அந்த்தோனின் ஆர்த்தோ : ஒரு நாடகம்

Antonin Artaud: Blows and Bombs என்று ஒரு புத்தகம் இருக்கிறது. ஸ்டீஃபன் பார்பர் எழுதியது. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படி ஒரு தலைப்பு தமிழில் எனக்கு மாட்ட மாட்டேன் என்கிறது. நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். புலப்படவில்லை. எதற்கு?

ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால்தான் ஆர்த்தோ பற்றி ஒரு நாடகம் எழுதி முடித்தேன். அறுபது பக்க நாடகம். இரவு பகலாக வெறித்தனமாக உட்கார்ந்து எழுதினேன். இரவு பன்னிரண்டுக்குப் படுத்து காலை ஐந்துக்கு எழுந்து எழுதினேன். எழுதுவதற்குக் கொஞ்ச நேரம்தான். ஆனால் படிக்க மலை மாதிரி இருந்தன புத்தகங்கள். எல்லாவற்றையும் படித்தேன். முதலில் பெட்டியோ நாவலுக்குள் ஒரு நாடகம் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் நாடகம் தனியாக என்னைத் தள்ளிக் கொண்டு போய் விட்டது.

நாடகம் எத்தனை மணி நேரம் என்று கணக்கிடவில்லை. ஒரு வாசிப்பு கொடுத்தால்தான் தெரியும். என்னைப் பொருத்தவரை கவிதையோ நாவலின் அத்தியாயமோ எல்லாமே ஒரு நாடகம்தான். அப்படியானால் நாடக வாசிப்பு கிட்டத்தட்ட enactment போலவே இருக்க வேண்டும். எனக்கு வாசிப்பு நன்றாக வரும். தமிழ்நாட்டில் வாசிப்பு என்பதே இல்லை. வைரமுத்துவைத் தவிர வேறு யாருக்குமே இதில் நிபுணத்துவம் இல்லை. கமல் நன்றாக வாசிப்பார். ஆனால் அதில் ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. வைரமுத்துதான் இயல்பாக வாசிக்கிறார்.

நாடகம் ஒன்றரை மணி நேரம் இருக்கலாம் என்று யூகிக்கிறேன். நாடகத்தைத் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழ்நாட்டில் நிகழ்த்த முடியாது. அது சாத்தியமே இல்லை. ஹிந்தியில் மொழிபெயர்த்தால் தில்லியில் நிகழ்த்தலாம். அங்கே தேசிய நாடகப் பள்ளி உள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் இந்த நாடகம் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும். ஏனென்றால், இதுவரை ஆர்த்தோ பற்றி இரண்டு அல்லது மூன்று நாடகங்களே எழுதப்பட்டு இயக்கப்பட்டிருக்கின்றன. அது எதுவும் காணொலியாகக் கிடைக்கவில்லை. இயக்குனர்களிடம் மட்டுமே இருக்கலாம். அந்த நாடகப் பிரதிகளும் வெளியே வாசிக்கக் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பிரதியைத்தான் மிகவும் தேடிக் கண்டு பிடித்து வாசித்தேன். இந்த நிலையில் என்னுடைய ஆர்த்தோ நாடகம் மூன்றாவதோ நான்காவதோ. நிகழ்த்தப்பட்டால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் நிகழ்வாக இருக்கும். ஏனென்றால், அந்த மூன்று நாடகங்களும் நிகழ்த்தப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

என்னுடைய ஆர்த்தோவின் நாடகம் ஏன் முக்கியமானது என்றால், உலகம் அழியப் போகிறது, கோடிக்கணக்கான மக்கள் சாகப் போகிறார்கள், இந்த அழிவை ஐரோப்பியர்தான் செய்ய இருக்கிறார்கள், ஏனென்றால், ஐரோப்பியர் ஆன்மாவை இழந்து விட்டார்கள் என்று உலக யுத்தத்துக்கு முன்பே சொல்லி விட்டார் ஆர்த்தோ. சரி, ஆன்மா எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள். மெக்ஸிகோவிலும் இந்தியாவிலும் என்றார்.

நீ பைத்தியம் என்று அவரைத் தூக்கி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்து விட்டார்கள் ஃப்ரெஞ்சுக்காரர்கள். ஒன்பது ஆண்டுகள். உள்ளே வைக்க சான்றிதழ் கொடுத்தவர் லக்கான். ஆனால் ஆர்த்தோ சொன்னதுதான் நடந்தது.

இன்றைக்கு ஆர்த்தோவின் தேவை என்ன என்பது மேலே சொன்ன வார்த்தைகளிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும்.

வரும் பதினெட்டாம் தேதி கோவா செல்கிறேன். 22ஆம் தேதி கோவாவில் ஆர்த்தோ நாடகத்தின் என்னுடைய வாசிப்பு இருக்கும். ஆர்த்தோவின் நாடகங்களை ஆர்த்தோ வாசிப்பது நாடகம் போலவே இருக்கும். இன்னமும் அந்த ஒலிப்பதிவுகள் அனைத்தும் இருக்கின்றன. அவர் வானொலிக்காக எழுதிய நாடகம் ஒன்று வானொலியில் ஒலிபரப்புவதற்கு முதல் நாள் வானொலி இயக்குனரால் தடை செய்யப்பட்டது. இன்றளவும் அது பாரிஸ் வானொலியில் ஒலிபரப்பப்படவில்லை. மத நிந்தனை என்பது காரணம். ஆனால் இயக்குனர் நல்லவர். ஃப்ரான்ஸில் உள்ள அத்தனை புத்திஜீவிகளையும் கவிஞர்களையும் ஓவியர்களையும் அழைத்து அந்த நாடகத்தைக் கேட்கச் செய்தார். இரண்டு முறை. எல்லோரும் கேட்டு விட்டு வானொலி இயக்குனரை செருப்பால் – ஸாரி, ஷூவினால் – அடித்து விட்டுப் போயிருப்பார்கள் என்று யூகிக்கிறேன். ஏன் இப்படிப்பட்ட பொக்கிஷத்தை ஒலிபரப்பவில்லை என்று.

மேலும், இந்த நாடகத்தில் மத நிந்தனை எதுவும் இல்லை என்று பாரிஸ் ஆர்ச் பிஷப்பே வானொலி நிலையத்துக்கு வந்து கேட்டு விட்டு சான்றிதழ் கொடுத்து விட்டுப் போனார். எல்லாம் நடந்து தொண்ணூறு ஆண்டுகள் ஆகின்றன.

என்னுடைய நாடக வாசிப்பு, ஆர்த்தோவின் வாசிப்புக்கு ஓரளவு பக்கத்தில் இருக்கும். கேட்க ஆர்வம் உள்ளவர்கள் 22ஆம் தேதி கோவா வாருங்கள். அஞ்ஜுனா கடல்கரை அருகே தங்குகிறேன். தங்குமிடத்தில் இடம் இல்லை. வெளியே தங்கிக் கொள்ளலாம். என்னோடு சுற்றலாம். பேசலாம்.

இனிமேல் எதையுமே இலவசமாகத் தருவதில்லை என்று இருக்கிறேன். நீங்கள் அவ்வளவு தூரம் வரும் செலவெல்லாம் இருக்கிறது. அதோடு சேர்த்து என் வாசிப்பைக் கேட்பதற்குக் குறைந்த பட்ச நன்கொடை ஆயிரம் ரூபாய்.

எனக்குக் கிடைக்கும் பணம் அத்தனையும் என் பயணங்களுக்கு ஆனதுதான்.

எப்போதும் என் எழுத்தை சீனியிடமோ மற்ற நண்பர்களிடமோ காண்பித்து கருத்து கேட்பேன். இந்த நாடகத்துக்கு அப்படிக் கேட்கவில்லை. ஏனென்றால், இந்த நாடகம் சமகால உலக நாடக இலக்கியத்தில் முக்கியமான இருபத்தைந்தில் ஒன்றாக இருக்கும். முதல் ஐந்தில் ஒன்று பீட்டர் வெய்ஸ் ஜெர்மன் மொழியில் எழுதிய Marat/Sade நாடகம் என்பார்கள். அந்த ஐந்துக்கு அடுத்ததாக இருக்கும் என் ஆர்த்தோ நாடகம். நானே ஆர்த்தோவாக உருமாறி எழுதிய நாடகம். ஆர்த்தோவின் வாழ்க்கை மட்டும் அல்ல. எல்லா சமகால விஷயங்களும் இடம் பெறும்.

நாடகம் தமிழில் புத்தகமாக வருமா என்று தெரியவில்லை. ஏனென்றால், இதை மொழிபெயர்த்து ஒரு ஆங்கில நாடகப் போட்டிக்கு அனுப்ப இருக்கிறேன். அதற்கு ஒரு இக்கு வைக்கிறான். நாடகம் எதிலும் பிரசுரம் ஆகியிருக்கக் கூடாது என்று. இந்த நாடகம் தமிழில் நிகழ்த்தப்பட சிறிதும் சாத்தியம் இல்லை. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் வாங்கிய அடியே ஜென்மத்துக்கும் போதும். இப்போது தெம்பில்லை.

நாடகத்தைக் கேட்க விரும்புபவர்கள் மாரா/ஸாத் நாடகத்தின் சினிமா வெர்ஷனைப் பார்த்து விட்டு வந்தால் இன்னும் நலம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மாரா/ஸாத் நாடகத்தை பீட்டர் ப்ரூக் இயக்கியிருக்கிறார். அதுதான் சினிமாவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது சினிமா இல்லை. நாடகம் சினிமாவாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

என் ஆர்த்தோ நாடகம் உலக நாடக இலக்கியத்தில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், மாரா/ஸாத் நாடகமே ஆர்த்தோவின் தியேட்டர் ஆஃப் க்ரூவல்ட்டியில் இருபத்தைந்து சதவிகிதம்தான் பயன்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். ஆர்த்தோவின் தியேட்டர் ஆஃப் க்ரூவெல்ட்டியை வைத்து இன்னமும் அதிக நாடகங்கள் எழுதி இயக்கப்படவில்லை. எங்கோ ஒன்றிரண்டு யாருக்கும் தெரியாமல் நடக்கலாம். ஆர்த்தோவே அவரது தியேட்டர் ஆஃப் க்ரூவெல்ட்டி கோட்பாட்டில் நாடகம் எழுதவில்லை. அதற்குள் கொன்று விட்டார்கள். என்னுடைய ஆர்த்தோ நாடகம் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் தியேட்டர் ஆஃப் க்ரூவெல்ட்டியைக் கொண்டு எழுதப்பட்டது. இயக்கும்போது அதை நூறாக மாற்றும் சாத்தியம் இயக்குனருக்கு உள்ளது.

1930களின் முற்பகுதியில் ஆர்த்தோவின் சென்ஸி என்ற நாடகம் பாரிஸில் நடந்தது. மூன்று மாதம். தினமும். ஒரு நாள் டிக்கட் விலை நூறு ஃப்ராங்க். மூன்று மாதமுமே ஹவுஸ்ஃபுல். நான் நம்பவில்லை. ஆனால் எல்லா புத்தகங்களிலும் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். நம்பித்தான் ஆக வேண்டும். எல்லா பணத்தையும் ஆர்த்தோ நாடகக் கலைக்காகவே செலவிட்டு விட்டு சாப்பாட்டுக்காக புதுமைப்பித்தன் மாதிரியே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார், எல்லோரிடமும். குறிப்பாக காலிமார் பதிப்பகத்திடம். அடியேனும் அப்படியே.

கோவா வாசிப்பு குறித்து எனக்கு எழுத:

charu.nivedita.india@gmail.com