ஆர்த்தோவின் நாடகத்தை சுமார் ஐம்பது பேர் வாசித்து விட்டார்கள். பொதுவாக எல்லோருக்குமே நாடகம் என்ற வடிவம் புதிதுதான். இருந்தாலும் நாடகத்தை எல்லோரும் ரசித்திருக்கிறார்கள் என்றே அவர்களின் கடிதங்களிலிருந்து தெரிகிறது. ஒருசிலர் நாடகத்தில் உரையாடல் அதிகம் இருப்பதாக அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் இரண்டு நாடகங்களை சிபாரிசு செய்கிறேன். ஏற்கனவே எழுதியதுதான். ஆனால் யாரும் பார்க்கவில்லை. ஆர்த்தோ எழுதிய To have done with the judgement of god என்ற வானொலி நாடகம். அந்த நாடகத்தை ஆர்த்தோவே வானொலிக்காக நடித்திருக்கிறார். அதன் இணைப்பை நாடகத்தின் இறுதியில் கொடுத்திருக்கிறேன். அரை மணி நேரத்துக்கு வெறும் பேச்சுதான். என்றாலும் அது எப்படி நாடகமாக உருவெடுத்திருக்கிறது என்பதை அதைக் கேட்பதன் மூலம் நீங்கள் அறியலாம். அந்த நாடகத்தை நான்கு பேர் வாசித்திருக்கிறார்கள். ஆர்த்தோ உட்பட மூன்று பேர் ஐரோப்பாவின் பிரபல நடிகர்கள். ஆர்த்தோ இருபது ஐரோப்பியப் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார். க்ளாஸ் கின்ஸ்கி போல் நடிக்கக் கூடியவர். வானொலியில் நாடகத்தை வாசித்த இன்னொருவர் பிரபலமான ஸ்பானிஷ் நடிகை.
நான் சிபாரிசு செய்த இன்னொன்று, மாரா/ஸாத் நாடகம். Peter Weiss என்ற ஜெர்மன் நாடகாசிரியர் எழுதியது. இந்த நாடகப் பிரதியை நீங்கள் படிக்கக் கூட வேண்டியதில்லை. மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தாலே போதும். என் நாடகத்தை விட அதிக அளவு பேசியிருப்பார்கள். பிரதி இணைப்பு:
இந்த நாடகத்தை பீட்டர் ப்ரூக் ஆங்கிலத்தில் இயக்கியிருக்கிறார். அதன் சினிமா வடிவமும் இணையத்தில் கிடைக்கிறது. அதையும் பாருங்கள். அந்த இணைப்பையெல்லாம் நான் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். அதைப் பார்த்தால்தான் எவ்வளவு பெரிய நீண்ட வசனமாக இருந்தாலும் அது நடிப்பில் வரும்போது வேறு மாதிரி இருக்கும் என்பது தெரியும். பின்வருவது Marat/Sade நாடக சினிமாவின் இணைப்பு:
(49) Marat/Sade (1967) + subtitles – YouTube
கிளர்ச்சிக்காரனின் உடல் நாடகம் பற்றி காயத்ரி (ஸீரோ டிகிரி) எழுதியிருப்பது உற்சாகத்தை அளித்தது. பொதுவாக அவள் எதையும் பாராட்டாத ஆத்மா.
Terrific work after Zero Degree. Theatre of parody at its best.
அடுத்து சக்திவேலின் கடிதம்:
தர்க்கத்தின் இரும்பு பிடிக்களுக்குள் சிக்கி வதைபடும் ஆர்த்தோவை மிக அணுக்கமாக உணர வைக்கிறது உங்கள் நாடகம். ஆர்த்தோவின் கையில் இருக்கும் அந்த கோல் இயேசுவினுடையது. இயேசுவின் நீதி கவித்துவ நீதியல்லவா! மண்ணில் ஒரு விண்ணுலகைக் கட்டி எழுப்பும் மாயக்கோல் அதுதானே? ஆனால் இன்று ஒவ்வொரு முனையிலும் ஆர்த்தோக்களின் கழுத்து வளை நெரிக்கப்படுகிறது. மின்னதிர்ச்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஐம்பத்தோரு மின்னதிர்ச்சிகளைக் கொடுக்கும் ஐரோப்பிய சமூதாயமாக இன்றைய உலகமே மாறிவிட்டிருக்கிறது. நாடகத்தின் முடிவில் ஆசிரியனே உள்நுழைந்து இந்திய தமிழ் சமுதாயம் பரவாயில்லையோ என்ற மாதிரி ஆதங்கம் கொள்கிறான். அது வழியாக ஒரு முரணை நோக்கி வாசகனை அழைத்துச் செல்கிறது நாடகம். நமது சமுதாயத்தில் அத்தனை வன்முறை இல்லையோ என!
ஆனால் இந்த மாதிரி நேரங்களிலெல்லாம் கிழவர் காந்தி மனதில் எழுந்து வருவதுண்டு. ஏனெனில் ஆர்த்தோவைப் போல அவரும் மந்திரக் கோலை பூமிக்குக் கொண்டு வந்தார். வாழ்நாள் முழுக்க சமூகம் எதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என சொல்லுமோ அப்படித்தான் செய்து பார்த்தார். நமக்கு அவர் தேவை இருந்தவரை வைத்துக் கொண்டோம். பின்னர் திருப்தியாக சுட்டுக் கொன்று விட்டோம். அதிலும் இந்தியர்களாகிய நாம் மிகத் தேர்ந்த நுண்மையான வன்முறையாளர்கள் என்றே கூற வேண்டும். எந்த மனிதன் பணம் பெரிதில்லை என்றும் பொருளாசைகளுக்கு அப்பால் இயற்கையுடன் வாழ வேண்டும் என்று சொன்னாரோ அவரை தாளுக்கு தாள் சிறையிலடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டோம். நாடகத்தின் இறுதியில் ஆர்த்தோ நான்கு கால்களில் தவழ்ந்து சென்று இருளில் மறைவதே சிறப்பான ஒன்று. உண்மையை அப்படி விரட்டி அடிக்கவே செய்கிறோம். அதன் பின் ஆர்த்தோ பெயோட்டி குறித்து சொல்லும் இடம் அற்புதமான ஒன்று என்றே நினைக்கிறேன். தியேட்டர் ஆஃப் குருயல்டி என்பது எழுத்தாளனும் நயநதீனியும் இரத்தத்தில் கலவி கொள்வது அல்ல. இந்த சமூகத்தின் இரும்பு தர்க்கத்தின் கரங்கள்தான். சிகுரியில் அவர்கள் தாராஉமாரவின் இசையுடன் அருந்தியது கருஞ்சூரியனின் இருதயத்தைத்தானே, வெறும் மாமிசப் பண்டத்தை அல்ல.
அன்புடன்
சக்திவேல்.
***
வணக்கம் சாரு,
ஆர்த்தோ நாடகம் வாசித்தேன். நன்றாகவே புரிந்தது. ஆர்த்தோ யாரென்று தெரியாதவர்களும் அவர் என்னவாக இருந்தார் என்பதை நாடகத்தில் காண முடிகிறது. அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு நாடகத்தின் தாக்கம் இன்னும் அதிகமாயிருக்கும். நாகரிகத்திடம் இயற்கை விடுக்கும் எச்சரிக்கையும் கெஞ்சல்களும் ஆர்த்தோவின் மூலம் ஓலமாக வெளிப்படுகிறது. வானொலி நாடகத்தில் அவர் ஓலமிடுவதைக் கேட்கவே பயமாக இருந்தது. அதனைக் கேட்டுவிட்டு உங்கள் நாடகத்தைப் படிக்கும் பொழுதும் அதே ஓலம் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது. எதை எதனுடன் சேர்த்தால் எத்தனை பேர் சாவார்கள் என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களிடம், இயற்கையிடம் சரணடையுங்கள் என்று சொல்பவனை மின்னதிர்ச்சி கொடுத்து கொல்லாமல் வேறு என்ன செய்வார்கள்?
ருராமுரி, “இப்போது மகிழ்ச்சியில் கொஞ்சம் குறைகிறது.அதனாலென்ன மகிழ்ச்சி மகிழ்ச்சி தானே “என்று கூறும்பொழுது அவன் ஆன்மா இன்னும் அவனிடம் ஒட்டிக்கொண்டிருப்பதாகவே தெரிந்தது . முன்னுரையில் அ.ராமசாமி அவர்கள் குறிப்பிட்டது போல் தமிழில் இதனைச் சோதித்துப் பார்க்கும் வாய்ப்புகள் இல்லைதான். ஸீரோ டிகிரியைப் படித்த பொழுது இந்த காலகட்டத்தில் உள்ளவர்ளே அனைவரும் அந்த நாவலை ஏற்றுக்கொள்வது சந்தேகம் என்று நினைத்தேன். வெளிவநத சமயத்தில் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாயிருக்குமோ என்று தோன்றியது. வங்காளத்திலும் மலையாளத்திலும் நாடகத்தை அரங்கேற்ற முயற்சிப்பதாக எழுதியிருந்தீர்கள். அது வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி.
த.செந்தமிழ்