இன்று குரு பூர்ணிமா. இலங்கையில் இன்று போயா. முழு நிலவு நாளை சிங்களத்தில் போயா என்கிறார்கள். புத்த பூர்ணிமாவின் போது நான் இலங்கையில் இருந்தேன். இரண்டு நண்பர்கள் இன்று எனக்கு வணக்கம் சொல்லி செய்தி அனுப்பியிருந்தார்கள். ஆரோக்கிய புஷ்பராஜ் அவர்களில் ஒருவர். இன்னொருவர் எனக்கே குரு. யோகா குரு சௌந்தர். அவர் எனக்கு ஒரு அற்புதமான வந்தன செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் எழுத்துக்களிலிருந்தும் கற்றுக் கொள்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியது அது. அந்த தர்க்கத்தின்படி பார்த்தால் என் பேரன் வேதா வியன் கூட எனக்கு குரு. அவனிடமிருந்தும் நான் பலவற்றைக் கற்கிறேன். செடியிலிருந்தும், மரத்திலிருந்தும், விண்ணிலிருந்தும், சொல்லப் போனால் ஒவ்வொரு ஜீவராசிகளிலிருந்தும் நான் கற்றுக் கொண்டபடியே இருக்கிறேன்.
இலக்கியம் என் வாழ்க்கை. அதில் எனக்கு முன் எழுதிய எல்லோருமே என் குருநாதர்கள். இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்களிடமிருந்தும் நான் பயில்கிறேன். குறிப்பாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன். இன்னும் பலர் உண்டு.
மற்றபடி என் ஆன்மப் பயணத்தில் என் குருநாதர்களில் மிக முக்கியமானவர் மஹாப் பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சுவாமிகள்.
ஒருமுறை என்னைச் சந்திக்க வந்தார் ஒரு வாசகர். ஏதோ வெளியூர். வந்தவருக்கு வைனும் கையுமாக இருந்த என்னைப் பார்த்து அதிர்ச்சி. அவ்வப்போது சிகரெட்டையும் புகைக்கிறேன். அப்புறம் அவர் விசாரித்துப் பார்த்ததில் எனக்குப் பெண் தொடர்பும் உண்டு என்று அறிந்து கொண்டார். அவர் சொன்ன வாக்கியம்தான் மறக்க முடியாதது. “சாருவை என்னவோ நினைத்து வந்தேன். இப்படியாகி விட்டது.” நான் என்ன விசிறி சாமியாரா அல்லது பாலகுமாரனா?
தமிழ் மொழியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடக்காத ஒரு உடைப்பைச் செய்யும் முதல் ஆள் நான். எல்லாவற்றையும் விட, எழுத்தாளனைப் பிச்சைக்காரனைப் போல் நடத்தாதீர்கள் என்று சொல்லி ஒரு யுத்தமே செய்து அதில் வென்றிருக்கிறேன். இது லௌகீகத்தில். மொழியில் நடத்தியது என்ன என்று நானே சொல்லிக் கொள்ளக் கூடாது.
என்னை நெருங்கி வந்த நண்பர் நான் ஆன்மீக குரு என்று நினைத்து விட்டார் போல.
என்னைப் பொருத்தவரை மரணத்தை எண்ணி அஞ்சாதவன் ஞானி. மரணமும் ஜனனம் போன்ற ஒன்று என அறிந்தவன் ஞானி. என்னுடைய மரணம் மட்டுமல்ல. என்னைச் சார்ந்தவர்களின் மரணமும் ஜனனத்துக்கான வாயில்தான் என உணர்ந்தவன் நான். நான் அருந்தும் வைன் போன்றவை, தாமரை இலையில் தண்ணீர் போல. உயிர் வாழ்வதற்கு உணவு என்பது போல மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு விடாமல் இருக்க வைன்.
எவனொருவன் எதையுமே உள்ளே செலுத்திக் கொள்ளாமல் வாழ்கிறானோ அவனே உண்மையான ஞானி. உள்ளே என்பதன் அர்த்தம் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் என் அன்புக்குரியவர்.
கொரோனா சமயத்தில் இரண்டரை ஆண்டுகள் நான் என் அறைக்குள்ளேயே இருந்துதான் எழுதினேன். வைன் பற்றி ஒரு நொடி கூட சிந்தித்தது இல்லை. ஒரு நொடி கூட. இன்றே நான் இமையம் சென்றால், அங்கே உள்ள ஒரு துறவியிடமிருந்து கஞ்ஜா வாங்கிப் புகைப்பேன். எதுவும் என் உள்ளே போனதில்லை. அதனாலேயே நான் என்னை ஞானி என உணர்கிறேன். நானெல்லாம் சாதாரண ஆள்ங்க என்று ஒரு சாதனையாளன் சொல்கிறான் எனில் அவன் புளுகுகிறான் என்று பொருள்.
மகாப் பெரியவரிடம் ஒருவர் சொன்னார், என் குருவை நான் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன், ஏனென்றால், என் குருவிடம் பல தீய பழக்கங்கள் இருக்கின்றன.
மகாப் பெரியவர் சொன்னார், விளக்குமாறு தூசியும் தும்பட்டையுமாகத்தான் இருக்கும். குருவை மாற்றாதே. மாற்ற நினைத்தால் உனக்கு ஏற்ற மாதிரியான குரு நீ வாழ்நாள் பூராவும் தேடினாலும் கிடைக்க மாட்டார்.
பதினைந்து ஆண்டுகளாக குரு பூர்ணிமா அன்று அதிகாலையில் எனக்கு குருவுக்கான வந்தனம் சொல்லி செய்தி அனுப்பும் ஒரு நண்பர் இன்று அனுப்பவில்லை. பேசுவதையும் நிறுத்தி விட்டார். குருவை மாற்றி விட்டாரா அல்லது அவரே குருவாகி விட்டாரா, தெரியவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்த ஒரு செயல் நிற்கும்போது ஒரு சின்ன ஆச்சரியம். அவ்வளவுதான். அதையும் கடந்து செல்ல வேண்டியதே ஒரு கர்ம யோகியின் வேலை. யோசிக்க நேரமில்லை. ஒரே நோக்கம். ஒரே சிந்தனை. ஒரே ஓட்டம். பெட்டியோ.
என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் எனக்கு குரு வந்தனம் சொல்லவில்லை. சொன்னால் உதைப்பேன் என்று தெரியும். என்னுடைய பள்ளியின் கலாச்சாரம் வேறு.
உங்கள் உடம்பில் பித்தம் அதிகமாக இருக்கிறது, அதுதான் உடலின் லயம் தடுமாறுவதற்குக் காரணம் என்றார் சித்த மருத்துவர் பாஸ்கரன். பித்தத்தினால்தானே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன். இது வேறொரு பித்தம். பித்தனைப் போலவேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உடல் பித்தத்துக்கும் மனப் பித்தத்துக்கும் சம்பந்தம் உண்டா எனத் தெரியவில்லை.
என்னை குருவாக நினைக்கும் அத்தனை பேரின் பாதங்களையும்
இந்த குரு பூர்ணிமா தினத்தில் பணிந்து வணங்குகிறேன்…