ஜப்பான்: கனவும் மாயமும் – 7

விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிடுவது ஒரு சந்தோஷம்.  ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் கொழுக்கட்டை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தின நாள்தான் மாரிஸ் ஓட்டலில் மிக ருசியான ஒரு கொழுக்கட்டை சாப்பிட்டிருந்ததால் ரொம்பவும் ஏக்கம் தோன்றவில்லை. ஆனால் மாரிஸ் ஓட்டலை என் மனதிலிருந்து நீக்கி விட்டேன்.  இனி ஒருபோதும் அங்கே போக மாட்டேன்.  காரணம்?

உலகிலேயே எனக்கு மிகப் பிடித்த உணவு தோம்யாம் சூப் (தாய்லாந்து) மற்றும் ஃபிஷ்பால் சூப் (சீனா).  காலை உணவு என்று இல்லாமல் இந்த இரண்டையும் ஒரு நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.  அதற்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது இட்லி.  இட்லி பற்றியே இதுவரை ஆயிரம் பக்கம் எழுதியிருப்பேன்.  ஆனாலும் எழுத வேண்டியது பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது.  இலங்கை சனங்கள் சாப்பிடுவது இட்லியே அல்ல.  அதை அரிசி மாவுக் களி உருண்டை என்று வேண்டுமானால் சொல்லலாம்.  வட இந்தியாவில் இட்லி என்ற பெயரில் கொடுக்கப்படும் வஸ்துவும் இட்லி அல்ல.  அதேபோல் சென்னை மாநகரின் வீடுகளில் இட்லி என்று சாப்பிடுகிறார்களே, அதுவும் இட்லி அல்ல.  காரணம், அவர்கள் இட்லி மாவை தெருக்கடைகளில்தான் வாங்குகிறார்கள்.  தெருவில் உள்ள இட்லி மாவுக் கடைகள் யாவும் தெலுங்கர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது.  தெலுங்கராக இருந்தால் என்ன, கன்னடியராக இருந்தால் என்ன, மாவு நன்றாக இல்லை.  அந்தத் தெரு மாவினால் செய்யப்படும் இட்லி இலங்கை இட்லி, வட இந்திய இட்லி அளவுக்கு மோசம் இல்லை என்றாலும், இட்லி என்ற பெயருக்கு ஒரு அம்பது சதவிகிதம்தான் கிட்டத்தில் வரும்.

மற்றபடி சென்னையின் ஓட்டல் இட்லிகளை எத்தியோப்பியா, உகாண்டா, புருண்டி, மொஸாம்பிக் போன்ற ஆஃப்ரிக்க நாட்டு விளிம்புநிலை மக்களோடு மட்டுமே ஒப்பிடலாம்.  ராயர் கஃபே எல்லாம் வெறும் காலி பெருங்காய டப்பாவாக மாறி ரொம்பக் காலம் ஆகி விட்டது.  ஒரு வருடத்துக்கு முன்பு முருகன் இட்லி கடையில் இட்லி வாங்கினேன்.  இரவு எட்டு மணி.  ஊசிப் போன தேங்காய்ச் சட்னி வந்தது.  காலையில் அரைத்தது போல.  இட்லியும் கேவலமாக இருந்தது. 

இன்று வெளியிலிருந்து இட்லி வாங்கலாம் என்று நினைத்து, முருகன் இட்லி கடை இப்போது எப்படி இருக்கிறது என்று வாங்கினேன்.  இலங்கை இட்லி.  அடித்தால் பல் பெயர்ந்து விடும்.  சென்னையிலேயே அடையார் ஆனந்த பவன் மட்டும்தான் கொஞ்சம் தேவலாம் என்று இருக்கிறது. 

இந்த நிலையில் மாரிஸில் காலை உணவு நன்றாக இருக்கும்.  அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆப்பம் தேங்காப் பால், புட்டு, இடியாப்பம் எல்லாம் தருகிறார்கள். 

இட்லி, தோம்யாம் சூப், ஃபிஷ்பால் சூப் ஆகிய மூன்று பண்டங்களையும் விடப் பிடித்தது என்றால், அது தேங்காப்பால் ஆப்பம்.  ஆனால் அந்த வஸ்துவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ருசிக்க முடிகிறது.  காரணம், தமிழ்நாட்டில் தேங்காப்பால் ஆப்பமே காணாமல் போய் விட்டது.  அவந்திகா எனக்காக ஆமைக்கறி கூட சமைப்பாள்.  ஆனால் அக்கார அடிசலும் தேங்காப்பால் ஆப்பமும் பண்ண மாட்டேன் என்று சொல்லிக்  கையெடுத்துக் கும்பிட்டு விலகி விட்டாள். 

இந்த நிலையில் மாரிஸ் ஓட்டலில் தேங்காப்பால் ஆப்பம் என்றால் எவ்வளவு வேகமாக ஓடுவேன்? நன்றாகத்தான் தொடங்கினார்கள்.  பிரமாதமாகத்தான் இருந்தது.  ஆனால் கடந்த ஞாயிறு அன்று தேங்காப்பாலில் சீனி போடவில்லை.  இங்கேதான் ஜாதி குறுக்கிடுகிறது.  மாரிஸ் ஓட்டலின் எதிரே லாயிட்ஸ் ஓட்டலில் ஆத்தீமூக்கா சந்திப்புகள் இல்லாத தினங்களில் காலை உணவுக்கு வருபவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள்.  பிராமணர்களில் ஷுகர் பிரச்சினை இல்லாதவர்கள் நூற்றுக்கு ஒருவரோ ஆயிரத்தில் ஒருவரோ.  அந்த ஷுகர் பேர்வழிகளுக்காகவோ என்னவோ தேங்காப்பாலில் சீனி போடவில்லை.  சர்வர் முதலிலேயே சொல்லி, சீனியைத் தனியாகக் கொடுத்து விட்டார். 

அடங்கொக்கா மக்கா, ஆப்பத்தில் தேங்காப்பாலை ஊற்றி அதன் மேல் சீனியைத் தூவி சாப்பிட்டால் மயிர் மாதிரி இருந்தது.  இன்னொரு ஆப்பம் சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை.  வயிறோ நிரம்பவில்லை.  பூரி கேட்டேன்.  நூற்றிப் பத்து வயது கிழவரின் ஆண்குறி மாதிரி வந்தது பூரி.  முதல் நாளே போட்டு வைத்து விட்டார்கள் போல.  தொட்டுக் கொள்ள வைத்த உருளைக்கிழங்கோ சகிக்கவில்லை.  காரமே இல்லாமல் உருளையை வெறுமனே வேக வைத்தது போல் இருந்தது.  இதுவே கடைசி என்று மாரிஸ் ஓட்டலுக்குப் பெரியதொரு கும்பிடு  போட்டு ஓடி வந்து விட்டேன்.

விநாயகர் சதுர்த்தி அன்று அவந்திகா கூடுதல் வேலை செய்தாள்.  பணிப்பெண் வீட்டைப் பெருக்கி துடைத்த பிறகும் அவந்திகா ஒருமுறை அந்த வேலையைச் செய்தாள்.  விசேஷ நாள்.  கோலம் போட்டாள்.  இப்படி பலப்பல வேலைகள்.  பிறகு பாயசம், மசால் வடை, சுண்டல் எல்லாம் செய்தாள்.  அதற்குள் நான் சோறு வைத்து மற்ற எடுபிடி வேலைகளைச் செய்து முடித்தேன். 

அவந்திகா சோர்வடைந்து விட்டாள்.  இப்போதெல்லாம் முன்பு போல் உடம்பு ஒத்துழைப்பதில்லை.  ஒண்டியாவே சமைக்கிறேனா, முடியலப்பா என்று சொன்னபோது மட்டும் “ஒருக்காலும் அப்படிச் சொல்லாதே, சொன்னால் கொலை விழும், நான் காலை ஆறு மணியிலிருந்து கிச்சனில் நின்று கொண்டிருக்கிறேன், கடந்த முப்பது ஆண்டுகளாக நீ ஒருநாள் கூட ஒண்டியாக சமைத்தது இல்லை” என்று கட்டையைப் போட்டேன்.  பதில் இல்லை. 

ஆக, கொழுக்கட்டை இல்லை. 

கவலையும் இல்லை.  வாழ்வில் எத்தனையோ இல்லைகள்.  அதில் இது ஒரு இல்லை. 

மாலை ஐந்து மணி அளவில் ஸ்விக்கி மூலமாக ஒரு பார்சல்.  நாம் ஒன்றும் சொல்லவில்லையே என்று பார்சலை மறுத்தேன்.  சாரு நிவேதிதா என்று உள்ளது என்றார் ஸ்விக்கிகாரர்.  வாங்கிக் கொண்டேன்.  உள்ளே இரண்டு டப்பா. ஒன்றில், இனிப்புக் கொழுக்கட்டை.  இன்னொன்றில், காரக் கொழுக்கட்டை. 

அனுப்பியது யார் என்று யூகிப்பதில் சிரமம் இல்லை. இந்த உலகிலேயே என் சாப்பாடு பற்றிக் கவலைப்படும் ஓரிரு ஜீவன்களில் ஒரு ஜீவன். அன்னபூரணி.  அன்னபூரணியை என் உள்வட்ட நண்பர்கள் மட்டுமே அறிவர்.  அன்னபூரணி தன் அடையாளம் பற்றி எழுதவே கூடாது என்று கேட்டுக் கொண்டவர்.  பதினைந்து ஆண்டுகள். 

நம்ம வீடு வசந்தம் என்ற பிரபலமான உணவகத்திலிருந்து இனிப்புக் கொழுக்கட்டையும் காரக் கொழுக்கட்டையும் வந்திருந்தது.  கொழுக்கட்டை கிடைத்தது என்று அன்னபூரணிக்கு மெஸேஜ் அனுப்பினேன்.  அவருக்கு நன்றி சொன்னால் பிடிக்காது.  எப்படி இருந்தது என்று கேட்டார். 

இதை வாசிப்பவர்களுக்குக் கொழுக்கட்டையின் நுணுக்கங்கள் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.  கொழுக்கட்டையில் இரண்டு பாகங்கள் உள்ளன.  பூரணம், பூரணத்தை மூடியிருக்கும் தொப்பி.  தொப்பி அரிசி மாவில் செய்தது.  பூரணம், சர்க்கரையும் தேங்காயும்.  பூரணம் செய்வது சுலபம்.  நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் தொப்பியில் தோல்வி அடைவார்கள்.  எல்லோரும் செய்யும் தவறு, தொப்பி அடை மாதிரி தடியாக இருக்கும்.  தொப்பி மெலிதாக இலை மாதிரி இருக்க வேண்டும்.  நம்ம வீடு வசந்தம் முதலாளி மேல் எனக்கு வருத்தம் இல்லை.  பாவம், அவர் தன் சமையல்காரருக்கு அதிகமான ஊதியமே கொடுத்திருப்பார்.  சமையல்காரர்தான் தன் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை.  அடையை விடத் தடியாக இருந்தது தொப்பி.  அந்த அளவு மாவு என்பதால் ஒரு கொழுக்கட்டையின் உள்ளே பூரணமே இல்லை.  வெறும் மாவு.  மாவுத் தொப்பியைத் தூக்கிப் போட்டு விட்டு வெறும் பூரணத்தை மட்டும் சாப்பிட்டேன்.

ஏற்கனவே மதியம் அவந்திகா செய்து வைத்திருந்த பூரணம் இறுகிப் போயிருந்தது.  சாப்பிட அந்தக் காலத்து கமர்கட்டு போலவே இருந்தது.  அவந்திகாவுக்கும் தொப்பி செய்வதற்குள்தான் உடம்பு தளர்ந்து விட்டது. 

இதை அன்னபூரணியிடம் சொன்னேன்.  அன்னபுரணியிடம் மட்டும் சுதந்திரமாகப் பேசலாம்.  ’ஐயோ, நமக்காக எத்தனை தூரம் மெனக்கெட்டு இதை அனுப்பி வைத்திருக்கிறார், இதைக் குறை சொன்னால் அத்தனை அன்பாக அனுப்பி வைத்திருக்கும் அவர் மனம் புண்படுமே’ என்றெல்லாம் பஜனை செய்ய வேண்டியதில்லை.  பொதுவான சமூகப் பிரச்சினையை எழுதினால் அவர் ஏன் ஐயா வருத்தப்பட வேண்டும்?  எவனுக்குமே கொழுக்கட்டை செய்யத் தெரியவில்லை என்பது சமூகப் பிரச்சினை இல்லையா?  இத்தனைக்கும் நம்ம வீடு வசந்தம் ரொம்பப் பிரபலமான உணவகம்.  இப்படி ஒரு மாவுப் பிண்டத்தை கொழுக்கட்டை என்று சொல்லி செய்து கொடுக்கிறாரே சமையல்காரர், இது பற்றி நம்ம வீடு வசந்தம் முதலாளிக்குக் கவலையே இல்லையா?  இதுதான் என் கவலை.  தன் வியாபாரத்தைப் பற்றி ஒருவர் இந்த அளவுக்கா கவலையே இல்லாமல் ஏனோதானோ என்று இருப்பார்?  எனக்கு நம்ம வீடு வசந்தம் முதலாளியைப் பார்த்து, “சார், உங்கள் அம்மா உங்களுக்கு இப்படியா கொழுக்கட்டை செய்து கொடுத்தார்கள்?” என்று கேட்க வேண்டும், அவ்வளவுதான். 

அன்னபூரணி வருத்தப்பட்டார்.  கார் ஓட்டிக் கொண்டே ஆர்டர் செய்த்தால் வேறு நல்ல உணவகமாகத் தேட முடியவில்லை சாரு என்றார்.  சேச்சே, நம்ம வீடு வசந்தத்தை விட நல்ல உணவகமே இல்லையே தாயே என்றேன்.

”மட்டுமல்லாமல், இன்று விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டையே இல்லாமல் போயிருக்கும், இந்த உலகத்திலேயே உனக்கு மட்டும்தான் எனக்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.  அந்த அன்புக்கு என் வணக்கம்” என்றேன். (நல்லவேளை, நன்றிக்குப் பதிலாக வணக்கம் மாட்டியது!)

“எப்படியோ உங்களுக்கு இந்தச் சிறிய – மிகச் சிறிய அளவில் உதவ வாய்த்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி” என்றார். 

ஆனால் காரக் கொழுக்கட்டை அட்டகாசமாக இருந்தது.  அது அரிசி உப்புமாவைக் கையால் பிடித்துச் செய்வது.  பிடி கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்.  அன்னபூரணியிடம் உடனே சொன்னேன்.

இவ்வளவு நீளமான விவரங்களெல்லாம் ஜப்பானியப் பயணக் கட்டுரையில் எதற்கு என்று உங்களுக்குத் தோன்றலாம்.  என் உணவு பற்றிக் கவலைப்படும் ஓரிரு ஜீவன்களில் அன்னபூரணியும் ஒருவர் அல்லவா?  அது என்ன ஓரிரு?  மற்றவர்கள் யார்? 

சீனி என்னுடன் இருந்தால் அவரும் அன்னபூரணியாக மாறி விடுவார்.  என் உணவு பற்றியும் எனக்குத் தேவையான தண்ணீர் (ரெண்டும்தான்) பற்றியும் யோசித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரே மனிதர். வைன் ஓப்பனருக்காகக் கூட நான் எங்கேயும் அலைந்ததில்லை.  நடுக்காட்டில் கூட தன் தோள்பையிலிருந்து ஒரு புத்தம் புதிய வைன் ஓப்பனரை எடுத்துக் கொடுப்பார் சீனி.   

அன்னபூரணியிடமிருந்து ஒரு மெஸேஜ். “ஜப்பான் செல்கிறீர்களே, உணவுக்கு என்ன செய்வீர்கள்?  கொஞ்சம் ரைஸ் மிக்ஸ் எடுத்துச் செல்லுங்கள், sticky rice mix will be ok.”

ஆஹா, இதற்கு மட்டுமே நான் நூறு பக்கம் பதில் எழுதுவேன்.  அவ்வளவு கிடக்கிறது.

நான் ஒரு gastronome என்று சொல்லியிருக்கிறேன்.  இதன் பொருள் உணவிலும் குடியிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.  உலகத்தில் இது போல் பல நூறு உணவு விரும்பிகள் உள்ளனர். அவர்களின் வேலை என்னவென்றால், ஒவ்வொரு தேசமாகப் போய் அங்கே உள்ள உணவை ருசி பார்த்து யூட்யூபில் பேசுவது.  அதில் அவர்களுக்கு எக்கச்சக்கமாகக் காசு கிடைக்கிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.  அப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் உணவுக்காகவும் குடிக்காகவுமே உலகம் பூராவும் ஒரு ரவுண்டு அடிக்க வேண்டும் என்பது என் ஆசை.  உதாரணமாக, பெரூவில் மட்டும்தான் செவிச்சேவும் பிஸ்க்கோவும் கிடைக்கும்.  பக்கத்தில் உள்ள சீலேயில் கூட பிஸ்க்கோ கிடைக்கவில்லை.  ப்ரஸீலில் கிடைக்கவில்லை.  பெரூவைத் தவிர வேறு எங்கேயும் பிஸ்க்கோ இல்லை. அத்தனை அபூர்வமான பிஸ்க்கோவை சீனிக்காக ஒரு போத்தல் வாங்கி வந்தேன்.  வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வர முடியாது என்பதால் சென்னை விமான நிலையத்தில் ஒரு நண்பரை வரவழைத்து சீனியிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தேன்.  சீனி அப்போது சென்னையில் இல்லை.  நண்பரின் நண்பர் அதைக் குடித்து விட்டதாக நண்பர் சொன்னார்.  ஆ, எப்பேர்ப்பட்ட நண்பர்கள்!

பெரூவின் செவிச்சே மாதிரி உலகம் பூராவும் உணவு வகைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.  ராஜஸ்தானில் ஆட்டுக் கறியில் செய்யும் லால் மாஸ் என்று ஒரு சாமான்.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் சென்ற போது ராம்ஜி அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் எனக்கு அந்தப் பண்டம் பற்றித் தெரிந்திருக்கவே இருக்காது. 

என்னிடம் ஒரு பழக்கம் என்னவென்றால் – இதை மற்றவர்களிடம் காண்பது மிகவும் அரிது – எனக்குப் பிடித்த உணவாக இருந்தால் அலுப்பு சலிப்பே இல்லாமல் 365 தினங்களும் அதையே சாப்பிடுவேன்.  தில்லியில் பத்து ஆண்டுகள் இருந்தேன்.  காலையில் இட்லியெல்லாம் சாத்தியம் இல்லை.  தில்லியில் நான் இட்லியே சாப்பிட்டதில்லை.  காலையில் தினமும் பஞ்சாபி பரோட்டா, தொட்டுக் கொள்ள பஞ்சாபி ஊறுகாய், கெட்டித் தயிர்.  எல்லோரும் ஒரு பரோட்டா சாப்பிடுவார்கள்.  நான் ரெண்டு சாப்பிடுவேன்.  பத்து ஆண்டுகளும் இதேதான். இது கிடைக்காத தினங்களில் ப்ரெட் டோஸ்ட், தொட்டுக் கொள்ள கொத்துக்கடலைக் கறி. 

ஜெய்ப்பூர் விழாவில் தங்கியிருந்த ஆறு தினங்களுமே தினம் இரவு உணவாக லால் மாஸ்தான் சாப்பிட்டேன்.  ஒரு மாதம் தங்கியிருந்தால் ஒரு மாதமும் அதையேதான் சாப்பிட்டிருப்பேன். 

2000இல் எனக்கு ஃப்ரான்ஸில்தான் சாக்கேயும், சுஷியும் அறிமுகம்.  அதிலிருந்து நான் சாக்கேவுக்கும் சுஷிக்கும் அடிமையாகவே ஆகி விட்டேன்.  சென்னையில் Dahlia என்ற ஜப்பானிய உணவகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது.  அங்கே தோக்கியோவிலிருந்து தருவிக்கப்பட்ட முதல் தரமான சாக்கே கிடைக்கும்.  150 மில்லி 600 ரூ.  நான் 300 மில்லி சாப்பிடுவேன்.  சுஷியும் முதல் தரம்.  மீன் கொச்சியிலிருந்து வருகிறது.  தாலியாவின் முதலாளி தவிர மற்ற பணியாளர்கள் அனைவரும் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குத் தெரிந்தவர் ஆகி விட்டார்கள்.  கொரோனாவில் மூன்று ஆண்டுகள் போகவில்லை.  திறந்த பிறகு போனால் 150 மில்லி 1200 ரூ.  இவர்கள் விலை ஏற்றவில்லை.  தோக்கியோவிலிருந்து அனுப்பும் நிறுவனம் விலை ஏற்றி விட்ட்து.  எனக்குத் தாங்காது என்று அன்றே குட்பை சொல்லி விட்டு வந்து விட்டேன். 

சாக்கேயில் என்ன பிரச்சினை என்றால், ஜப்பானில் கிடைக்கும் தரத்துக்கு மலேஷியாவிலோ, தாய்லாந்திலோ மற்ற ஆசிய நாடுகளிலோ கிடைப்பதில்லை. ஃப்ரான்ஸில் மட்டும் மிகத் தரமான சாக்கே குடித்தேன்.  சீலேயில் இல்லை.  இலங்கையிலும் தரமான சாக்கே இல்லை. 

அதனால் ஜப்பான் போனால் ஒவ்வொரு நாளும் சுஷி சாப்பிட்டு, தாகத்துக்கு சாக்கே அருந்தலாம் என்று இருக்கிறேன்.

எனவே அன்னபூரணி, கவலையே வேண்டாம்.  உணவைப் பொருத்தவரை ஜப்பானும், சீனாவும், தாய்லாந்தும், கொரியாவும் என் தாய்நாடுகள்.  சொல்லப் போனால் எல்லா ஆசிய நாடுகளுமே உணவைப் பொருத்தவரை எனக்குப் பிடித்தமான நாடுகளே. 

இலங்கையில்தான் மாட்டிக் கொண்டேன்.  மூன்று வாரமும் கால் வயிறுதான்.  காரம் தாங்கவில்லை.

லெபனானில் மத்திய தரைக் கடல் இருக்கிறது.  மீனாகவே சாப்பிட்டுத் திளைப்போம் என்று இருந்தேன்.  பார்த்தால் லெபனானில் யாரும் கடலில் மீனே பிடிப்பதில்லை.  கடல் அந்த அளவுக்கு மாசு பட்டிருக்கிறதாம்.  நான் அந்த மீன்களை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்து விட்டேன்.  லெபனியர்களுக்கான மீனை அவர்கள் துருக்கி, நார்வே, யு.கே., அர்ஜெண்டினா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்று அறிந்தேன்.  பிறகு நான் அங்கே இருந்தவரை மீனையே நினைக்கவில்லை.

என் தாய்நாடாகக் கருதுவது சீலேயை.  அங்கே நான் இரண்டு வாரம் கொலைப்பட்டினி கிடந்தேன்.  பெரூவில் ஒரு வாரம் நல்ல சாப்பாடு கிடைத்தது.  பெரூவை உலக உணவு விரும்பிகளின் சொர்க்கம் என்பார்கள்.  ஆனால் சீலே அந்த விஷயத்தில் நரகம்.  எங்கு பார்த்தாலும் ஸ்டேக்.  கிராமங்களில்தான் சீலேயின் மரபான சாப்பாடு கிடைக்கும் என்றார்கள்.  நான் கிராமங்களிலும் பயணம் செய்தேன்.  அங்கே உள்ள உணவகங்களிலும் ஸ்டேக்தான்.  பிறகுதான் தெரிந்தது, கிராமத்து வீடுகளில்தான் மரபுச் சாப்பாடு கிடைக்குமாம்.

சமீபத்தில் தி. ஜானகிராமனின் உதயசூரியன் என்ற ஜப்பான் பயண நூலைப் படித்தேன்.  பாவம், அய்யர் சாதியில் பிறந்ததால் முட்டை கூட சாப்பிட முடியாமல் திண்டாடியிருக்கிறார். அசோகமித்திரன் (இன்னொரு அய்யர்) அமெரிக்காவுக்குப் போய் சைவ உணவுக்காகப் பெரும் பாடு பட்டிருக்கிறார்.  தி.ஜா. தான் பட்ட கஷ்டத்தை ஜாலியாக எழுதியிருக்கிறார்.  அசோகமித்திரன்தான் அழுமூஞ்சியாயிற்றே, ஒரே அழுகைதான்.  ஆனால் அதையும் மீறி ஒற்றன் அட்டகாசமான நாவல்.