அன்புள்ள சாரு,
முன்குறிப்பு: ஒரு வாசகனாக தங்கள் இருவரின் எழுத்தையும் வாசிப்பதிலோ/ ரசிப்பதிலோ எனக்கு இதுவரை எந்தவொரு பிரச்சனையும் இருந்ததில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். தங்கள் இருவருக்கும் இடையே உள்ள கேலி, கிண்டலை இலக்கியத்தின் ஒரு விளையாட்டாகவே ரசித்து வந்துள்ளேன். இருவருமே அவரவர் அடிப்படையில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களே.
இலக்கியத்தில் நடக்கும் சில்லறை சண்டைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இந்த ஜெயமொகன் vs பெண் எழுத்தாளர்கள் பிரச்சனையில் தங்கள் நிலைப்பாடு குறித்து ஒரு பெரும் சந்தேகம் வந்ததால் இந்த கடிதத்தை எழுத விழைகிறேன்.
நேற்று தான் உங்களின் ’ஓர் முன் மன்னிப்பு’ படித்த போது உங்கள் நேர்மையை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக, ’இலக்கிய மதிப்பீடுகள் சார்ந்து எங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாமேயொழிய எங்களுக்குள் தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இருக்க வாய்ப்பில்லை’ எனக் கூறியிருந்தீர்கள். உண்மையான வரிகள்.
இலக்கியம் குறித்து கொஞ்சமேனும் அறிமுகம் உள்ளவர்களுக்கு ஜெமோ எழுதியிருந்ததன் உண்மை புரியும். மேலும் அவர் அந்த பதிவில் பெண்கள் இலக்கிய உலகில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதியிருந்தார். தங்களின் பதிவும் அதே தொனியில் தான் இருந்தது. அதுகுறித்து எனக்கு முழு உடன்பாடே.
இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது கண்டது,
அதிர்ச்சியாக இருந்தது. முற்றிலும் ஒருதலைபட்சமான கட்டுரை. சரி நக்கீரன் போன்ற வணிக இதழ்களில் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என விட்டுவிட்லாம். ஆனால் இந்த சர்ச்சை குறித்து தங்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் அதற்கு தங்கள் பதிலாகவும் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
தங்கள் தளத்தில் இருக்கும் பதிவும் நக்கீரனில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பதிலும் நேர் எதிர்கோட்டில் இருக்கின்றன. அதில் ஜெமோ திரைப்பட இயக்குனர்களிடம் செல்வது முதல் மனுஷ்யபுத்திரன் பிரச்சனை வரை தாங்கள் கூறியது போலவே ஒரு பக்கத்துக்கு எழுதியுள்ளார்கள். இது உண்மையில் தாங்கள் கூறியதுதானா? (எனக்கு நம்பிக்கையில்லை) அல்லது நக்கீரன் போன்ற வணிக இதழ்கள் பொதுவாகவே இப்படித்தான் சில்லறைத்தனமாக செயல்படுமா?
உண்மையாகவே குழப்பமாய் இருக்கிறது. தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
இப்படிக்கு,
தே.அ.பாரி (செத்த மூளை;))
அன்புள்ள பாரி,
என் நக்கீரன் பேட்டி குறித்து பல கடிதங்கள் வந்தன. ஒவ்வொரு கடிதத்துக்கும் பொறுமையாக தனித்தனியாகக் கடிதம் எழுதினேன். ஒரே கடிதத்தைக் கூட copy and paste முறையில் அனுப்பியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஒவ்வொரு கடிதத்துக்கு தனித்தனியாகவே பதில் எழுதினேன்.
நக்கீரன் பேட்டி என்னுடைய தவறு. அதற்காக ஜெயமோகனிடமும் வாசகர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன். (இது நிஜ மன்னிப்பு) பொதுவாக பேட்டிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பேட்டிகளையே நான் எழுதிக் கொடுத்து விடுவதுதான் வழக்கம். எழுதுவதைத்தான் நான் என்னுடையது என்று சொந்தம் கொண்டாட முடியும். பேசுவது வேறு. ஆனால் இதை சப்பைக்கட்டாகக் கருத வேண்டாம். நக்கீரனில் பேட்டி அளித்த போது பெண் எழுத்தாளர்களின் மிரட்டல் அறிக்கை வெளிவந்திருக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். அந்த மிரட்டல் அறிக்கை தான் இந்த விஷயத்தில் என் நிலைப்பாட்டை மாற்றியது. அந்த அறிக்கை வெளிவந்திருக்கவில்லையெனில் நக்கீரன் பேட்டியை நான் own பண்ணியிருப்பேன். எனவே மிரட்டல் அறிக்கைக்கு முன் – பின் என்று என் நிலைப்பாட்டை வாசிக்கவும்.
என் விளக்கம் போதும் என நினைக்கிறேன். மீண்டும் பெண் எழுத்தாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜெயமோகனின் சவாலை எதிர்கொள்ளுங்கள். குறைந்த பட்சம் அவருடைய விஷ்ணுபுரத்தைப் படித்துக் கடுமையாக விமர்சியுங்கள். எனக்குமே அது பிடிக்காத, நான் நிராகரிக்கும் நாவல்தான். ஆனால் அதற்குள் பயணிக்கவே ஒருவர் இந்தியத் தத்துவ மரபைக் கற்றிருக்க வேண்டும். தேவி பிரஸாத் சட்டோபாத்யாய, டி.டி. கோஸம்பி போன்றவர்களைப் பயின்றிருக்க வேண்டும். விஷ்ணுபுரத்தை நீங்கள் நிராகரிக்கவும் கூட குறைந்த பட்சம் 50 பக்கம் எழுதியாக வேண்டும். இதெல்லாம் ஆர்ப்பாட்டம், அணி சேர்த்தல், மிரட்டல் போன்ற களச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் பெண் எழுத்தாளர்களால் முடியுமா என்று தெரியவில்லை. மீண்டும் பெண் எழுத்தாளர்களைப் புண்படுத்தியிருந்தால் முன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அந்த முன் மன்னிப்பையும் ஏற்காமல் அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய, என் வீட்டு உரிமையாளர் என்னை வீடு காலி பண்ணச் சொல்ல, நானும் ஸோரோவும் தற்கொலை செய்து கொள்வது நேற்று இரவு கொடுங்கனா கண்டு அலறி அடித்து எழுந்தேன். பெருமாளே காப்பாற்று!
சாரு
Comments are closed.