மளிகைக்கடையும் பதிப்பகமும்…

தமிழில் 1965இல் தொடங்கி செயல்பட்ட வாசகர் வட்டம் பற்றி நான் எழுதி ஈரம் காய்வதற்குள் ஒரு நண்பரிடமிருந்து நேற்று மாலை தொலைபேசி அழைப்பு.  சாரு, உங்கள் கட்டுரை மிகவும் நல்ல கட்டுரை, ஆனால் அதில் சில விவரப் பிழைகள் உள்ளன.  அதைக் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்.  என்ன விவரப் பிழை என்றால், வாசகர் வட்டம் போட்ட மொத்த புத்தகங்களே 45தான்.  அதிலும் வெளிவந்தவை 39தான்; 45 இல்லை.  ஆக, ஒரு பதிப்பகம் எப்படி நடத்தக் கூடாது என்பதற்கான ஒரு முன்னோடி என்று வேண்டுமானால் வாசகர் வட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார்.  மேலும், 39 புத்தகம் போடுவதற்காக ஒருத்தர் தி.நகர் வீட்டையெல்லாம் விற்க வேண்டிய அவசியம் இல்லை என்று முடித்தார். 

நண்பர் சொன்ன எண்களில் தவறு இல்லை.  ஆறு ஆண்டுகள்தான்.  முப்பத்தொன்பது நூல்கள்தான்.  ஆனால் வீட்டை அடமானம் வைத்தார் என்பது உண்மை.  பதிப்பகத்துக்காகத்தான் வைத்தார் என்பதும் உண்மைதான்.  விற்றார் என்பது மட்டுமே என் அனுமானம்.  ஏனென்றால், அவருடைய கடைசிக் காலத்தில் கொடுத்த ஒரு நேர்காணலை நான் படித்திருக்கிறேன்.  அதில் அப்படிச் சொன்னதாக ஞாபகம். 

இப்போது நான் வேறோர் கதை சொல்கிறேன்.  ரீடர்ஸ் இண்டர்நேஷனல் என்று ஒரு பதிப்பகம்.  அந்தப் பதிப்பகத்தின் நூல்களை வாசிக்க வேண்டுமானால் பதிப்பகத்தில் ஒருவர் ஆண்டுச் சந்தாதாரர் ஆக வேண்டும்.  ஆனால்தான் அந்தப் புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்.  ஆர்.ஐ. என்று சுருக்கமாகச் சொல்வோம்.  ஆர்.ஐ. புத்தகங்களை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.  ஆர்.ஐ. தொடங்கப்பட்டது 1984இல்.  நான் அந்த ஆண்டிலிருந்து அதன் சந்தாதாரராக இருக்கிறேன்.  சந்தா ஆயிரங்களில்.  ஆரம்பத்தில் ஆண்டுக்கு மூன்று புத்தகங்கள் போட்டார்கள்.  பிறகு அது குறைந்து ஒன்றானது. 

1984இலிருந்து தொடங்கி இன்று வரை மொத்தம் ஐம்பது புத்தகங்களே வெளியிட்டிருக்கிறார்கள்.  முப்பத்தெட்டு ஆண்டுகளில் ஐம்பது நூல்கள்.  ஆனால் உலகில் ரீடர்ஸ் இண்டர்நேஷனலைப் போன்ற ஒரு பதிப்பகம் வேறு இல்லை.  எல்லா பெரிய பதிப்பகங்களும் ஆர்.ஐ. பதிப்பகத்தை அண்ணாந்துதான் பார்க்கின்றன. 

இன்றைய தினம் இலக்கியவாதிக்கு அந்தஸ்து அதிகமா?  ஒரு pulp நாவல் எழுதும் ஆளுக்கு அந்தஸ்து அதிகமா?  

வடுவூர் துரைசாமி அய்யங்காரிலிருந்து தொடங்கி பி.வி.ஆர், ஹேமா ஆனந்த்தீர்த்தன், வே. கபிலன், புஷ்பா தங்கதுரை, லக்ஷ்மி என்று நூற்றுக்கணக்கான கொசு எழுத்தாளர்கள் இங்கே இருந்தார்கள்.  அவர்கள் பெயர் இன்று காணாமல் போய் விட்டது.  ஆனால் புதுமைப்பித்தன் நிற்கிறார்.  மௌனி எழுதியது இருபது கதைகளோ என்னவோ.  ஆனால் புதுமைப்பித்தன் அவரை சிறுகதையின் திருமூலர் என்று அழைத்தார். 

எனவே எண்ணிக்கையில் அல்ல ஒரு இயக்கத்தின் அடையாளம்.  அதன் பாதிப்பும் வீச்சும் மொழியிலும் கலாச்சாரத்திலும் எந்த அளவு விளைந்திருக்கிறது என்பதைப் பொருத்தே ஒரு இயக்கம் அர்த்தம் பெறுகிறது.  ரீடர்ஸ் இண்டர்நேஷனல் ஒரு பதிப்பகம் அல்ல.  ஒரு இயக்கம். 

முப்பத்தெட்டு ஆண்டுகளில் ஐம்பது நூல்களை வெளியிட்ட ரீடர்ஸ் இண்டர்நேஷனலுக்கு நிதி உதவி செய்த அமைப்புகள்: National Endowment for the Arts, Ford and Rockefeller Foundation, and MacArthur grants, as well as Arts Council, Know How Fund and other UK funders. கடைசி வார்த்தைகளை கவனியுங்கள், யூ.கே.யிலிருந்து நிதி உதவி அளித்தவர்கள்.  இத்தனை உதவி இருந்தும் அவர்களால் திட்டமிட்டபடி நூல்களை வெளியிட முடியவில்லை.  காரணம், வணிகம் அவர்களது நோக்கம் அல்ல.  ஆர்.ஐ. லாப நோக்கம் இல்லாத பதிப்பகம். அது மட்டும் அல்ல.  அப்போது ஒரு ஆங்கிலப் புத்தகம் இருநூறு ரூபாய் இருக்கும்; ஆனால் ஆர்.ஐ. புத்தகம் ஐநூறு ரூபாய் கணக்கு வரும்.  அறுநூறு எழுநூறு என்றும் போகும்.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  மேலும், அந்தப் பதிப்பகம் பல கோடீஸ்வர நிறுவனங்களின் நிதியுதவியில் நடக்கிறது.  அப்படியும் ஆர்.ஐ. இருபது ஆண்டுகளில் பதிப்பைக் குறைத்துக் கொண்டது.  ஒரு கட்டத்தில் முற்றிலும் நிறுத்திக் கொண்ட்து.  காரணம், குறைந்த அளவு நூல்களை வெளியிட்டதுதான்.  அந்த நூல்கள் பொது வாசகர்களின் வாசிப்புக்கு உரியதாக இல்லை. 

உலகின் மிகப் பெரும் நிறுவனங்களிலிருந்து நிதியுதவி பெற்ற ரீடர்ஸ் இண்டர்நேஷனல் பதிப்பகத்தாலேயே சமாளிக்க முடியவில்லை என்கிற போது வாசகர் வட்டத்தின் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி ஏன் தன் வீட்டை பதிப்பகத்துக்காக விற்றிருக்கக் கூடாது? 

நண்பரே, இப்போது நான் எழுதியிருப்பதையெல்லாம் நீங்கள் என்னிடம் பேசியிருக்க வேண்டும்.  நீங்கள் பேசியதைத்தான் நான் பேசியிருக்க வேண்டும்.  ஆனால் கலியின் விளையாட்டைப் பாருங்கள். இடம் மாறிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?

ஆர்.ஐ. என்ன செய்தது?  குரல்வளை நசுக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கு குரலை அளித்தது.  கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் பலர் எழுதவே முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள்.  அவர்களையெல்லாம் தேடித் தேடி பதிப்பித்தது ஆர்.ஐ.  அதற்கு முன்னால் அந்த எழுத்தாளர்களின் பெயரே வெளியுலகத்துக்குத் தெரிந்திருக்கவில்லை.  அதைப் போலவேதான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் ஏற்கனவே தடை செய்யப்பட்ட நூல்களை முதல் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.  ரீடர்ஸ் இண்டர்நேஷனல் இல்லையென்றால் செர்ஹியோ ராமிரெஸ் (நிகாராகுவா) போன்ற எழுத்தாளர்கள் உலக அளவில் தெரிந்திருக்கவே மாட்டார்கள்.  (அதேபோல் வாசகர் வட்டம் இல்லாவிட்டால் அதில் வெளிவந்த பல எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளுக்கே தெரிந்திருக்க மாட்டார்கள்.) 

பதிப்பகம் என்பது மளிகைக்கடை இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  க்ரியா ராமகிருஷ்ணனிடன் சார்வாகன் தன்னுடைய சிறுகதைகள் முழுவதையும் கொடுத்தார்.  ராமகிருஷ்ணன் அதை வெளியிடவில்லை.  சார்வாகன் நாஸ்திகராக இருந்தாலும் ஒரு ஞானி.  அதனால் சார்வாகன் ராமகிருஷ்ணனிடம் கேட்கவில்லை.  அதோடு சார்வாகன் என்ற எழுத்தாளரே தமிழில் இல்லாமல் போனார்.  முப்பது நாற்பது ஆண்டுகள் கழித்து யுகன் என்ற இலக்கிய ஆர்வலர் – என் ஸ்வீகார புத்திரன்தான் – நற்றிணை என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து சார்வாகனின் முழுத் தொகுப்பையும் கொண்டு வந்தார். ஆக, மொத்தத்தில் சார்வாகன் என்ற எழுத்தாளரை உயிரோடு புதைத்த மகானுபாவர் க்ரியா ராமகிருஷ்ணன்.  இப்போது சொல்லுங்கள், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி எத்தகைய பெரும் சேவையைச் செய்திருக்கிறார் என்று?  பத்து இருபது எழுத்துலக ஜாம்பவான்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தார்… பத்து இருபது பேரை உருவாக்கினார்… அப்படியாகத்தான் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் பெரும்பணி ஆற்றியவர்களில் ஒருவராகிறார் வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.   

ஆர்.ஐ.யின் செயல்முறை என்னவாக இருந்தது?  நிகாராகுவாவில் செர்ஹியோ ராமிரெஸ் (Sergio Ramirez) என்ற பாதிரியாரின் To Bury Our Fathers என்ற நாவல் சொமோஸாவின் சர்வாதிகார ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்தது.  ராமிரெஸ் சாந்திநிஸ்த்தா புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்து தலைமறைவாக இருந்தார். ஆர்.ஐ. அந்த நாவலை ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.  ஆர்.ஐ.யின் புத்தகங்கள் அனைத்துமே ஆர்.ஐ.யின் மேற்பார்வையில் முதல் முதலாக அந்தந்த மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.  முதல் முதலாக என்பது முக்கியம்.  அந்த நாவலை நான் 1996இல் படித்தேன்.  அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ஸீரோ டிகிரியில் அந்த நாவலை ஒரு பாத்திரமாகப் பயன்படுத்தினேன்.  அந்த நாவல் அதன் தலைப்பிலேயே அமைந்த ஒரு அத்தியாயத்தில் (ஸீரோ டிகிரி) ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறது.  அந்த நாவலின் காரணமாக கிட்டத்தட்ட நாவலில் ஒரு கொலை அளவுக்கான சம்பவம் நடக்கிறது.

எமிலி ஹபீபி என்ற இஸ்ரேலிய அரபி எழுத்தாளரின் Sayeed, the Pessoptimist என்ற நாவலும் ரீடர்ஸ் இண்டர்நேஷனல் மூலம்தான் முதல் முதலாக வெளியுலகுக்குக் கிடைத்தது.  நாம் ஆயிரக்கணக்கான நாவல்களைப் படிக்கிறோம்.  ஆனால் இந்தக் குறிப்பிட்ட நாவல் என்னுடைய எழுத்துப் பாணியையே மாற்றியது என்று சொல்லலாம்.  என் எழுத்தைப் படித்து இடம் பற்றிய பிரக்ஞையின்றி வாய் விட்டுச் சிரித்து விடுவதாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.  அதற்கு நாகூர் மண்ணும் ஒரு காரணம் என்றாலும், இலக்கிய ரீதியாக எமிலி ஹபீபியின் இந்த நாவலின் பாதிப்பும் ஒரு காரணம். 

அப்துல்லத்தீஃப் லாபி (Abdellatif Laabi) என்ற மொராக்கோ எழுத்தாளரின் Rue Du Retour (திரும்பும் வழி) என்ற நாவலை ஆர்.ஐ.தான் வெளியிட்டது.  அந்த நாவல்தான் ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தின் மீதான என் ஆர்வத்துக்கு வித்திட்டது.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படித்த அந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு காட்சியும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன.  அதை விட முக்கியமாக, சீலேவுக்கும் எனக்குமான கலாச்சாரத் தொடர்பு எனக்கு அப்துல்லத்தீஃப் லாபியின் இந்த நாவலின் மூலமாகவே கிடைத்த்து. 

கதை நாயகன் அப்துல்லத்தீஃப் லாபிதான்.  அரசியல் தொடர்பு இல்லாதவர்.  பேராசிரியர்.  ஆனால் அவரது சக பேராசிரியர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள்.  அவர்களெல்லாம் யார் என்று கேட்டு லாபியை சிறையில் தள்ளி சித்ரவதை செய்வார்கள் ஆட்சியாளர்கள்.  அந்த நாவலில் வரும் அப்படி ஒரு சித்ரவதைக் காட்சியை நான் திரைப்படத்தில் கூட கண்டதில்லை.  ஆனாலும் லாபி தன் நண்பர்களின் பெயரைச் சொல்ல மறுக்கிறார்.  காரணம், அவர் மனைவி அவருக்கு அறிமுகம் செய்த ஒரு சீலே பாடகன்.  அவன் பெயர்தான் விக்தர் ஹாரா.  ஆக, விக்தர் ஹாராவின் பெயரே எனக்கு இந்த நாவலின் மூலமாகத்தான் கிடைத்தது.  ஹாராவின் கதையை நான் நூறு முறை எழுதி விட்டேன்.

ஹெய்த்தி என்ற குட்டியான மத்திய அமெரிக்க நாட்டைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  அங்கிருந்து ஒரு மகத்தான நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டது ஆர்.ஐ.  Cathedral of the August Heat by Pierre Clitandre என்பது அந்த நாவல். 

இப்படியே ஐம்பது நாவல்கள்.  ஆக, ரீடர்ஸ் இண்டர்நேஷனல் என் பல்கலைக்கழகமாகவே திகழ்கிறது.  எனக்கு மட்டும் அல்ல.  சல்மான் ருஷ்டிக்கும்தான்.  ருஷ்டியும் இதன் ஆரம்ப காலத்திலிருந்தே சந்தாதாரர்.  ஆர்.ஐ. பற்றி அவர் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.  ருஷ்டி உலகப் புகழ் பெற்றவர் என்பதால் ஒவ்வொரு ஆர்.ஐ. புத்தகம் வந்ததும் அதைப் படித்து விட்டு நியூயார்க்கரில் மதிப்புரை எழுதுவதை வழக்கமாக்க் கொண்டிருந்தார். 

உலகிலுள்ள வேறு எந்தப் பதிப்பகமாவது ரீடர்ஸ் இண்டர்நேஷனலின் இட்த்தைத் தொட முடியுமா? 

உலகம் பூராவிலும் தடை செய்யப்பட்ட நூல்களை முதல் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெய்ர்த்து வெளியிட்டது ரீடர்ஸ் இண்டர்நேஷனல். தங்களின் நோக்கம் என்று ஆர்.ஐ. அறிவித்தது இது:  பல்வேறு தேசங்களில் உருவாகிக் கொண்டிருக்கும் இலக்கியத்தை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்துவது.  குறிப்பாக யாரெல்லாம் ஒரு தேசத்தின் மனசாட்சியாக விளங்குகிறார்களோ – அதன் காரணமாகவே அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டும், நாடுகடத்தப்பட்டும் வாழ்கிறார்களோ, தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்களோ அவர்களின் எழுத்தையே ரீடர்ஸ் இண்டர்நேஷனல் கவனப்படுத்துகிறது. 

அதன் காரணமாகவே உலகில் பல்வேறு பிரம்மாண்டமான பதிப்பகங்கள் இருந்த போதிலும் ரீடர்ஸ் இண்டர்நேஷனல் ஒரு இலக்கிய இயக்கமாகத் திகழ்கிறது.  அந்த இயக்கம் உலகெங்கிலும் இலக்கியம் எங்கெல்லாம் ஒடுக்குதலுக்கு உள்ளாகிறதோ அங்கெல்லாம் ஒரு ரட்சகனைப் போல் போய் நின்றது. 

தமிழ்நாட்டில் அப்படி எதுவும் தடை இல்லை.  ஆனால் கல்கி மூலமாகவும் பின்னர் சுஜாதா மூலமாகவும் தமிழ் இலக்கியத்தின் மீது பெரியதொரு பனி மூட்டம் படர்ந்திருந்தது.  இலக்கியம் பற்றிய அறிமுகமே யாருக்கும் இல்லை.  பதிப்பகங்களும் இல்லை.  அந்த நிலையில்தான் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு படைப்பாளியையும் அணுகி நாவல்களை எழுதச் சொல்லி பதிப்பித்தார்.  அப்படித்தான் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த சா. கந்தசாமி தன் முதல் நாவலான சாயாவனத்தை எழுதினார்.  வாசகர் வட்டம் இல்லையென்றால் சாயாவனம் என்ற அந்த அற்புதமான நாவல் எழுதப்பட்டிருக்காது.  அதைப் போலவேதான் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த ஆ. மாதவனும் வாசகர் வட்டத்துக்காகத் தன் முதல் நாவலை எழுதினார்.  வாசகர் வட்டம் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் நூறு புத்தகங்களுக்குச் சமம்.  ஏனென்றால், ஆறு ஆண்டுகளே என்றாலும் வாசகர் வட்டம் அப்போதும் அதற்குப் பிறகும் ஒரு இயக்கம்.  ஆறு ஆண்டுகளோடு முடிந்து விடவில்லை வாசகர் வட்டத்தின் இருப்பு.   

கல்கி, சுஜாதா என்ற இரண்டு வெகுஜன எழுத்தாளர்களால் எப்படி தீவிர இலக்கியம் தமிழகத்தில் இல்லாமலே போக இருந்ததோ அதை எதிர்த்து நின்ற போராளிகளில் ஒருவர் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. 

என்னிடம் புள்ளி விவரக் கணக்கு சொன்ன நண்பரின் பிரச்சினை என்னவென்றால், அவர் பதிப்பகத்தையும் மளிகைக் கடையையும் ஒன்றாகவே நினைக்கிறார் என்பதுதான்.  அதனால்தான் அவர் சொன்னார், ஒரு பதிப்பகம் எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு உதாரணம் வாசகர் வட்டம் என்று.   

இப்போது சொல்லுங்கள் நண்பரே, காந்தி ஒரு வக்கீலாகவே இருந்திருக்கலாம் என்கிறீர்களா, பணம் காசு வராத சுதந்திரப் போராட்டத்தில் குதித்தது சிறந்தது என்கிறீர்களா?

என்னுடைய ஒரே மகன், பணம் சம்பாதிக்கப் போவதை ஆதரிப்பேனா?  அல்லது, இமயத்தில் ஒரு துறவியாக வாழ்வதை ஆதரிப்பேனா?  நிச்சயமாக இரண்டாவதைத்தான்.

இது மதிப்பீடுகள் சார்ந்த விஷயம் நண்பரே.  உங்களுக்கு எண்ணிக்கையும் பணமும் பெரிதாக இருக்கிறது. எனக்கு லக்ஷ்மியின் கலாச்சார செயல்பாடும் போராட்டமும் பெரிதாக இருக்கிறது.  காமராஜரே லக்ஷ்மியிடம் கேட்டிருக்கிறாரே, ஏன் காசு வராத இந்தத் தொழிலைச் செய்கிறாய் என்று?  சரி, ஸீரோ டிகிரியை எடுத்துக் கொள்வோம்.  காயத்ரி ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் தரும் ஃப்ரெஞ்ச் பேராசிரியை வேலையை விட்டு லாபம் தராத பதிப்பகம் நடத்துவதன் காரணம் என்ன?  ராம்ஜி ஏன் முழுசாகத் தன் நேரத்தை சினிமாவில் செலவிடாமல் (ஒரு புத்தகத்துக்கு) பத்து ரூபாய் லாபம் தரும் அமேஸானின் டிங் சப்தத்தில் இன்பம் காண்கிறார்?

வாசகர் வட்டத்தின் ஆயுள் ஆறு ஆண்டுகளா?  இல்லை, வாசகர் வட்டத்துக்கு முடிவே இல்லை.  ஏனென்றால், அது ஒரு legacy.  இன்று பெயரளவில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் இல்லையே தவிர வாசகர் வட்டத்தின் நூல்கள் இன்னமும் நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருக்கின்றன.  அப்படியே இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அந்த நூல்களின் பௌதிக இருப்பு இல்லாமல் போனாலும் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளின் ஜ்வாலை இருந்து கொண்டேதான் இருக்கும்.  அந்த ஜ்வாலை ஒவ்வொரு எழுத்தாளனின் எலும்பு மஜ்ஜைக்குள்ளும் போய் அவனைப் பதிப்பகம் ஆரம்பிக்கச் சொல்லித் தூண்டிக் கொண்டே இருக்கும்.   ஏனென்றால், வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள்தான் இப்போது ஆட்டோநேரட்டிவ் ப்ப்ளிஷிங்காக உருவெடுத்திருக்கிறது.  ஆட்டோநேரட்டிவ் என்பது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கனவின் நீட்சி.  ஆட்டோநேரட்டிவ் இளைஞர்களுக்கு லக்ஷ்மியின் பெயர் தெரியாமல் இருக்கலாம்.  வாசகர் வட்டத்தின் நூல்களை அவர்கள் பார்த்திராமல் கூட இருக்கலாம்.  ஆனால் அவர்கள்தான் லக்ஷ்மியின் வாரிசுகள்.  லக்ஷ்மியின் கனவை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள். 

மணிக்கொடியும் 1930இலிருந்து 1935 வரைதான் வந்தது.  மணிக்கொடிதான் எழுத்து பத்திரிகைக்கு முன்னோடி.  மணிக்கொடியில்தான் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, மௌனி, சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. சிதம்பர சுப்ரமணியன், ந. சிதம்பர சுப்ரமணியன், எம்.வி. வெங்கட்ராம் போன்றவர்கள் எழுதினார்கள்.  வெறும் ஐந்து ஆண்டுகள்தான்.  ஆனால் மணிக்கொடி ஒரு இயக்கம்.  அடுத்து வந்தது எழுத்து. 

எழுத்து பதினோரு ஆண்டுகள் வந்தது.  1959இலிருந்து 1970 வரை.  119 இதழ்கள்.  அதோடு முடிந்து விட்டதா எழுத்து பத்திரிகை?  முதலில் எழுத்து என்பது பத்திரிகையா?  இல்லை.  அது ஒரு இயக்கம்.  கல்கி பத்திரிகையின் நிலை இன்று என்ன?  விகடனின் நிலை இன்று என்ன?  ஆனால் எழுத்துவின் வாரிசுகளாகிய நாங்கள் – மூவர் முன்னணியில் இருந்தாலும் எங்கள் தோளோடு தோளாக முந்நூறு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் – செல்லப்பாவின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறோம்.  சரவணன் சந்திரன், லக்ஷ்மி சரவணகுமார், சுஷில் குமார் வரை நீள்கிறது அந்தப் பெரும் படை. 

முடிக்கிறேன்.  குறுநாவலை முடிக்க வேண்டும்.  இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுப்பதற்குக் காரணமாக இருந்த நண்பருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனக்கு நடந்த சம்பவங்களைச் சொல்கிறேன்.  உயிர்மையில் நாங்கள் மூவரும் சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்து கொண்டிருந்தோம்.   புத்தக விழாவில் உயிர்மை ஸ்டாலுக்குப் போனால் என்னிடம் கையெழுத்து வாங்க வரிசையில் நிற்பார்கள். 

ஒரு கட்டத்தில் உயிர்மையிலிருந்து இன்னொரு பதிப்பகம் போனேன்.  மூலதனத்திலும் வியாபாரத்திலும் உயிர்மையை விடப் பெரியது.  புத்தக விழாவில் அந்த ஸ்டாலுக்கு நான் போனால், என்னை அங்கே உள்ள யாருக்குமே அடையாளம் தெரியாது.  புத்தக விற்பனையாளர் மட்டும் அமர்ந்திருப்பார்.  எனக்கு வணக்கம் சொல்வார்.  பார்க்க மால் மாதிரி இருக்கும்.  அஞ்சு நிமிஷம் அனாதையாக நின்று விட்டு நகர்ந்து விடுவேன்.  என் வாழ்நாளில் அப்படி ஒரு சோகத்தை நான் அனுபவித்த்தே இல்லை.  ஏனென்றால், புத்தகத் திருவிழாதான் ஒரு எழுத்தாளனின் வாழ்வில் மிகப் பெரிய கொண்டாட்டம்.  அங்கே என்னுடைய புத்தகங்கள் வெளியாகும் அரங்கில் அனாதையாக நிற்கும் அபத்தம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.  அந்த அரங்கில் நின்று நான் ஒரு கையெழுத்து கூடப் போட்டதில்லை.  காலச்சுவடு அரங்கம் போனால் கூட ஒன்றிரண்டு  கையெழுத்து போட்டிருக்கிறேன்!

இரண்டு விதமான பதிப்பகங்கள்.  ஒன்று, மளிகைக்கடை அல்லது மால்.  இரண்டாவது, ரிஷிகளின் வனக்குடில்.  மளிகைக்கடையில் நம் வயிற்றுக்குக் கிடைக்கும்.  தின்று தின்று கழிவை வெளியேற்றலாம்.  பர்ணசாலையில் வயிற்றுக்கு சரியாகக் கிடைக்காது.  ஆனால் ரிஷிகளிடமிருந்து ஞானம் கிடைக்கும். 

வாசகர் வட்டமும் ரீடர்ஸ் இண்டர்நேஷனலும் இரண்டாம் ரகம்.