பெட்டியோ… நாவலை இதுவரை மூவர் படித்தோம். இலங்கை நண்பர், நான், சீனி. கடைசி அத்தியாயம் உங்கள் எழுத்தின் உச்சம் என்றார் சீனி. எனக்குமே அப்படித்தான் தோன்றியது. ஆனால் என்.எஃப்.டி.யில் வெளியிடுவதற்கு முன்னால் ஒரு யோசனை என்றார். கடைசி அத்தியாயத்தில் வரும் நயந்தினி என்ற சிங்களப் பெண்ணை நாவல் நெடுகிலுமே நிகழ விட்டால் என்ன? சீனியின் யோசனை.
எனக்குமே அந்த எண்ணம் இருந்தது என்றாலும், அதை வேறு ஒரு நாவலாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் சீனி சொன்ன பிறகு இந்த நாவலிலேயே அது இருந்தால்தான் பொருத்தம் என்று தோன்றியது. ஆக, இது இன்னொரு ஸீரோ டிகிரியாக அமையும். ஒரே ஒரு வித்தியாசம், பெட்டியோ… ஒரு erotic love story. இப்போது இருக்கும் 125 பக்கத்தோடும், இன்னும் ஒரு 75 பக்கம் சேரும்.
நயந்தினியை ஒரு மதுக்கூடத்தின் டான்ஸ் ஃப்ளோரில் சந்தித்தேன். பேசினேன். கதை சொன்னாள். மீண்டும் சந்தித்தோம். மீண்டும் கதை சொன்னாள். எல்லாம் ஒரு நாவலாக நீளும் கதை. பொதுவாக பெண்கள் படும் வதைகளைப் பற்றிய கதைகளைத்தான் கேட்டுப் பழக்கம். இந்தக் கதை ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண்ணின் கதை. இதுவரை நான் கேட்டிராத புதிய கதை.
சீனி அடிக்கடி சொல்லுவார், நீங்கள் பயணம் செய்யுங்கள், கதை கிடைக்கும் என்று. ராஸ லீலா பயணங்களால் ஆன கதை இல்லையா? ”இப்போது உங்களுக்குப் பயணம் நின்று விட்டது. சரித்திரத்தில் நுழைந்து விட்டீர்கள்” என்று சொல்வார் சீனி.
நான் சொல்வேன், நான் போர்ஹெஸ் மாதிரி. போர்ஹெஸ் பயணம் செய்ததில்லை. அதேபோல் நான் இருக்கும் இடத்திலிருந்தே உலகைச் சுற்றுவேன். கதைகளை உருவாக்குவேன்.
ஆனால் சீனி சொன்னது போல் இந்தப் பயணம் ஒரு புதிய உறவையும் பல புதிய கதைகளையும் கொடுத்தது. அதில் ஒரு கதைதான் பெட்டியோ…
நயந்தினியை உங்களால் ஒருபோதும் மறக்க இயலாது. அப்படி ஒரு பெண். இதுவரை நான் அப்படிப்பட்ட பெண்ணை ஜார்ஜ் பத்தாய் நாவலில் படித்திருக்கிறேன். கேத்தி ஆக்கர் என்ற பெண்ணாக அறிந்திருக்கிறேன். ஸீரோ டிகிரி ஆங்கில நூலை கேத்திக்குத்தான் சமர்ப்பித்தேன். உலகில் கேத்திக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரே நாவல் என்று கூட ஸீரோ டிகிரியைப் பற்றி அமெரிக்க வாசகர்கள் சொல்வதுண்டு.
இன்னொரு படு முக்கியமான விஷயம், என்னைப் பற்றி எழுதாதே என்று நயந்தினி எனக்கு நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை. மாறாக, எழுது என்று உற்சாகப்படுத்தினாள். புகைப்படம் மட்டும் வேண்டாம் என்றாள். அந்த அளவுக்கு மடையனா நான் என்று கேட்டு…
கிட்டத்தட்ட கேத்தி ஆக்கர் போன்ற ஒரு பெண் நயந்தினி. நயந்தினியின் பெயரே ஒரு கவிதை. எனக்கு ‘இ’ என்ற சப்தத்தோடு முடியும் பெண் பெயர்கள் பிடிக்கும். அதிலும் ’னி’ என்று முடிந்தால் கவிதை. நயந்தினி ஒரு கவிதை.பெயரும் கவிதை. இப்படியெல்லாம் பேசினால் அவளிடமிருந்து அடி கிடைக்கும் என்றாலும் தமிழ் தெரியாது என்பதால் சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம்.
நயந்தினி எனக்கு சொன்ன கதையோடும் நாங்களிருவரும் உருவாக்கிய கதைகளோடும் வருகிறேன்…
ஸீரோ டிகிரியும் ராஸ லீலாவும் கலந்தது போல் இருக்கும். ஆர்மரி ஸ்கொயர்காரனெல்லாம் இந்த முறை என்னிடம் பிரச்சினை பண்ண முடியாது. நயந்தினியின் வயது இருபத்தெட்டு.
கொஞ்ச நாள் காத்திருங்கள்.