சீனி அக்டோபர் மாதம் இமயமலை செல்கிறார். ஒரு மாதம். தினமும் கங்கையில் குளியல் போடலாம். நோ தண்ணி, நோ சிகரெட், நோ நான்வெஜ், நோ ஃபோன். உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று இருந்தேன், சொன்னால் நீங்களும் வருவீர்கள், அப்படி வந்தால் அது ஒரு நாவலாகி விடும். அப்புறம் அது உண்மையான ரெட்ரீட்டாக இருக்காது என்றார்.
ஆஹா, எப்போதுமே விஷயங்களை மிகச் சரியாக அனுமானிக்கக் கூடியவர் இந்த முறை சறுக்கி விட்டாரே என்று நினைத்தேன். ஏனென்றால், அம்மாதிரி ரெட்ரீட்டுக்கு நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் வர மாட்டேன். ஏனென்றால், நான் ஏற்கனவே அப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? என்ன, என் அறையில் கங்கை, இமயமலை எல்லாம் கிடையாதே தவிர மற்றபடி ஒரு ரிஷிகேஷின் வாழ்க்கைதானே எனக்கு என்னுடைய இந்தச் சிறிய அறையில்?
இங்கே நான் வைன் அருந்த முடியாது. வேப் அடிக்க முடியாது. இப்போதெல்லாம் வீட்டில் அசைவம் செய்வதே இல்லை. அவந்திகா அதிலிருந்தெல்லாம் ஓய்வு பெற்று விட்டாள். அதற்கெல்லாம் அவளுக்கு இனி தெம்பு இல்லை. நான் வெளியில் வாங்கிச் சாப்பிடும் அசைவத்தை அசைவத்திலேயே சேர்த்துக் கொள்ள முடியாது. நான் வாழும் இந்த அறையிலிருந்து ஃபோன் பேசவும் முடியாது. யாரோடும் பேச முடியாது. சென்ற வாரம் ஒருநாள் சீனியோடு அவசரமாகப் பேசிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு முக்கிய விஷயம். அப்போது என் அறைப் பக்கம் வந்த அவந்திகா யாரோடு பேசுகிறாய் என்றாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேஷ் என்றேன். பொய் என்பது சுவாசம் மாதிரி ஆகி விட்டதை எண்ணி நானே பயந்து போய் விட்டேன். எனக்கோ பொய் ஆகாது. அதனால் ஃபோனே பேசுவதில்லை.
காலையில் நான் நடைப் பயிற்சிக்குச் செல்லும் ஏழு மணியிலிருந்து எட்டு வரைதான் ஃபோன் பேச முடியும். ஆனால் அந்த நேரத்தில் என் ஆண் நண்பர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். பெண்கள் யோகாவில் சேர்ந்து விட்டார்கள். அதனால் ஃபோனும் வாழ்க்கையில் இல்லை.
தொலைக்காட்சி இல்லை, செய்தித்தாள் இல்லை, நண்பர்கள் இல்லை, வெளியுலகத் தொடர்பே இல்லை. கடை கண்ணிகளுக்கும் செல்வதில்லை. அதை இந்தக் குடியிருப்பின் மேனேஜர் பார்த்துக் கொள்கிறார்.
காலை எட்டரையிலிருந்து இரவு பத்தரை வரை எழுத்தும் படிப்பும் மட்டுமே என் வாழ்க்கை. இசை கூட இல்லை. நான் கேட்கும் இசை அவந்திகாவுக்குப் பிடிக்காது.
இப்படி வாழும் ஒருவன் ஏன் ரெட்ரீட் என்று திரும்பவும் அதே மாதிரியான வாழ்க்கையை நோக்கிச் செல்ல வேண்டும்?
சீனி இப்போது வாழ்வது போல் நான் ஒருநாள் வாழ்ந்தால் நான் குணப்படுத்தவே முடியாத பைத்தியமாகி விடுவேன்.
சீனி ஒரு நாளில் பேசும் வார்த்தைகளை நான் ஒருநாளில் பேசினாலும் கூட நான் குணப்படுத்தவே முடியாத பைத்தியமாகி விடுவேன். நாள் பூராவும் பேசிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அவர் வேலை அப்படி. அதுவும் எப்படிப்பட்ட பேச்சு என்றால், ”சார், இன்று வகுப்பு எடுக்க வேண்டிய கிருத்திகா திடீரென்று லீவு போட்டு விட்டார், மாணவர்களெல்லாம் வந்து விட்டார்கள், என்ன செய்யலாம் சார்?” இதேபோல் ஒரு நாளில் நூறு வித்தியாசமான கேள்விகள், நூறு வெவ்வேறு பிரச்சினைகள். இவ்வளவையும் சீனிதான் தீர்த்து வைக்க வேண்டும்.
காலையில் எழுந்த உடனேயே அவர் டீக்கடைக்குக் கீழே போக வேண்டும். அங்கேயே ஆரம்பித்து விட்டது மனிதர்களுடனான அவர் உறவு.
நானோ மனித முகங்களையே பார்க்காமல், மனிதக் குரல்களையே கேட்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு எப்படிப்பட்ட ரெட்ரீட் தேவை தெரியுமா?
எனக்குத் தேவை சப்தம். எனக்குத் தேவை வைன். எனக்குத் தேவை கூட்டம். எனக்குத் தேவை நடனம். இப்படி:
இதை செவிகளைக் கிழிக்கும் சப்தத்தில், உச்ச ஸ்தாயியில் வைத்துக் கேட்க வேண்டும்.
ஆனால் ரிஷிகேஷில் சீனியும் நானும் சந்திக்க ஒரு வழி இருக்கிறது. அவருடைய ரெட்ரீட் ஒரு மாதம் முடிந்த பிறகு நான் அங்கே சென்று ஒரு வாரம் தங்கலாம். ம்ஹும், ரிஷிகேஷ் புனித பூமி. அங்கே வைனும் அசைவமும் தடை செய்யப்பட்டவை. அதனால் ரிஷிகேஷிலிருந்து நாற்பதே கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டேராடூன் போய் விடலாம். அங்கேதான் என் நண்பர் ஆலன் ஸீலி வசிக்கிறார். டேராடூனில் இந்தியாவின் மிகச் சிறந்த டான்ஸ் பார்களும் பப்களும் உள்ளன. குறிப்பாக, டேராடூனின் ஹேப்பனிங் ப்ளேஸான ஹாத்திபர்க்கலாவில் க்யூபி லௌஞ்ச், தெ க்ரேட் இண்டியன் பப் என்று ஏராளமான பப்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியக் குடும்பங்களின் இளைஞர்கள் இந்த பப்களில்தான் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இமயத்துக்கு இமயம். வைனுக்கு வைன். நடனத்துக்கு நடனம்.