பெட்டியோ ஏன் தாமதம்?

பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். ஆனாலும் அதன் நாயகி நயநதினியின் கதையை எப்படி முடிப்பது என்பதில் கொஞ்சம் குழப்பமும் தயக்கமும் உள்ளது. நான் சந்தித்த மூன்று சிங்களப் பெண்களை ஒன்றாக்கி, கற்பனை கலந்து உருவாக்கியதால் இந்தக் குழப்பம். அதுவும் தவிர, அந்தோனின் ஆர்த்தோவின் தோழியான காலத் தாமஸின் (Colette Thomas) வாழ்க்கைக்கும் நயநதினிக்கும் நிரம்ப ஒற்றுமை இருந்ததால் – நயநதினி வேறு ஆர்த்தோவின் நாடகங்களை இயக்கிக் கொண்டிருப்பதால் – காலத் தாமஸின் ஒரே நாவலான The Testament of the dead Daughter ஐப் படித்து விடலாம் என்று நினைத்தேன். ஆர்த்தோ காலத்தைத் தன் மகள் என்றே குறிப்பிட்டார். காதலியைப் போய் எப்படி இவ்வாறு அழைக்கலாம் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது I am an incestuous father என்று விளையாட்டாக பதில் சொன்னார்.

நாவலை முடித்து வாசகர்களிடம் கொடுப்பதற்கு முன்னால் மேலும் சில ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்களைப் படித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர்களில் ஒருவர் Pierre Guyotat. பியர் க்யூத்தா என்று உச்சரிப்பு என நினைக்கிறேன். அவருடைய Eden, Eden, Eden என்ற நாவலைப் படித்தேன். கர்னாடக முரசு, ஜோக்கர் போன்ற சிறுகதைகளிலும் ஸீரோ டிகிரியின் சில அத்தியாயங்களிலும் நான் எழுதிய நான் – லீனியர் முறையில் நாவல் முழுவதையுமே எழுதியிருக்கிறார் பியர் க்யூத்தா. முற்றுப் புள்ளிகள் கிடையாது. வாக்கியங்கள் முடிவதில்லை.

இரண்டு சிப்பாய்கள், விழிக் குவடுகளிலிருந்து கண்கள் வெளிவந்து தொங்கிய நிலையில் ஒரு குழந்தை, தரையில் பிணங்கள், புகை மண்டலம், வெடிச் சத்தம், ஒரு பெண்ணின் கிறீச்சிட்ட ஓலம், தரையில் கிடக்கும் ஒரு புகைந்த சிகரெட்… இப்படியே இருநூறு பக்கங்கள்.

ஆனால் பியர் க்யூத்தாவின் Tomb for 500000 Soldiers என்ற 400 பக்க நாவல் அப்படி இல்லை. பியர் க்யூத்தாவை ஃப்ரெஞ்ச் விமர்சகர்கள் மார்க்கி தெ ஸாத், அந்தோனின் ஆர்த்தோ, ஜார்ஜ் பத்தாய், ஜான் ஜெனே ஆகிய நால்வரோடும் ஒப்பிடுகிறார்கள். ஃப்ரெஞ்ச் மொழியின் ஆகச் சிறந்த ட்ரான்ஸ்கிரெஸிவ் எழுத்தாளர் பியர் க்யூத்தா என்கிறார் ரொலாந் பார்த்.

தான் வாழும் காலத்திலும் இப்போதும் பியர் க்யூத்தா ஒரு cult figureஆகவே இருந்திருக்கிறார். 2020இல் தன் எண்பதாவது வயதில் இறந்தார். இளம் வயதில் கடுமையாகப் பட்டினி கிடந்திருக்கிறார். அவருடைய ஏதன், ஏதன், ஏதன் நாவல் சிறார்களுக்கு விற்பதைத் தடை செய்த போது கீழ்க்கண்ட அத்தனை பேரும் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்துக்கு அந்தத் தடையை நீக்கச் சொல்லி விண்ணப்பம் கொடுத்தார்கள். யார் யார் என்று பாருங்கள். இத்தனைக்கும் நாவலைத் தடை செய்யவில்லை. பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்கக் கூடாது என்று தடை போட்டதற்கே இந்த நிலை.
Pier Paolo PasoliniJean-Paul SartrePierre BoulezJoseph BeuysPierre DacJean GenetSimone de BeauvoirJoseph KesselMaurice BlanchotMax ErnstItalo CalvinoJacques Monod, and Nathalie SarrauteFrançois Mitterrand, and Georges Pompidou 

பின்னாளில் ஃப்ரெஞ்ச் அதிபராக ஆன மித்தராந் பெயரும் பட்டியலில் இருப்பதை கவனியுங்கள். பிறகு மித்தராந் அதிபராக ஆன பிறகு முதல் வேலையாக அந்தத் தடையை நீக்கினார். ஆனால் தமிழ்நாட்டு நிலைமையை யோசியுங்கள். இங்கே அரசாங்கத்துக்கு எப்படிப்பட்ட விஷயத்துக்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று ஒப்பிட்டுப் பாருங்கள்!

பியர் க்யூத்தாவைப் படித்தால் அவர் தன்னுடைய குரு லூயிஸ் புனுவேல் என்கிறார். அதிலும் The Young and the Damned என்ற படம்தான் ”ஐந்து லட்சம் சிப்பாய்களுக்கான சமாதி” நாவலுக்கான உந்துதல் என்கிறார். இலக்கியத்தை விட சினிமாவே தன் எழுத்துக்கு அதிகம் உதவியாக இருப்பதாகச் சொல்கிறார்.

ஆக, இப்போது நான் புனுவேலின் மேற்படி படத்தைப் பார்க்க வேண்டும். இப்படியாக ஒன்று தொட்டு ஒன்று போய்க் கொண்டே இருக்கிறது. பெட்டியோ – மிக நீண்ட காலமாக போர் நடந்த பூமியின் கதை என்பதால் இந்த முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பல ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதியது போல் பெட்டியோ போர் பற்றிய நாவலாக இருக்காது. போரின் பதிவுகள் சில இடம் பெறும். அவ்வளவுதான். சமகால வாழ்வும் போரின் நினைவுகளும் கலந்து இருக்கும் என்று சொல்லலாம். மட்டும் அல்லாமல் எந்த ஒரு சார்பும் இல்லாத படைப்பாக இருக்கும். அதனாலேயே இரு சாராராலும் தாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.

நாவலின் சில அத்தியாயங்களைப் படித்தவர்கள் ஸீரோ டிகிரி போல் இருப்பதாகச் சொன்னார்கள். முக்கியமான இரண்டு பேரிடம் (சீனி, காயத்ரி) நாவலை முழுமையாக முடித்து விட்டுக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். அதேபோல் பெட்டியோவின் சம்பவங்கள் பலவற்றை என்னோடு நேரில் அனுபவம் கொண்ட அனோஜன் மற்றும் ப்ரஸாந்த்தும் படித்துப் பார்க்க வேண்டும். ஆக, இந்த நால்வரும் படித்து, நால்வரோடும் விவாதித்து விட்டுத்தான் நாவல் என்.எஃப்.டி.யில் வெளிவரும். இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என நினைக்கிறேன். நாவலை பிடிஎஃப்பாக அனுப்ப இயலாது. அது என்.எஃப்.டி.யின் விதிகளுக்குப் புறம்பானது.

பாரிஸில் வசிக்கும் என்னுடைய இரண்டு நண்பர்கள் இன்று பொம்ப்பிதூ நூலகம் சென்று காலத் தாமஸின் நாவலைக் கேட்டிருக்கிறார்கள். பொம்ப்பிதூ பணியாளர்கள் நூல் பட்டியலில் பார்த்து விட்டு இல்லை என்று சொல்லி விட்டார்களாம். அந்த நாவல் கடைகளில் கிடைக்கும் வாய்ப்பே இல்லை. லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் நூலகத்தில் இருக்கிறது. ஆனால் பொம்ப்பிதூவில் எப்படி இல்லாமல் போகும் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.