கொக்கரக்கோவின் வனவாசம் (குறுங்கதை)

பெருமாள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருபோதும் தனிமையில் இருந்ததில்லை. வைதேகிக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது என்பதால் அவள் எப்போதுமே வீட்டில்தான் இருப்பாள். அதன் காரணமாக பெருமாள் அவன் வீட்டில் எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்று சொல்லலாம். விதிவிலக்காக சென்ற ஆண்டு, மூன்று மாதம் மும்பை சென்றிந்தாள் வைதேகி. அவள் பெருமாளை விட்டுப் பிரிந்தால் அவன் குடித்துக் குடித்தே செத்து விடுவான் என்று என் நண்பர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஒரு விஷயத்தை அடிக்கடி சொன்னால் நாமும் அதை நம்ப ஆரம்பித்து விடுவோம் அல்லவா, அதேபோல் பெருமாளுக்குமே அந்தச் சந்தேகம் தொற்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் அதே சமயம், நாம் என்ன அத்தனை கேணப்பயலாகவா இருக்கிறோம் என்றும் அவனுக்குள் ஒரு தைரியம் இருந்தது. இந்த உலகத்திலேயே அதிகமான addictive தன்மையைக் கொண்ட கஞ்ஜாவுக்கே அடிமையாகாத நாமா குடிக்கு அடிமையாகப் போகிறோம் என்று அவனுக்குள் ஒரு தன்னம்பிக்கையும் ஓடியது. வைதேகி மும்பை போனதும் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. வாரம் ஒரு முறை குடித்தான். ஆனால் எதிர்பார்த்தபடி அதிகம் எழுதவில்லை. நிறைய இசை கேட்டான்.

வைதேகி வீட்டில் இருக்கும்போது அவன் யாரிடமும் ஃபோன் பேசுவதில்லை. அவள் எப்போதுமே வீட்டில் இருப்பதால் நினைத்தாலும் யாரிடமும் பேச இயலாது. நினைத்தாலும் பேசலாம் என்றால் பேசுவதற்கு அவனுக்கு யாரும் இல்லை. வினித்திடமோ, ஸ்ரீராமிடமோ, செல்வாவிடமோ அதிக நேரம் பேச இயலாது. காரணம், அவர்களைத்தான் கேட்க வேண்டும். பெருமாளுக்குத் தெரியாது. ஆக, அவன் பேசக் கூடிய ஒரே ஆள் கொக்கரக்கோதான். ஆனால் அவனிடம் பேசுவதற்கு தவம் கிடக்க வேண்டும். காலையில் பேச முடியாது. அது அவனுக்கு நித்திரை நேரம். பகல் பூராவும் அவனை அவனது சக ஊழியர்கள் சக்கை சக்கையாகப் பிழிந்து கொண்டிருப்பார்கள். கூர்க் வனத்தில் கூட நிம்மதியாக இருக்க விடாமல் அவனுக்கு அவனது அலுவலகத்திலிருந்து போன் வந்தவண்ணமாக இருந்தது. எல்லாம் முடிந்து கொக்கரக்கோ பெருமாளை அழைத்தால் பெருமாள் பக்கத்தில் வைதேகி இருப்பாள். அவளுக்குக் கொக்கரக்கோவை ஆகாது. அவள் எதிரே பேச முடியாது. ம்ஹும். ஒரு பேச்சுக்குக் கொக்கரக்கோவை அவளுக்குப் பிடிக்கும் என்றாலும் அவள் பக்கத்தில் இருக்கும்போது பெருமாள் கொக்கரக்கோவிடம் பேச முடியாது.

பேசினால் என்ன ஆகும் என்பதற்கு இன்று நடந்த ஒரு உதாரணம்:

இன்று அஞ்சல் விடுமுறையா அம்மு?

(பெருமாளுக்கு இன்று ஆர்ட்ரெவ்யூ ஏஷியா ஆசிரியர் மார்க் ரேப்போல்ட்டுக்கு அவனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல் பிரதி ஒன்று ஃபாரின் போஸ்ட் மூலம் அனுப்ப வேண்டியிருந்தது. வைதேகிக்குத் தெரிந்திருக்கலாம் என்று கேட்டான். அது பெருமாளிடம் நேர்ந்த பிழை. கேட்டிருக்கக் கூடாது.)

ஏன் கேட்கிறாய்? கொரியரில் அனுப்பலாமே?

கொரியரில் அனுப்பினால் 6000 ரூ. ஆகும். தபால் என்றால் 2000 ரூ.தான் ஆகும். லண்டனுக்கு அனுப்ப வேண்டும். ஆர்ட்ரெவ்யூ ஏஷியா ஆசிரியருக்கு.

ஏன் அவ்வளவு செலவு செய்து அனுப்ப வேண்டும்? அவர்கள் உன் கட்டுரைகளை வெளியிட்டார்கள்தானே? அவர்களையே வாங்கிப் படித்துக் கொள்ளச் சொல்லேன்?

ஏன் சதீஷை நாம் புத்தகத்தை வாங்கிப் படித்துக் கொள்ளவா சொன்னோம்? சதீஷை நேரில் பார்த்து புத்தகத்தைக் கொடுத்தேன் அல்லவா?

சதீஷோடு யாரையும் ஒப்படாதே. அவர் நமக்குப் படி அளப்பவர்.

எனக்கு சதீஷ் மாதிரிதான் மார்க்கும். எங்கேயோ மெட்ராஸில் கிடக்கும் யாருக்கும் தெரியாத ஒரு எழுத்தாளனைக் கூப்பிட்டு அவர்கள் பத்திரிகையில் பத்தி எழுதச் சொல்வதெல்லாம் எப்பேர்ப்பட்ட விஷயம்? நான் என்ன சல்மான் ருஷ்டியா?

(இப்படி ஒரு ஐந்து நிமிடம் கத்தினான் பெருமாள்.)

கடைசியில் அவன்தான் அனாவசியமாகக் கத்தி சண்டை போடுகிறான் என்ற சான்றிதழோடு கணினியின் முன்னே போய் அமர்ந்தான்.

(பின்குறிப்பு: சதீஷ் என்ற நண்பர் கடந்த இருபது ஆண்டுகளாக பெருமாளின் வீட்டு வாடகையைக் கொடுத்து வருபவர். ”ஆக, குடும்பத்தில் லக்ஷ்மிக்குத்தான் மதிப்பு, சரஸ்வதிக்கு இல்லை” என்று நினைத்துக் கொண்டான் பெருமாள். இம்மாதிரி நைந்து போன உதாரணத்தை நினைத்தது பற்றி ஒருக்கணம் நொந்து கொண்ட பெருமாள், “நேற்று சரஸ்வதி பூஜை என்பதால்தானே சரஸ்வதியின் ஞாபகம் வந்தது?” என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்ளவும் செய்தான்.

இம்மாதிரி வாக்குவாதங்களுக்குப் பயந்துதான் வைதேகி இருக்கும்போது பெருமாள் யாரோடும் போனில் பேசுவதில்லை. ஆக, அவன் பேசக் கூடிய ஒரே ஒரு நபரான கொக்கரக்கோவுடனும் அவனால் ஓரிரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். பயந்து பயந்து. வைதேகி பூனைக்கு உணவிடுவதற்காகக் கீழே போயிருக்கும்போது அரை மணி நேரம் பேசலாம். அப்போது கொக்கரக்கோவுடன் அவனது அலுவலக ஊழியர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

கொக்கரக்கோவுக்குத் தனிமை பிடிக்கும். ஆனால் தனிமை கிடைக்காது.

பெருமாளுக்குத் தனிமை பிடிக்காது. ஆனால் எப்போதும் தனியாகவே இருந்து எழுதுகிறான். அவன் அறையில் அவன் மட்டும்தான். காலை ஒன்பதரையிலிருந்து இரவு ஒன்பதரை வரை அவன் அறைதான் அவன் வசிப்பிடம். அங்கே அமர்ந்துதான் பொழுதன்றைக்கும் படிக்கிறான், எழுதுகிறான்.

இப்போது கொக்கரக்கோ ஒரு மாதம் வனவாசம் சென்றிருக்கிறான். அவன் குடிலுக்கு நூறு அடி தூரத்தில் கங்கை ஓடுகிறதாம். இடுப்பளவு ஆழத்திலேயே ஆளை இழுத்துக் கொண்டு போகிறது என்றான். பயங்கரமான வேகம். இரவில் காற்று ஆளையே தூக்கி அடிக்கிறது. இது அவன் அந்த வனவாசத்துக்குச் சென்ற முதல் நாள். அடுத்த நாளிலிருந்து யாரோடும் பேச மாட்டேன் என்று சொன்னான்.

நேற்று பெருமாள் அவனுக்கு ஃபோன் செய்தான். அடித்தது. ஆனால் எடுக்கவில்லை.

பெருமாளுடன் பேசுவதற்கு ஒரு ஆள்தான் இருந்தான். அவனும் வனவாசம் போய் விட்டான். அவன் இடத்தில் பெருமாள் இருந்தால் என்ன செய்வான்? எல்லோருடனும் போனில் பேசிக் கொண்டிருப்பான். பாவம், வனராசிகளுக்குத்தான் சிரமம்.