பெட்டியோ நாவலை எப்படியெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது பற்றிய குறிப்புகளை இங்கே தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன். எனவே அந்த நாவலை வாசிக்க விருப்பப்படும் நண்பர்கள் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து வந்தால் நாவல் அனுபவம் இன்னும் கூடுதலாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
இப்போது முதல் குறிப்பு:
My Life and Times with Antonin Artaud என்ற நாவலை ஆர்த்தோவின் மிக நெருக்கமான நண்பரான Jacques Prevel எழுதியிருக்கிறார். என்ன முயன்றும் அந்த நாவல் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நாவலை Gerard Mordillat ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார். ஆர்த்தோ என்ற மேதை நடைமுறை வாழ்வில் எப்படி இருந்தார், எப்படிப் பேசினார், எப்படிப் பழகினார் என்பதை இந்தப் படத்திலிருந்து பெருமளவு புரிந்து கொள்ள முடிகிறது. ஆர்த்தோவாக நடித்திருக்கும் சாமி ஃப்ரே தத்ரூபமாக ஆர்த்தோ மாதிரியே இருக்கிறார். ஆர்த்தோவை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வருகிறார். ஏதோ ஆர்த்தோ பற்றிய ஆவணப்படம் போலவே இருந்தது. இசையிலும் ஆர்த்தோவைக் காண முடிகிறது. ஆர்த்தோ இசை பற்றி எழுதியிருக்கிறார். இசை என்பது எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும், இசை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் ஆர்த்தோ விரிவாக எழுதியிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஆர்த்தோவே இசை அமைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
மனநோய் மருத்துவமனையிலிருந்து விடுதலையாகி வரும்போது அவர் ஜாக்கிடம் சொல்கிறார், நீ இந்தப் பாரிஸ் நகரில் கிடைக்கும் அத்தனை அபீனையும் எனக்குக் கிடைக்கும்படி செய், அதன் மூலம் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற்று முடிக்க வேண்டியதையெல்லாம் எழுதி முடிக்கிறேன் என்கிறார். கோபி கிருஷ்ணன் என்னிடம் மாதம் ஐநூறு ரூபாய் இருந்தால் போதும், ஒரு மாதத்துக்கான சிகரெட்டுக்கு வரும் என்று சொன்னது ஞாபகம் வந்தது.
ஜாக் ப்ரெவெல் ஒரு கவிஞர். ஆனால் ஆர்த்தோவின் நாடகத்துக்கு டிக்கட் வாங்கக் காசு இல்லை. சிகரெட் வாங்கக் காசு இல்லை. ஒருநாள் ஜாக்கும் அவரது காதலியும் ஒரு ரெஸ்தொராந்துக்குப் போய் ஒரு கப் சூப் ஆர்டர் செய்கிறார்கள். ரெஸ்தொராந்த் சிப்பந்தி, இரண்டு மூன்று முறை கேட்கிறார், என்னது ஒன்றா என்று. ஆமாம் ஒன்றுதான், கொடுங்கள், நாங்கள் பங்கு போட்டுக் குடித்துக் கொள்வோம் என்கிறார் ஜாக்.
“என்னது, ஒரு சூப்பை வாங்கி ரெண்டு பேர் பங்கு போடுவதா?” என்று முனகிக் கொண்டே செல்கிறார் சிப்பந்தி.
இன்னொரு நாள், காதலி வீட்டுக்கு சாப்பிடச் செல்கிறார் ஜாக். சீஸ் கூட இல்லாமல் சாப்பிடுகிறார்கள். பணம் இல்லை.
அந்த அளவுக்கு வறுமை.
இன்னும் சொல்ல இருக்கிறது. நாளை பெங்களூர் செல்கிறேன். அங்கிருந்து எழுதுகிறேன்.
இந்தப் படத்துக்கும் பெட்டியோவுக்கும் என்ன சம்பந்தம்?
நயநதினிதான். வேறு என்ன?