இன்று யோசித்துப் பார்த்தேன். மே மாதம் எழுதத் தொடங்கியது. நான்கு மாதங்களாக பெட்டியோவை எழுதிக் கொண்டிருக்கிறேன். 41000 வார்த்தைகள் வந்திருக்கிறது. இன்னும் எழுதினால் இன்னும் 30000 வார்த்தைகள் போகும்போல் தெரிந்தது. நிறுத்தி விட்டேன். பெரிதாக எழுதினால் ஆங்கிலத்தில் போகாது. மீதியை இன்னொரு நாவலாக எழுதிக் கொள்ள வேண்டியதுதான்.
அதனால் பெட்டியோவை ஒரு கட்டத்தில் முடித்து விட்டேன். நாளை அராத்துவுக்கும் காயத்ரிக்கும் அனுப்ப இருக்கிறேன். அவர்கள் படித்து முடித்ததும் என்.எஃப்.டி.யில் அதை வெளியிடுவதற்குக் கொஞ்சம் வடிவமைப்பு வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல என்.எஃப்.டி.யில் இந்நாவலை வாங்குவது ஒரு பொருள் வாங்குவது போல. படித்து விட்டு இதை நீங்கள் விற்றாலும் விற்று விடலாம். உங்களிடமே வைத்திருந்தால் இன்னும் அதிக விலைக்கும் விற்பனையாகும்.
பெட்டியோவின் முதல் பிரதி ரூ. இரண்டு லட்சம்.
பத்தாவது பிரதி, 25ஆவது பிரதி, 50ஆவது பிரதி, 75ஆவது பிரதி, ரூ. ஒரு லட்சம்.
பிறகு 91ஆவது பிரதியிலிருந்து 99ஆவது பிரதி வரை ஒரு லட்சம் ரூபாய். நூறாவது பிரதி ஐந்து லட்சம் ரூபாய். அத்தோடு சரி. நூறு பிரதிகள்தான் விற்பனைக்குக் கிடைக்கும்.
மற்ற பிரதிகள் அனைத்தும் பத்தாயிரம் ரூபாய்.
இப்படி விற்பதன் காரணத்தை ஏற்கனவே எழுதி விட்டேன். 75 புத்தகங்கள் எழுதியும் எனக்குக் கிடைக்கும் ராயல்டி தொகை ஒன்றரை லட்சம் ரூபாய்தான். ஒரு ஆண்டுக்கு. இது மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டர் எதிரே உள்ள சுரங்க நடைப்பாதை பாலியல் தொழிலாளிகளின் கூலியை விடக் குறைவு என்பதால்தான் இப்படி என்.எஃப்.டி.யில் விற்க வேண்டியிருக்கிறது. இப்போதும் சொல்கிறேன், பெட்டியோ நாவல் ஒரு அஞ்சு லட்சம் பிரதி அச்சில் விற்றால் இப்படியெல்லாம் என்.எஃப்.டி.யில் விற்பது பற்றி யோசிக்க வேண்டியிருக்காது.
இந்த விற்பனையில் கிடைக்கும் தொகை என் சீலே பயணத்துக்குத்தான் உதவும். சீலே, மெக்ஸிகோ, கூபா மூன்று நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். மெக்ஸிகோவில் அந்தோனின் ஆர்த்தோ சென்ற தாராஉமாரா மலைத் தொடர்ச்சிக்குப் போக வேண்டும்.
பணம் சேர்த்துக் கொள்ளுங்கள். வாங்கிப் படித்து விட்டு அதே விலைக்கோ அதை விட அதிக விலைக்கோ விற்று விடுங்கள்.
இன்னொரு விஷயம். இந்த நாவல் உங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றும்.