ஏற்கனவே இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். கொஞ்சமாக. இப்போதும் கொஞ்சம்தான் எழுதுவேன். இவரைத்தான் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் உச்சம் என்கிறார்கள். எனக்குமே அப்படித்தான் தோன்றுகிறது. இவரை ஓரளவு நெருங்கக் கூடியவர்கள் என நான்கு பேரைச் சொல்கிறார்கள். அந்தோனின் ஆர்த்தோ, ஜெனே, ஜார்ஜ் பத்தாய், மார்க்கி தெ ஸாத். இவர்களும் ஓரளவுக்குத்தான் அவரை நெருங்கக் கூடியவர்கள். அவரைத் தாண்டியவர்கள் அல்ல.
அல்ஜீரியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை அடக்குவதற்காக ஃப்ரான்ஸ் அனுப்பிய ராணுவத்தில் பணியாற்றினார். ஆனால் அல்ஜீரிய சுதந்திரப் போராட்ட்த்தை ஆதரித்ததன் காரணமாக ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இவர் ஃப்ரான்ஸ் திரும்பி வந்து கடுமையான பட்டினியிலும் வறுமையிலும் உழன்றார்.
Pierre Guyotat. 1940 – 2020. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்தான் தன் எண்பதாவது வயதில் காலமாகியிருக்கிறார். இவருடைய Eden, Eden, Eden என்ற நாவல் போல் உலக இலக்கியத்தில் வேறு இரண்டு நாவல்களே உண்டு. ஸீரோ டிகிரி, ரொனால்ட் சுகேனிக் எழுதிய 98.6. ஸீரோ டிகிரியை எழுதிய போது எனக்கு பியர் க்யூத்தாவின் பெயர் கூடத் தெரியாது. தெரிந்தது இப்போது ஆர்த்தோவை முழுமையாக வாசிக்க நேர்ந்த போதுதான்.
பெட்டியோ நாவலை முடித்து விட்டேன். என்.எஃப்.டி.யில் கொடுத்து விடலாம். ஆனால் ஒரே ஒரு காரணத்துக்காக அதை இன்னும் வெளியே விடவில்லை.
காரணம்?
பியர் க்யூத்தா தன் அல்ஜீரிய போர் அனுபவங்களை வைத்து 500000 சிப்பாய்களுக்கான கல்லறை என்று ஒரு நாவலை எழுதினார். அதை எழுதிக் கொண்டிருக்கும்போதே “உலக நாவல் இலக்கியத்தையே இந்த நாவல் அடித்து நொறுக்கித் தள்ளப் போகிறது” என்று அறிவித்தார். நாவல் 1967 இறுதியில் வெளிவந்தது. அவர் சொன்னது போலவே அப்படி ஒரு நாவல் உலக இலக்கியத்திலேயே வந்ததில்லை என்று எல்லா விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. 1968 மே மாதம் பாரிஸில் நடந்த மாணவர் புரட்சியின் போது 500000 சிப்பாய்களுக்கான கல்லறை நாவலிலிருந்தே மேற்கோள்கள் எடுக்கப்பட்டு பாரிஸ் நகரின் சுவர்களில் graffiti யாக எழுதப்பட்டன. அந்தக் கிறுக்கல்கள் உலகம் பூராவும் பரவின என்பது வரலாறு.
ஃப்ரான்ஸில் இலக்கியவாதிகளின் இடம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.
பெட்டியோ நாவலைப் பற்றியும் நான் அப்படிச் சொல்லலாம். பெட்டியோவைப் போல் இதுவரையில் உலக இலக்கியத்தில் ஒரு நாவல் எழுதப்பட்டதில்லை. பியர் க்யூத்தாவின் கல்லறையையும் சேர்த்தே சொல்கிறேன். காரணம், கல்லறை நாவலில் குரூரமும், வன்முறையும், மொழியின் சிதைவும், நிணமும் விந்துவும் மட்டுமே இருக்கும். பெட்டியோவில் இது எல்லாவற்றுடன் கூட வாழ்வின் தர்சனமும் காமத்தின் பேரழகும் இருக்கும்.
காரணம், மேற்குலகின் சிதைவுண்ட மனம் கிறித்தவத்தின் பாவம் என்ற கருதுகோளிலிருந்து உருவாகிறது. ஆன்மீகம் அறிமுகப்படுத்திய குற்றவுணர்விலிருந்தான விடுதலையை ஆன்மீகம்தான் கொடுக்க வேண்டும். ஆனால் இலக்கியவாதிகளோ அந்தத் திசைப்பக்கமே செல்ல மாட்டார்கள். ஆகவே கடவுளால் கைவிடப்பட்ட மேற்கத்திய எழுத்தாளர்களும் கலைஞர்களும் போர்க்களங்களிலேயே நிராயுதபாணிகளாய் நிற்கிறார்கள். அவர்களின் கதறலும் ஓலமுமே அவர்களின் எழுத்தும் ஓவியங்களுமாக நமக்குக் கிடைக்கின்றன.
பியர் க்யூத்தாவின் நெருங்கிய உறவினர் ஹிட்லரின் நாஜிப் படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பெர்லினுக்கு அருகில் உள்ள ஷாஸன்ஹாஸன் வதைமுகாமில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். 1990இல் பியர் க்யூத்தா இந்த வதைமுகாமுக்குச் செல்கிறார். (இதே வதைமுகாமுக்கு நான் 2000இல் சென்றேன்.) அங்கே தன் உறவினர் கொல்லப்பட்ட அறையிலிருந்து ஒரு கல்லைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகிறார் பியர் க்யூத்தா.
அந்தக் கல்லைப் போன்றதுதான் மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்தும் கலையும். ஆயிரமாயிரம் மனிதர்களின் குருதி படிந்து நம் முன்னே கிடக்கிறது மேற்கத்திய இலக்கியம்.
கீழைத்தேச எழுத்தாளனுக்கு எழுத்து அப்படி வந்தது அல்ல. இங்கே வன்முறையோடு வாழ்வில் கொண்டாட்டமும் கலந்தே கிடக்கிறது. இந்திய மண்ணின் இயல்பு அது. அதனால்தான் துயரத்தை ரசிக்கும் மேற்கத்தியர்களுக்கு என் எழுத்து அத்தனை உவப்பாக இருப்பதில்லை.
நான் இப்போது ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பைச் சொல்லப் போகிறேன். கவனியுங்கள். மேற்கத்தியராக இருந்தாலும் சரி, கீழை தேசத்திய வாசகராக இருந்தாலும் சரி, யாவருக்கும் அடுத்தவரின் கண்ணீரை, அடுத்தவரின் வாதையை வாசிப்பதற்கே பிடித்திருக்கிறது. அடுத்தவரின் வாதைதான் பிரதியின் இன்பமாகத் திகழ்கிறது. ஆக, வாசிப்பு என்பது ஒரு sadistic act ஆகவே உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அதன் காரணமாகவே ஃப்ரான்ஸில் எழுதப்படும் அகதி இலக்கியம் (ஃப்ராங்கஃபோன் இலக்கியம்) அங்கே கொண்டாடப்படுகிறது. உதாரணம், தாஹர் பென் ஜெலோன், ஷோபா சக்தி. இலங்கையிலிருந்து இன்னும் ஒருவர் ஷெஹான் கருணதிலகா. புக்கர் விருது பெற்றவர். இவர்கள் அனைவருமே போரின் வடுக்களை எழுதுபவர்கள். அதனாலேயே இவர்களது எழுத்து சிலாகிக்கப்படுகிறது. அதாவது, அடுத்தவரின் வாதை வாசிப்பவரின் வாசிப்பு இன்பம்.
சமீபத்தில் நான் எழுதிய அந்தோனின் ஆர்த்தோ நாடகம் ஏன் எல்லோரையும் கவர்ந்தது என்றால், அதில் அந்தக் கலைஞனுக்கு ஐம்பத்தோரு மின்னதிர்ச்சி கொடுக்கப்படுகிறது. ஆர்த்தோவின் வாதை. நமக்கு வாசிப்பு இன்பம்.
ஆனால் மேற்கத்தியர் பெரும்பாலானவருக்கு என்னுடைய மார்ஜினல் மேன் பிடிக்கவில்லை. காரணம், அதில் வரும் கதைசொல்லி ஒரு நாளைக்கு நாலு முறை தன் காதலியோடு போகம் செய்கிறான். எவன் படிப்பான் இந்த இன்பக் கதையை? கதையில் துன்பம் இருக்க வேண்டும். அதுதான் வாசிப்பவருக்கு இன்பம். மார்ஜினல் மேனிலோ இன்பமோ இன்பம். குறைந்த பட்சம், கதைசொல்லியின் ஆண்குறி அழுகிப் போய் கிடந்தாலாவது ஒரு பச்சாதாபம் ஏற்பட்டுப் படித்திருப்பார்கள். அதுவும் நடக்கவில்லை. கடைசி வரை நடக்கவில்லை. கதைசொல்லி ஜல்ஸா பண்ணும் கதையெல்லாம் யாருக்கய்யா வேண்டும் என்று ஒதுக்கி விட்டார்கள்.
இப்போது பெட்டியோ. வதையும் இருக்கும். சதையும் இருக்கும். இரண்டுமே உண்டு. போரின் அழிவு ஒரு பக்கம். காமம் மற்றொரு பக்கம்.
பெட்டியோ போல் உலக இலக்கியத்தில் எந்த ஒரு நாவலும் எழுதப்பட்டதில்லை என்று அறுதியிட்டுக் கூறுவேன். கல்லறையை எழுதும்போது பியர் க்யூத்தா சொன்ன வார்த்தை. இப்போது பெட்டியோ கல்லறையைத் தாண்டப் போகிறது. காரணம், பெட்டியோவில் சிதைவும் இருக்கும்; கொண்டாட்டமும் இருக்கும். கல்லறையை எழுதுவதற்கு லூயிஸ் புனுவேலின் Los Olvidados (The Young and the Damned) என்ற படமே உந்துதலாக இருந்தது என்கிறார் பியர் க்யூத்தா. 1950 வெளியான அந்தப் படத்தையும் பார்த்தேன். எனக்குமே பியர் க்யூத்தாவைப் போல இலக்கியத்தை விட சினிமாவே பெரும் உந்துதலாக இருந்ததை நான் பலமுறை பதிவு செய்திருக்கிறேன். (I am a product of german cinema and french literature). இப்படியாகத்தான் பெட்டியோ உருவாகிக் கொண்டிருக்கிறது. நாவலை நேற்று ஸ்ரீராமுக்கு அனுப்பி வைத்தேன். சீனிக்கும் காயத்ரிக்கும் நாவலில் இனி ஒரு வார்த்தை கூட சேர்க்க அவசியம் இல்லை என்ற நிலையில்தான் அனுப்ப வேண்டும் என்று இருக்கிறேன். ஸ்ரீராமுக்கு மட்டும் அனுப்பியதன் காரணம், என்னைத் தவிர நாவல் இன்னொருவரிடமும் இருக்க வேண்டும், அதுதான் பாதுகாப்பு.
பெட்டியோவை வாசிக்க இன்னும் ஒரு மாதம் பொறுங்கள்.