ஜப்பான்: கனவும் மாயமும் – 5

படத்தில் இருப்பவர் சுருக்கமாக RM என்று அழைக்கப்படுகிறார்.  Rap Monster என்பது முழுமையான பட்டப் பெயர்.  இயற்பெயர் கிம் ஜூன்.  தென் கொரியாவைச் சேர்ந்த பாடகர்.  இவருடைய குழுவின் பெயர் BTS. பதின்பருவத்திலேயே ஆர்.எம். வெளியிட்ட பாப் ஆல்பம் உலகப் புகழ் அடைந்தது.  இப்போது இவர் வயது 29.  எனக்குப் பிடித்த பாப் பாடகரான ஆர்.எம்.மை இந்த ஜப்பான் தொடரில் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்த்ததில்லை.  அது தற்செயலாக இன்று நேர்ந்தது.  நேற்றிலிருந்து ரியூ முராகாமியின் நாவல்களிலிருந்து படமாக்கிய திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அதில் ஒரு படம் ஆடிஷன்.  1999இல் வெளிவந்தது.  கதை ரியூ முராகாமி.  திகில் படம்.  நான் எத்தனையோ திகில் படங்களைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் முதல் முதலாக ஒரு திகில் படத்தை என்னால் முழுமையாகப் பார்க்க முடியாமல் போனது.  பாதி பட்த்துக்கு மேல் அதில் வரும் பயங்கரத்தையும் குரூரத்தையும் – என்னதான் அது கற்பனைப் படைப்பு என்றாலும் – என்னால் தாங்க முடியவில்லை.  ஒரு பத்து வயதுச் சிறுமியின் யோனியில் அவள் தகப்பன் (அப்படித்தான் நினைக்கிறேன், படத்தை கவனமாகப் பார்க்க முடியாததால் உறவு சரியாகத் தெரியவில்லை) பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைச் சொருகுகிறான்.  பிறகு அவள் வளர்ந்த பிறகும் அதே விதமாக அவளைச் சித்ரவதை செய்கிறான். அந்தக் காட்சி சூசகமாக இல்லாமல் நேரடியாகக் காண்பிக்கப்படுகிறது. பிறகு அவள் அவனுடைய கழுத்தில் வலுவான கம்பியைச் சுற்றி இறுக்கி தலையையே துண்டாக்குகிறாள். தலை தனியாகப் பிய்ந்து விழுகிறது.

இன்னொருவனின் உடல் பாகங்களை நீண்ட கால இடைவெளியில் ஒவ்வொரு விரலாக வெட்டித் துண்டிக்கிறாள்.  அவனை சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருக்கிறாள்.  அவ்வப்போது மூட்டையைத் திறந்து அவனுக்கு நாய்ப் பாத்திரத்தில் கஞ்சி ஊற்றுகிறாள்.  அவனும் நாயைப் போலவே அதை நேரடியாக நக்கிச் சாப்பிடுகிறான். 

Almost Transparent Blue

இன்னொருவனின் காலை ரம்பத்தால் அறுத்துத் துண்டித்து எறிகிறாள். 

இப்படிப் போகிறது படம்.  பொதுவாக த்ரில்லர் படங்களைப் பார்த்தாலே எனக்கு முன்பெல்லாம் நெஞ்சு வலி வந்து விடும்.  இப்போது உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிகிறது.  சோதனை முயற்சியாகவே படத்தைத் தொடர்ந்து பார்த்தும் நெஞ்சு வலி வரவில்லை.  சித்த மருத்துவர் பாஸ்கரனுக்கு என் ‘நெஞ்சார்ந்த’ நன்றி. 

நெஞ்சு வலி வராவிட்டாலும் தொடர்ந்து அந்த குரூரத்தைக் காண முடியாமல் படத்தைக் கடைசியிலிருந்து பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்தேன்.  கடைசி ஐந்து நிமிடம்.  பிறகு நடுவில்.  பிறகு பத்து நிமிடம் விட்டு ஐந்து நிமிடம்.  பிறகு முன்பு விட்ட பத்து நிமிடத்தில் சில காட்சிகள்.  இப்படியாகவே படத்தை முழுமையாகப் பார்த்தேன். இந்த திகில் படத்திலும் கூட கொஞ்சம் ஜப்பானிய வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. 

இதிலும் ஒரு நடுத்தர வயது மனிதன் வருகிறான்.  மனைவி இல்லை.  விவாகரத்து ஆனவன் அல்ல.  மனைவி இறந்து விடுகிறாள்.  மகன் கல்லூரியில் படிக்கிறான்.  இருபது வயது.  ஒருநாள் அவன் தன்னுடைய தோழியை வீட்டுக்கு அழைத்து வருகிறான்.

சில தினங்கள் சென்று தந்தை அவனிடம் “உன் கேர்ள் ஃப்ரெண்ட் எப்படி இருக்கிறாள்?” என்று கேட்க, “எந்த கேர்ள் ஃப்ரண்டைச் சொல்கிறீர்கள்?” என்று வினவுகிறான் பையன்.  பெயரைக் குறிப்பிடுகிறார் தந்தை.  “ஓ அவளா?  இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்கள் வினோதமான பிறவிகள்” என்று நக்கலாக பதில் சொல்கிறான் மகன்.

(ஒரு பையன் நாலைந்து கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருப்பதையும், ஒரு பெண் நாலைந்து பாய் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருப்பதையும் பற்றித்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் காமரூப கதைகள் என்று ஒரு நாவல் எழுதினேன்.  அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட transgressive அம்சத்தைக் கண்டு வெருண்டு போன தமிழ் இலக்கிய உலகம் அந்த நாவலை முழுமையாகப் புறக்கணித்து விட்டது.  ராஸ லீலா பற்றிப் பேசுபவர்கள் கூட காமரூப கதைகள் பற்றிப் பேசுவதில்லை.)

தந்தையை மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறான் மகன்.  தந்தையும் ஒரு இருபத்தைந்து வயது பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறார். ”அட, என்னை விடக் கொஞ்சம்தான் வயது அதிகம்” என ஆச்சரியப்படுகிறான் மகன்.  அதோடு, “அந்தப் பெண்ணை நான் பார்க்க வேண்டும், நீங்கள் காதல் மயக்கத்தில் இருக்கிறீர்கள், எனக்குக் கொஞ்சம் நுண்ணுணர்வு அதிகம், நான் பார்த்துச் சொல்கிறேன்” என்கிறான்.

படத்தின் தொடக்கத்தில் நடுத்தர வயது நாயகனும் அவன் நண்பரும் ஒரு மதுபானக் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  பக்கத்தில் நாலைந்து பெண்கள் குடித்து விட்டுக் கடும் போதையில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அப்போது நடுத்தர வயது மனிதர் நண்பரிடம் “பெண்கள் போகும் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது, நல்ல பெண்களையே பார்க்க முடியவில்லை, ஜப்பானின் கதை முடிந்து விட்டது” என்கிறார்.

குறுக்கிடுகிறேன்.  என்னைப் பொருத்தவரை பெண்கள் குடிப்பதோ ஐந்தாறு பாய் ஃப்ரெண்ட்ஸ் வைத்துக் கொள்வதோ பிரச்சினையே இல்லை.  அது எனக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத விஷயம்.  ஆனால் மிகச் சில வருடங்களிலேயே அந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் மனநோயால் பாதிக்கப்பட்டு தனிமை கொண்டு விடுகிறார்கள்.  அது குறித்துத்தான் என்னுடைய கவனம். 

அடுத்து கதை எப்படிப் போகிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். 

ஹாருகி முராகாமியை எனக்குப் பிடிக்காமல் போனதற்கு இன்னொரு காரணம், அன்பு நாவலில் வரும் பச்சைக் கண்ணழகி போன்ற இளம் பெண்கள் ஹாருகி முராகாமியோடு ஒருமுறையாவது படுத்து விட வேண்டும் என்று “என்னிடம்” வந்து சொல்கிறார்கள், புலம்புகிறார்கள்.  பச்சைக் கண் மட்டும் அல்ல, பல பெண்கள்.  இப்போது சொல்லுங்கள், என் நிலைமையில் ஹாருகி முராகாமியைப் பிடிக்குமா? 

ரியூ முராகாமி ஜப்பானில் பிரபலம் என்றாலும் உலக அளவில் அவரைத் தெரியவில்லை.  பச்சைக் கண், மஞ்சள் கண் என்று எந்தக் கண்ணும் ரியூ பற்றிச் சொல்லி என்னை டார்ச்சர் பண்ணவில்லை.  அதனால் ரியூ முராகாமி இப்போதைக்கு என் பிரியத்துக்குரிய ஜப்பானிய எழுத்தாளராகப் போய் விட்டார்.

மட்டுமல்லாமல் அவர் எழுதும் உலகம் நான் எழுதும் உலகமாக இருக்கிறது.  உதாரணமாக, அவர் ரியூ முராகாமியின் Almost Transparent Blue என்ற நாவல்  1981இல் வெளிவந்தது.  இது வெளிவந்த போது ரியூவின் வயது இருபத்தொன்பது.  அவருடைய பதின்பருவத்து அனுபவங்களே ப்ளூ.  கூட்டுக் கலவி, குடி, போதை மாத்திரை – இதுதான் நாவல்.  இந்த நாவலை ரியூ முராகாமியே திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.  நாவலைப் படிக்க நேரம் இருக்காது என்பதால் திரைப்பட்த்தையே பார்த்து விடலாம் என்று முயற்சி செய்தேன்.  படம் கிடைக்கிறது.  ஆனால் சப்டைட்டில் இல்லை.  சப்டைட்டில் இல்லாமல் ஜப்பானியப் படம் பார்க்க முடியாது. 

யாருக்காவது கிடைத்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்.

charu.nivedita.india@gmail.com

***

சரி, RM என்கிற Rap Monsterக்கும் ரியூ முராகாமிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

”என் இசைக்கும், நான் எழுதிப் பாடும் பாடல்களுக்கும் நான் உத்வேகம் பெற்றது ரியூ முராகாமியின் அல்மோஸ்ட் ட்ரான்ஸ்பரண்ட் ப்ளூ நாவலிலிருந்துதான்” என்கிறார் ஆர்.எம். 

இங்கே இன்றைய இளைஞர்களின் போதை உலகம் பற்றிக் கொஞ்சம்.  ரியூ முராகாமியின் சுயசரிதைதான் ப்ளூ நாவல்.  கூட்டுக் கலவி, மது, போதை மாத்திரை, போதை ஊசி, இத்யாதிதான் ப்ளூ நாவலின் உள்ளடக்கம்.  நான் இமயமலை போனால் அங்கே உள்ள சாமியார்களிடமிருந்தும், எனக்கு வண்டி ஓட்டும் டிரைவர்களிடமிருந்தும் கஞ்ஜா வாங்கிப் புகைப்பது உண்டு.  அத்தோடு சரி.  சென்னை வந்தால் மறந்து போகும்.  புகையிலை, போதை மாத்திரை, போதை ஊசி எதுவுமே என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது.  பொதுவாக போதை விஷயங்களில் Macho எனக் கருதப்படும் எதுவும் எனக்கு ஒவ்வாது.  விஸ்கி உட்பட.  மற்றபடி இசை, நடனம், மதுபானக் கூடம் எல்லாம் உண்டு.  இன்றும்.  ஆனால் இளைஞர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம், நான் அந்தக் குதூகலக் கொண்டாட்ட உலகிலேயே அமிழ்ந்து போவதில்லை.  கொஞ்சமாக எட்டிப் பார்ப்பதும், தற்காலிகமாக அமிழ்ந்து எழுவதும் மட்டுமே.  என்னுடைய கொண்டாட்டம் எழுத்து என்று புரிந்து வைத்திருக்கிறேன்.  அப்படி, இளைஞர் உலகமும் இசை என்றோ, இலக்கியம் என்றோ, பயணம் என்றோ, சேவை என்றோ, இன்னும் என்னவெல்லாம் உண்டோ அதில் ஒன்றைத் தமது கொண்டாட்டமாகக் கொள்ள வேண்டும்.  கவனியுங்கள்.  நானோ ரியூ முராகாமியோ போதையிலும் செக்ஸிலும் ஆழ்ந்து எங்களைக் காணாமல் அடித்துக் கொள்ளவில்லை.  இளைஞர் உலகம் தன் ஒவ்வொருவருடைய அடையாளத்தையும் இழந்து, மனநோயிலும் தனிமையிலும் விழுந்து விடுகிறது.