பேயைப் போல் படித்துக் கொண்டிருக்கிறேன். ராஸ லீலாவைப் போல் இன்னொரு நாவல் எழுத முடியாது என்றே என் நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் பெட்டியோ ராஸ லீலாவைப் போல் இருக்கும் என்று தோன்றுகிறது. ராஸ லீலாவைத் தாண்டி விட்டதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ராஸ லீலா எதார்த்த சொல்லாடலால் ஆனது. ஆனால் பெட்டியோ metaphysical narrative மூலம் உருவாகிறது. வெறும் மெட்டாஃபிஸிக்ஸாக இல்லாமல் மெட்டாஃபிஸிக்ஸையே பருண்மையாக ஆக்கும் முயற்சியாக இருக்கும்.
அந்த உலகத்தில் வாழ்வதற்காக இப்போது Pierre Klossowkiஇன் நாலைந்து நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். முதல் நூலுக்கு மிஷல் ஃபூக்கோ முன்னுரை கொடுத்திருக்கிறார். அந்த நூல் மிஷல் ஃபூக்கோவுக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. க்ளொஸோவ்ஸ்கி ஜார்ஜ் பத்தாயின் நண்பரும் ஆவார். 96 வயது வரை பாரிஸில் வாழ்ந்தவர் க்ளொஸோவ்ஸ்கி.
எல்லா ரெஃபரன்ஸ் நூல்களும் பெட்டியோவில் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பெட்டியோ என்.எஃப்.டி.யில்தான் கிடைக்கும். புத்தகமாகப் போட்டால் கிடைக்கும் ராயல்டி எனக்குப் பற்பசை வாங்கத்தான் போதுமானதாக இருக்கிறது. அதனால்தான் என்.எஃப்.டி.
ஆனால் ஒன்று. பெட்டியோ என்னுடைய மகத்தான சாதனை நூலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.