ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்: சில செயல் திட்டங்கள்

முன்பே எழுதியிருக்கிறேன், எனக்குப் பதிப்பகம் தொடங்குவது பிடிக்காது என்று. என் புத்தகங்களை நானே பதிப்பித்த அனுபவம் ஒரு காரணம்.  என் நண்பர்கள் பதிப்பகம் ஆரம்பித்தாலும் பிடிக்காது, லாபம் வராது என்பதால்.  ஆனாலும் என் நண்பர்கள் ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  முதலில் ஸீரோ டிகிரி.  இப்போது ஆட்டோநேரட்டிவ். 

ஆட்டோநேரட்டிவை இயக்கும் நண்பர்கள் யாவரும் மாதம் இருபதாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க இளைஞர்கள்.  ஒருத்தர் சொந்தமாக ஒரு பிஸினஸ் ஆரம்பித்திருக்கிறார்.  இன்னும் சம்பளம் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கவில்லை. 

பத்து ஆண்டு காலமாக இவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.  மாதம் ஒருமுறை.  இரண்டு இரவுகள்.  ஏழு மணியிலிருந்து காலை ஐந்து வரை.  என் பேச்சிலிருந்து ஏதோ ஒரு உத்வேகம் கிடைத்திருக்க வேண்டும்.  என் வாசகர் வட்ட நண்பர்கள் குடிகாரர்கள் என்ற வசைக்கு உள்ளாவது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன்.  ஆட்டோநேரட்டிவைச் சேர்ந்த பத்து பேரில் ஆறு பேர் குடியைத் தொட்டது கூட இல்லை.  மனோ, வினித், செல்வகுமார், தாரணி, விக்னேஷ்.  இதை நான் பதிவேற்றம் செய்யும் போது வினித் ஃபோன் செய்து இன்னும் ரெண்டு பேரைச் சொல்லுவார்.  வாசகர் வட்டத்திலேயே குடிப் பழக்கம் உள்ளவர்கள் நானும் அராத்துவும்தான்.  அதிலும் அராத்து மாதக் கணக்கில் வெறும் இலைதழைகளை உண்ணும் விரதத்தில் போய் நின்று விடுவார். எனக்கு அதெல்லாம் கிடையாது.  இந்தக் ‘குடிகார்ர்கள்’தான் பத்தே நாட்களில் ஆறு புத்தகங்களைக் கொண்டு வந்தது.  அதிலும் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயவின் இந்தியத் தத்துவத்தில் அழிந்தனவும் நிலைத்திருப்பனவும் நூல் ஆயிரம் பக்கங்கள் கொண்டது. 

எழுத்தாளராவது நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடினமானதாக இருந்தது.  அதற்கு சில அடிப்படை நூல்களை நீங்கள் கற்றிருக்க வேண்டும்.  அவசியமாக இந்தியத் தத்துவம் தெரிந்திருக்க வேண்டும்.  தெரியாமல் எப்படி ஒன்றை மீற முடியும்?  அப்படிப்பட்ட அடிப்படை நூல்களை எழுதியவர்களில் ஒருவர் தேவி ப்ரஸாத் சட்டோபாத்யாய.  அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள், இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் மற்றும் லோகாயதா. 

1985ஆக இருக்கலாம்.  நிறப்பிரிகை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக தில்லியிலிருந்து கும்பகோணம் வந்திருந்தேன்.  அப்போது அ. மார்க்ஸ் கும்பகோணத்தில் பணியில் இருந்தார்.  குடுமி வைத்து, சட்டையில்லாமல் பஞ்சகச்சம் அணிந்திருந்த ஒரு முதியவராக கரிச்சான் குஞ்சு.  தமிழ்ப் பண்டிட்டாக இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.  அக்காலத்தில் தமிழ்ப் பண்டிட்டாக இருந்தால் சம்ஸ்கிருதமும் கற்றிருக்க வேண்டும். 

நான் அவரைச் சந்தித்த சமயத்தில் அவர் கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.  அக்கால கட்டத்தில்தான் அவர் சட்டோபாத்யாயவின் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.  நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதும் போது கை வலிக்கிறது, யாராவது நான் சொல்லச் சொல்ல எழுதினால் நன்றாக இருக்கும் என்றார்.  நான் தில்லியில் இருந்தேன்.  நான் மட்டும் கும்பகோணத்தில் இருந்தால் நீங்கள் சொல்லச் சொல்ல நான் எழுதியிருப்பேன் என்று உண்மையான கவலையுடன் சொன்னேன்.  எனக்கு அவருடைய பசித்த மானிடம் மிகவும் பிடித்திருந்தது.  அப்படிச் சொல்வதை விட ஒரு பெரும் கலகக் குரலாக அதை நான் கண்டேன்.  (ஓரினச் சேர்க்கையாளர்கள் இருவர் பற்றிய நாவல்). 

அதன் நாயகனான கணேசன் கடைசியில் ஆன்மீகத்தில் சரணடைவது இயல்பாக இல்லையே என்று கேட்டேன்.  ஆச்சரியமடைந்த கரிச்சான் குஞ்சு எழுந்து வந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.

அப்போது நானுமே அவரைப் போல் குடுமி வைத்திருந்தேன்.  ஆனால் என்னுடையது ஹிப்பி ஸ்டைல் குடுமி. 

பிறகு சொன்னார், ”பசித்த மானிடம் நிஜக் கதைதான்.  கணேசனும் நிஜம்தான்.  நிஜ வாழ்வில் கணேசன் கடவுள் நம்பிக்கையற்றவனாக, மனிதர்களின் மீதும் நம்பிக்கை இழந்து தன்னுடைய பண்ணை வீட்டில் தனியாக பத்துப் பதினைந்து நாய்களோடு வாழ்ந்தான்.  நான் அவனைப் பார்க்கச் செல்லும்போது மாமிசத்தை உயரே வீசுவான், அவன் நாய்கள் தரையிலிருந்து எம்பி எம்பி அந்த மாமிசத் துண்டுகளைக் கவ்வும்.  மிகவும் ஆக்ரோஷமான வேட்டை நாய்கள்.”

எனக்கு ஒரே ஆச்சரியம்.  எப்படி உலகின் இரண்டு இடங்களில் இரண்டு மனிதர்கள் ஒன்றே போல் வாழ்ந்தார்கள் என.  கரிச்சான் குஞ்சுவிடம் சொன்னேன், ஃப்ரெஞ்சில் லூயி ஃபெர்தினாந் செலின் (Louis Ferdinand Celine) என்பவனும் உங்கள் கணேசனைப் போலவே வாழ்ந்தான் என.

எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டேன்.  மேலே குறிப்பிட்ட தேவி ப்ரஸாத் சட்டோபாத்யாயவின் இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பவனும் அழிந்தனவும் நூல் வெறும் 350 ரூபாயில் ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங் மூலம் வந்துள்ளது.  இது விலை அல்ல.  இலவசம்.  நிச்சயமாக ஆயிரம் ரூபாய் விலை வைத்திருக்க வேண்டும்.  ஆனால் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்துக்கு சில நோக்கங்களும் குறிக்கோள்களும் உள்ளன.

லாபம் வேண்டாம்.  ரீடர்ஸ் இண்டர்நேஷனல் போல், தமிழில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம் போல நடத்த வேண்டும் என்பது அந்த நோக்கங்களில் ஒன்று.  தமிழ்ப் பதிப்பக சரித்திரத்தில் அறுபதுகளில் வந்த வாசகர் வட்ட நூல்களைப் போல் வேறு எந்த நூலும் இல்லை.  எல்லா புத்தகமுமே கெட்டி அட்டை.  எல்லா புத்தகங்களுமே ஒரே மாதிரி இருக்கும்.  அதன் காகித்த்தை இப்போது கூட உங்களால் நினைத்துப் பார்க்க முடியாது.  ஒவ்வொரு காகிதமுமே மொத்தமாக இருக்கும்.   லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் ஒரு பெரும் கனவு நனவான கதை.  இப்போது நீங்கள் அப்படி ஒரே ஒரு புத்தகம் போட்டாலும் உங்களை வணங்குவேன்.  அப்போது லக்ஷ்மி தன் அத்தனை புத்தகங்களையும் ஒரே தரத்தில் கொண்டு வந்தார்.  உலகத் தரம் என்று சொல்ல மாட்டேன்.  ஏனென்றால், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்ட நூல்களின் தரத்தில் உலகத்தில் அப்போது புத்தகங்கள் இல்லை.  லக்ஷ்மியின் காலத்துக்குப் பிறகு வந்த ரீடர்ஸ் இண்டர்நேஷனல் வேண்டுமானால் வாசகர் வட்டத் தரத்தில் இருந்தது என்று சொல்ல்லாம்.

இப்போது போல் எந்தத் தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் லக்ஷ்மி அந்த நூல்களை சாதித்தார்.  இப்போதும் நான் சவால் விடுகிறேன், வாசகர் வட்ட நூல்களில் தரத்தில் நான் தமிழில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட பார்க்க முடியவில்லை.  க்ரியா நூல்களையும் சேர்த்தே சொல்கிறேன்.  க்ரியா நூல்கள் பார்ப்பதற்கு வாசகர் வட்டம் நூல்கள் மாதிரி தெரியும்.  ஆனால் கொஞ்ச வருடங்களிலேயே பேப்பர் பேப்பராகத் தனித்தனியாக வந்து விடும்.  ஆனால் அறுபதுகளில் வந்த வாசகர் வட்ட நூல்கள் அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் அப்படியே இருக்கின்றன. 

பதிப்புத் துறையில் வந்தது எப்படி என்று லக்ஷ்மி விளக்குகிறார்:

”அது 1960 காலகட்டம். அப்போ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்திலே பெ.தூரன், பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், லா.ச.ரா., க.நா.சு., சிட்டி இப்படியான இலக்கியவாதிகள் மணிக்கொடி சீனிவாசன் வீட்டிலே சந்தித்துப் பேசுவார்கள். ஒருநாள் அந்தச் சந்திப்புக்கு என்னையும் சிட்டி கூட்டிக்கொண்டு போனார். அப்போது நான் கதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். சிட்டி, என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இலக்கியவாதிகளுடன் எனக்கு நெருக்கம் அப்படித்தான் கிடைச்சது. தொடர்ந்து அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டேன். 1965இல் அந்த இலக்கியச் சந்திப்பு என் வீட்டிலேயே நடக்க ஆரம்பிச்சுது. அதோ அந்த அறையில்தான் – கூடிப் பேசுவோம் (நெகிழ்கிறார்). ஒரு இலக்கியச் சந்திப்பில், நல்லதரமான தயாரிப்பில் தங்களின் புத்தகங்களைக் கொண்டு வரணும் என்கிற ஆசை நம்ம எழுத்தாளர்களுக்கு வந்துடுச்சி. “அதற்கென்ன செஞ்சாப் போச்சு”ன்னு காரியத்தில் இறங்கினேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் வாசகர் வட்டம்.”

”புத்தகம் போடுறதுக்காக வீட்டை அடகு வைத்தேன். காமராஜர் கூட வருத்தப்பட்டார். “வீட்டை அடகு வைச்சு புத்தகம் போடணுமா, வேறு ஏதாவது தொழில் செய்யக்கூடாதா”ன்னு கேட்டார். நல்ல புத்தகத்தை வெளியிடுறதிலேயும், அதை மத்தவங்களுக்கு படிக்கக் கொடுக்கிறதிலேயும் கிடைக்கிற சந்தோசம் வேறு எதிலே கிடைக்கும்னு கேட்டேன்.”

மேலும் சொல்கிறார் லக்ஷ்மி:

”வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லோருக்கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய் கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனாலே, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்கு கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரிபார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவிடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்த குறையும் வைக்கலே. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்…”

லக்ஷ்மி இரண்டாயிரம் சந்தாதாரர்களை எதிர்பார்த்து வாசகர் வட்டத்தை ஆரம்பித்தார்.  ஆனால் ஐநூறு சந்தாதாரர்தான் சேர்ந்தார்கள்.  அதனால் அவர் தன் வீட்டை அடமானம் வைத்தும், அதற்குப் பிறகு அதை விற்றும்தான் பதிப்பகம் நடத்தினார்.  முதல் பதிப்பை வாசகர் வட்டம் வெளியிடும்.  பத்து சதவிகிதம் ராயல்டி.  அடுத்த பதிப்பை எழுத்தாளர் தன் விருப்பம் போல் பதிப்பித்துக் கொள்ளலாம். 

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திக்கு முன்னால் சக்தி வை. கோவிந்தனும் பதிப்பாளராக இருந்தார்.  ஆனால் அவரது புத்தகங்கள் வாசகர் வட்டத்தின் தரத்தில் இல்லை. 

வாசகர் வட்டத்துக்குப் பிறகு க்ரியா.  கிட்டத்தட்ட வாசகர் வட்ட தரம்.  ஆனால் லக்ஷ்மிக்கும் க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் உள்ள வித்தியாசம், ராமகிருஷ்ணன் க்ரியாவை தன் சொந்த கம்பெனி போல் நடத்தினார்.  அவருடைய சொந்த விருப்பு வெறுப்புகளே க்ரியா பதிப்பகத்தின் செயல்பாடுகளாக இருந்தன.  அதனால் தமிழ் எழுத்தாளர்கள் ஒருவர் கூட க்ரியாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.  ராமகிருஷ்ணனை வைது கொண்டே க்ரியா நூல்களை வாங்குவார்கள்.  ஆனால் லக்ஷ்மியின் வாசகர் வட்டத்தை ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரும் தங்களுடைய பதிப்பகமாகக் கருதினார்கள்.  நீங்கள் ஒரு புத்தகத்தை க்ரியாவுக்கு அனுப்பினால் அது க்ரியாவில் வராது.  அதேபோல் நீங்கள் ஒரு புத்தகத்தை லக்ஷ்மியிடம் கொடுத்தால் அந்தப் புத்தகம் வாசகர் வட்டத்திலும் வராது.  ஆனாலும் வாசகர் வட்டத்தை எல்லோரும் தம்முடையதாகக் கருதினார்கள்.  ஏனென்றால், க்ரியாவின் தேர்வில் நேர்மையில்லை.  க்ரியாவில் ராமகிருஷ்ணனின் சுயநலம் மட்டுமே இருந்தது.  ஆனால் வாசகர் வட்டத்தின் தேர்வில் லக்ஷ்மியின் ரசனையும் தீர்மானமும் உயர்ந்த நோக்கமும் இருந்தன. 

உதாரணம் பாருங்கள்: ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதி குயிலின் சுருதி, தி. ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி, லா.ச.ரா.வின் அபிதா, சா. கந்தசாமியின் முதல் நாவலான சாயாவனம், நீல பத்மநாபனின் பள்ளி கொண்டபுரம், கிருத்திகாவின் நேற்றிருந்தோம், நரசய்யாவின் கடலோடி, ஆ. மாதவனின் முதல் நாவலான புனலும் மணலும், எம்.வி.வி.யின் வேள்வித் தீ, கி.ரா.வின் கோபல்ல கிராமம் – எல்லாம் வாசகர் வட்ட நூல்கள்தான்.  

இன்னொரு ஆச்சரியம், புத்தகம் மிக உயர்தரமாகத் தயாரிக்கப்பட்டாலும் லக்ஷ்மி தன் நூல்களை குறைந்த விலைக்கே கொடுத்தார்.  பத்து ரூபாய் விலை வைத்திருக்க வேண்டிய நூலுக்கு நான்கு ரூபாய் விலை வைப்பார்.

(ஆதாரம்: புத்தகம் பேசுது இதழில் லக்ஷ்மியின் நேர்காணல்)

எனவே இன்றைய காலகட்டத்தில் வாசகர் வட்டம் என்ற பெரும் கனவை முன்வைத்து செயல்படத் துணிந்துள்ளது ஆட்டோநேரட்டிவ் ப்ப்ளிஷிங்.  லக்ஷ்மி தமிழகத்தின் முக்கியப் பிரமுகரின் மனைவி.  சொத்தை விற்றுப் பதிப்பகம் நடத்தினார்.  தி.நகரில் அவருக்குப் பெரிய வீடு இருந்தது.  அதுதான் வாசகர் வட்டத்தின் அலுவலகம்.  தீர்ர் சத்தியமூர்த்தியின் மகள்தான் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.  (காங்கிரஸ் தலைவர் தீர்ர் சத்தியமூர்த்தி தன் மகள் லக்ஷ்மிக்கு எழுதிய கடிதங்கள் ஒரு பொக்கிஷம்.  அக்கடிதங்களைக் கூட ஆட்டோநேரட்டிவ் வெளியிட முயற்சிக்கலாம்.  ரோஜா முத்தையாவில் அந்த நூல் இருக்கிறது.  அக்கடிதங்கள் பற்றி நான் பொதுவெளியில் எழுதி பத்து ஆண்டுகள் ஆகின்றன.  யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை!)

தமிழ் நாட்டில் ஜனதா கட்சி உருவாக உழைத்தவர் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. 1977-இல் தென் சென்னையில் எம்.பி. தேர்தலில் நின்று தோற்றுப்போனார்.

ஆட்டோநேரட்டிவ் நண்பர்கள் பிக்காரிகள்.  அன்றாடம் காய்ச்சிகள்.  ஆனால் நான் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் பேசியவற்றையே பெரும் கனவாகக் கொண்டு இறங்கியுள்ளார்கள்.  வருடத்துக்கு நூறு நூல் எல்லாம் நோக்கம் இல்லை.  அஞ்சு வந்தால் போதும்.  அதுவும் கெட்டி அட்டை, கெட்டித் தாள் போன்ற லக்ஷ்மியின் தரம் சாத்தியம் இல்லை.  எளிமை போதும்.  ஆனாலும் லக்ஷ்மியின் பெருங்கனவை எட்டியாவது பார்க்க வேண்டும். 

ஆட்டோநேரட்டிவின் கனவுகளில் மற்றொன்று, writer’s residenceஐ உருவாக்குவது.   ஆரோவில்லில் வாசகர் வட்டத்தின் ஒரு வன இல்லம் உள்ளது.   சுற்றி வர காடு.  வனத்தின் உள்ளே இரண்டு ஃபர்லாங் நடந்தால்தான் அடுத்த குடிலையே பார்க்க முடியும்.  சில இடங்களில் வனத்தில் பகலிலேயே டார்ச் அடிக்கும் அளவுக்கு இருள்.  பட்சிகளின் சப்தம் தவிர வேறு எந்த சப்தமும் இருக்காது. 

அரை கிலோமீட்டர் தூரத்தில் மெயின் ரோடு.  அங்கே கடை கண்ணிகள் உண்டு.  மூன்று வேளையும் ஸ்விக்கி மூலம் உணவு வந்து விடும்.  ஒரு சமையலறையும் குளிர்ப்பதனப் பெட்டியும் உண்டு.  டீ காஃபி போட்டு குடித்துக் கொள்ளலாம்.  நீங்கள் மட்டுமே ஒரு மாதம் தங்கி எழுதலாம்.  எல்லாம் இலவசம்.

இப்படி ஒரு திட்டத்தை ஆட்டோநேரட்டிவ் நண்பர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.  ஆனால் மாத இறுதியில் ஏதாவது உருப்படியாக எழுதியிருக்க வேண்டும்.  இருபத்தைந்தாம் தேதி ஆட்டோநேரட்டிவ் நண்பர்களிடம் கொடுத்தால் அது முதல் தேதி அன்று நூலாக வெளிவரும்.  வெளியீட்டு விழாவும் அந்த வன இல்லத்திலேயே நடக்கும். 

யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.  ஒரு சமயத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.  (நானே விண்ணப்பிக்கலாம் என்று நினைத்தேன்.  என்னுடைய வீட்டுச் சிறையில் இத்தனை நீளமான பரோல் விடுப்பு கிடைக்காது.)

இன்னொரு திட்டம் மாதந்தோறும் நடக்கும் சிறுகதைப் பட்டறை.  ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை அன்று ஆரோவில் வன இல்லத்தில் தங்கி நாம் சில முக்கியமான சிறுகதைகளைப் பற்றி விவாதிக்கலாம்.  முதல் சந்திப்பு ஜனவரி 28 அன்று நடக்கும்.  நானும் அராத்துவும் கலந்து கொள்வோம்.  என் கருத்தையும் சொல்வேன்.       ஆனால் வெறுமனே பார்வையாளனாக மட்டுமே இருப்பேன். கவனம் என் மீது ஒருமித்து விடக் கூடாது.  இப்போதைக்கு புதுமைப்பித்தனின் கதை ஒன்று.  ஆலன் ராப் கிரியேவின் பீச்.  இன்னொரு கதை ஆண்டன் செகாவின் வாங்க்கா.  ஆனால் பித்தன் தவிர மற்ற கதைகள் இன்னும் இறுதியாக முடிவாகவில்லை.  விவாதிக்கப்பட வேண்டிய கதைகள் தமிழில் கிடைக்க வேண்டும் என்கிறார் சீனி.  வாங்க்கா நவீனத்துவத்தின் உச்சம்.  செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் வேலை செய்யும் ஒன்பது வயது சிறுவனுக்கு அது நரகமாக இருக்கிறது.  கிராமத்தில் இருக்கும் தன் தாத்தாவுக்கு அவன் ஒரு கடிதம் எழுதுகிறான்.  தன் சிரமங்களையெல்லாம் விளக்குகிறான்.  கடிதத்தை எழுதி முடித்து கவரில் போட்டு விலாசம் எழுதப் புகுந்தால் பொடியனுக்குத் தாத்தாவின் விலாசம் தெரியவில்லை.  அதனால், முகவரியில் தாத்தாவின் கிராமம் என்று மட்டுமே எழுதித் தபாலில் போடுகிறான்.  தாத்தாவின் கிராமம் என்ற சொற்பதம் இன்று ருஷ்யாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் ஒரு படிமமாகவே மாறி விட்டது.    

அந்தச் சிறுவனைப் போலவேதான் நானும் நாற்பது ஆண்டுகளாக என் தாத்தாவுக்கு எழுதி எழுதித் தபாலில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போதைக்கு இது.

ஆட்டோநேரட்டிவ் விலாசம்:

Autonarrative Publishing

No.16 – First Floor- Veeku Building,

Devanga School Road, RS Puram, Coimbatore – 641002.

Email – autonarratives@gmail.com

தொலைபேசி எண்: +91 63794 87749