போலீஸே இல்லாத ஒரு சமூகம் – அதே சமயம், அது குற்றங்களும் இல்லாத சமூகமாக இருந்தால் அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படிப்பட்ட சமூகங்களும் இந்த பூமியில் இருக்கின்றன. Liechtenstein என்ற மத்திய ஐரோப்பிய நாட்டில் போலீஸ் கிடையாது. ராணுவமும் கிடையாது. மக்கள் தொகை 40000. அதேபோல் பல ஐரோப்பிய நாடுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் கம்மி. இந்தியாவில் – அதுவும் தமிழ்நாட்டில் ஒரு தெருவுக்கு இரண்டு அலோபதி மருந்துக் கடைகள் இருக்கின்றன. யாரைக் கேட்டாலும் உடம்பு சரியில்லை என்றுதான் சொல்கிறார்கள். கடந்த ஆறு மாத காலமாக ஒரு இளைஞன் (முப்பது வயது) என்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். என்னை தினந்தோறும் காலை ஏழிலிருந்து எட்டு வரை என் வீட்டுக்கு எதிரே உள்ள இன்ஃபினிட்டி பார்க்கில் பார்க்கலாமே, வாயேன் என்றேன். ஐயோ அங்கிள், அது சாத்தியமே இல்லை, பத்து மணிக்கு மேல் சொல்லுங்கள் என்றான். ஒருநாள் மதிய உணவுக்கு ஒரு உணவு விடுதிக்கு வா என்றேன். அப்போதே எனக்கு அவன் வர மாட்டான் என்று உள்ளுணர்வு சொல்லியது. அதேபோல் வரவில்லை. காரணம், ஜுரம். எல்லா இளைஞர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். என் மகன், மருமகள் எல்லோரும். அதனால்தான் தெருவுக்கு இரண்டு அலோபதி மருந்துக் கடைகள்.
ஐரோப்பா இப்படி இல்லை. மருந்துக் கடை வேண்டுமென்றால், தேட வேண்டியிருக்கிறது. மருத்துவரிடம் நேரம் கேட்டால் ஒரு வாரம் கழித்துத்தான் நேரம் கொடுப்பார். நம்மூர் மாதிரி அனாயாசமாகப் போய் வந்து விட முடியாது. நான் பார்த்த சீலேவிலும் இப்படித்தான் இருக்கிறது. சீலேயில் 65 வயதில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதோ, நடந்தே போய் விடலாம் என்கிறார்கள். பார்த்தால் மூன்று கிலோமீட்டர் இருக்கிறது. சிகரெட் புகைத்தபடியே என்னைப் போல் மூன்று மடங்கு வேகத்தில் நடக்கிறார் அந்த அறுபத்தைந்து வயது மனிதர்.
இப்படி ஒரு ஆரோக்கியமான சமூகமாக நம் சமூகத்தையும் மாற்ற வேண்டுமானால் அதற்கு இருக்கும் ஒரே வழி யோகாதான். (அங்கெல்லாம் யோகா இல்லாமலே எப்படி அது போல் வாழ்கிறார்கள் என்று நான் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டு பிடித்த காரணங்கள், அங்கே உள்ள மாசு இல்லாத காற்று, மாசு இல்லாத தண்ணீர், கலப்படம் இல்லாத உணவு, கலப்படம் இல்லாத சுத்தமான வைன். இன்னொரு காரணம், அவர்கள் உண்ணும் அவித்த மாமிசம். இதை நாம் பேலியோ என்றும் சொல்லலாம்.) நமக்கு அதற்கெல்லாம் வழியில்லை என்பதால் யோகாதான் ஒரே வழி.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற குறிக்கோள் கொண்டவன் என்பதால் நான் இரண்டு முக்கிய நண்பர்களை இங்கே அறிமுகப்படுத்தினேன். ஒருவர், யோகா குரு சௌந்தர். மற்றொருவர், சித்த மருத்துவர் பாஸ்கரன். இவர்களை என் வாசகர்களும் நண்பர்களும் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே. இதிலும் ஒரு சின்ன ஆய்வு செய்தேன். இருபது பேர் மருத்துவர் பாஸ்கரனை அணுகினால் ஒருத்தர்தான் சௌந்தரிடம் செல்கிறார்கள்.
காரணம் என்ன தெரியுமா?
சௌந்தர் நோய் வராமல் இருக்க வழி சொல்கிறார்.
But the mankind is destined to suffer. என்ன செய்வது? யாருக்கும் சௌந்தர் மீது கவனம் இல்லை. சாருவுக்கு வேறு வேலை இல்லை? யோகா பாகா என்று சொல்லிக் கொண்டு? ஆகவே நோயை வரவழைத்துக் கொண்டு மருத்துவர் பாஸ்கரனை நோக்கி ஓடுகிறார்கள். என் கனவு என்ன தெரியுமா? மருத்துவர் பாஸ்கரனின் கனவும் அதுவாகத்தான் இருக்கும். பாஸ்கரனுக்கு வேலையே இருக்கக் கூடாது. ஆனால் அப்போதும் அவர் சும்மா இருக்க மாட்டார். வனங்களில் அலைந்து திரிந்து புதுப் புது மூலிகைகளைக் கண்டு பிடித்துக் கொண்டிருப்பார். அதுவும் மனித குலத்துக்கு நல்லதுதானே? ஆனால் நம் நாட்டில் அப்படியெல்லாம் நல்லது நடக்க விட மாட்டோம். நோயாளிகளாக இருப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதனால் மருத்துவர் பாஸ்கரனை பிஸியாகவே வைத்திருப்போம்!!!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று யோகா சௌந்தரை வட பழனியில் அவரது யோகா மையத்தில் சந்தித்தேன். க்ரியா யோகத்தின் சில அடிப்படை பிராணாயாமப் பயிற்சிகளைக் கற்பித்தார்.
இதில் எனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கிறது. உங்களால் ஒரு பதினைந்து நொடிகள் மூச்சை சாவகாசமாக உள்ளிழுக்க முடிகிறது என்றால் என்னால் முப்பது நொடிகள் உள்ளிழுக்க முடிகிறது. உங்களால் பத்து நொடிகள் வெளியே விட முடிகிறது என்றால் என்னால் இருபத்தைந்து நொடிகளில் வெளியே விட முடிகிறது. அதாவது, மூச்சை பிடித்து இழுத்து சிரமப்பட்டு பயிற்சி செய்து அல்ல. சாதாரணமாகவே, பிரக்ஞை இல்லாமலேயே, அன்றாட வாழ்வில் தற்செயலாகவே இது நடக்கிறது. சுவாசம் பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே இது நடப்பதுதான் யோகம். இது எனக்குக் கிடைத்த ஒரு வரம். இதை நான் இதற்கு முன்பான பல ஆன்மீக வகுப்புகளில் அறிந்து கொண்டேன். இது பிராணாயாம்ம் செய்வதற்கு நல்லது.
நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பாண்டா போன்ற பனிநில விலங்குகள் ஆறு மாத காலம் மரத்திலேயே ஒண்டிக் கொண்டு பிரேதம் போல் கிடக்கும். சுவாசம் இருப்பது போலவே தெரியாது. ஆனால் சுவாசம் இருக்கும். உயிரினங்களின் சுவாசம் எவ்வளவு நீண்டு இருக்கிறதோ அவ்வளவுக்கு ஆயுளும் நீளும். ஒரு பிராணி ஒரு நிமிடத்தில் எத்தனை அதிகமாக சுவாசிக்கிறதோ அத்தனைக்கு அதன் ஆயுள் கம்மி. நாயை கவனியுங்கள். தெரியும். வேகு வேகு என்று மூச்சு விடும். பத்து ஆண்டுகள்தான்.
ஒரு சராசரி மனிதருக்கு நிமிடத்தில் பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வரை சுவாசம் இருக்கும். எனக்கு ஆறுதான் இருக்கும். என்னை சந்திப்பவர்களிடம் நான் இதைக் காண்பிக்க முடியும். பல ஆண்டுகளாக தியானம் செய்து செய்து நான் முயற்சி செய்யாமலேயே பதினெட்டிலிருந்து பன்னிரண்டு ஆகி இப்போது ஆறு ஆகி விட்டது. பல யோகா ஆசிரியர்களாலேயே இதை நம்ப முடியாது. ஆனால் எனக்கு இது அதன் போக்கிலேயே சாத்தியமாகி விட்டது. பல ஆண்டுகளாக நான் செய்து வந்த தொடர்ச்சியான தியானமே காரணம். பொதுவாக யோகிகளுக்குத்தான் இப்படி இருக்கும் என்று சொல்வார்கள். சமாதி நிலையில் இருக்கும் யோகிகளுக்கு ஒரு மணி நேரத்தில் மூன்று நான்கு சுவாசம்தான் போகும், சிலருக்கு சுவாசமே இருக்காது, ஆனால் உயிர் இருக்கும் என்பார்கள்.
ஆனால் நீங்கள் யாரும் சௌந்தரிடம் செல்லாதீர்கள். Because we are destined to suffer. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவரே மிக மிக வணிகத்தனமாக யோகா சொல்லித் தரும் மையங்களில் சேர்ந்திருக்கிறார்கள். என்ன முயன்றும் என்னால் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
சரி, மருத்துவர் பாஸ்கரனிடம் வரும் ஞாயிற்றுக் கிழமை செல்லலாம் என்று இருக்கிறேன். பாஸ்கரன் சித்த மருத்துவர் என்பதால் இந்த சித்தா முறையிலும் நோயே வராமல் தடுத்துக் கொள்ளக் கூடிய பல அரிய மூலிகைகள் உள்ளன. உதாரணமாக, நாற்பது வயதிலேயே சில மூலிகைகளை உட்கொள்ள ஆரம்பித்தால் ஐம்பது அறுபது வயதில் இதய நோய் வருவதையும், அதன் விளைவான அறுவை சிகிச்சையையும் தவிர்க்கலாம். இப்போது மருத்துவர் பாஸ்கரன் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் செல்கிறார். விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.
https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA
யோகா சௌந்தரைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்களுக்கு (அப்படி யாரேனும் இருந்தால்!) அவரது தொலைபேசி எண்:
99529 65505