பத்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். ரஜினிகாந்தின் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். அது எனக்கு ரஜினி பற்றிய முக்கியமான ஒரு அவதானமாகத் தோன்றியது. ”பணக்காரர்கள் மீது ரஜினிக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு.” ஏனென்றால், பணம் சம்பாதிப்பதுதான் மிகவும் கடினமாக காரியம். அதை ஒருவர் சாதித்திருக்கிறார் என்றால், அவர் நம் மரியாதைக்கு உரியவரே. எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் மரியாதைக்கு உரியவர்களே என்றாலும் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் திறமை இல்லை. ஆகவே ரஜினியின் மரியாதைக்கு உரியவர் பட்டியலில் எந்த எழுத்தாளரும் வர மாட்டார், ஜெயமோகன் உட்பட. ஆனால் ஜெ.விடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் மூன்று இருக்கிறது என்றால், ஜெ.வும் ரஜினியின் மரியாதைக்குரியோர் பட்டியலில் வருவார். மற்றபடி ஒரு எழுத்தாளர் புதுமைப்பித்தன் ரேஞ்ஜில் இருந்தாலும் அவர்தான் ரஜினியைத் தேடிப் போக வேண்டும். ரஜினி அவரைத் தேடிப் போக மாட்டார். அதே சமயம், ஆன்மீக ரீதியான அதிகாரம் இருந்தாலும் அவரைத் தேடி அவர்கள் இருப்பிடத்துக்குச் செல்வார். யாகவா முனிவரைத் தேடி ரஜினி சென்றது அப்படித்தான்.
இது ஒரு பஸ் கண்டக்டர் மனோபாவம். இதில் தப்பே இல்லை. ரஜினி கோடீஸ்வரர் ஆகி, பெரிய சூப்பர் ஸ்டார் ஆன பிறகும் கூட தன் கண்டக்டர் மனோபாவத்தை விடவில்லை என்பது பாராட்டுதலுக்கு உரிய விஷயம்தான்.
அந்த வகையில் ரஜினி 51 வயது ஆன யோகியின் காலில் விழுந்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவில் காவிக்கு உரிய மரியாதை அது. ஆனால் திருவண்ணாமலையில் ஆயிரம் காவிகள் அலைந்து கொண்டிருக்கின்றன. அங்கே போய் ரஜினி யார் காலிலும் விழ மாட்டார். காவியோடு அதிகாரமும் கலந்து இருக்க வேண்டும்.
யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு நோபல் விருது கிடைத்தால், ரஜினி என் வீட்டுக்கு வந்து பாராட்டக் கூடும். அதுதான் அதிகாரம்.
ரஜினியின் நடிப்பு பற்றி நான் கொடுத்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதும் எப்போதும் என் கருத்து அஃதே. அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.