விஷ்ணுபுரம் விழா பற்றி நேற்று அபிலாஷின் கட்டுரையைப் படித்ததிலிருந்து அது பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். என் மனதை அவர் கருத்துக்கள் துளைத்துக் கொண்டே இருந்தன. நான் ஒன்றுக்கு இரண்டாக அவருக்குப் பதிலும் சொல்லி விட்டேன். ஆனாலும் என் பதிலில் எனக்குத் திருப்தி இல்லை.
இருப்பினும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தேன். செமினார் வேறு, விழா வேறு என்பதே அது. நாம் கருத்தரங்கையும் விழாவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
கருத்தரங்குகளில் எல்லோரும் கலந்து கொள்ள முடியாது. அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். எனக்குத் தெரிந்து தில்லியில் நடக்கும் Almost Island Dialogues கருத்தரங்குதான் ஆகச் சிறப்பானது. பகல் முழுவதும் தீவிரமான விவாதங்கள். மாலையில் ஆறரை மணிவாக்கில் கவிதை கதை வாசிப்பு. எட்டிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரை குடி. ஆனால் காலை பத்து மணிக்கு கருத்தரங்குக்கு வந்து விட வேண்டும். எல்லாம் ராணுவ ஒழுங்குடன் நடக்கும். என் சிநேகிதி ஷர்மிஸ்தா மொஹந்தி மற்றும் விவேக் நாராயணன் ஆகியோரின் முயற்சியில் ஆண்டு தோறும் நடக்கிறது.
இருபது பேருக்கு மேல் அழைப்பு இல்லை. இருபது பேருமே உலக அளவில் முக்கியமான படைப்பாளிகள். பார்வையாளர்கள் இருபது பேர் இருப்பார்கள். ஆனால் மாலையில் நடக்கும் வாசிப்பு நிகழ்ச்சியில் ஐம்பது அறுபது பேர் இருப்பார்கள்.
கிழக்கு ஐரோப்பா, தென்னமெரிக்கா என்று தொலைதூரத்துப் படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். விவேக் நாராயணன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் பெற்றோர் தமிழர்கள். விவேக் தட்டுத் தடுமாறி தமிழ் பேசுவார். எழுதத் தெரியாது. உலகப் புகழ் பெற்ற கவிஞர். என் நண்பர். 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டிருக்கிறேன். மூன்று நாட்கள் நடக்கும். இரண்டு முறையும் என் ஆச்சரியம் என்னவென்றால், என்னை அவர்கள் ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரியோ, நபக்கோவ் மாதிரியோ, சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி மாதிரியோதான் நடத்தினார்கள். பேசினார்கள். மற்றவர்களிடமிருந்து என்னை வித்தியாசப்படுத்திக் கொண்டார்கள். அதை என்னால் சரியாக எழுத முடியவில்லை. பேசினால் விளக்கி விடுவேன். பேராசிரியர்களின் நடுவே ஒரு கவிஞன் வந்தால் என்ன ஒரு மரியாதை இருக்குமோ அப்படி நடத்தினார்கள்.
அத்தனை பேரும் அத்தனை பேரையும் ஓரளவுக்காவது படித்து விட்டுத்தான் வர வேண்டும். நீங்கள் ஜெர்மனில் மொழி பெயர்க்கப்பட்டால் ஜெர்மனியின் இலக்கிய சூப்பர் ஸ்டாராவீர்கள்; இலக்கிய ரசிகர்கள் யாவரும் சித்தார்த் என்ற பெயருக்குப் பதிலாக சாரு என்று பெயர் வைப்பார்கள் என்றெல்லாம் புகழ்ந்தார் ஸ்லோவேனியக் கவிஞர் தோமாஸ் ஸாலமூன் (Tomaz Salamun).
அது ஒரு விதம் என்றால், விஷ்ணுபுரம் விழா இன்னொரு விதம். இரண்டுமே சந்தோஷம்தான். இரண்டுமே தேவைதான். விரைவில் ஜெயமோகன் writers in residence என்ற திட்டத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கு சில கோடிகள் தேவைப்படும். தேவைப்படும் எழுத்தாளர்கள் அங்கே போய் தங்கி எழுதலாம். மலை வாசஸ்தலமாக இருத்தல் அவசியம். நாங்கள் சிறிய அளவில் ஆரோவில்லில் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஜெயமோகன் அப்படி ஒன்று ஆரம்பித்தால் அங்கே தங்கி நாம் இலக்கியம் பேசலாம்.
எனக்கு வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோநேரட்டிவ் தொடக்கவிழா/அராத்து புத்தக வெளியீட்டு விழாவில் போய் விட்டது. சனிக்கிழமை ஆவணப்படத்தில் போய் விட்டது. ஞாயிறு கால்பந்துப் போட்டியில் முடிந்து விட்டது. ஆக மொத்தம் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களுடன் பேசவே இயலாமல் போனதுதான் எனக்கு ஏமாற்றம். வேறு எப்போதாவதுதான் சந்தித்துப் பேச வேண்டும்.
இன்று சக்திவேலின் கட்டுரை கீழே.
விஷ்ணுபுரம் விழா,கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)