என்னைப் பற்றிய விவரக் குறிப்பில் ஆங்கிலத்தில் cult writer in Tamil என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கல்ட் என்பதை பொதுவாக தவறான பொருளிலேயே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். காரணம், அந்த வார்த்தை பெரும்பாலும் ஆன்மீக சம்பந்தம் கொண்டிருக்கிறது. ஓஷோ ஒரு கல்ட். ஜக்கியை என்னால் கல்ட் என்று சொல்ல முடியவில்லை. அவர் ஒரு யோகா குரு. அவ்வளவுதான். கல்ட் என்றால் அந்த கல்ட் மனிதனின் சிந்தனை மற்றவர் வாழ்வின் அனைத்து அம்சங்களோடும் ஊடாடி ஊடுருவி இருக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் இதுவரை அப்படிப்பட்ட கல்ட் எழுத்தாளர்கள் உருவானதில்லை. ஜெயகாந்தன் என்று நீங்கள் சொல்லலாம். எனக்கு உடன்பாடு இல்லை. அவர் ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டவர். அவர் காலத்திலேயே அவர் எழுத்தைத் தூக்கிச் சாப்பிடுவது போல அசோகமித்திரன் ஏராளமாக எழுதினார். சுஜாதாவையும் கல்ட் என்று சொல்ல முடியாது. சொன்னால் ரஜினியையும் சொல்ல வேண்டும். கேளிக்கையாளர்களையெல்லாம் கல்ட் பட்டியலில் சேர்க்க முடியாது. நிச்சயமாக ஓஷோ ஒரு கல்ட்டாக இருந்தவர். இப்போதும் இருந்து கொண்டிருப்பவர். இதனால் எனக்கு ஓஷோவைப் பிடிக்கும் என்று நினைத்து விடாதீர்கள். கருத்து சொல்லும் அளவுக்கு நான் ஓஷோவைக் கேட்டதில்லை, படித்ததும் இல்லை. பொதுவாக ஆன்மீகவாதிகள் மீது எனக்கு இருக்கும் ஒவ்வாமை காரணமாக இனிமேலும் நான் ஓஷோவின் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேன். ஆனால், எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஓஷோ ஒரு கல்ட் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழ் இலக்கியத்தில் கல்ட் எழுத்தாளர்கள் ஏன் இதுவரை உருவாகவில்லை? காரணம், மனித வாழ்வின் அத்தனை அம்சங்களோடும் ஊடுருவக் கூடிய அளவுக்குப் பரந்து பட்ட அளவில் தமிழ் எழுத்தாளர்கள் சிந்திக்கவில்லை. உதாரணமாக, அசோகமித்திரன் இசை பற்றியோ, சர்வதேச சினிமா பற்றியோ, தத்துவம் பற்றியோ, அரசியல் பற்றியோ எழுதியதில்லை. அரசியல் பற்றி எழுதினால் காமன்மேன் மாதிரி உளறுவார். புதுமைப்பித்தனின் இசையறிவோ ஒரு பாமரனின் இசை அறிவுக்கு ஒப்பானது. அவர் காலத்தில் மேதையாக வாழ்ந்த ஒரு நாகஸ்வரக் கலைஞனை தன் அறைக்கு அழைத்து வாசிக்க வைத்து, கடைசியில் லும்பன்களைப் போல் பீப்பீ என்று அவருக்கு முன்னே தன் வாயால் ஊதிக் காண்பித்தவர் நம் புதுமைப்பித்தன். எழுத்தில் மேதையாகத் திகழ்ந்தவர் இசையில் லும்பன்.
இந்தப் பின்னணியில் கடந்த முப்பது ஆண்டு வரலாற்றில் தமிழில் இரண்டு கல்ட் எழுத்தாளர்கள் உருவானார்கள். அதில் ஒருவன் அடியேன். இன்னொருவர் யார் என்று சொல்ல வேண்டியதில்லை.
கல்ட் என்பது சமூகத்தில் நன்மை தரக் கூடியதாகவும் அமையும்; கல்ட்டாகத் திகழ்பவனை ஒரு வழிகாட்டி என்று எடுத்துக் கொண்டால். திக்குத் தெரியாத வனத்தில் இருக்கிறீர்கள். அப்போது அந்த வனத்தில் வசிக்கும் ஒருவன் உங்களுக்கு வழிகாட்டியாக அமைவதைப் போன்றது அது. ஆனால் மூளைச் சலவை செய்து உங்களை பொம்மைகளைப் போல் ஆக்கும் ஆன்மீக இயக்கங்கள் அனைத்துமே சமூக விரோதமானவைதான். இக்காரணத்தினால்தான் கல்ட் என்பது ஒரு கெட்ட வார்த்தையாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
நான் ஒரு கல்ட் எழுத்தாளன் என்று நானே நினைக்கும்படியாக நடந்து கொள்ளும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ராஜா. ”பெட்டியோ நாவலை என்.எஃப்.டி.யில் வாங்கிக் கொள்கிறேன், ஆனால் பதினெட்டாவது எண்ணோ எழுபதாவது எண்ணோதான் வேண்டும்” என்றார் ராஜா.
என்ன காரணம் என்றேன்.
”பதினெட்டு நீங்கள் பிறந்த தேதி. எழுபது, பெட்டியோ வெளியாகும் நேரத்தில் உங்கள் வயது” என்றார்.
நானுமே இப்படித்தான் பலரையும் ஒரு கல்ட்டாகக் கொண்டாடியிருக்கிறேன். உதாரணமாக, தஸ்தயேவ்ஸ்கி. ஞானி தியாகராஜர். சமீபத்தில் கூட தோக்கியோவில் சில ரஷ்யக்காரிகளுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த போது உரையாடல் தஸ்தயேவ்ஸ்கி பற்றித்தான் ஓடிக் கொண்டிருந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மண்ணை வாழ்நாளில் ஒருமுறையேனும் முத்தமிட வேண்டும் என்பது என் கனவு. (அங்கே மண் ஏது? பனிக்கட்டியைத்தான் முத்தமிட வேண்டும்.) இப்போது என் நெருங்கிய நண்பர் ஒருவர் மாஸ்கோவில் தனியாக இருக்கிறார். அவர் வீட்டில் போய் தங்கிக் கொண்டு, அவர் அலுவலகம் விட்டு வந்த பிறகு அவரோடு மாஸ்கோவைச் சுற்றலாம். வார விடுமுறையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போய் தஸ்தயேவ்ஸ்கி வாழ்ந்த வீட்டை ஸ்பர்ஸிக்கலாம். முத்தமிடலாம். ஆனால் நான் இப்போது இலங்கை செல்கிறேன். வந்தவுடன் தென்னமெரிக்கப் பயணம். அதற்குள் நண்பர் வேறு தேசம் போய் விடுவார். இதுதான் அவரது முதல் மாஸ்கோ விஜயம். வரும் குளிர்காலத்தில் தட்பவெப்பம் மைனஸ் முப்பதுக்குப் போகும். அதை சமாளிப்பதற்காக உடம்பைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார்.
எனக்கும் மைனஸ் முப்பதைப் பார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறது. சீலேயில் மைனஸ் மூன்று வரை பார்த்தேன். ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.
நான் நாகூர் போகும்போதெல்லாம் கொசத்தெருவில் இருபத்தைந்து வயது வரை நான் வசித்த வீட்டுக்குப் போவது வழக்கம். அந்த வீட்டில் அற்புதமான ஒரு மனுஷி வாழ்கிறார். நாற்பது வயதுதான் இருக்கும். நாங்கள் ஏழெட்டு பேர் போவோம். எல்லோருக்கும் இனிக்க இனிக்கத் தேநீர் போட்டுக் கொடுப்பார். எவ்வளவு சொன்னாலும் விட மாட்டார். மாதாமாதம் இந்த வீட்டைத் தேடி உங்கள் வாசகர்கள் வருகிறார்கள் என்று சொல்லுவார்.
இந்த முறை ராஜா போன போது அவருக்கு டிஃபன் எல்லாம் செய்து கொடுத்து உபசரித்திருக்கிறார் அந்த மனுஷி. நான் இன்னும் அவர் பெயரைக் கூட கேட்டுக் கொண்டதில்லை. இப்போது அவர் எனக்கு உறவுக்காரப் பெண் போலவே ஆகி விட்டார்.
பிறகு அங்கிருந்து தர்ஹாவுக்குப் போய், அங்கே உள்ள குளுந்த மண்டபம் எல்லாம் பார்த்திருக்கிறார் ராஜா. அதன் பிறகு தஞ்சாவூர் சென்று அங்கே உள்ள பெரிய கோவில். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் வரும் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறார் ராஜா. அதில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். நாவலில் வரும் சூர்யா அந்தக் கோவிலின் பிரம்மாண்டத்தில், யாருமே இல்லாத தனிமையில், மதிய வேளையில் சில சமயம் சுயமைதுனம் செய்வதாக நாவலில் வருகிறது.
கதை நடக்கும் காலம் 1970. இப்போதோ கோவிலில் எந்நேரம் பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஜேஜே என்றிருக்கிறது. அந்தக் கூட்டத்தைப் பார்த்து விட்டு, ‘எப்படி இவ்வளவு கூட்டத்தில் ஒருவன் சுயமைதுனம் செய்ய முடியும்?” என்று நினைத்தாராம் ராஜா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே மனித நடமாட்டமே இல்லாமல் இருக்கும் பெரிய கோவில்.
”ஸீரோ டிகிரி விழாவுக்குத் தனியாகப் போக என்னவோ போல் இருக்கிறது. நீண்ட விடுமுறை என்பதால் எல்லோரும் ஊருக்குப் போய் விட்டார்கள். சீனியும் வனவாசம். நீங்கள் வருகிறீர்களா?” என்று ராஜாவைக் கேட்டேன். வந்தார்.
எங்கேர்ந்து வர்றீங்க என்றேன்.
ஒரு ஊரின் பெயரைச் சொன்னார்.
எவ்ளோ தூரம் இங்கேர்ந்து?
நூறு கிலோமீட்டர் சாரு.