புத்தக விழா

புத்தக விழா என்றால் எனக்கு ஒரு சின்ன பிரச்சினைதான் மனதில் நெருடும். வாகனம். மாலை நான்கு மணிக்குக் கிளம்பினால் இரவு ஒன்பதுக்குத் திரும்பலாம். சென்ற ஆண்டும் அதற்கு முந்தின ஆண்டுகளும் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்போது அந்த நண்பர் என் மீது சற்று பிணக்கில் இருக்கிறார். எப்போது அழைத்தாலும் நாளை அழைக்கிறேன் என்கிறார். எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன். அவர் இருந்தவரை வாகனப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் என்னோடு தொடர்ந்து நட்பாக இருப்பதும் கடினம்தான். நண்பர்கள் பலர் விலகி விடுகின்றனர். அதுதான் அவர்களுக்கும் நல்லது. துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

ஆட்டோவில் வருவது சாத்தியமே இல்லை. ஆட்டோக்காரர்கள் கொடூரமாக மாறி விட்டார்கள். சாந்தோமிலிருந்து நந்தனத்துக்கு முந்நூறு கேட்கிறார்கள். அதிலும் ரோடு மேலேயே விட்டு விட்டுப் போய் விடுவார்கள். உள்ளே போக முடியாது, கூட்டம் என்று பதில் வரும்.

வாகனம் இல்லாமல் திரும்புவது எனக்கு அசாத்தியம். ஸீரோ டிகிரி அரங்கிலிருந்து மெயின் ரோடு வரை நடப்பது கடினம். என்னால் காலையில் பத்து கிலோமீட்டர் கூட நடக்க முடியும். இரவில் கடினம். நெஞ்சு வலிக்கும். கார் என்றால் நடக்க வேண்டியது இல்லை. சீனி ஒரு இடம் காண்பித்திருக்கிறார். யாருக்கும் தெரியாது. அங்கே நம் காரை நைஸாக வைத்துக் கொள்ளலாம். அரங்கத்திலிருந்து ஒரு நூறு அடி தூரம்தான் இருக்கும். இதெல்லாம் சீனிக்குத்தான் அத்துப்படி. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அவர் மட்டுமே தன் காரை இந்த ரகசிய இடத்தில் வைத்துக் கொள்கிறார். எங்கே என்று கேட்டுத் தொல்லை பண்ணாதீர்கள்.

புத்தக விழா முடிந்து தினமும் இரவில் ராம்ஜியின் காரில் திரும்புவதில் ஒரு சின்ன பிரச்சினை. அவர் கல்லா கட்டின பிறகுதான் சாவகாசமாக பத்தரை மணிக்குக் கிளம்புவார். அவ்வளவு நேரம் வெளியே இருக்க செண்ட்ரல் ஜெயிலில் எனக்கு அனுமதி கிடைக்காது. ரண களமாகும். எனக்குமே அது நல்லது அல்ல. வாகன விஷயத்துக்கு யாரேனும் பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது, பிணக்கில் இருக்கும் நண்பரே தன் வண்டியை மட்டும் அனுப்பி வைக்க முடியுமா? அவருடைய ட்ரைவருக்கு என்னோடு ஒன்றும் பிணக்கு இல்லை என்று நினைக்கிறேன். அல்லது, வேறு என்ன செய்யலாம்? தினமும் போக மாட்டேன். Familiarity breeds contempt என்பது அடிக்கடி காயத்ரி சொல்லும் மந்த்ரம். அதாவது, ரொம்பவும் நெருங்கினால் மரியாதை இருக்காது. ஆகவே, ஒன்று விட்டு ஒருநாள் வருவேன். அதோடு, எனக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்ததற்கு வாழ்த்து அனுப்பாத நண்பர் வரும் நாட்களிலும் வர மாட்டேன். அதை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம். அங்கே அவரை ப்ளாக் செய்யவில்லை. ஃபோனில் மட்டும் ப்ளாக் பண்ணி வைத்திருக்கிறேன். கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கிறது. முப்பது ஆண்டு நண்பர். வாழ்த்து அனுப்பவில்லை என்று நட்பை முறித்து விட்டேன். பாவம் நான்.

charu.nivedita.india@gmail.com