பெங்களூர் சென்று வந்தேன். திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன். பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பஸ்ஸில் பயணம் செய்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பஸ் பயணமே எனக்கு ஒத்து வருவதில்லை. இந்தியாவில் பஸ்களில் கழிப்பறை வசதி இல்லாததால் என்னால் பஸ்ஸில் செல்ல முடிவதில்லை. அந்தப் பிரச்சினை இரவில் மட்டும்தான். பகலில் நானும் மற்றவர்கள் மாதிரிதான். பகலில் என் சிறுநீரகம் சரியாக வேலை செய்யும். ஆனால் ஒரு முழுப் பகலையும் பஸ் பயணத்துக்கு ஒதுக்க முடியாது என்பதால் பகலில் பஸ்ஸில் பயணம் செய்வதில்லை.
பெங்களூர் விஷயத்தில் இந்தப் பயணத்தில்தான் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். புதன்கிழமை பெங்களூரிலிருந்து திரும்ப முடியாது. வந்தே மாதரம் – ஸாரி, வந்தே பாரத் – புதன்கிழமை கிடையாது. சதாப்தியும் புதன்கிழமை அன்று மாலையில் கிடையாது. மற்றபடி கிடைக்கும் நீண்ட தூரத்திலிருந்து வரும் ரயில்களில் பயணம் செய்யாதீர்கள் என்று பயண முகவர் சொன்னார். அதன் பொருள் அவருக்கே தெரியும். என்ன பிரச்சினை என்று நான் கேட்கவில்லை. பொதுவாக அது போன்ற விஷயங்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. கிடையாதா, கிடையாது. ஏன் கிடையாது என்ற பேச்சே எடுப்பதில்லை. விமானத்தில் திரும்பி விடலாம் என்று பார்த்தால் புதன்கிழமை மட்டும் டிக்கட் 12000 ரூ. மற்ற நாட்களில் 3000 தான். இது என்னடா கஷ்டகாலம் என்றுதான் பஸ்ஸில் டிக்கட் போடச் சொன்னேன். சீனிதான் போட்டார். இதை எழுதியதும் எல்லா நண்பர்களும் அவரை ஒரு பயண முகவரைப் போல் மாற்ற சாத்தியமுண்டு. சீனி எனக்கு மட்டும்தான் இதெல்லாம் செய்வார். ஏன் என்று பலமுறை எழுதி விட்டேன். மறந்து போயிருந்தால் அவரையே கேட்டுக் கொள்ளுங்கள்.
பஸ் என்றால் எப்படி இருக்கும் என்ற என் எதிர்பார்ப்பும் பொய்த்து விட்டது. தனியாக காலை நீட்டிப் படுத்துக் கொள்ளலாம். பக்கத்தில் எந்த ஆத்மாவும் இல்லை. இரண்டு முறை நிறுத்துகிறார்கள்.
படு வசதியான பயணம். ஆனாலும் இனிமேல் ஒருமுறை கூட பஸ்ஸில் பயணம் செய்யக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன். புதன்கிழமை கிளம்ப வேண்டியிருந்தால் அதை ரத்து செய்து விட்டு புதன்கிழமையும் பெங்களூரிலேயே தங்கி விட்டு வியாழன்தான் கிளம்ப வேண்டும். இப்போதும் அப்படியே செய்திருக்கலாம். ஆனால் பெட்டியோ வேலை என்னை இழுத்துக் கொண்டே இருந்தது. பெங்களூரிலேயே செய்திருக்கலாம். ஆனால் அவ்வளவு ’அழகான’ ஊரில் அமர்ந்து கொண்டு என்னால் எழுத முடியவில்லை. ஏனென்று, இந்தக் கட்டுரை முடிவதற்குள் உங்களுக்குத் தெரிந்து விடும்.
பஸ்ஸே வேண்டாம் என்ற முடிவுக்குக் காரணங்கள்: பன்னிரண்டரைக்கு வர வேண்டிய பஸ் ஒரு மணிக்குத்தான் வந்தது. இது அராஜகம். போய்ச் சேரும்போது தாமதம் நேரலாம். கிளம்பும்போதே என்றால் கொடுமை. நல்லவேளையாக, அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த என்னுடைய ஒரு வாசகர் என்னைக் கண்டு திடுக்கிட்டு நின்றவர் பஸ் வரும் வரை என்னோடு நின்று பேசிக் கொண்டிருந்தார். அவர் மட்டும் வந்திருக்காவிட்டால் மடிவாலா என்ற அந்த இடத்தின் நடு ரோட்டில் நிற்க முடியாமல் புதன்கிழமையும் அங்கேயே தங்கி விட்டு வியாழக்கிழமை விமானத்தைப் பிடித்துத்தான் வந்திருப்பேன். அந்த நடு ரோட்டில் உட்காருவதற்குக் கூட வசதி இல்லை. ஆனால் பஸ் நிறுவனமான ஏஷியன் எக்ஸ்பிரஸ்காரர்கள் 12.35க்கே எனக்கு ஃபோன் செய்து பஸ் வந்து கொண்டிருக்கிறது, கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்தார்கள். அதுதான் கஸ்டமர் சர்விஸாம்! ஆனால் 12.55 வரை பஸ் வராததால் நான் ஃபோன் செய்து கேட்ட போது, எல்லோருக்கும் சம்பளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சார், அதுதான் லேட், ஹிஹி என்றார் ஃபோனில் பேசியவர்.
ஒரு மணிக்குக் கிளம்பிய பஸ் இரவு ஒன்பதரைக்குக் கோயம்பேடு வந்தது. என்னதான் பஸ் பயணம் சொகுசாகவே இருந்தாலும் இத்தனை மணி நேரம் பயணம் செய்வதெல்லாம் என்னால் இயலாது என்பதால் இனிமேல் பஸ் பயணமே கிடையாது என்று முடிவு செய்து விட்டேன். ஒன்று, விமானம். இல்லையேல், ரயில். ரயில் என்றால் படிக்கவாவது செய்யலாம். இந்தியாவில் சாலைகள் சரியில்லாததால் படிக்கவும் முடியவில்லை.
பஸ் மதுரவாயலை நெருங்கும்போது எதிரே அமர்ந்திருந்த ஒரு இளைஞர் என்னைப் பார்த்து, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். ஏனென்றால், இப்போதெல்லாம் எங்கே போனாலும் இதைக் கேட்கிறார்கள். இலங்கையிலும் பலரும் கேட்டார்கள். குறிப்பாக சிங்களவர்கள். ஒரு புத்தர் கோவிலில் நிறுத்தி நீங்கள் நடிகர்தானே என்று கேட்டார் ஒரு சிங்களப் பெண்.
உங்கள் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் கேட்கிறேன், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றார் இளைஞர்.
எழுத்தாளர் என்றேன்.
தமிழ்நாட்டில்தான் அதற்கு அர்த்தம் தெரியாதே? அதனால் அதன் விளக்கம் கேட்டார். புரிந்ததும், என்ன genre என்று கேட்டார். பிரமாதமாக ஆங்கிலம் பேசினார். மிகவும் வசதியானவர் என்பது தோற்றத்தில் தெரிந்த்து. நான் இறங்கும் தருணத்தில் என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கோரமங்கலாவில் தங்கினேன். நான் தங்கிய இடத்தில் வரிசையாக மதுபான விடுதிகள் இருந்தன. வரிசையாக விதவிதமான உணவகங்களும் இருந்தன. டானிக் என்ற மதுபான விற்பனை நிலையம் இருந்தது. அங்கே சுமாராக ஆயிரம் வகை வைன்கள் வைத்திருக்கிறார்கள். ஒருநாள் மதியம் எனக்குப் பிடித்த வங்காள உணவகத்தில் எனக்குப் பிடித்த வங்காள மீன் உணவு சாப்பிட்டேன். எனக்குப் பரிமாறிய அழகி நான் விதவிதமாகக் கேட்டு சுவைத்து உண்பதைப் பார்த்து நீங்கள் வங்காளியா என்று கேட்டாள். வங்காள உணவு எனக்குப் பிடிப்பதற்குக் காரணம், கடுகு எண்ணெய். எங்கள் வீட்டில் கடுகு எண்ணெய் தடை செய்யப்பட்ட ஐட்டங்களில் ஒன்று. காரமான கடுகுத் துகையலும் எனக்குப் பிடித்தமானது. அந்தப் பரிசாரகர் அழகி வட கிழக்கு என்று தெரிந்தது. ஆனால் எந்த மாநிலம் என்று தெரியவில்லை. கேட்டேன். திரிபுரா என்றாள். அதற்குப் பிறகு அவளோடு நடந்த உரையாடல் ஒரு சிறுகதை. அது இங்கே வேண்டாம்.
தங்கின தினங்களில் கருந்தேள் ராஜேஷையும் ரொம்ப காலத்துக்குப் பிறகு கார்த்திக் நாகேந்திரனையும் சீனியையும் சந்தித்தேன்.
செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணிக்கு கோரமங்கலாவில் இருக்கும் Biergarten என்ற மதுபான விடுதியில் ஸ்ரீயைச் சந்தித்தேன். பத்து மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். குறைந்த வெளிச்சமாக இருந்தாலும் பரவாயில்லை என்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்த பப்பில் அன்றைய தினம் ஸ்ரீயை விட அழகாக இருந்தது ஒரு இளைஞன். அவன் அணிந்திருந்த சட்டையை மைக்கேல் ஜாக்ஸன் மட்டுமே அணிந்து பார்த்திருக்கிறேன். அவனும் அவன் நண்பனும் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் அவன் ஒரு gay என்று தோன்றியது. அன்றைய தினம் அவனோடு நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பில்ஸ்பர் என்ற தண்ணி மாதிரியான பியர் அருந்திக் கொண்டிருந்தேன். அதனால் கடும் நிதானத்தில் இருந்தேன். ஸ்ரீயோ கடும் சுவை கொண்ட கருப்பு நிற பியர் அருந்தினாள். அந்த இளைஞன் அணிந்திருந்த ஜக ஜகா சட்டையை எப்படியும் கண்டு பிடித்தே தீருவது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.
Biergartenஇல் போய் அமர்ந்ததும் ஸ்ரீ என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். அந்தக் கேள்வி மட்டும் கேட்கப்படாதிருந்தால் இந்தக் கட்டுரையே இல்லை.
அமர்ந்தோம். என்ன பியர் என்று சொன்னோம். பிறகுதான் ஸ்ரீ அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“ம்… அப்றம்… அராத்து என்ன சொல்றாரு?”
அடப் பாவி, ஒரு எழுத்தாளனோடு ஒரு மாலை நேர உரையாடலை இப்படியா தொடங்குவார்கள்? இத்தனைக்கும் ஸ்ரீ நன்கு இண்டலெக்சுவலாகப் பேசக் கூடியவள். நிறைய படிப்பவள்.
எனக்கு உடனடியாக ஆர்த்தோவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. ஆர்த்தோவை சந்திக்க வருகிறார் ஒரு பத்திரிகையாளர். வந்ததும் எடுத்த எடுப்பில் ”மிஸ்டர் ஆர்த்தோ, ப்ளாக் ஹ்யூமர் பற்றி உங்களுடைய விளக்கம் என்ன?” என்கிறார். ஆர்த்தோ அந்தப் பத்திரிகையாளரை இருக்கையில் அமரச் சொல்கிறார். ஆனால் அவர் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. பக்கத்தில் இருந்த தோழியிடம் வேறோர் விஷயம் பற்றி விலாவாரியாகப் பேசுகிறார். பிறகு தன் கோட்டுப் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுத ஆரம்பிக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பத்திரிகையாளர் வெறுமனே அமர்ந்தே இருக்கிறார். ஆர்த்தோவின் உணவு வருகிறது. அதைப் பொறுமையாகச் சாப்பிடுகிறார். சாப்பிட்டு முடித்த பிறகு நீண்ட நேரம் சும்மாவே இருக்கிறார். பத்திரிகையாளர் இன்னமும் காத்துக் கொண்டே இருக்கிறார். அப்போது ஆர்த்தோ தான் எப்போதும் வைத்திருக்கும் நீண்ட பேனாக் கத்தியை எடுத்துத் தன் தலையின் ஒரு இடத்தில் கத்தியின் முனையை வைக்கிறார். அக்குபங்க்சர். (அப்படிச் செய்தால் அவருடைய உடலின் சில பாகங்களில் உள்ள வலி நீங்குகிறது என்று அவர் சொல்வதுண்டு.) அடுத்த க்ஷணம், அங்கிருந்த யாருமே எதிர்பார்க்காதவண்ணம் புயல் வேகத்தில் அந்தக் கத்தியை பத்திரிகையாளர் அமர்ந்திருந்த இடத்துக்கு வெகு அருகில் மேஜையின் மீது குத்துகிறார். “சார், ப்ளாக் ஹ்யூமருக்கான விளக்கம் கேட்டீர்கள் அல்லவா? அது இதுதான். இதுதான் நீங்கள் கேட்ட ப்ளாக் ஹ்யூமர்.”
உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் பத்திரிகையாளர்.
ஸ்ரீயின் கேள்விக்கு நானும் அந்த மாதிரிதான் ஏதாவது பதில் செய்திருப்பேன், இருபது ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் என் மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டு நிலவுகிறது. என்னை நெருங்கும் அன்பான நண்பர்களையெல்லாம் நான் ’அடித்துத்’ துரத்தி விடுகிறேனாம். அப்படிக் குற்றம் சாட்டியவரே இப்போது என்னை விட்டுப் பிரிந்து விட்டார். அதேபோல் இப்போது இருப்பவர்களையும் இழக்க விருப்பமில்லை என்பதால் ஸ்ரீயை கனிவுடன் நோக்கி, இரு இரு, உன்னை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்கிறேன் என்று பதில் சொன்னேன்.
அந்த விதம் இதுதான்.
(ராஜேஷுடனான சந்திப்பு பற்றி நாளை…)