அபிலாஷுக்கு எதிர்வினை – 2

சில விஷயங்களை எழுத மறந்து போனேன். என்னுடைய எழுபது வயதில் இந்த விஷ்ணுபுரம் விருதை முன்வைத்துத்தான் இத்தனை பேர் என் எழுத்தின் உள்ளே சென்று தங்கள் அனுபவத்தை முன்வைத்த சம்பவம் நடந்தது. சுமார் ஐம்பது கட்டுரைகள் வந்திருக்கும் இல்லையா? அதில் போகன் சங்கர் என்ன எழுதினார்? அவர் என்ன தமிழருவி மணியன் மாதிரி பேச்சாளரா? நாங்கள் யாருமே சரியாகப் பேசவில்லை. ஆனால் அதையும் மீறி கடந்த ஒரு மாதமாக ஜெயமோகனின் தளத்தில் எத்தனை எத்தனை கட்டுரைகள் என் எழுத்தைப் பற்றி வந்தன? அதுதான் முக்கியம். இந்த விருது இல்லாவிட்டால் அது நடந்திருக்காது.

விஷ்ணுபுரம் விழா என்பது என் எழுத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு அடையாளம். அவ்வளவுதான். இது செமினார் அல்ல. நாம் செமினாரையும் விழாவையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம்.

நீங்கள் ஒரு செமினார் ஏற்பாடு செய்யுங்கள் அபிலாஷ். அங்கே ஜமாய்த்து விடுவோம்.

மேலும் ஒரு ரகசியம் அபிலாஷ். என் காலத்திய எழுத்தாளர்களில் யாருமே என்னை ஒரு எழுத்தாளனாகக் கருதுவதில்லை. வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, கோணங்கி, சி. மோகன், யுவன் சந்திரசேகர், மற்றும் இளைஞர்கள் சங்கர ராமசுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற யாருக்குமே நான் எழுத்தாளனே இல்லை. இருவர் மட்டுமே விதிவிலக்கு. மூத்தவர் இந்திரா பார்த்தசாரதி. மற்றும் ஜெயமோகன். ஆகவேதான் இந்த விஷ்ணுபுரம் விழா என் வாழ்வில் முக்கியமானது, மகத்தானது.