நான் கணக்கில் எத்தனை பலவீனன் என்பதும், சீனி எனக்கு எத்தனை உறுதுணையாக இருக்கிறார் என்பதும் மீண்டும் நிரூபணம் ஆகியது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் நலம் என்று எழுதி விட்டேன். நூறு பேர் என்று எழுதியிருக்க வேண்டும். இதைக் கூட சீனி மட்டும்தான் சுட்டிக் காட்டினார். ஆயிரம் பேரா பணம் அனுப்புவார்கள்? நான் என்ன ஆன்மீகவாதியா? சீனிக்கு அது நூறு பேர் என்று புரிந்து விட்டது. இப்போது மாற்றி விட்டேன். அந்தக் கட்டுரையில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன.
எனக்குப் பணம் அனுப்புபவர்கள் அத்தனை பேரும் மத்திய தர வர்க்கம், மற்றும் அதற்குக் கீழே. பணக்காரர்கள் எனக்குப் பணம் அனுப்புவதே இல்லை. ஆனால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் படிக்கிறார்கள். அமெரிக்கத் தமிழர்களும் பணம் அனுப்புவதில்லை. ஒன்றிரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அனுப்புகிறார்கள். ஏன் பணத்தைப் பற்றி அதிகம் எழுதுகிறேன் என்றால், இன்று ஒரு சம்பவம் நடந்தது.
நான் தங்கியிருக்கும் பாசிக்குடாவிலிருந்து ஏறாவூர் புத்தக விழா நடக்கும் இடம் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏன் நான் ஏறாவூரிலேயே தங்கவில்லை என்பது தனிக் கதை. அதை நாளை சொல்கிறேன். நேற்று இரவு ஏறாவூரிலிருந்து பாசிக்குடா திரும்புவதற்கு ஆட்டோவில் 3000 ரூ. ஆயிற்று. என் செலவுதான். புத்தக விழா செலவுகளுக்கு சரியான ஸ்பான்ஸர்கள் கிடைக்கவில்லை போல. ஒரு இந்திய ரூபாய்க்கு சுமார் நான்கு இலங்கை ரூபாய். ஆக பதினெட்டு கிலோமீட்டருக்கு 750 ரூ. பரவாயில்லை. சென்னை என்றால் சொத்தையே எழுதிக் கேட்பார்கள்.
இன்றும் 3000 ரூ. கொடுத்து ஏறாவூர் போக வேண்டுமா என்று யோசித்தேன். என்னை இந்தப் புத்தக விழாவுக்கு வரவழைத்த றியாஸ் குரானாவுக்கு ஃபோன் போட்டு ஏதேனும் கார் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் “போக வர 6000 ரூ. உங்களுக்கு அனாவசிய செலவு. இன்று வர வேண்டாம், நாளை வாருங்கள்” என்றார். சரி என்று சொல்லி விட்டேன்.
அப்போதும் சீனிதான் எனக்கு ஆலோசனை வழங்கினார். பெண்களும் ஆண்களும் உங்களிடம் க்யூவில் நின்று கையெழுத்து வாங்குகிறார்கள். இன்று சனிக்கிழமை வேறு. ஷர்மிளாவிடம் வேறு இன்று நீங்கள் வருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள், இன்று போய் வாருங்கள் என்றார். ஷர்மிளா என் தீவிர வாசகி. அவரைப் போல் பலரும் என்னைக் காண்பதற்காக இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரமெல்லாம் பயணம் செய்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
சரி, சீனி சொல்வது போல் கிளம்பி விடலாம் என முடிவு செய்தேன். எதில் போவது? மோட்டார் பைக்கில் போனால் 2000 ரூ. ஆட்டோவில் 3500 ரூ. பாசிக்குடா சுற்றுலாப் பயணிகளின் ஊர் என்பதால் இங்கே ஆட்டோ கூலி அதிகம். ஏறாவூரிலிருந்து இங்கே வருவதற்குத்தான் 3000. ஆக, 1500 ரூபாயை மிச்சம் பிடிக்கலாம் என்று யோசித்தேன். அது இந்தியக் காசில் நானூறு ரூபாய் கூட இல்லை என்பதும் ஞாபகம் வந்தது. ஆனால் இப்போதெல்லாம் பணத்தைப் பற்றி கவலைப்பட ஆரம்பத்து விட்டேன். மோட்டார் பைக்கில் ஏறினேன். நான் ஒரே ஒருமுறைதான் தாய்லாந்தில் சீனியின் பைக்கில் நெடுந்தூரம் போயிருக்கிறேன். சீனியை நம்பலாம். வாகனங்களைக் கையாள்வதில் அவர் சூரர். (இன்னொரு சூரரைக் கண்டேன். அவர் பெயர் அனோஜன்).
பைக் ஓட்டல் வாசலுக்கு வந்தது. அதே சமயம் வானமும் கருத்தது. அது என்னவோ தெரியவில்லை, நான் இலங்கை வந்ததிலிருந்து இந்தக் கடும் கோடையில் வானம் பொத்துக் கொண்டு ஊற்றுகிறது. நம்மூர் கார்த்திகை அடை மழை மாதிரி பெய்கிறது. 1500 ரூபாயைப் பார்க்காமல் (இந்தியக் காசில் 350 ரூ.) ஆட்டோவிலேயே போய் விடலாம் என்று தோன்றியது. பைக்கில் போகும்போது மழை வந்தால் தொப்பல் தொப்பலாகி விடுவேன். புத்தக விழாவுக்கே செல்ல முடியாது. ஆனால் பைக் தம்பி வந்து விட்டார். வந்தவரைத் திரும்பப் போகச் சொல்ல முடியாது. ஏன் முடியாது என்று கேட்கக் கூடாது. என்னால் முடியாது. பைக்கில் ஏறி விட்டேன்.
எடுத்த எடுப்பில் பைக் நூறு கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது போல் தோன்றியது. எனக்கு மரண பயம் வந்து விட்டது. அடப்பாவி, சல்லிக் காசு 750 ரூபாய்க்காக இப்படி உயிரைப் பணயம் வைத்து விட்டோமே, என்ன ஒரு முட்டாள்தனம் என்று நொந்து கொண்டேன். ஆனால் பைக் செல்வது நூறு கிலோமீட்டர் வேகம்தானா என உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். முன்னால் எட்டிப் பார்த்தேன். நூறு இல்லை. அறுபது. அறுபதுதான் எனக்கு நூறு போல் இருந்தது. ஆனாலும் மரண பயம் விடவில்லை. பைக் பறந்தது. எல்லா வாகனங்களையும் முந்திக் கொண்டு போனது. இளைஞரிடம் மெதுவாகச் செல்லுங்கள் என்று சொல்லவும் தயக்கமாக இருந்தது. இதில் இன்னொரு பயங்கரம் என்னவென்றால், இலங்கையின் மக்கள் தொகையை விட நாய்களின் தொகை அதிகமாக இருந்தது. எங்கே திரும்பினாலும் நாய்கள்தான். அது மட்டும் அல்லாமல் இந்த இலங்கை நாய்களைப் போன்ற முட்டாள் நாய்களை நீங்கள் உலகின் எந்த மூலையிலும் பார்க்க முடியாது. அதுகள் பாட்டுக்கு எந்தக் கவலையும் இல்லாமல் வாகனங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் சாலையைக் குறுக்காகக் கடக்கின்றன. சில லூசு நாய்கள் சாலையின் நடுவிலேயே படுத்துக் கிடக்கின்றன. பல நூறு நாய்கள் கால் கையை இழந்து நொண்டிக் கொண்டு போவதையும் கண்டேன். நான் இலங்கைக்காரனாக இருந்திருந்தால் இதற்கு எதிராக ஒரு பெரிய போராட்டமே நடத்துவேன்.
என் கதைக்கு வருவோம். எந்த நாய் எப்போது குறுக்கே வந்தாலும் நான் செத்தேன். அடப்பாவி, 350 ரூபாய்க்குக் கணக்குப் பார்த்து இப்படி நடுரோட்டில் சாவதா? அடடா, சென்னையில் இறந்து ஒரு மாபெரும் மரண விழாவைக் காணலாம் (?) எனக் கனவு கண்டிருந்தோமே? இப்போது நம் சடலம் கூட சென்னை போவது சாத்தியம் இல்லை போலிருக்கிறதே என்று எண்ணி மருகினேன். அப்படியும் அந்த இளைஞரிடம் கொஞ்சம் குறைந்த வேகத்தில் போகச் சொல்ல மனம் வரவில்லை. தயக்கம். அப்போது நான் பயந்தபடியே ஒரு நாய் குறுக்கே ஓடியது. இங்கேதான் நீங்கள் நம்பவே முடியாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இலங்கைக்கார ஓட்டுநர்களின் வாகனங்களுக்குக் குறுக்கே எப்போதுமே ஏதாவது ஒரு நாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஓட்டுநர்கள்தான் எத்தனை வேகமாகப் போனாலும் நாயின் மீது வாகனம் பாய்வதைத் தடுத்து விடுகிறார்கள். இது அவர்களின் ரத்தத்திலேயே ஓடுகிறது என்று நினைக்கிறேன். இளைஞர் படு லாவகமாக வண்டியை சமாளித்து நாயின் உயிரையும் என் உயிரையும் காப்பாற்றினார். இதுவே ஒரு இந்திய ஓட்டுநர் என்றால் இரண்டு உயிர்களையும் பறித்திருப்பார்.
உடனே அவரிடம் கொஞ்சம் மெதுவாகச் செல்லுங்கள் என்றேன். புரிந்து கொண்டார். அதிலிருந்து ஐம்பதில் ஓட்டினார்.
இதையும் ஒரு கதையாகப் படித்து சிரித்து விட்டுப் போகாமல் வைர சூத்திரம் கட்டுரையில் சொல்லியிருந்தபடி செயல்படுங்கள். என் எழுத்துக்குக கொஞ்சம் சன்மானம் கிடைத்தால் இப்படியெல்லாம் 350 ரூபாய்க்காக உயிரைப் பணயம் வைக்க மாட்டேன்.
இந்தப் பதிவின் முதல் இரண்டு பத்தியையும் கடைசி இரண்டு பத்தியையும் நீக்கி விட்டால் இது ஒரு சிறுகதை.