ஆட்டோநேரட்டிவ் தம்பிகளுக்கு…

நம் எதிரிகள் நம்மை அடையாளப்படுத்துவது போல் குடி அல்ல நம் பிரச்சினை.  நாம் செயல்வீரர்கள், குடிகாரர்கள் அல்ல.  அதே சமயம் நம்மிடம் இன்னொரு பிரச்சினை உள்ளது.  அது, இன்றைய இளைஞர்களின் பிரச்சினை. 

முதலில் ஒரு காரியத்தில் இறங்கும்போது ஒரு அடிப்படைப் புரிதல் வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு வாட்ஸப்பிலோ தொலைபேசியிலோ இல்லை.  ஒரு வாசகர் ஒரு புத்தகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். 

நம்முடைய கடமை, புத்தகத்தை அனுப்புவது.   என் அப்பாவுக்குப் புடுக்கு வலி, என் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி என்றெல்லாம் காரணம் சொல்லக் கூடாது.  தினமலர் ரமேஷ் என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் இது:  ஒரு பத்திரிகைக்காரனின் வேலை, உலகமே அழிந்தாலும் “உலகம் அழிந்து விட்டது” என்று தலைப்புச் செய்தி போட்டு விட்டு உலகத்தோடு சேர்ந்து அழிவதுதான். 

என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நூறு முறை சொல்லியிருக்கிறேன்.  உயிர்மைக்கு மதியத்துக்குள் கட்டுரை கொடுக்க வேண்டும்.  காலையில் என் தந்தை மரணம்.  ஹமீதிடம் காரணத்தைச் சொல்லி விட்டு நான் பாட்டுக்குப் போயிருக்க முடியாதா?  அவர் என்னைத் தடுத்திருப்பாரா?  நான் போகவில்லை.  கட்டுரையை முடித்துக் கொடுத்து விட்டுத்தான் போனேன்.  நண்பர்களே, அது என் தந்தையின் மரணமாக இல்லாமல் என்னுடைய மரணமாகவே இருந்தாலும் எமனைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி விட்டு கட்டுரையை அனுப்பிவிட்டுத்தான் போவேன்.

அந்த அளவுக்கு நீங்கள் இருக்க வேண்டாம்.  பயந்து விடுவீர்கள்.  ஆனால் ஒத்துக் கொண்டதை செய்து முடித்து விடுங்கள்.  எந்தக் காரணமும் சொல்லாதீர்கள்.  மனிதாபிமானத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விடுங்கள்.  உங்கள் வாக்குதான் முக்கியம்.  பதிப்பகத்தில் உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது.  அதை மதியுங்கள்.  ஆவணப்படத்தின் குழு எப்படி ஒரு பத்து மணி நேரப் படப்பிடிப்பை பத்தே நாட்களில் முக்கால் மணி நேரத்தில் தொகுத்தது.  அது ஒரு உலக சாதனை.  என் வாழ்வில் முடியாது என்ற வார்த்தையே இல்லை என்றார் அராத்து.  உங்கள் உதவியோடு செய்து முடித்தார்.  அதே கடமையுணர்வு பதிப்பக விஷயத்தில் 365 நாட்களும் இருக்க வேண்டும்.  ஏதாவது பிரச்சினை என்றால் என்னை அணுகுங்கள்.  தீர்வு பற்றி யோசிக்கலாம்.  எதையும் ஒத்திப் போடாதீர்கள்.  வாசகரின் நம்பிக்கைதான் நம்முடைய பலம்.  மறவாதீர்கள். 

வாழ்த்தும் அன்பும்.

சாரு