அன்பின் சாரு,
”அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்” நான் வாசிக்கும் முதல் நாடகம். கொஞ்சங்கொஞ்சமாக அந்த நாடகம் என்னை அப்படியே இழுத்துக் கொண்டது. என்ன அற்புதமான மொழி. எழுதும்போது நீங்கள் அடைந்த அந்தப் பித்துநிலைக்கு நானும் சென்று விட்டேன். ஆர்த்தோவின் கையிலிருக்கும் செங்கோல் என்பதே எனக்குப் பிடிக்கிறது. இயேசுவின் கையிலிருந்த தடி….” உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும்” என்பது தாவீதின் சங்கீதம் அல்லவா! ஆம், அது தீமைகளைத் தாக்கும். தன்னை நம்பியவனைத் தேற்றும். இங்குள்ள அத்தனை நடைமுறைகளையும் அடிக்க எண்ணுகிறது. உடைக்கப்படுகிறது. சாரு, நான் இதுவரை பின்நவீனத்துவ நாடகம் எதையும் வாசித்ததில்லை. நீங்கள் சொல்லும் பல உலக இலக்கியங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் தமிழில் சங்கப்பாடல்கள் தொடங்கி இன்றைய தீவிர எழுத்துக்கள் வரை நிறைய வாசித்திருக்கிறேன். இந்த ஆர்த்தோ எனக்கு மிகவும் நெருக்கமானவராகி விட்டார்.’
ஒரே நாடகத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பிய – இந்திய மத நம்பிக்கைகளையும் பழங்குடி மரபுகளையும் தொன்மங்களையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். நான் கிறித்துவப் பின்புலத்தில் என் பெற்றோரின் பணி காரணமாக மலைப்பகுதியில் பிறந்து வளர்ந்தவள். ஆகவே பழங்குடிகளின் அத்தனை வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் நேசிப்பவள். தனிப்பட்ட முறையில் இப்படைப்பு அதனாலேயே எனக்கு அணுக்கமாகிறது.
நாகரிக வளர்ச்சி அழித்த மரபுகளையும் நம்பிக்கைகளையும் இன்றளவும் நான் நம்புகிறேன். இயற்கையும் மரங்களும் சூழ்ந்த இடங்களில் அலைந்து திரிந்த பால்யம் என்னுடையது. ஏரிகளில் நீராடும் கன்னிமார்களையும் மரங்களில் தொங்கும் காட்டு முனிகளையும் புற்றுகளில் வீற்றிருக்கும் பச்சையம்மாக்களையும் பார்த்தவள் நான். பழங்குடிகளின் பித்து நிலைகளையும் குணங்களையும் அருமையாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
“நோய்மையில்தான் மனிதன் தன் ஆன்ம பலத்தை அனுபவம் கொள்கிறான்” என்று ஆர்த்தோ சொல்வது எத்தனை நிஜம். ருராமுரிகள் பற்றி அவர்கள் எத்தனை தூரத்தையும் வெறுங்கால்களில் ஓடிக் கடப்பதையும் அவர்களை மதமாற்றம் செய்ய முடியாததையும் சொல்கிறீர்கள். இதனை வாசிக்கையில் திகைத்து விட்டேன். ஆமாம், இதை நான் உணர்ந்து பலருக்கு சொல்ல நினைத்து சரியாக சொல்லத் தெரியாமல் விட்டிருக்கிறேன். வீடு கூடத் தேவையற்ற பழங்குடி வாழ்வு எப்போதும் அழகான நினைவு. இயற்கையைத் தொழும் பரவசத்தை ஐரோப்பா இழந்துவிட்டது. எத்தனை சத்தியமான வார்த்தை.
நான் வாழ விரும்பிய, கனவு கண்ட அத்தனை எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் கொண்ட அற்புதமான படைப்பு இந்த நாடகம். உங்கள் மொழி நடை அளிக்கும் பரவசம் அருமையானது. இன்னொரு விஷயம், எங்கள் கிராமத்தில் காட்டு முனீஸ்வரனுக்கு கூழ் ஊற்றுகிறார்கள். வட மாவட்டங்களில் ஆடி மாதங்களில் இதை சிறப்பாகச் செய்வது பழக்கம். அதற்காக வந்த இடத்தில் உடுக்கையும் பம்பையும் அடித்து பூசாரிகளின் பாடல்களும் ஆட்டங்களுமான பின்னணியில் வேம்பும் அரசும் பிணைந்து வளர்ந்த கெங்கையம்மன் மரத்தடியில் அமர்ந்து இந்நாடகத்தை முழுவதும் வாசித்தேன். அதுவே எனக்குப் பரவசமாக இருந்தது.
நீங்கள் இப்படைப்பினை எனக்காக அனுப்பியது என் வாழ்வின் மகிழ்வுகளில் ஒன்று. பின்நவீனத்துவ நாடகம் என்று நீங்கள் எழுதியதால் எனக்கு அதை வாசிக்க இயலுமா என்று சந்தேகமாக இருந்தது. அதனால்தான் உங்களுக்குப் பணம் அனுப்பி படைப்பினைப் பெறவில்லை. ஆனால் ஒரே வாசிப்பில் முடித்து விட்டேன். எழுதுவதில் நான் கொஞ்சம் சோம்பேறி. அதனால் தாமதமாகிவிட்டது. மிக்க நன்றி சாரு.
அன்புடன்
மோனிகா.