்கியச் சந்திப்பை நிகழ்த்த வேண்டுமா என்ன? நீங்கள் போற்றிப் பாராட்டும் சங்கர ராமசுப்ரமணியன் வைரமுத்துவின் பிறந்த நாள் அன்று தி இந்துவில் “ஒரு சகாப்தத்தின் சந்திப்பில்தான் வைரமுத்துவைப் போன்ற ஒரு நிகழ்வைக் காண முடியும்” என்று எழுதினார். எனக்கு மலத்தை மிதித்தது போல் இருந்தது. இம்மாதிரியான இண்டலக்சுவல் ப்ராஸ்டிட்டியூஷன் இல்லாமல் வெகுளியாக சிலர் பேசினார்கள். இருக்கட்டுமே அபிலாஷ்? இண்டலெக்சுவல் ப்ராஸ்டிட்டியூஷனை விட வெகுளியாக இருப்பது நல்லதுதானே? ஃபூக்கோவையும் தெரிதாவையும் நாம் பேசுவோம். விஷ்ணுபுரம் விருது கொடுத்ததற்காக நான் அவர்கள் சார்பாகப் பேசவில்லை. உங்கள் கட்டுரைக் கருத்துகளை நான் ஏற்றுக் கொண்டுதான் இதை எழுதுகிறேன். ஆனால் சு.ரா. சொன்னது போல் உனக்கான கவிதையை நீ எழுது. அவர்களின் கவிதையை அவர்கள் எழுதட்டும். ஏன் அபிலாஷின் கவிதையை ஜெ.வின் வாசகர்கள் எழுத வேண்டும்?

என் நாற்பத்தைந்து ஆண்டு இலக்கிய வாழ்வில் இப்போதுதான் முதல் முறையாக அடிதடி இல்லாமல், கசப்பு எதுவும் இல்லாமல் சந்தோஷமாக விருது பெற்றேன். ஒரு உயிர்மை கூட்டத்தில் எடுத்த எடுப்பில் ஒருத்தன் என்னை செக்ஸ் ரைட்டர் என்று திட்டினான். நான் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல ஒரே கூச்சல் குழப்பம். கூட்டம் ரத்தாகி விட்டது. நான் போலீஸ் பந்தோபஸ்தோடு வீடு திரும்பினேன். அதையெல்லாம் விட இந்த கல்யாண மாலை தேவலாம் அபிலாஷ்.

நம்முடைய களம் எழுத்து. அங்கே பணியாற்றுவோம். அல்லது, மாற்றுச் சந்திப்புகளை நாம் உருவாக்குவோம். நீங்கள் சொல்வது போல் ஜனநாயகபூர்வமாக மாற்றினால் கூச்சல் குழப்பமே மிஞ்சும். அதுதான் என் அனுபவம். ஆனால் அதே சமயம் பதினாறாம் தேதி இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை கோவை வட சித்தூரில் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத் தொடக்க விழாவும் அராத்துவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவும் நடந்தன. நான் வைன் கிளாஸோடுதான் பேசினேன். நீங்கள் சொல்வது மாதிரியான விழா.

இன்னொரு விஷயம். விஷ்ணுபுரம் வட்டத்தில் சாருவுக்கு விருது கொடுத்ததே ஒரு கலகச் செயல்பாடுதான். மேலும், அன்றைய தினம் திரையிடப்பட்ட த அவ்ட்ஸைடர் ஆவணப்படம் – அராத்து இயக்கம் – கலகத்தின் உச்சம்.