முப்பத்தாறாவது வயதில் அந்தக் கவிஞனிடம் மருத்துவர்கள் சொன்னார்கள், உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது, அதுவும் குணப்படுத்தவே முடியாத நிலையில் இருக்கிறீர்கள்.
சொஸ்தப்படுத்தவே முடியாத பைத்தியம் என்பதால் உலகம் அவரைக் கை விட்டது. சமூகம் கை விட்டது. அம்மாவும் கைவிட்டு விட்டாள். சகோதரியும் கை விட்டாள். ஆனால் ஒரே ஒரு தச்சர் குடும்பம் அவரைப் பராமரித்தது. அவர் மற்றுமொரு முப்பத்தாறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய வாழ்வை இரண்டு முப்பத்தாறுகளாகப் பிரிப்பார்கள். இரண்டாவது முப்பத்தாறிலும் அவர் சும்மா இருக்கவில்லை. ஏராளமாக எழுதினார். அந்த முப்பத்தாறு ஆண்டுகளில் அவரது அம்மாவோ சகோதரியோ மற்ற உறவினர்களோ அவரை வந்து பார்க்கவில்லை. அம்மா பார்க்காததற்குக் காரணம், அம்மா எதிர்பார்த்தபடி அவர் மதத்தில் நாட்டமோ ஈடுபாடோ கொண்டவராகவோ இல்லை.
அந்த முப்பத்தாறு ஆண்டுகளில் அவர் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறையை விட்டு வெளியே சென்றதில்லை. ஒரு இந்தியத் துறவியைப் போலவே அந்த அறையிலேயே வாழ்ந்தார். அந்த அறை ஒரு டவரில் அமைந்திருந்தது. அவர் பெயர் பிரபலமானது. சுற்றுலாப் பயணிகள் அவரை வந்து பார்த்தார்கள். அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்களை அவர் அன்புடன் வரவேற்றார். அவர்களுக்காகவே கவிதைகள் எழுதிக் காண்பித்தார். இப்போதும் அவர் வாழ்ந்த டவர் அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.
அவரது ஆரம்ப காலத்தில் அவர் ஹெகலின் நண்பராக இருந்தவர்.
பெட்டியோ நாவலுக்காக இப்படி ஒரு நூறு கவிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கவியின் பெயர்
Friedrich Hölderlin (1770 – 1843). இவரை அறிந்து கொண்டது என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று. நேற்று முழுவதும் ஹோல்டர்லினின் கவிதைகளைத்தான் படித்துக் கொண்டிருந்தேன். இதுவரை தமிழ் இலக்கியச் சூழலில் ஹோல்டர்லின் பற்றிப் படித்ததில்லை. உலகக் கவிகள் அத்தனை பேரையும் அறிந்திருந்த தர்மு சிவராமு இவரைப் பற்றி எழுதியிருக்கலாம். கால. சுப்ரமணியனுக்குத் தெரிந்திருக்கும். ஃப்ரீட்ரிச் ஹோல்டர்லினின் ஒரு கவிதை முடிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
The earth will take back those concerned
With impermanent things: others climb higher
To ethereal Light who’ve been faithful
To the love inside themselves, and to the spirit
Of the gods. Thus they master Fate
In patience, hope and quiteness.
சரி, ஒரு நாவல் எழுதுவதற்காக நான் ஏன் ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு ஜெர்மன் கவியைப் படிக்க வேண்டும். ஏனென்றால், நயநதினிக்குப் பிடித்தவர் அந்த்தோனின் ஆர்த்தோ. ஆர்த்தோவுக்குப் பிடித்தவர் Pierre Klossowki. பியர் க்ளோஸோவ்ஸ்கி இந்த ஹோல்டர்லினை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்! பயப்பட வேண்டாம், ஹோல்டர்லினுக்குப் பிடித்தவர்களை நான் பிடிக்கவில்லை.