இதுவரை சைரனில் 28 கட்டுரைகள் எழுதியிருப்பேனா? முதல் நான்கு கட்டுரைகளுக்கு மட்டும், பத்துப் பதினைந்து முறை ஃபோன் செய்து கேட்ட பிறகு ஒரு கட்டுரைக்கு ரூ.750/- வீதம் 3000 ரூ அனுப்பினார்கள். அதற்குப் பிறகு பணம் வரவில்லை. நானும் பணத்தை எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் வீட்டில் இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து எனக்கும் அவந்திகாவுக்கும் அடிக்கடி வாக்குவாதமும் மன உளைச்சலுமாக (எனக்கு) இருந்து வந்தது. பொதுவாக பெரும் பத்திரிகைகள் தவிர வேறு நிறுவனங்கள் பணம் தருவதில்லை. தொலைக்காட்சி சேனல்கள் பணம் பற்றிப் பேசுவதே இல்லை. எனவே என் முகமும் தொலைக்காட்சியில் வருவதில்லை. சரி, நமக்கும் நேரம் மிச்சம் என்று விட்டு விட்டேன். ஆனால் நியூஸ் சைரன் போன்ற சிறிய பத்திரிகைகளில் எழுதுவதை எனக்கு எழுத இடம் கொடுத்திருக்கிறார்கள் என்ற நன்றி உணர்ச்சியினால் மட்டுமே தொடர்ந்து எழுதுகிறேன். ஆனால் அது குடும்பத்தில் பிரச்சினை உண்டு பண்ணி எனக்கும் மன உளைச்சலும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்கிற போது அதை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஏன் ஓசியில் எழுதுகிறாய் என்று அவந்திகா என்னைக் கேட்டதற்கு சிறு குழந்தைக்கும் புரிகிறாற்போல் மணிக் கணக்கில் உட்கார்ந்து விளக்கினேன். என் கருத்தைச் சொல்ல எனக்கு மூன்று பக்கம் கொடுத்திருக்கிறார்கள். நான் விலகினால் இன்னொரு எழுத்தாளர் அங்கே எழுதுவார். எல்லாப் பத்திரிகைகளும் தடை செய்து வைத்திருக்கும் எனக்கு ஒரே ஒரு பத்திரிகையில் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்றெல்லாம் விளக்கினேன். ஆனால் இன்றும் ஏன் ஓசியில் எழுதுகிறாய் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டதால் என் மனோலயம் கெட்டு பைத்தியக்காரனைப் போல் கத்தினேன். உடனடியாக நியூஸ் சைரன் நிர்வாகத்துக்கும் போன் செய்து இனி பணம் இல்லாமல் எழுத மாட்டேன் என்று சொல்லி விட்டேன். வாரம் ஒரு கட்டுரைக்கும் ஆப்பு.
Comments are closed.