ஜப்பான்: கனவும் மாயமும் – 8

ஒரு தேசம் என்பதை எப்படி அனுபவம் கொள்கிறோம்? 

நான் இரண்டு விதமாக அணுகுகிறேன்.  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நானும் சீனியும் மற்றொரு நண்பரும் சீலே, மெக்ஸிகோ, கூபா ஆகிய மூன்று நாடுகளுக்கும் செல்கிறோம்.  மெக்ஸிகோவையும் இழுத்துக் கொண்டதற்குக் காரணம், மெக்ஸிகோவின் வடக்கில் உள்ள சியர்ரா மாத்ரே மலைத்தொடர்ச்சியில் தாராஉமாரா (Tarahumara) என்ற மலைவாசி மக்கள் வாழ்கிறார்கள்.  அவர்களின் ஒரு குறிப்பிட்ட  சடங்கை எனக்குக் காண வேண்டும்.  பெயோத்தே சடங்கு என்பது அதன் பெயர்.  பெயோத்தே ஒருவகை கள்ளிச் செடி.  அந்தச் செடியிலிருந்து உருவாக்கப்படும் ஒரு போதைத் திரவம் பெயோத்தே. அந்த மதுவை அருந்தியபடி இரவு முழுவதும் நடனம் ஆடுவதே பெயோத்தே சடங்கு.  இது பற்றி ஓரளவு என்னுடைய ஆர்த்தோ நாடகத்தில் எழுதியிருக்கிறேன். 

உலகம் முழுவதும் எத்தனையோ இனக்குழுக்கள் இருக்கின்றன.  அவர்களின் எத்தனையோ விதமான சடங்குகளும் இருக்கின்றன. ஆஃப்ரிக்க கண்டம் ஒரு மகத்தான உதாரணம்.  அப்புறம் எதற்கு சியர்ரா மாத்ரேவும், பெயோத்தேவும்? 

ஏனென்றால்,

உலகின் பெரும்பகுதியை ஆக்ரமித்தது ஐரோப்பா.  கருத்தளவிலும் ஐரோப்பிய மேட்டிமைவாதம்தான் உலகில் ஓங்கி நின்றது.  தென்னமெரிக்கர்களின் மொழி, மதம், கலாச்சாரம் எல்லாமே ஐரோப்பியரால் அழிக்கப்பட்டது. இதெல்லாம் வரலாறு.

ஆனால் வரலாறு தெரியாத ஒருவர் ஒட்டு மொத்த ஐரோப்பாவையும் எதிர்கொண்டு நின்று, “நீங்கள் எல்லோருமே அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள், ஐரோப்பாவே அழியப் போகிறது, உங்களில் கோடிக்கணக்கான பேர் பிணங்களாக எரிவதை இதோ என் கண்முன்னால் காண்கிறேன், அதைத் தவிர்க்க வேண்டுமானால் இந்த க்ஷணமே உங்களது பொருள்முதல்வாதத்தையும், மேட்டிமைத்தனத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, நிராகரித்து விட்டு, என்னோரு வாருங்கள்.  நான் இயேசு கிறிஸ்துவின் தூதன்.  நான் உங்களுக்கு நல்வழியைக் காண்பிக்கிறேன்.  அது அன்பின் வழி.  அந்த வழி இதோ இந்த இனக்குழு மக்களிடம் இருக்கிறது” என்றார்.  அவர்தான் அந்தோனின் ஆர்த்தோ.  இரண்டாம் உலக யுத்தம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அதை அவர் சொன்னார். பைத்தியம் என்று சொல்லி அவரை பைத்தியக்கார விடுதியில் தள்ளினார்கள். 

அப்படிப்பட்ட ஆர்த்தோவுக்கு மட்டும் எப்படி அந்த தர்சனம் கிடைத்தது?  மெக்ஸிகோவில் சியர்ரா மாத்ரே மலைத்தொடர்ச்சியில் தாராஉமாரா இனக்குழுவினர்தான் நான் அந்த தரிசனத்தை அடையச் செய்தனர் என்கிறார் ஆர்த்தோ.

நாங்கள் செல்லும்போது அந்த பெயோத்தே சடங்கு நடக்கிறதோ இல்லையோ, அந்த சியர்ரே மாத்ரே மலைத்தொடர்ச்சியையாவது பார்த்து விட வேண்டும் என்பது என் கனவு. ஏனென்றால், அந்த மலைகள் தன்னிடம் உரையாடியதாகக் கூறுகிறார் ஆர்த்தோ.  என்ன என்றும் விரிவாக விளக்குகிறார்.

திருவையாறு என்று ஒரு ஊர்.  அந்த ஊருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?  எதுவுமே இல்லை.  தியாகராஜர் என்ற இசை அறிஞர் பிறந்த ஊர் என்று கேள்விப்பட்ட்தோடு சரி.  சங்கீதம் அறிந்தவர்களுக்கு அது ஒரு புனித ஸ்தலம்.  அந்த ஊருக்கு வில்லியம் ஜாக்ஸன் என்ற மேலைநாட்டுக்கார்ர் வருகிறார்.  அவர் ஒரு கர்னாடக சங்கீத ஆராய்ச்சியாளர்.  தியாகராஜர் வாழ்ந்த வீட்டுக்குப் போகிறார்.  தியாகராஜர் வாழ்ந்த வீடு.  அவர் தொட்ட இடம்.  அவர் கால் பட்ட இடம்.  அவர் பாடிய இடம்.  கடவுளையே நேரில் கண்ட்து போல வில்லியம் ஜாக்ஸன் உணர்கிறார்.  அதோடு அந்த நொடியில் அவருக்கு தியாகராஜா பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. 

நான் திருவையாறு போனதில்லை.  ஆனால் வில்லியம் ஜாக்ஸனால் முடியாததை ஜாக்ஸன் என்னிடம் கடத்தினார்.  நான் எழுதுகிறேன்.  இப்போது தியாகராஜர் பிறந்து வாழ்ந்த இடம் – இடம் – எனக்கு எப்படி அர்த்தமாகும்?  ஒரு முஸ்லிமுக்கு மெக்கா எப்படியோ அப்படியாக எனக்குத் தியாகராஜரின் வீடு.  அதுதான் ஒரு இடத்துக்கும் நமக்கும் உள்ள பந்தம்.    

இப்படியாகத்தான் உலகின் பல்வேறு இடங்களோடு நான் பிணைக்கப்பட்டிருக்கிறேன்.

இப்படியாகத்தான் உலகின் பல்வேறு இடங்கள் என் வாழ்வில் அர்த்த முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன.

தோக்கியோவிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள க்யோத்தோ என்ற நகரமும், க்யோத்தோவிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள நாரா என்ற நகரமும் ஜப்பானின் பழைய தலைநகரங்களாக இருந்தவை.  ஜப்பானுக்குப் போகும் அத்தனை பயணிகளும் அந்த இரண்டு நகரங்களையும் பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.  அங்கே உள்ள புராதனமான மடாலயங்கள் மிகவும் பிரபலமானவை.  ஆனால் அந்த நகரங்களோடு நான் எந்த விதத்திலும் பிணைக்கப்பட்டவன் அல்ல.  அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அந்நகரங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  ஆனால் ஜப்பானில் நான் தவற விடக் கூடாத இடம் என்று ஒன்று உண்டு.  அதன் பெயர் தற்கொலைக் காடு.  Aokigahara என்பது அதன் பெயர்.  தோக்கியோவிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.  தற்கொலைக்காட்டிலிருந்து மவுண்ட் ஃபுஜி 60 கி.மீ. தூரம்.

(2022இல் ஜப்பானில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 21881.  ஜப்பான் மக்கள் தொகை பன்னிரண்டரை கோடி.)   

ஒரு ஊர் அல்லது ஒரு தேசத்தோடு எனக்குக் கலாச்சார ரீதியாக எந்த உறவும் இல்லாவிட்டால் நான் அங்கே உள்ள மனிதர்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் என் தோழி ஒருத்தியைச் சந்திக்கச் சென்றேன்.  அதற்கு முன்பு மும்பை சென்றதில்லை.  அந்த நகரம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  மரைன் ட்ரைவ் போகலாமா என்றாள் தோழி.  வேண்டாம், ஒரு தரை மட்டமான லோக்கல் பாருக்குப் போக விரும்புகிறேன் என்றேன்.  அப்படியானால் நான் அங்கே வர முடியாது, என் நண்பன் ஒருவன் இருக்கிறான், அவன் உன்னை அங்கே அழைத்துச் செல்வான் என்றாள்.  ஒரு தரை மட்டமான பாருக்கும், அதற்குப் பிறகு ஒரு டான்ஸ் பாருக்கும் சென்றோம்.  இப்போதெல்லாம் அம்மாதிரி டான்ஸ் பார்கள் மும்பையில் இல்லை என்று நினைக்கிறேன்.  அந்த டான்ஸ் பார்கள் பற்றி ஹிந்தியில் சாந்த்னி பார் என்று ஒரு அருமையான திரைப்படம் கூட வந்திருக்கிறது. 

அங்கே நான் சந்தித்த ஒரு டான்ஸர் பெண் பற்றி ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன்.  நான் எந்த ஒரு அந்நியரைப் பார்த்தாலும் அது ஒரு கதையாகத்தான் மாறுகிறது.  அது எனக்குக் கிடைத்த ஒரு வரம்.

கொழும்பில் பெட்டியோ என்று ஒரு பார் உண்டு.  தமிழர்களுக்குத் தெரியாத பார்.  ஆனால் என்னோடு இலங்கை முழுவதும் சுற்றிக் காண்பித்தத் தமிழ் நண்பர்கள் இலக்கியவாதிகள் அல்ல.  இலக்கியவாதிகளோடு சேர்ந்து கொண்டு ஊர் சுற்றினால் கதை பார்க்க முடியாது.  என் இலங்கை நண்பர்கள் இலக்கியத்துக்கு வெளியே இருப்பவர்கள்.  ஆனால் சூதனமான ஆட்கள்.  பெட்டியோவில் நள்ளிரவுக்கு மேல் அடிதடி நடக்கும் என்றார்கள்.  நாம் ஜாக்கிரதையாக இருந்து அடிதடி ஆரம்பிக்கும்போது ஓடி வந்து விடுவோம் என்றேன்.  சிங்களவரால் நடத்தப்படும் அந்த பாருக்கு சிங்களவர்களே வருகிறார்கள்.  அங்கே நான் சந்தித்த சிங்களப் பெண் நயநதினி சொன்ன கதைதான் பெட்டியோ என்ற 400 பக்க நாவலாக வந்தது. 

கதை கேட்க வேண்டுமானால் மடாலயங்களுக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ செல்லக் கூடாது.  கதை கேட்கத் தகுந்த இடம் மதுபானக் கூடம் மட்டுமே.  அது என்னுடைய அனுபவம்.  ரா. செந்தில்குமாரின் அனுபவமும் அப்படித்தான் இருந்திருக்கும் போல் தெரிகிறது.  அவர் கதைகளில் அசாதாரணமான மனிதர்களையே பார்க்கிறேன்.  அவர்கள் அத்தனை பேரையும் செந்தில்குமாரின் கதைசொல்லி மதுபானக் கூட்த்தில்தான் சந்தித்திருக்கிறார்.

இடங்களோடு தொடர்பு இல்லாத இடங்களுக்குப் போனால் நான் மேலே குறிப்பிட்டவர்களைப் போன்ற மனிதர்களையே சந்திக்க விரும்புவேன்.  உதாரணமாக, ரா. செந்தில்குமாரின் ஷிபுயா க்ராஸிங் கதையில் வரும் இரண்டு அசாதாரணமான மனிதர்கள்.  ரிக்கு, யுகிகோ. இதில் ரிக்கு ஒரு ஹிக்கோமோரி.  சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு அறைக்குள்ளேயே வாழ்பவர்கள் ஹிக்கோமோரிகள்.  ஹிக்கோமோரிகளைப் போலவே நம்முடைய சந்நியாசிகளும் சமூகத்திலிருந்து தம்மைத் துண்டித்துக் கொண்டவர்கள்தான்.  ஆனால் சந்நியாசிகள் விடுதலை அடைந்தவர்கள்.  எல்லாவற்றிலிருந்தும்.  விடுதலையை வாழ்பவர்கள்.  அதனாலேயே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பவர்கள்.  சொல்லப் போனால் மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகளுக்கே அப்பாற்பட்டவர்கள்.  ஆனால் ஹிக்கோமோரிகள் நத்தைகளைப் போல் தம்மை சமூகத்திலிருந்து சுருக்கிக் கொண்டவர்கள்.  அவர்களிடம் ஒரு நோய்மை தெரிகிறது. 

யுகிகோவும் ஒரு அசாதரணமான பாத்திரம்.  செக்ஸ் படங்களில் நடிப்பவள்.

நேற்று ரியூ முராகாமியின் Tokyo Decadence என்ற ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன்.  ரியூ முராகாமியின் கதை.  ரியூ முராகாமியே இயக்கியிருக்கிறார்.  முக்கால்வாசிப் படம் செக்ஸ் படம் மாதிரியே எடுக்கப்பட்டிருந்தாலும் இது மனித உளவியலை ஆய்வு செய்யும் மிகத் தீவிரமான படம் என்பதால் இதை இரண்டு முறை பார்க்க வேண்டியிருந்தது.  செக்ஸ் படம் போல் எடுக்கப்பட்டிருப்பதால் மடிக்கணினியை என் மடியிலேயே வைத்துக் கொண்டு சத்தத்தை அமைதியாக்கி விட்டு யாரும் பார்க்காதபடி, யாரும் கேட்காதபடிதான் இரண்டு முறையுமே பார்க்க நேர்ந்தது.  படத்தில் எந்த ஒளிவு மறைவுமே இல்லை.  நேரடியான காட்சிகள்.  இந்தப் படம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது.  செக்ஸ் படம் போல் எடுக்கப்பட்டிருந்தாலும் மனம் ஒரு நொடி கூட அந்தத் திசையில் செல்லவில்லை.  ஒரு திகில் படத்தைப் போலவும், நாமே சித்ரவதைக்கு ஆட்படுவது போலவும் ஒரு அவல உணர்ச்சியும் அபத்த உணர்ச்சியுமே ஏற்பட்டது. 

இந்தப் படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.  இப்படி ஒரு படத்தை என் சினிமா அனுபவத்தில் பார்த்ததே இல்லை.  இப்படிப்பட்ட வெளிப்படையான காட்சிகள் ஃப்ரெஞ்ச் பெண் இயக்குனர் காதரீன் ப்ரேயாவின் (Catherine Breillat) படங்களில் பார்த்திருக்கிறேன்.  (உ-ம்: ரொமான்ஸ்) ஆனால் ரியூ முராகாமியின் திரைப்படங்கள் காதரீன் ப்ரேயாவின் படங்களை விடத் தீவிரமாகவும், தத்துவார்த்தமாகவும் இருக்கின்றன.  காதரீன் ப்ரேயாவின் படங்கள் பெண்ணின் உடலை மட்டுமே மையப்படுத்துபவை.  ஆனால் ரியூ முராகாமியின் படங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையே தன் கதைக்கருவாக எடுத்துக் கொள்கின்றன.  உளவியல் ரீதியாக ரியூவின் படங்கள் காதரீன் ப்ரேயாவின் படங்களை விட வெகு ஆழமானவை. 

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், தோக்கியோ டிகேடன்ஸ் கதைநாயகியின் பெயர் அய் (அய் என்றால் ஜப்பானிய மொழியில் அன்பு, காதல்).  22 வயது பாலியல் தொழிலாளி. 

எனக்குக் கலாச்சாரத் தொடர்பு இல்லாத இடங்களில் அந்த இடங்களை விட, ஊர்களை விட, ஆலயங்களை விட, அரண்மனைகளை விட, பூங்காக்களை விட இது போன்ற மனிதர்களைச் சந்திப்பதையே முக்கியமாகக் கருதுகிறேன்.  ஆனால் இப்படிப்பட்ட சந்திப்புகளை யாரும் திட்டமிட முடியாது.  அது அதன் போக்கில் நடந்தால்தான் உண்டு.  ஆனால் இப்படியான மனிதர்களை நாம் எங்கே சந்திக்க முடியும் என்பதில் கவனம் வேண்டும்.