”இளைஞர் உலகம் தன் ஒவ்வொருவருடைய அடையாளத்தையும் இழந்து, மனநோயிலும் தனிமையிலும் விழுந்து விடுகிறது” என்று சென்ற அத்தியாயத்தை முடித்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் “அதுதான் கவலை அளிக்கிறது” என்று எழுதியிருப்பார்கள். எனக்கு அப்படி அல்ல. இளைஞர் உலகம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றே தோன்றுகிறது. இளைஞர் உலகம் மட்டும் அல்ல, மனித இனமே எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றுதான் இருக்கிறது. ஏனென்றால், ஆயிரத்தில் அல்லது பத்தாயிரத்தில் ஒருத்தரைத் தவிர மற்றவர்களுக்குப் பணமே கண் கண்ட தெய்வமாக இருக்கிறது. இல்லாவிட்டால், அதிகாரம். இல்லாவிட்டால், புகழ். இல்லாவிட்டால், தேசம். இல்லாவிட்டால், மதம். இப்படிப்பட்ட மனிதப் பதர்கள்தான் பூமிக்குப் பாரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி முறையும் இப்படிப்பட்ட மனிதப் பதர்களை உருவாக்குவதில்தான் மும்முரமாக இருக்கிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் பள்ளிக்கூடம் போனால் அவனை வெட்டிக் கொல்கிறார்கள். உன் தேசம், என் தேசம் என்று ராணுவத்தைக் கட்டி அமைத்து கோடிக்கணக்கான பணத்தை அதற்கு செலவழிக்கின்றன பெரும்பாலான அரசுகள்.
மனித குலம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று நான் எழுதியிருப்பதைப் பார்த்து நான் மனித நேயம் இல்லாதவன் என்று திட்டுவீர்கள். உண்மைதான். நான் கிஞ்சித்தும் மனித நேயம் இல்லாதவன்தான். ஒரு பிரம்மாண்டமான காட்டில் உள்ள 3000 யானைகளைக் கொன்று யானை இனத்தையே அந்தக் காட்டில் அழித்த வீரப்பன் என்ற கிரிமினலைக் கொண்டாடும் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தின் மேல் நான் எப்படி நேசம் பாராட்ட முடியும்? யானை போன்ற ஒரு அற்புதமான ஜீவனை, அன்பின் திருவுருவான ஒரு ஜீவனை ஒரு மனிதன் பணத்துக்காகக் கொல்கிறான் என்றால் இந்த உலகம் இருந்தால் என்ன, அழிந்தால்தான் என்ன?
நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனின் வீட்டுக்குள்ளே புகுந்து அவனுடைய நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வருவீர்களா? மாட்டீர்கள். நான் என்ன கொள்ளைக்காரனா, திருடனா என்று கோப்ப்படுவீர்கள். ஆனால் தேசம் என்ற ஒரு அமைப்பு கூச்சமே இல்லாமல் அப்படிச் செய்கிறதே? அதை தேசப்பற்று என்று அல்லவா எல்லோரும் அழைக்கிறீர்கள்? திபெத் என்ற மாபெரும் தேசத்தை சீனா கபளீகரம் பண்ணித் தன்னுடைய நாட்டோடு சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது. அதை எந்த ஐ.நா. சபை கேட்க முடிந்திருக்கிறது? சீனா மட்டும் இல்லை. கொஞ்சம் அசந்தால் பாகிஸ்தான் காஷ்மீரின் பகுதிகளைத் தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்ளும் இல்லையா? பெரும்பாலான நாடுகள் ராணுவம் வைத்திருப்பது எதற்காக? இன்னொரு நாட்டிலிருந்து தன் பூமியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக. இப்படி நாம் நம்முடைய ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார வேலியும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களையுமா வைத்திருக்கிறோம்? சில இடங்களில் அதையும்தான் பார்க்கிறேன். இப்படி நம் நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் நம்முடைய அண்டை வீட்டாருக்கும் பயந்து கொண்டு, நம் வருமானத்தில் அறுபது சதவிகிதத்தை நம் பாதுகாப்புக்கும் ஆயுதத்துக்கும் பயன்படுத்தி, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒரு தேசம் வாழ்ந்தால் ஒரு துறவியைப் போலவும், ஞானியைப் போலவும் வாழும் எழுத்தாளன் எப்படி மனித நேயம் பாராட்டுவான்?
அதனால்தான் இளைஞர்கள் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று எழுதினேன்.
ஆனால் அப்படிச் சொன்னாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மழை பொழிவது போல, காற்று வீசுவது போல எழுத்தாளர்கள் மானுட குலத்தின் மேன்மைக்காக எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதைத்தான் நானும் செய்கிறேன்.