அநேகமாக இன்றோ நாளையோ பெட்டியோ என்.எஃப்.டி.யில் கிடைக்கும். முதலில் பத்து பிரதிகள் வெளிவரும். முதல் பிரதி இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ஒரு லட்சம் ரூபாய். இந்தப் பணம் அவ்வளவும் என்னுடைய ஃபெப்ருவரி மாத தென்னமெரிக்கப் பயணத்துக்கு உதவும். ஒன்றரை மாதப் பயணம். ஃப்ரான்ஸ், ஸ்பெய்ன், கொலம்பியா, சீலே. சாந்த்தியாகோ (சீலே) நகரிலிருந்து மேற்கே கிட்டத்தட்ட 4000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராப்பா நூயி என்ற தீவுக்கும் செல்கிறோம். ராப்பா நூயியை அங்கே உள்ளவர்கள் ஈஸ்டர் அயலண்ட் என்று அழைக்கிறார்கள். இங்கே வெறும் 5000 பேர்தான் வசிக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னே இங்கே சென்ற ஒரு மன்னனின் குடும்பம்தான் ஐயாயிரமாகப் பல்கியிருக்கிறது. மற்றபடி சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். உலகின் கடைசியில், உலகின் மேற்குக் கோடியில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய தீவு. இந்தத் தீவுக்கு மேல் எதுவும் இல்லை.
முடிந்தவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பெட்டியோவை வாங்குங்கள். நூறு பிரதிதான் வெளிவருகிறது என்பதால் அடுத்த ஆண்டு இதற்கு சந்தை மதிப்பு கூடும். அப்போது விற்று விடலாம். இந்தக் காரணத்தை விட என் தென்னமெரிக்கப் பயணத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் என் அருகே நிற்கிறீர்கள் என்பதே அதிக முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கும். உங்கள் நிதிநிலை ஒத்துழைத்தால் வாங்குங்கள்.
இந்த நாவலை வடிவமைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபத் இரவு பகலாக இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இன்று காலை மாதிரிப் படிவத்தை அனுப்பிக் காண்பித்தார். பிரமாதமாக இருந்தது. அநேகமாக நாளை வெளிவந்து விடும்.