நேற்று இளையராஜாவின் காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்டு மனம் மிக நொந்தேன். ராஜாவின் பாடல்களிலேயே ஆக மட்டமான பாடல். அப்படிக் கூட சொல்ல முடியாது. அந்தப் பாடலை ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அத்தனை மட்டமான பாடல். இதை ஃபேஸ்புக்கில் எழுதியதும் எல்லோரும் என் மீது வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே வசை. தன் அசிங்கம் அவ்வளவையும் என் மீது கொட்டினார்கள். எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. எல்லோரும் எத்தனை அசிங்கத்தோடு திரிகிறார்கள் என்பது இப்போது ஒன்றும் புதுசு இல்லையே? சினிமா ஆசாமிகளை விமர்சித்தால் போதும், சேற்றையும் சகதியையும் வாரி இறைக்க ஆரம்பித்து விடுவார்கள். சினிமா அந்த அளவுக்குத் தமிழர்களை மனநோயாளிகளாக்கி இருக்கிறது.
இது பற்றி இதே ரீதியில் நண்பர் றியாஸ் குரானாவும் எழுதியிருந்தார். அவரையும் விட்டு வைக்கவில்லை போல் இருக்கிறது. சினிமா என்பது தமிழில் மதம் மாதிரி. தீர்க்கதரிசிகளை விமர்சித்தால் உயிரோடு இருக்க முடியுமா? என்னை இங்கே உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்களே என்ற வகையில் தமிழ் மகாஜனங்களுக்கு நன்றி சொல்லி றியாஸ் குரானாவின் பதிவை இங்கே பகிர்கிறேன்.
றியாஸ் குரானா எழுதியது:
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் “விடுதலை“ படத்தில் இளையராஜா இசையமைத்திருக்கும் மூன்று பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றைக் கேட்ட பிறகு சிறிய பதிவொன்றை எழுதினேன். ஏதோ கொலைக் குற்றம் செய்ததைப் போல பின்னுாட்டங்களிலும், உள்பெட்டியிலும் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
80களின் பிற்பகுதியில் ரசிக்கவே முடியாத மானே தேனே போன்ற அதரப்பழசானா, கேட்டுப் புளித்துப்போன பாடல்வரிகளை முதுகில் ஏற்றிக்கொண்டு ‘சொடவைத்த பாலாணத்தைப்’ போல ஒரேவகை சத்தங்களை கோர்த்து நம்மை அலுப்பூட்டிய இளையராஜாவின் பாடல்களை நினைக்கும்போது இன்றும் காதுகளுக்குள் ஏதோ கரகரப்பு வராமலில்லை. அந்த அழிச்சாட்டியத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற ஏ.ஆர். ரஹ்மான் வராது போயிருந்தால் திரையிசை என்ற ஒன்றையே பலர் மறந்துபோயிருக்க வாய்ப்புண்டு. போதாக்குறைக்கு, கேட்பதற்கே காது கூசும் குரலில் (ஆரம்பகால குரல் ஓரளவு சகிக்க கூடியதாக இருந்தது) பாடிப்பாடிப்பாடி எண்பதுகளின் இறுதிப் பகுதியை காதுகளில் பஞ்சு வைத்துக்கொண்டு உலவும் நிலமைக்கு ஆளாக்கிவர் இளையராஜா.
கண்ணம்மா கண்ணம்மா ஒன்னு நான் சொல்லலாமா, ஏலே இளங்கிளியே, பூம்பாறையில் பொட்டு வைச்ச, நெலா அது வானத்து மேலே என ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. இந்தக் குரலைக் கொண்டுதான் 2023 இல் கூட நம்மை அச்சுறுத்துகிறார். குறைந்த பட்சம் அந்த குரலைத் தவிர்த்திருக்கலாம் என கூற முடியாது. அது தவறாகிவிடும். தனுஷின் கரகரப்பான குரலில் நெழிந்து படர்ந்த இனிமையைக் கூட இல்லாது செய்திருக்கிறார். சாவீட்டில் ஒப்பாரி வைக்கும் மூட்டில், மெதுவாக பாடவைத்திருக்கிறார். குரலில் எந்த அசைவுகளும் நிகழாது கவனமாக பார்த்து உருவாக்கியிருக்கிறார். பாடல் வரிகளை வாசிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கூட அந்தக் குரல் நெருங்கவில்லை. ஒன்னோடு நடந்தா என்ற பாடல் அத்தனை கொடூரமாக ஒலிக்கிறது. ஒரு காதல் பாடல் என்றுதான் லிரிக்கை பார்த்தால் தோன்றுகிறது. காட்டில் தவமிருந்த ஒரு துறவியும், துறவியின் எதிரே அச்சத்தில் குறுகி நிற்கும் ஒரு இளம் பெண்ணும் ஆளுக்காள் மாறிமாறி பேசிக்கொள்வதைப்போல ஒரு தோற்றத்தையே தருகிறது. அந்த இசைக்குள்ளிருந்தும் குரல்களுக்குள்ளிருந்தும் ஒரு சிறிதுளிக் காதல் தப்பித்தவறிக்கூட கசிந்துவிடாமல் பாடலை உருவாக்கியிருக்கிறார். கடுமையான வாத்தியார் பெரம்போடு நிற்கும்போது,பதட்டத்தோடு பாடத்தை வாசிக்கும் மாணவர்களைப் போல பாட்டு நெடுகிலும் ஒருவகை இறுக்கம் மிதந்தபடியே இருக்கிறது.
காட்டு மல்லி பூத்திருக்கு என இளையராஜா முனகும்போதே, உணர்வெங்கும் சுருங்கிப் போய்விடுகிறது. ஆயுர்வேத கசாயம் அருந்தியதைப்போல மனமும் உணர்வுகளும் முகம் சுழித்துப் போவதை தவிர்க்க முடியாது. இளையராஜாவின் தற்கொலைப் படைகளைத் தவிர வேறு எவராலும் காதுகொடுத்து கேட்க முடியும் என நினைக்கவில்லை. முக்கித்தக்கி ஒருதரம் கேட்டுவிடலாம். அதன் பிறகு கேட்பதற்கு நமக்கு காதுகளே இருக்காது. ஒன்னோடு நடந்தா பாடலின் இடையிசையாக வரும் தாலாட்டைக் கேட்டால் தெரிந்துவிடும் எண்பதுகளில் கூட இப்படி ஒரு மோசமான இடையிசையை ராஜா போட்டிருக்கவே மாட்டார். ஒன்னோடு நடந்தா பாடல் ஆரம்பிக்கும்போது ஒரு இசைக் கோர்வை தட்டித்தட்டி தொடங்கும். அதைக் கேட்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மானின் “தென்மேற்கு பருவக்காற்று தேனிற்பக்கம் வீசும்” என்ற பாடலின் ஆரம்ப இசையை உடனே நினைவு படுத்திவிடும். ரஹ்மான் வேகமாக செய்ததை,தனது வயசுக்கேற்ப மெதுவாக செய்திருப்பார் எனத் தோன்றியது. கேட்டுப்பாருங்கள்.
அதுபோல, கல்லான காடு பாடல் ஆரம்பிக்கும் போதே “துாம்“ படத்தின் பிஜிஎம் சட்டென்று நினைவுக்கு வருகிறது. இப்படி பாடல் நெடுகிலும் சில நினைவுகள் வந்து, விடுதலை படத்தின் குறித்த பாடலைக் கேட்க முடியாமல் தொந்தரவு செய்வதும் ஒரு புறம். கடந்த முப்பது வருடங்களாக இசையே இல்லாத தேசத்தில் வாழ்ந்தவர்கள், அல்லது காது கேளாதிருந்து இப்போதுதான் கேட்கத் தொடங்கியவர்கள், அல்லது கோமாவிலிருந்து எழுந்தவர்கள் ஓரளவு ஒன்றிப்போய்க் கேட்கலாம்.
இளையராஜாவின் இசைக் கற்பனை படத்தில் ஆதிக்கம் செலுத்துமாக இருந்தால், எவ்வளவுதான் தொழில் நுட்ப வேலைகளைச் செய்திருந்தாலும் படத்தை எண்பதுகளுக்கு இழுத்துச் சென்றுவிடும். எண்பதுகளில் ராஜா கொடுத்த நல்ல பாடல்களைப்போல் கூட இந்தப் பாடல்கள் இல்லை என்பதால் இன்னும் அசௌகரியமான மூட்டைத்தான் சினிமா வாசகர்களுக்கு உருவாக்கும். எவ்வளவு சத்தங்களை சகித்துவிட்டோம், இதையும் கேட்டுத் தொலைப்போம் என தங்களுக்கு தண்டனை கொடுக்க நினைக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறதுதானே !அவர்களுக்கு உண்மையில் இவை சிறந்த பாடல்கள்தான். ஆனால், சத்தங்களால் சூழல் மாசுபடுகிறது என நினைக்கும் எங்களைப் போன்றவர்கள் எச்சரிக்கையை வெளியிடுவது அவசியம். அதைச் சொல்வதற்கே இந்தப் பதிவு.
றியாஸ் குரானாவின் தளம்