நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் நாய்களையும் அவைகளின் உயிருக்கு வாகனங்களால் ஏற்படக் கூடும் உயிராபத்தையும், அப்படி ரோட்டின் குறுக்கே பாயும் நாய்களால் மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் பற்றி எழுதிய போது, இலங்கை மக்களை ஒரு இந்திய எழுத்தாளர் நாய்கள் என்று திட்டி விட்டார் என்று காவல்துறையில் புகார் செய்து, பொதுமக்களையும் உசுப்பி விட்டு எனக்கு உயிராபத்து ஏற்படுத்திய சில தமிழர்களைப் போல ஃப்ரான்ஸிலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஃப்ரான்ஸில் சமீபத்தில் டானியல் ஜெயந்தனின் வயல் மாதா என்ற சிறுகதைத் தொகுதியை முன்வைத்து ஃப்ரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் சிலர் டானியல் ஜெயந்தனைக் கடுமையாக மிரட்டியிருக்கிறார்கள். பயமுறுத்தியிருக்கிறார்கள். நூலை எரித்திருக்கிறார்கள். அப்படிச் செய்த அராஜகவாதிகள் ஃப்ரான்ஸை விட்டு வெளியேறி விட வேண்டும். ஃப்ரான்ஸின் கருத்துச் சுதந்திரத்துக்கே இது அவமானம். அப்படி வெளியேறாவிட்டால் அவர்களை ஃப்ரான்ஸை விட்டுத் துரத்த வேண்டும். ஏனென்றால், அவர்கள் தங்களின் யாழ்ப்பாணத்து பூமியில் எத்தனை வேண்டுமானாலும் அராஜகம் செய்து கொள்ளட்டும். கருத்துச் சுதந்திரத்துக்குப் புகழ் பெற்ற ஃப்ரான்ஸை விட்டு விடுங்கள். கீழே டானியல் ஜெயந்தன்.
வயல் மாதா சிறுகதைத்தொகுதி வெளியீடும் ==============================ஊர் மக்களின் எதிர்ப்பும்
டானியல் ஜெயந்தன்
சென்ற 18.06.2023 அன்று பிரான்சின் புற நகர் பகுதியான நெவர் என்னும் சிற்றூரில் என்னுடைய இந்த சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் சில எழுத்தாளர்கள்,கத்தோலிக்க பாதிரியார் ஒருவரும், ஆன்கள் ,பெண்கல் என சுமார் ஐம்பதுக்கு உட்பட்ட கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தில் அங்கம் வகிக்கும் பொதுமக்களளையும், நட்பின் அடிப்படையில் புத்தக வெளியீட்டுக்கு அழைத்திருந்தேன். நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. அன்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு ஊர் வாசி என்னைத்தொடர்பு கொண்டு கடுமையாக இழிவான வார்த்தைகளால் பேசித் திட்டிப்பேசிக்கொண்டிருந்தார். பொறுமையாக விடயத்தைக்கேட்டு அறிந்த போது அவர் பின்வருமாறு கூறினார். “வயல் மாதா என்ற பெயரை உனக்கு வைக்க அதிகாரம் தந்தது யார்? மாதாவைகேவலப்படுத்தி இருக்கிறாய். பெண்களை கடுமையாக விமர்சித்திருக்கிறாய்” என்று கூறினார். அப்போது அவரிடம் கேட்டேன். இவ்வளவு வேகமாக படித்து முடித்து விட்டீர்களா இருநூறு பக்கம் எப்படி ? என்ற சந்தேகத்தில் கேட்டேன். “இல்லை கடைசி கதையை மட்டும் மேலோட்டமாக படித்தேன்” என்று சொன்னார். தான் படித்த கல்கியும் சுயாத்தாவும் இப்படி எழுதவில்லை நீ எப்படி எழுவாய் அருவருக்கிறது என்கிறார். அண்ணா நீங்கள் கொஞ்சம் நவீன இலக்கியம் படியுங்கள் என்று பொறுமையாக சொன்னேன். கோபமாக திட்டிவிட்டு தொலைபேசியை துண்டித்தார். சில மணித்தியாலங்களில் இன்னுமொரு கனவான் வேறொரு நகரத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்து என்னை கண்டபடி திட்டியதோடு விடாமல் மிரட்டவும் செய்தார். நானும் முடிந்த அளவு பொறுமையாக பதில் சொன்னேன். ஆவேசத்தோடு எழுந்தவர் “இனி நீ கதை எழுதக்கூடாது புத்தகம் எங்கும் வெளியிடக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார். பின்னர் சில மணித்தியாலங்களில் வயல் மாதா சுக்கு நூறாக கிழிக்கப்பட்டு வீசிய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றி இருந்தார். அடுத்த நாள் சில கலாச்சார காவலர்கள் பொங்கியெழுந்து என்னைத்தொடர்ந்து தொலைபேசியில் அச்சுறுத்தத்தொடங்கினர். நான் பதிலளிக்கவில்லை. அடுத்த கட்டம் அவர்கள் சென்று என்னுடைய மனைவியை பணியில் இருக்கும் போது தொலை பேசி வழியாக அழைக்கச்செய்து தொந்தரவு செய்து குரல் செய்திகளை வெளியிட்டு இருந்தனர். நூல் வெளியீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது முக நூலில் இருந்து நீக்கும் படிக்கு சொன்னார்கள் அப்படியே செய் செய்தோம். அன்று இரவு முகநூல் சமூக ஊடகங்கள் முழுவதும் என்னைப்பற்றியும் ,நூல் பற்றியும் படிக்காதவர்கள் எல்லாரும் திரண்டு கடுமையாக எச்சரித்து பதிவுகளை இட்டு இருந்தனர். நூல் ஆசிரியர் என்ற ரீதியிலும் புத்தகத்தை பணம் கொடுத்து அவர்கள் வாங்கினார்கள் என்ற அடிப்படையிலும் அவர்கள் அதை எதுவானாலும் செய்யட்டும் என்று விட்டு விட்டேன். அதே போல அடுத்த இரண்டாவது நாள் ஊர் ஒன்று கூடி குறித்த நேரத்துக்கு ஆலயத்தின் முன்பாக வயல் மாதாவை தீயில் இட்டு எரிக்கப் போவதாகவும் இங்கு உள்ள சங்கங்களையும் மக்களையும் பகிரங்கமாக அழைத்திருந்தார்கள். அந்த நேரம் நான் நகரில் இல்லை ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். பயணத்தின் போது இணைத்துக்கொள்ள முடியாமல் போனது. புத்தகம் வெற்றிகரமாக தீயில் இடப்பட்டு காணொளியை வெளியிட்டிருந்தார்கள். அது மட்டுமல்ல நாங்கள் வீட்டில் இல்லாத போது கிட்டத்தட்ட முப்பது பேருக்கும் அதிகமானவர்கள் வாகனங்களில் எனது வீட்டிற்கு முன்பாக சுமார் பிற்பகல் 6.30 அளவில் சுற்றி வளைத்து திருடனை பிடிப்பவர்கள் போல காத்திருந்தனர். பின்னர் நாங்கள் இல்லை என அறிந்தவுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். பின்னர் ஒரு தகவல் வெளியிட்டனர். தாங்கள் புத்தகத்தை திருப்பிக்கொடுக்கவே வந்ததாகவும் வீட்டை திறக்கவில்லை தொலைபேசிக்கு பதில் தரவில்லை எனவும் கூறி இருந்தனர். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வெளியீடன்று புத்தகம் வாங்காதவர்களும் திரண்டு வீட்டை சுற்றி வளைத்து இருந்தனர். வெளியிட்ட வீடியோவில் யாருடைய கையிலும் நான் புத்தகத்தை காணவில்லை. மேலும் மரியாளுக்கு எதிராக புத்தகம் இருப்பதாகவும் என்று கூறி வந்த மக்கள். ரோமன் கத்தோலிக்கத்துக்கு எதிராகவும் கன்னி மரியாளுக்கு எதிராக அதி தீவிரமாக பிரச்சாரம் செய்யும் சில பிரிவினை சபையில் அங்கம் வகிக்கும் சிலரும் அங்கே தோன்றியது எனக்கு ஆச்சரியம். வயல் (மாதா) எரிக்கப்பட்டாள்.தொடர்ந்து இதன் உச்சக் கட்டமாக பல நாடுகளில் இருந்து மாதா பக்தர்கள் எனது கிராமத்தைசேர்ந்தவர்கள் தொலைபேசியில் அழைத்துக்கொண்டிருந்தனர். தாயகத்தில் வாழும் எனது உறவினரை மிரட்டிப்பார்த்தாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. சட்டப்படி பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த நூலை புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் மக்கள் இந்த நாட்டுச்சட்ட திட்டங்களை மதிக்காது கொக்கரித்துக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. பேச்சு ,எழுத்துச்சுதந்திரமுள்ள இந்த நாட்டில் இவ்வாறு நடந்து கொள்வது அறியாமையின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்கிறேன். செபப் புத்தகமும்,கையுமாக திரிந்த மக்களை இலக்கியப்புத்தகம் தூக்க தூண்டி இருக்கிறது. இந்த நூல் இது இந்த நூலுக்கு கிடைத்த வெற்றி. வெளி நாடுகளில் நேரடியாகவே புத்தகம் வெளியிட உதவி செய்பவர்களை பாவம் செய்ப்பவர்கள் போன்ற கண்ணோட்டத்தில் அவர்களை மிரட்டுவது ஏற்க முடியாத செயல். படைப்பாளிகள் சமூக ஆர்வலர்கள் இந்த விடயத்தில் கவனம் கொண்டு எதிர்காலத்தில் இப்படியான மிரட்டல்களால் படைப்பாளர்கள் ,கலைஞர்கள் சோர்ந்து போய் தமது பணிகளில் தொய்ந்து விடாமல் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என அனைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
டானியல் ஜெயந்தன்