ஜப்பான்: கனவும் மாயமும் (9): தோக்கியோ டிகேடன்ஸ் (1992) என்ற மாஸ்டர்பீஸ்

இதுவரை நான் பார்த்த எந்தத் திரைப்படத்திலும் இதில் உள்ளது போன்ற நேரடியான பாலியல் காட்சிகள் இருந்தது இல்லை.  செக்ஸ் தளங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளின் narrative எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இப்படத்தின் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன.  ஆனால் செக்ஸ் படங்களில் ஒரே ஒரு அர்த்தமும் ஒரே நோக்கமும்தான் இருக்கும்.  தோக்கியோ டிகேடன்ஸில் அந்த அர்த்தமும் நோக்கமும் இல்லாமல் பல்வேறு பரிமாணங்கள் அடுக்கடுக்காகச் சென்று கொண்டே இருக்கின்றன.

அய் என்ற இருபத்திரண்டு வயதுப் பெண்ணை அவள் காதலன் புறக்கணித்து விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.  அதனால் விரக்தியடையும் அய், எஸ் அண்ட் எம் (Sadomasochist) விபச்சாரத்தில் நுழைகிறாள்.  மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் எஸ் அண்ட் எம் கிளப்புகள் உண்டு.  ஜப்பானிலும் உண்டு.  அதிலும் 1950களிலிருந்தே ஜப்பானில் அத்தகைய கிளப்புகள் உண்டு என்று தெரிகிறது.  யுகியோ மிஷிமா அப்படி சில எஸ் அண்ட் எம் கிளப்புகளில் இருந்திருக்கிறார்.  தோக்கியோ டிகேடன்ஸ் படத்தில் வரும் எஸ் அண்ட் எம் கிளப் ஏஜெண்ட் வாடிக்கையாளர்களிடம் கேட்கும் வழக்கமான கேள்வி, நீங்கள் எஸ்ஸா, எம்மா என்பது.  எஸ் என்றால் ஸேடிஸ்ட் ரோல்.  எம் என்றால் மஸாக்கிஸ்ட் ரோல்.  அதற்குத் தகுந்த மாதிரி எஸ் அண்ட் எம் பாலியல் தொழிலாளிகளை அனுப்புவார்கள். 

யுகியோ மிஷிமா ஒரு நேர்காணலில் தன்னுடைய எஸ் அண்ட் எம் கிளப் அனுபவங்களைச் சொல்கிறார்.  ”அப்போது அங்கே ஒரு ”எஸ்” பெண் – பல பெண்கள் எஸ்ஸாகவே இருக்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறேன் – என் முகத்தின் மீது சிறுநீர் கழிக்கச் சொன்னாள்.  அது மட்டும் என்னால் முடியவில்லை.”

மிஷல் ஃபூக்கோவும் பாரிஸில் எஸ் அண்ட் எம் கிளப்பில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.  ஃபூக்கோ எஸ் அல்ல; எம்.  BDSM என்று சொல்வார்கள்.  Bondage, Domination, Sadism, Masochism.  பாண்டேஜில் முக்கியச் செயல்பாடு கை கால்களை கயிற்றினால் கட்டி விட்டு கலவி கொள்வது.  டாமினேஷன் என்பதை உங்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.  இருவரில் ஒருவர் ஆக்ரமிப்பாளராக இருப்பார்.    

தோக்கியோவில் உள்ள எஸ் அண்ட் எம் கிளப்புகள் பெரும்பாலானவற்றில் அந்நிய நாட்டவருக்கு அனுமதி இல்லை. இனவாதம் காரணம் அல்ல.  அந்நிய நாட்டவரால் வீணான பிரச்சினைகள் கிளம்புகின்றன.  மொழி வேறு முக்கியமான பிரச்சினை. ஆனால் மிகச் சில எஸ் அண்ட் எம் கிளப்புகளில் அந்நிய நாட்டவருக்கு அனுமதி உண்டு.  அவை கின்ஸாவில் உள்ள பிளாக் ஹார்ட், கபூகிச்சோவில் உள்ள Titty Twister, Bar Ubu (பாண்டேஜ்-கயிறு) மற்றும் Mitsu (femdomme oriented). 

உங்களில் சிலர் ”இத்தனை வக்கிரமாகவா இருக்கிறது ஜப்பான்?” என்று கேட்கலாம். ஜப்பானிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எஸ் அண்ட் எம் கிளப்புகள்தான் இருக்கின்றன.  பணக்காரர்கள் மட்டுமே அவற்றின் “சேவை”யைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  ஏழைகளும், மத்தியதர வர்க்கமும் அங்கே பாலியல் தொழிலாளியாக மட்டுமே பணியாற்ற முடியும்.  ஆனால் இந்தியாவில் அப்படித் தனிப்பட்ட எஸ் அண்ட் எம் கிளப்புகள் இல்லை.  இந்திய தேசமே வர்க்க பேதம் இல்லாமல் எஸ் அண்ட் எம் கிளப்பாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  நம்ப முடியவில்லையா?  அன்பு நாவலைப் படித்துப் பாருங்கள்.  ஒரு எழுத்தாளன் தன் வாழ்நாள் முழுவதும் எஸ் அண்ட் எம் கிளப்பிலேயே வாழ்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். பெருமாளுக்குக் கொக்கரக்கோவிடமிருந்து ஃபோன் வருகிறது.  பெருமாளின் மனைவி வைதேகி ஃபோனை எடுத்து “இனிமேல் நீங்கள் பெருமாளுக்கு ஃபோன் பண்ணாதீர்கள்” என்று சொல்லி ஃபோனைத் துண்டிக்கிறாள்.

பெருமாள் தொலைபேசியில் அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளரிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது வைதேகி  “யாரிடம் பேசுகிறாய்?” என்கிறாள்.  அதற்குப் பதில் சொல்லி விட்டுத்தான் தன் தொலைபேசி உரையாடலைத் தொடர்கிறான் பெருமாள்.    

கொக்கரக்கோ பெண் அல்ல.  ஆண்.  அவன்தான் உங்கள் வலது கரம்.  ஆனாலும் அவனோடு உங்களால் பேச முடியாது.  பேச அனுமதி இல்லை. பெருமாளின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?   உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விடுவீர்கள்.  ஆனால் பெருமாள் ஒரு எம் (மஸாக்கிஸ்ட்).   ஆகவே அவன் அமைதி காத்து விடுகிறான்.

அதே வைதேகி ஒரு நாளில் பத்து மணி நேரம் எம்மாகவும் வாழ்கிறாள்.  பெருமாளிடம் அல்ல.  அப்படி வாழ்ந்தால் பெருமாள் எஸ்ஸாகி விடுவானே?  அந்தக் கொடுப்பினை பெருமாளுக்குக் கிடையாது. 

சமீபத்தில் ஜெயமோகன் எத்தனை சிநேகபூர்வமானவர் என்று எங்கள் நண்பர்களுக்கிடையில் ஒரு பேச்சு வந்த்து.  எல்லோருமே ஜெ. இனிமையும் சிநேகமும் கலந்தவர் என்று முடிவு சொன்னார்கள்.  ஒரே ஒருவர் மட்டும் சமீபத்தில் செல்வேந்திரன் எழுதியதை மேற்கோள் காட்டினார்.  ஜெயமோகனை எரிச்சலூட்டினால் கடித்து விடுவார்.   ஆனால் பெருமாளின் வாழ்வில் எப்படி நடக்கும் தெரியுமா?  பெருமாளின் வாசகர்கள்தான் அவனைக் கடிப்பார்கள்.  அதனால் பெருமாளை ஒரு நிரந்தர எம். என்றே சொல்ல வேண்டும். 

சரி, வைதேகி எப்படி ஒரு நாளில் பத்து மணி நேரம் எம்மாக வாழ்கிறாள்?  தினமும் பத்து மணி நேரம் அவள் தமிழ் டீவி சீரியல் பார்க்கிறாள்.  தமிழ் சீரியல் பார்க்கும் அத்தனை பேரும் ’எம்’கள்தான். 

சமீபத்தில் அபிலாஷ் சந்திரன் எழுதியிருந்தார்.  எழுத்தாளன் தன் ஜீவனோபாயத்துக்காக டீவி சீரியலில் வசனமும் எழுதலாம் என்று.  அப்படி எழுதி மனநோய் விடுதியில் அட்மிட் ஆன நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும்.  இப்போது சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்து விட்டார். அபிலாஷ் என்னைத் தொடர்பு கொண்டால் அவர் தொலைபேசி எண் தருகிறேன்.  அவரிடம் பேசிப் பார்க்கட்டும்.  என்னைப் பொருத்தவரை தோக்கியோ டிகேடன்ஸ் படத்தில் வரும் நாயகி அய் என்னென்ன செய்கிறாளோ அதையெல்லாம் செய்வதுதான் டீவி சீரியலுக்கு வசனம் எழுதுவது.  அதை எழுதுபவன் எம் மட்டும் அல்ல, அவன் எஸ் அண்ட் எம்.  அதைப் பார்ப்போர் ’எம்’ பிரிவில் வருவார்கள்.

அவ்வப்போது சீரியல் வசனங்கள் என் காதில் விழும்.  மலத்தைக் கரைத்து வாயில் ஊற்றியது போல் இருக்கும்.  ஒரு உதாரணம் தருகிறேன்.  சீரியல் பெயர் தெரியவில்லை. 

“ஏன் சுரேஷ், லட்சுமி வீட்டுக்குத்தானே போய்ட்டு வரீங்க?”

பின்னணியில் – நீங்கள் மார்வலின் அயன் மேன் பார்த்திருக்கிறீர்களா?  அதில் வரும் சங்கீதம் ஒலிக்கிறது.

இப்போதும் அதே பெண்.  “ஏன் சுரேஷ், லட்சுமி வீட்டுக்குத்தானே போய்ட்டு வர்ரீங்க?  உண்மையைச் சொல்லுங்க… ப்ளீஸ் உண்மையைச் சொல்லுங்க… கெஞ்சிக் கேட்கிறேன்… உண்மையைச் சொல்லுங்க…

அயன் மேன் சங்கீதம்…

சுரேஷ், சொல்லிடுங்க… ப்ளீஸ்… லட்சுமி வீட்டுக்குத்தானே போனீங்க?  சொல்லுங்க… சொல்லிடுங்க…

அயன்மேன் சங்கீதம்…

சொல்ல்ல்ல்ல்ல்ல்லுங்க…… ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஸ்….. லட்சுமி வீட்டுக்குத்தானே போய்ட்டு வர்ர்ர்ர்ர்றீங்க… சுரேஷ்… உங்களைத்தான் கேட்கிறேன்… வாயைத் திறந்து சொல்லுங்கள்…

அயன்மேன் சங்கீதம்…

சுரேஷ்… சுரேஷ்… சொல்லுங்க… சொல்லுங்க… வாயைத் திறந்து சொல்லுங்க… சொல்லுங்க சுரேஷ்…

அயன்மேன் சங்கீதம்…

லட்சுமி வீட்டுக்குத்தானே போனீங்க… லட்சுமி வீட்டுக்குத்தானே போனீங்க… உங்க கால்ல விழுந்து கேட்கிறேன்… எங்கே போனீங்க… சொல்லுங்க… சொல்லுங்க… சொல்லுங்க… சுரேஷ்…

அயன்மேன் சங்கீதம்…

அயன்மேன் சங்கீதம்…

அயன்மேன் சங்கீதம்…

மாப்ளே… சங்கீதா இவ்ளோ கெஞ்சிக் கேட்கிறாள்ள… எங்கே போனீங்க… மாப்ளே… எங்கே போனீங்க… சொல்லிடுங்க மாப்ளே…

அயன்மேன் சங்கீதம்…

கேளுங்கப்பா… நல்லா கேளுங்கப்பா… நீங்களும் ஒரு ப்ரொட்யூசர்தானே… நீங்க சொல்லுங்க… டப்பிங்னா எவ்ளோ நாள் இருக்கும்?  ஒரு மூணு நாள்… ஒரு நாலு நாள்… சரி… ஒரு வாரம்… பத்து நாள்… சரி… பதினஞ்சு நாள்… ஆனா சுரேஷ் ஒரு மாசமா டப்பிங் டப்பிங்னு போறாருப்பா… கேளுங்கப்பா… கேளுங்கப்பா… ஒரு மாசமாவா டப்பிங் இருக்கும்… கேளுங்கப்பா…

அயன்மேன் சங்கீதம்…

நிச்சயம்… நிச்சயம்… நிச்சயம் சுரேஷ் அந்த லட்சுமி வீட்டுக்குத்தான் போய்ட்டு வரார்… எனக்குத் தெரியும்…

நம்ப மாட்டீர்கள் மக்களே… இப்படியே அந்த நடிகை ஒரு பதினைந்து நிமிடம் கத்திக் கொண்டே இருந்தாள்.  இதற்கு வஜனம் எழுதினால் ஒன்றும் பாதகமில்லை என்கிறார் அபிலாஷ்.  அடப்பாவிகளா!  ஒன்று, அபிலாஷ் டீவி சீரியல் பார்த்த்தில்லை.  இரண்டு, அவர் டீவி சீரியலுக்கு எழுதியதும் இல்லை. 

அது போகட்டும், இப்படியே பத்து மணி நேரம் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை எம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

தோக்கியோ டிகேடன்ஸ் படம் முழுக்கவும் அய் ஒரு புகைப்படத்தை வைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். சிறுமி அய்யும் அவள் அம்மாவும்.  இழந்து போன அவளது களங்கமற்ற சிறுவயது வாழ்க்கைக்கான ஏக்கம்.

படத்தில் வரும் காட்சிகள் ஒரு செக்ஸ் படத்தைப் போல் இருந்தாலும் அய்யின் பாத்திரம் அந்த மேட்டுக்குடி மனிதர்களின் செய்கைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.  படம் முழுக்கவும் உறக்கத்தில் நடப்பவளைப் போலவே இருக்கிறாள் அய். யார் என்ன சொன்னாலும் உடனுக்குடன் கேட்பவளாகவே இருக்கிறாள்.  இறுதிக் காட்சியில் நடக்கும் ஒரு சம்பவத்தினால்தான் அவளுடைய ஆளுமையில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.   

எஸ் அண்ட் எம் கிளப்புகளின் முக்கியமான அங்கம் அவற்றின் இரும்பு மற்றும் தோல் தளவாடங்கள்.  படத்தின் முதல் காட்சியில் அம்மாதிரியான ஒரு எந்திரத்தில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறாள் அய்.           

உடலின் பல பாகங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  Bondage.  பிறகு வாடிக்கையாளன் அவள் கண்களையும் வாயையும் கட்டுகிறான்.  அதுவரை வாயே திறக்காத அவள் கண்களைக் கட்டாதீர்கள் என்கிறாள்.  ”பயப்படாதே, உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன்.  என்னை நம்பு.  நம்பிக்கைதான் எஸ் அண்ட் எம் விளையாட்டின் அடிப்படை” என்று சொல்லிக் கொண்டே அவள் கண்களையும் வாயையும் கட்டுகிறான்.   தொடையில் ஒரு ஊசியையும் போட்டு உடல் முழுக்க வருடி விட்டபடி ”உன்னைப் போன்ற தைரியமான பெண்கள்தான் இந்த அழுகிப் போன ஜப்பானின் ஒரே நம்பிக்கை” என்கிறான். ”நீ மற்ற தேவடியாள்களைப் போல் இல்லை.  மற்ற பெண்கள் கல்லூரியில் படிக்கும்போது தேவடியாள்தனம் பண்ணி காசு சேர்த்து விட்டு பிறகு டாக்டர்களையும் எஞ்ஜினியர்களையும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறாள்கள், நீ அப்படித் தெரியவில்லை” என்கிறான்.

இந்தப் பாத்திரத்தில் நடிப்பவர் மஸாஹிகோ ஷிமாதா என்ற எழுத்தாளர்.  ரியூ முராகாமியின் நண்பர். 

மற்றொரு காட்சி.  எஸ் அண்ட் எம் கிளப்பிடம் ஒரு Sub ஆண் இரண்டு Dom பெண்கள் வேண்டும் என்று கேட்கிறான் ஒரு வாடிக்கையாளன். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி அய்.  பைத்தியம் போலவே பேசும் அவன் தன் கழுத்தை இறுக்கக் கட்டச் சொல்கிறான்.  கழுத்து நரம்புகள் புடைத்து கண்கள் பிதுங்கினால் விந்து வெளியாகும்.  அதுதான் தனக்கு ஆர்கஸம் என்கிறான்.  வலியின் காரணமாக நிறுத்து நிறுத்து என்று கத்தினால் மேலும் இறுக்கு என்று பொருள் என்று விளக்குகிறான்.  முதல் தடவையில் எஸ் பெண் அவன் நிறுத்து நிறுத்து என்று கத்தியதும் பயந்து போய் நிறுத்தி விடுகிறாள்.  உடனே அவன் ”இப்படிச் செய்தால் நான் பணம் தர முடியாது, உன் மீது புகார் செய்து விடுவேன்” என்று மிரட்டுகிறான்.  எஸ் அண்ட் எம் கிளப்புகளில் பணிபுரியும் பாலியல் தொழிலாளிகளின் மிகப் பெரிய பிரச்சினை இதுதான்.  வாடிக்கையாளர்களின் புகார்.  கொஞ்சம் சிணுங்கினாலும் வாடிக்கையாளர்கள் புகார் செய்து விடுவார்கள்.  புகார் செய்தால் அடுத்த முறை அந்தப் பெண்ணையோ ஆணையோ (ஆம், பெண் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் ஆண் பாலியல் தொழிலாளர்களும் உண்டு) அழைக்க மாட்டார்கள். 

எனவே அடுத்த முறை அவன் நிறுத்து நிறுத்து என்று கத்தும்போது கயிற்றைக் கழுத்தில் பலமாக இறுக்குகிறாள் எஸ் பெண்.  வாடிக்கையாளனுக்கு விந்தும் சிறுநீரும் வெளியாகிறது.  எஸ் பெண் கழுத்தில் கயிறை இறுக்குவதை உடனடியாக நிறுத்துகிறாள்.  ஆனால் அதற்குள் அவன் இறந்து விடுகிறான்.  எந்தத் தடயத்தையும் விட்டு வைக்காமல் கிளம்பி விடுங்கள் என்கிறாள் கிளப் மேனேஜர்.  இவர்கள் கிளம்பிக் கொண்டிருக்கும்போது உயிர் பிழைத்து எழுகிறான் வாடிக்கையாளன்.    

அடுத்த காட்சி.

அய்யிடம் எஸ் அண்ட் எம் மேனேஜர் ஒரு வீட்டுக்குப் போகச் சொல்கிறாள்.  அதற்கு முன்னதாக வாடிக்கையாளரிடம் கேட்கிறாள், நீங்கள் Domஆ?  Subஆ? (டாமின்ண்டா?  சப்மிஸிவா?)   

வாடிக்கையாளரான சாக்கி சொல்கிறாள்.  ”எனக்கு ஒரு sub ஆணும், dom பெண்ணும் தேவை.  ஆமாம், த்ரீஸம்.”

அங்கே அய் டாமின்ண்ட்.  ஆண் சப்மிஸிவ்.  அய் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்க அதை அந்த சப் ஆண் நாய் மாதிரி நாலு கால் போட்டு நக்கிக் குடிக்கிறான்.  அவன் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன.  ஏற்கனவே குறிப்பிட்டேன்.  தோக்கியோ டிகேடன்ஸில் எல்லா காட்சிகளும் தத்ரூபமாக நிகழ்த்தப்படுகின்றன.  எந்தக் காட்சியும் சூசகமாக இல்லை. 

Lesbian Domஆன சாக்கியின் வீட்டில் நடக்கும் காட்சிகளையும் பேசப்படும் வசனங்களையும் என்னால் இங்கே வார்த்தைப்படுத்த இயலாது என்றே நினைக்கிறேன்.  அதனால் கொஞ்சம் கதையில் புகலிடம் தேடுவோம்.

தோக்கியோ டிகேடன்ஸ் என்பது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.  அந்தத் தொகுப்பில் வரும் தோப்பாஸ் என்ற சிறுகதைதான் தோக்கியோ டிகேடன்ஸ் என்ற இரண்டு மணி நேரத் திரைப்படம். 

மீதி நாளை…