சொல் பேச்சு

ரொம்ப காலமாக என் அறையில் மின்விசிறி வேலை செய்யவில்லை. ஏசி இருந்ததால் மின்விசிறியின் தேவையில்லாமல் இருந்தது. அதற்காக காலையிலிருந்தேவா ஏசியைப் போட்டுக் கொண்டிருக்க முடியும்? ஒருவழியாக நேற்று புதிய மின்விசிறி மாட்டப்பட்டது. அப்போது எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேனேஜர் மின்விசிறி மாட்டுவதை மேற்பார்வை இடுவதற்காக வந்தவர், அறையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு பிரமிப்புடன் “இத்தனை புத்தகங்களையுமா சார் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். தேவையானதை எடுத்துப் படிப்பேன் என்றேன். அவருக்கு என் பதில் புரியவில்லை.

”நான் இதுவரை ஒரு புத்தகம் கூடப் படித்ததில்லை. குமுதத்தை எடுத்துப் படித்தால் கூட உடனடியாகத் தூக்கம் வந்து விடுகிறது” என்றார். இப்படித்தானே எட்டரை கோடித் தமிழர்களும் சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்குத் தோன்றிய ஒன்றை அவரிடம் சொல்லாமல் உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. பலருக்கும் புத்தகத்தை எடுத்தால் தூக்கம் வருகிறது. எனக்கோ இலக்கியம் அறியாத மனிதர்களோடு பேசினால் மயக்கமே வருகிறது.

இதற்குத் தொடர்புள்ள இன்னொரு விஷயம். நான் மனிதர்களோடும் உறவாட வேண்டியிருப்பதால் அதில் ஏற்படும் சிக்கலான விஷயங்களில் முடிவு எடுக்க முடியாமல் போகும்போது என் நண்பர்கள் எக்ஸையும் ஒய்யையும் அழைத்துக் கேட்பேன். என் கருத்தும் எக்ஸ் கருத்தும் ஒத்துப் போனால் அதைச் செய்வேன். ஆனால் எப்போதுமே எக்ஸ் கருத்தும் ஒய் கருத்தும்தான் ஒத்துப் போவதைக் கண்டிருக்கிறேன். இன்றும் இருவரிடமும் ஒரு விஷயம் கேட்டேன். அவர்கள் இருவரின் கருத்தும் ஒத்து இருந்தது. என் கருத்து வேறாக இருந்தது. அவர்கள் சொன்னபடியே செய்து விட்டேன். ஆனால் இன்னொரு நூதனமான விஷயமும் இருக்கிறது. நான் சொல்லி கருத்துக் கேட்கும் விஷயங்களில்தான் இருவரின் கருத்தும் ஒத்து இருக்கிறதே ஒழிய, பொது விஷயங்களில் அவர்கள் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருப்பதையே கவனித்து வருகிறேன்.

”சரி, ஏன் இப்படியெல்லாம் அடுத்தவர்களைக் கேட்க வேண்டும்? சொந்த மூளை இல்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்வி. ஏற்கனவே சொன்னேனே, மனிதர்கள் சம்பந்தமான விஷயங்களில் எனக்கு மூளை வேலை செய்யாது. அப்படியே செய்ய வைத்து செயல்படுத்தினாலும் நான் படுகுழியில் விழுவதையே பார்த்திருக்கிறேன். என் நண்பர்கள்தான் அப்படியெல்லாம் நடக்காமல் என்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். எழுதுவதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களுமே எனக்குக் கொடும் வன மிருகங்கள் உலவும் இருள் உலகில் நடப்பது போல்தான் இருக்கின்றன.

***

”கோவா பயணம் பற்றியும் எழுதவில்லை. இப்போது கூர்க், ஸ்ரீரங்கப்பட்டணம், பெங்களூர் பயணம் பற்றியும் எழுதவில்லை. சீனியோடு எங்கே போனாலும் அது பற்றி நீங்கள் எழுதுவதில்லை” என்றார் வினித். சீனியும் ஆமோதித்துச் சிரித்தார்.

கோவா பயணம் பற்றி கோவா நடனம் என்று ஒரு குறுநாவல் எழுதி வைத்திருக்கிறேன். அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கூர்க் பயணம் பற்றி எழுத வேண்டும். ஆனால் இது எல்லாவற்றையும் விட பெட்டியோ நாவல் முக்கியமாகத் தோன்றுகிறது. அதனால்தான் இந்த வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறேன்.

போகிற போக்கில் அடித்து விடக் கூடாது. சீனியோடு சென்ற இலங்கைப் பயணம் பற்றி 500 பக்கத்தில் ஒரு நாவலே எழுதி விட்டேன். அப்புறம் என்ன?

பெட்டியோ நாவலை வைரத்தைப் போல் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். முந்தாநாள் இரவு இரண்டு மணி வரை பெட்டியோ வேலைதான் போயிற்று.

பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்க பணம் சேர்த்துக் கொள்ளுங்கள். என்.எஃப்.டி.யில் விற்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் சூழல் என்னை அந்த நிலையை நோக்கித்தான் தள்ளுகிறது. என்னுடைய எழுபது புத்தகங்கள் விற்பனையில் இருக்கின்றன. ஆனாலும் என் ராயல்டி ஒன்றரை லட்சம்தான் என்கிறபோது நான் என்ன செய்ய முடியும்? பதிப்பகமும் எந்த ஊரில் புத்தக விழா நடந்தாலும் அங்கே எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தூக்கிக் கொண்டுதான் போகிறார்கள். ஆனால் எட்டரை கோடி ஜனக் கூட்டத்தில் 200 பிரதிகள்தான் விற்கும் என்றால் ஒன்றரை லட்சம்தான் ராயல்டி வரும். இது பற்றி ஒரு கன்னட எழுத்தாளரிடம் சொன்ன போது மாதா மாதமா என்றார். அவர் கணக்கு என்னவென்றால், எழுபது புத்தகங்கள் ஆயிற்றே என்பது. இல்லிங்க, ஒரு ஆண்டுக்கான ராயல்டி என்றேன்.

இதுவரை ஐந்து முறை அமெரிக்க வீசா மறுக்கப்பட்ட ஒரே தமிழ் எழுத்தாளன் நான் தான். என் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பதே காரணம்.

ஒருமுறை கனடா வீசா மறுக்கப்பட்டேன். வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பதே காரணம்.

ஒருமுறை பிரிட்டிஷ் வீசா மறுக்கப்பட்டேன். அப்போதும் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்றே சொன்னார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் – கெட்ட கேடு, ஜெர்மன் வீசா மறுக்கப்பட்டேன். போதிய பணம் இல்லை என்பதே காரணமாகச் சொல்லப்பட்டது.

இலங்கை, தாய்லாந்து போன்ற ஏழை நாடுகளுக்குத்தான் போய் வர முடிகிறது.

இன்னொரு விஷயம். ஜெயிலர் படத்தின் ஆயுள் ஒரு மாதம். அடுத்த ஆண்டு மீண்டும் வெளியிட்டால் பத்து பேர் கூட போக மாட்டார்கள். ஆனால் என்.எஃப்.டி.யில் என் நாவல் வந்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட – என் காலத்துக்குப் பிறகும் கூட – அதன் மதிப்பு பெருகித்தான் இருக்குமே ஒழிய குறையாது. என்.எஃப்.டி.யில் ஒரு புத்தகம் வாங்குவது ஒரு இடத்தில் நிலம் வாங்குவதைப் போல. நண்பர் சொன்னார், ஜெயிலர் படத்துக்குப் போன போது அவர் வாங்கிய பாப்கார்னும், கோக்கும் ஆயிரம் ரூபாய் ஆயிற்று என்று. அப்படிப்பட்ட நிலையில் ஒரு சொத்து வாங்குவதைப் போல இந்த பெட்டியோ என்ற நாவலை என்.எஃப்.டி.யில் வாங்குங்கள். என்.எஃப்.டி.யில் வெளிவந்தால் நாவல் பிறகு ஒருபோதும் அச்சில் கிடைக்காது.

இப்போதும் சொல்கிறேன், பெட்டியோ நாவல் ஒரு லட்சம் பிரதி அச்சில் விற்றால் என்.எஃப்.டி. பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டேன். அச்சில் அது ஆயிரம் பிரதிதான் விற்கும். ஒரு பிரதிக்கு எனக்கு நாற்பது ரூபாய் ராயல்டி என்றால், நாற்பதாயிரம் ரூபாய். அண்ணா சாலையில் பழைய சாந்தி தியேட்டர் எதிரே உள்ள சுரங்க நடைபாதையில் அமர்ந்திருக்கும் நாற்பது வயது பாலியல் தொழிலாளியின் மாத ஊதியமே இதை விட அதிகம். அதனால்தான் என்.எஃப்.டி. ஒரு ஆண்டு கூட பணம் சேமித்து பெட்டியோவை வாங்குங்கள். நூறு பிரதிதான் என்.எஃப்.டி.யில் வெளியிடுகிறேன். அதோடு சரி. இன்னும் ஒரு மாதத்தில் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன்.

இதற்கிடையில் வரும் டிசம்பர் மாதம் சீலே, மெக்ஸிகோ, கூபா ஆகிய மூன்று நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாவும் அந்தப் பயணத்துக்கான பணம்தான்.

வாசகர்கள் அனுப்பிய சந்தாப் பணம் 25 லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். அத்தனையும் அவ்ட்ஸைடர் ஆவணப்படத்தில் செலவாயிற்று. தெண்டச் செலவு இல்லை. கோவையில் படத்தைப் பார்த்த அத்தனை பேரும் அது ஒரு ஹாலிவுட் த்ரில்லர் போல் இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு தமிழ் எழுத்தாளனைப் பற்றிய ஆவணப் படம். அதன் முழு வடிவம் ஆறு அல்லது ஏழு மணி நேரம் செல்லும். அதன் மற்றொரு வடிவம் ஒன்றரை மணி நேரப் படமாக இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வந்து சேரும். இன்னும் சில காட்சிகள் சேர்க்க வேண்டியிருக்கிறது. ஆக, புதுமைப்பித்தனைப் போல படம் எடுத்து போண்டியாகவில்லை. எல்லாம் பெரும் கலைப் பொக்கிஷங்களாக சேகரமாகிக் கைவசம் இருக்கின்றன.