எதிர்ப்பின் அழகியல்

எல்லா விஷயங்களிலுமே நான் ஆரம்பத்திலிருந்து என் எதிர்ப்பையே பதிவு செய்து வந்திருக்கிறேன் என்பதை என் கட்டுரைகளை ஆழ்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். என்னை நீங்கள் யாரோடும் ஒப்பிட முடியாது. எனக்கு முன்னாலும் என்னைப் போல் யாரும் இல்லை. எனக்குப் பின்னாலும் யாரும் இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்ப் புத்திஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் இங்கே உள்ள படித்த மார்க்சீயவாதிகளை அறிஞர் என்று போற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் நான் அவர்களை கோனார் நோட்ஸ் போடுபவர்கள் என்று விமர்சித்துக் கொண்டிருந்தேன். உதாரணம், எஸ்.என். நாகராசன், ஞானி போன்றவர்கள். இன்னொருத்தர் ஊட்டியில் வசிக்கிறார். பெயரைச் சொன்னால் கேஸ் போட்டு விடுவார். என்னால் இப்போது ஊட்டிக்கெல்லாம் மாதாமாதம் போய் வர முடியாது, நேரமில்லை.

அப்படி நான் அந்த மார்க்சீய “அறிஞர்கள்” மீது மரியாதை இல்லாமல் இருந்ததற்குக் காரணம், நான் ஆரம்பத்திலிருந்து NLB என்று அழைக்கப்பட்ட New Left Books மற்றும் Verso பதிப்பக நூல்களையெல்லாம் தொடர்ந்து கற்று வந்தேன். இவற்றின் பெயர் கூட இன்று யாருக்கும் தெரியாது. இவற்றைப் படித்த தமிழ் புத்திஜீவிகளோ ஒரே ஒரு கவிதை எழுதிய இருபத்திரண்டு வயது நாகர்கோவில் பையனுக்கு இருக்கும் இலக்கிய சுரணையுணர்வு இல்லாமல் இருந்தார்கள். நிறைய உதாரணங்கள் சொல்லலாம். வேண்டாம், விடுங்கள்.

அதனால்தான் சொல்கிறேன், என்னை யாரோடும் ஒப்பிடாதீர்கள் என்று. பலரும் இப்போது என்னை அராத்துவோடு ஒப்பிட்டுப் பேசி உளறிக் கொண்டிருப்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

உதாரணமாக இங்கே அந்நியமாதல் என்ற நூல் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் நான் அதன் மூல நூலான Marx’s Theory of Alienationஐயே படித்திருந்தேன். இஸ்த்வான் மேஸாரோஸ் (Istvan Meszaros) என்ற ஹங்கேரிய அறிஞர் எழுதியது. அதனால்தான் என்னால் கோனார் நோட்ஸ் எழுதி அறிஞர் பெயர் பெற்றவர்களை மதிக்க முடியாமல் போனது.

அதேபோல் Leszek Kołakowski எழுதிய மெயின் கரண்ட்ஸ் இன் மார்க்ஸிஸம் என்ற மூன்று தொகுதிகளையும் படித்திருந்தேன் என்பதால் இங்கே அதைப் படித்துப் புரிந்தும் புரியாமலும் வாந்தி எடுக்கும் லோக்கல் மார்க்ஸிஸ்டுகளை நான் மதிக்கவில்லை.

இதெல்லாம் இப்போது எனக்கு ஞாபகம் வந்ததன் பின்னணி என்னவென்றால், இன்று ஃப்ரெட்ரிக் ஜேம்ஸன் என்ற அமெரிக்க மார்க்சீய அறிஞரின் ஐம்பது பக்க முன்னுரை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். என் ஆரம்ப கால வாத்தியார். இப்போதும் இருக்கிறார். வயது எண்பத்தைந்துக்கும் மேலே. வெர்ஸோ பதிப்பகத்தில் அவர் நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன்.

ஏன் அவருடைய அவ்வளவு நீளமான முன்னுரையைப் படிக்க நேர்ந்தது என்றால், இதற்குள் உங்களுக்கு பீட்டர் வெய்ஸ் (Peter Weiss) பற்றித் தெரிந்திருக்கும். மாரா/ஸாத் நாடகம் எழுதியவர். அவர் The Aesthetics of Resistance என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதற்குத்தான் ஃப்ரெட்ரிக் ஜேம்ஸன் ஐம்பது பக்க முன்னுரை எழுதியிருக்கிறார்.

அந்த மூன்று தொகுதியில் முதல் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏன்?

பெட்டியோ நாவலை எழுதி முடித்து நேற்று சீனிக்கும் காயத்ரிக்கும் அனுப்பி விட்டேன். இனி அதில் கை வைக்க எதுவும் இல்லை. இப்படி ஒரு நாவலை எழுதி முடித்தால் மேற்கத்திய எழுத்தாளர்கள் ஒரு ஆண்டு உலகச் சுற்றுப் பயணம் செல்வார்கள். எதுவுமே எழுதாமல் ஓய்வில் இருப்பார்கள். அந்த வசதியெல்லாம் தமிழ் எழுத்தாளனுக்குக் கிடையாது. எனக்கு ஓய்வு அடுத்த வேலைதான். அதுதான் பீட்டர் வெய்ஸ் எழுதிய எதிர்ப்பின் அழகியல் நாவலைப் படிக்கத் தொடங்கினேன். இதை முடித்து விட்டு, பூச்சி இரண்டு தொகுதிகளையும் அருஞ்சொல் நேர்காணல் தொகுப்பையும் பதிப்பகத்திடம் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.

நாம் எதையெல்லாம் நாவல் என்று நினைத்து வந்திருக்கிறோமோ அதையெல்லாம் தலைகீழாகப் போட்டு உடைப்பது போல் இருக்கிறது பீட்டர் வெய்ஸின் எதிர்ப்பின் அழகியல். ஜெர்மன்காரர் என்பதால் ஜெர்மன் மொழி போலவே மிகவும் கடினமான நாவல். அதை வாசித்தவர்கள் உலக அளவிலேயே நூறு பேர்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானும் ஒரு தொகுதியைத்தான் படிக்கப் போகிறேன். ஒரு பக்கத்தைப் படிக்க அரை மணி நேரம் ஆகிறது. முதல் தொகுதி 400 பக்கம். நாவல் முழுவதும் பத்தியே கிடையாது. கிட்டத்தட்ட ஹராகிரி மாதிரிதான். ஜாலியோ ஜாலி.