காதலன் படத்தில் வரும் பெண் போலீஸ்

காதலன் படம் பார்த்திருப்பீர்கள்.  அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் வெகு சிலர்.  அதில் ஒரு பெண் போலீஸ் போதை புகையிலையை வாயில் குதப்பிக் கொண்டு பிரபு தேவாவின் குதத்திலேயே லத்தியால் குத்துவார்.  ஞாபகம் இருக்கிறதா?  அந்தக் காட்சி தான் முந்தா நாள் தி இந்துவில் அம்பையின் கட்டுரையைப் படித்ததும் ஞாபகம் வந்தது.  பெண்களின் மீதான வன்முறை இந்தியாவில் மிக அதிகம்.  மிக மிக அதிகம்.  ஆனால் படித்த, மேல்தட்டு வர்க்கத்தில் உள்ள பெண்கள் பலர் ஆண்கள் மீது செலுத்தும் வன்முறையும் மிக அதிக அளவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  இதைப் பற்றி யாரும் பேச அஞ்சுகிறார்கள்.  பெண் என்பதையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் மேல்தட்டுப் பெண்கள்.  வன்முறையைப் பிறர் மீது செலுத்துவதில் ஆண் பெண் என்ற பாகுபாடே இல்லாமல்தான் இருக்கிறது.  இல்லாவிட்டால் பெண்கள் சிறை ஏன் இருக்கிறது?  சமீபத்தில் ஒரு வயதான பெண் டாக்டர் சென்னையில் கொல்லப்பட்டார்.  பணத்துக்காக.  அந்தக் கொலையைத் திட்டமிட்டது அந்த டாக்டரின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்.  இப்போது அந்தப் பணிப்பெண் ஜெயிலில் இருக்கிறார்.  சென்ற ஆண்டு 80 வயதுக்கும் மேலான வயதான தம்பதியினரை அவர்கள் வீட்டின் கீழ்ப்பகுதியில் குடியிருந்த 40 வயதான அய்யங்கார் பெண் தன் தம்பியுடன் சேர்ந்து  கழுத்தை நெறித்துக் கொன்றார்.  பணத்துக்காக நடந்த படுபாதகக் கொலை அது.  என் நண்பர் காமேஷ் ஒருநாள் அலுவலகம் போனார்.  அவருடைய இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார்.  மினி ஸ்கர்ட் அணிந்தபடிதான் தினமும் அலுவலகம் வருவார்.  காமேஷ்  திகைத்து எப்படி என் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்கிறார்.  உன் இருக்கை இனிமேல் இது இல்லை; உன் இருக்கை எது என்று குழுத் தலைவரிடம் கேட்டுக் கொள் என்று மிக மோசமான தொனியில் ஆங்கிலத்தில் சொல்கிறார்.  அதெல்லாம் எனக்குத் தெரியாது, எனக்கு உத்தரவு வந்தால்தான் நான் போவேன்.  நீங்கள் கிளம்புங்கள் என்கிறார் காமேஷ்.  உடனே அந்தப் பெண் கன்னாபின்னாவென்று கத்தி, என்னை இவன் ஈவ் டீசிங் பண்ணி விட்டான், இவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் முதலாளிக்கு கைப்பட எழுதிக் கொடுத்து விட்டார்.  வேலை போகத் தெரிந்தது.  காமேஷின் குழுத் தலைவருக்கு காமேஷை நன்கு தெரியும் என்பதால் வேலை போகாமல் தலை தப்பியது.

கீழ்க்கண்ட கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.  அம்பையின் தி இந்து கட்டுரையும் கிடைத்தால் படியுங்கள்.  நல்ல கிசுகிசு கட்டுரை அது.  என்னை நேரில் சந்திக்கும் போது அதில் வரும் கிசு கிசு எல்லாம் யார் யார் என்று சொல்கிறேன்.  எனக்கு தர்மு சிவராமு தான் அதையெல்லாம் சொன்னார்.  தர்மு, நீ செத்தாலும் இன்னும் வாழ்கிறாய், தலைவா…

http://www.jeyamohan.in/?p=56832

 

Comments are closed.