என் மீது மிகுந்த பிரியம் கொண்டு என்னை நெருங்கி வரும் வாசகர்கள் கூட தமிழ் எழுத்தாளனின் நிலை பற்றி நான் அடிக்கடி புலம்புவதைப் பார்த்து வெறுத்து, அலுப்புற்று ஓடி விடுகிறார்கள். ஒருவர் வாட்ஸப் வரை வந்தார். என்னுடைய ஒரு புலம்பல் கட்டுரையைப் படித்து விட்டு என்னைக் கண்டபடி திட்டி வாட்ஸப் அனுப்பினார். அவரை ப்ளாக் செய்து விட்டேன். வெகுஜனப் பரப்பிலிருந்து வருபவர்களுக்கு நான் ஏன் புலம்புகிறேன் என்று புரியவில்லை. இதோ இப்போது விளக்கப் போகிறேன்.
என்னுடைய எக்ஸைல் என்ற நாவல் தமிழில் வந்து என்ன பயன்? இரண்டாயிரம் பேர் படித்தார்கள். அதில் ஆயிரம் பேர் கொண்டாடினார்கள். அதோடு சரி. ஆங்கிலத்தில் வந்தது. வந்ததே யாருக்கும் தெரியாது. கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆயிற்று. ஆனால் மார்ஜினல் மேன் என்ற பெயர் கொண்ட அந்த நாவலைப் போல் உலக மொழிகளில் ஒரு ஐந்து இருந்தாலே அதிகம். அந்த அளவுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மை கொண்ட நாவல். ஏன் யாராலும் கவனிக்கப்படவில்லை? ஸீரோ டிகிரி பதிப்பகம் தமிழின் பிரதான பதிப்பகங்களில் ஒன்று என்றாலும், இந்திய அளவில் அது ஒரு ஹார்ப்பர் காலின்ஸ் அல்ல. சர்வதேச அளவில் பார்த்தால் – இல்லை, பார்க்கவே முடியாது. இன்னொரு விஷயமும் உள்ளது. பெங்குவினில் ஆங்கில மொழிபெயர்ப்பில் சிவகாமியின் நாவல் வந்தது. தமிழில் சிலாகிக்கப்பட்ட நாவல். ஆங்கிலத்தில் கவனிக்கப்படவே இல்லை. காரணம், பெங்குவின் ஒரு கடல். பெருமாள் முருகன் மாதிரி கடவுள் மீது கை வைத்தால்தான் பிரபலம் ஆக முடியும். சல்மான் ருஷ்டியும் அப்படியே. அருந்ததி ராய் பிரபலம் ஆனது வெறித்தனமான விளம்பரம். தாகூருக்கு ஒரு யேட்ஸ் இருந்தது போல அருந்த்தி ராய்க்கு ஒரு பிரபலம் இருந்தார். அந்தப் பிரபலம் என்னை நோக்கிப் பார்த்த போது அவர் வீழ்ந்து விட்டார். அது என் அதிர்ஷ்டம்.
ஆக, சர்வதேச அளவில் பேசப்பட்டிருக்க வேண்டிய மார்ஜினல் மேன் கிணற்றில் போட்ட கல் போல் ஆகி விட்டது. இத்தனைக்கும் லண்டனிலிருந்து வரும் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவின் ஆசிரியரே அதற்கு அவர் பத்திரிகையில் மதிப்புரை எழுதியிருந்தார். பொதுவாக அப்படியெல்லாம் ஆங்கிலத்தில் யாரும் யாரையும் தூக்கி நிறுத்த மாட்டார்கள். நாவல் அந்த அளவுக்கு நன்றாக இருந்ததால் அவர் அதைச் செய்தார். இன்னொரு விஷயம். அதன் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு என்றே தெரியாத அளவுக்கு இருந்தது. அதற்காக காயத்ரி எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்றைக்கும் மறக்க முடியாதவை.
ஆனால் ஔரங்ஸேப் நாவலுக்கு அப்படி நடக்காது. நான் விழித்துக் கொண்டு விட்டேன். ஸீரோ டிகிரியில் மார்ஜினல் மேன் வந்ததால் அதை நானே பதிப்பித்ததாக வடக்கத்தியருக்கு நாகர்கோவிலிலிருந்து செய்தி போய் விட்டது. அவர்களும் நம்பி விட்டார்கள். குழியில் கிடந்தவன் மீது மண்ணையும் அள்ளிப் போட்டாயிற்று.
என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஜப்பானிய மொழியில் எழுதும் முராகாமி என்னை விட கீழ்நிலையில் இருப்பவர்தான். ஆனால் சர்வதேச அளவில் அவர் இடம் என்ன?
என்னை ஒரு ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர் என்று உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. தமிழில் – தத்துவத்தில், வாழ்க்கைப் பார்வையில், இலக்கியத்தில் – எனக்கு நேர் எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் ஜெயமோகனும் என்னைப் பிறழ்வு எழுத்தாளர் என்று சொல்லி நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். பொதுவாக மற்ற துறைகளில் இப்படி எதிர்நிலையில் இருக்கும் சாதனையாளர்களை இன்னொரு சாதனையாளர் ஏற்க மாட்டார். தமிழ் இலக்கியம் அப்படி இல்லை. தமிழ்ச் சமூகம்தான் கொடூரமாக இருக்கிறது. எப்படி என்று சொல்கிறேன்.
ஃப்ரான்ஸில் பியர் க்யூத்தா (Pierre Guyotat) என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். அவருடைய ஏதென், ஏதென், ஏதென் என்ற நாவல் 1970இல் வெளிவந்தது. முன்னுரை நான்கு பேர் கொடுத்தார்கள். அவர்களில் இருவர் ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ. நாவல் வெளிவந்ததும் அது பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்கப்படக் கூடாது என்றும், நாவலுக்கு விளம்பரம் செய்யக் கூடாது என்றும் தடை விதித்தது ஃப்ரெஞ்ச் அரசாங்கம். முழுத் தடை அல்ல என்பதை கவனியுங்கள். நாவலில் இருந்த கடுமையான பாலியல் விவரணைகளே காரணமாக சொல்லப்பட்டது. இந்தத் தடைக்கே சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது. பியர் பாவ்லோ பசோலினி, ஜான் பால் சார்த்தர், ஜான் ஜெனே, சிமோன் தி பூவா, ஃப்ரான்ஸ்வா மித்தராந், இத்தாலோ கால்வினோ, ஜார்ஜ் பொம்ப்பிதூ (இவர் பெயரில்தான் பாரிஸின் பொம்ப்பிதூ நூலகம் இருக்கிறது என்று நினைக்கிறேன்) போன்ற பலரும் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்துக்கு பியர் க்யூத்தாவின் நாவலுக்கு ஆதரவாக எழுதினார்கள். அதாவது, தடையை நீக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். நன்றாக கவனியுங்கள். புத்தகம் பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு விற்கக் கூடாது, விளம்பரம் கூடாது என்பதற்கான தடை. நாவலுக்குத் தடை அல்ல.
ஃப்ரெஞ்சில் க்ளாத் சிமோன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். நோபல் பரிசு பெற்றவர். அவர் அப்போது ஃப்ரான்ஸ் நாட்டின் உயர்ந்த இலக்கியப் பரிசு ஒன்றின் நடுவராக இருந்தார். அவர் ஏதென், ஏதென், ஏதென் நாவலுக்கு அந்தப் பரிசை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அரசு மறுத்தது. உடனே சிமோன் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
1981இல் ஃப்ரான்ஸ்வா மித்தராந் ஃப்ரான்ஸின் அதிபராக ஆன போதுதான் ஏதென், ஏதென், ஏதென் நாவலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார்.
என்னைத் தமிழ்நாடு கொண்டாடவில்லை என்றால் என்ன பொருளில் சொல்கிறேன்? மேற்கண்ட விதத்தில்தான். நான் ஏதாவது எழுதினால் அது உடனடியாக பூமிக்குள் புதைக்கப்பட்டு விடுகிறது. மண் அள்ளிப் போட நாகர்கோவில்காரர் கையில் மண்வெட்டியுடன் தயாராக இருக்கிறார். கொண்டாடவில்லை என்றால் என்னை யானை மேல் வைத்து சவாரி செய்யவில்லை என்று சொல்லவில்லை. ”என் நூலை கவனியுங்கள். தடை செய்யுங்கள். இன்னொரு முதல்வர் வந்து தடையை நீக்க வேண்டும்” என்கிறேன்.
தமிழ்நாட்டில் இது எல்லாமே நடக்கிறது. சினிமாவில். கமலுக்கும் சூரியாவுக்கும் நடக்கிறது. எழுத்தாளனுக்கு இல்லை.
இந்த பியர் க்யூத்தா எனக்கு அறிமுகம் ஆனது ஆர்த்தோவின் வழியாக. காரணம், க்யூத்தா ஆர்த்தோவின் பள்ளியைச் சேர்ந்தவர்.
நான் இன்னும் ஏதென், ஏதென், ஏதென் நாவலைப் படிக்கவில்லை. ஆர்த்தோ நாடகத்தை அனுப்பி விட்டு அடுத்த வாரம் படிக்கலாம் என்று இருக்கிறேன்.