பெட்டியோ முதல் பிரதியும் நூறாவது பிரதியும் விற்பனையில்…

பெட்டியோ நூறாவது பிரதி ஏற்கனவே என்.எஃப்.டி.யில் விற்பனையில் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன் ஐந்து லட்சமாக இருந்தது இன்று 7159 டாலருக்கு விலை உயர்ந்து விட்டது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய். ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் அதிகரித்திருக்கிறது. டாலர் மதிப்புக்கு ஏற்பவும், சந்தை மதிப்புக்கு ஏற்பவும் இந்த விலை கூடும், குறையும்.

இன்று பெட்டியோவின் முதல் பிரதி வெளிவந்து இருக்கிறது.  விலை ரூபாய் இரண்டு லட்சம். 

இந்த ஐந்து லட்சம், ஆறு லட்சம், இரண்டு லட்சம் என்பதெல்லாம் உண்மையில் இந்த நாவலின் விலை அல்ல.  என்னுடைய தென்னமெரிக்கப் பயணத்துக்கான உங்கள் பங்களிப்பு.  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் இத்தனை பெரிய தொகையைக் கொடுக்க இயலாது.  ஆனால் பணம் ஒரு பிரச்சினை அல்ல என்பவர்களால் முடியும்.  ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கு சிலர் பத்து லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள்.  கிரிக்கெட் சுற்றுப் பயணம் என்றே ஒன்று உள்ளது.  வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தப் பயணத்தில் முன்னணியில் இருக்கிறார்கள்.  இந்தியாவில் எந்தெந்த ஊரில் மேட்ச் நடக்கிறதோ அங்கெல்லாம் முதல் வரிசையில் அவர்களுக்கு இருக்கை தரப்படும்.  அந்தந்த ஊர்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அவர்களுக்கு அறை வசதி செய்து தரப்படும்.  எல்லாம் சேர்த்து ஐம்பது லட்சமோ என்னவோ.  அதை விடுங்கள்.  இங்கே சென்னையில் உள்ள நடுத்தர வர்க்கமே பத்தாயிரம் ரூபாய்க்கு டிக்கட் எடுக்கிறது. குடும்பத்தில் நாலு பேருக்கு எடுத்தால் நாற்பதாயிரம்.  எல்லாம் நம் கண் முன்னேதான் நடக்கிறது. 

ஒரு ஹாலிவுட் படத்தைக் காப்பி பண்ணி எடுக்கிறார்கள்.  இயக்குனர் சம்பளம் நாற்பது கோடி.  எதற்கு?  திருடுவதற்கு.  இசையமைப்பாளரும் அவர் பங்குக்கு உலகின் பல கோடிகளிலிருந்தும் ட்யூனைத் திருடி பாட்டுப் போடுகிறார்.  அவர் சம்பளம் பத்து கோடி.  எதற்கு?  ட்யூனைத் திருடிப் போடுவதற்கு. 

ஆனால் எழுத்தாளன் மட்டும் ப்ளோஜாப் செய்ய வேண்டும்.  புதுமைப்பித்தனையே செய்ய வைத்தார்கள்.  காச நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நாற்பத்திரண்டு வயதில் செத்தார்.  சாவதற்கு முதல் நாள் அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும்.  தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்றில் அந்தக் கடிதம் இருக்கிறது.  தமிழ்ச் சமூகத்துக்கும் சக எழுத்தாளர்களுக்கும் புதுமைப்பித்தன் விடுத்த வேண்டுகோள் அது.  ”நான் இந்த மொழிக்காக உழைத்திருக்கிறேன்.  இப்போது காசநோய்க்கு மருந்து வாங்கப் பணம் இல்லை.  போஷாக்கான உணவுக்கு வழியில்லை.  எனக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை.”  இதுதான் அந்தக் கடிதம்.  ஆனாலும் தமிழ் சினிமாவில் வருவதுபோல் அந்தக் கடிதம் எழுதிய மறுநாளே அவர் உயிர் பிரிந்தது.  அதில் பாருங்கள், வாழ்நாள் பூராவும் தன் கைகளால் மகத்தான பல சிறுகதைகளை எழுதிய அந்த மனிதனால் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுத வேண்டிய கடிதத்தை எழுத கைகளில் தெம்பு இல்லை.  தன் நண்பரை விட்டுத்தான் எழுதச் சொன்னார். 

க.நா.சு.வின் நிலையும் அப்படி ஆகியிருக்க வேண்டியதுதான்.  ஆனால் மகளும் மருமகனும் அவரைக் காப்பாற்றினார்கள்.  இப்படி எழுத்தாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தது தமிழ்ச் சமூகம்.  அப்படி விரட்டி அடித்த சமூகத்தின் முக்கியப் பிரதிநிதிகள் கல்கியும் ராஜாஜியும்.  ஒண்டியாளாக அந்த இருவரையும் எதிர்த்துப் போராடியிருக்கிறார் புதுமைப்பித்தன்.  ஆனாலும் அந்த அசுரர்களை அவரால் வெல்ல முடியவில்லை.  இந்த விஷயத்தில் காந்தியே ராஜாஜிக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார்.  பாரதி உங்கள் சொத்து, காப்பாற்றுங்கள் என்று.  மகாத்மா சொல்லியும் இவர்கள் அசையவில்லை. 

ஆனால் நண்பர்களே, இப்போது நிலைமை மாறி விட்டது.  எழுத்தாளனுக்கு இங்கே சமூக அங்கீகாரம்தான் இல்லையே தவிர வாசகர்கள் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள்.  அதற்கு என் வாழ்க்கை சாட்சி. 

ராப்பா நூயி தீவு பற்றி எழுதியிருந்தேன்.  ஈஸ்டர் ஐலண்ட்.  பூமியின் கடைக் கோடியில் இருக்கும் தீவு.  அங்கே சென்ற முதல் மனிதனான ஒரு மன்னனின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேரில் சென்று பார்த்தால்தான் அந்த நாவலை முடிக்க இயலும். 

ஈஸ்டர் ஐலண்ட்

இன்னும் மூன்று ஆண்டுகளில் பத்து நாவல்களைக் கொடுத்து விட வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறேன்.  அன்பு, பெட்டியோ, ஆர்த்தோ என்ற மூன்று முடிந்து விட்டது.  அசெக்‌ஷுவல் முக்கால்வாசி முடிந்தது.  தியாகராஜாவின் கடைசிப் பகுதி பாக்கி. அதற்காக நான் கொஞ்ச காலம் தவத்தில் இருக்க வேண்டும். செய்வேன். இப்போது ரொப்பங்கி இரவுகளுக்காக நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி முடிக்க வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

ஈஸ்டர் ஐலண்ட் சிலைகள்

சக எழுத்தாளரான நண்பர் ஒருவர் தனக்கு வர வேண்டிய ராயல்டி மொத்தத்தையும் எனக்குக் கொடுத்து விட்டார்.  என் இலங்கைப் பயணத்துக்காக.  இவர்களுக்கு நான் எப்படிக் கைம்மாறு செய்யப் போகிறேன்?  இவருக்கு என் பெயரிலேயே என்.எஃப்.டி.யில் ஒரு பெட்டியோ பிரதியை வாங்கி அனுப்ப வேண்டும். 

சென்ற முறை இலங்கை சென்ற போது யாரேனும் நண்பர்கள் எனக்கு நாலைந்து தினங்கள் ஒரு ஓட்டலில் அறை போட்டுத் தர இயலுமா என்று கேட்டு ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன்.  அதிலும் இலங்கை நண்பர்கள் செய்ய வேண்டாம், இலங்கையே பண நெருக்கடியில் தவிக்கிறது, இந்திய நண்பர்கள் உதவலாம் என்றுதான் எழுதியிருந்தேன்.  அவ்வளவுதான்.  இலங்கைத் தமிழர்கள் அத்தனை பேரும் ஏதோ அவர்களின் அடிமடியில் கை வைத்து விட்டது போல் பொங்கி எழுந்து விட்டார்கள்.  டேய் திருட்டுப் பயலே, பிச்சைக்கார நாயே – இதெல்லாம் சாதாரண வசை.  எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் திட்டித் தீர்த்தார்கள்.  யார்?  சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் காலை நக்குவதற்கு ஆயிரங்களிலும் லட்சங்களிலும் பணத்தை அள்ளிக் கொட்டும் மூடர்கள்! 

அதைப் பார்த்து ரத்தம் கொதித்த என் சிநேகிதி தன் ஒருமாத சம்பளப் பணமான இருபத்தைந்தாயிரத்தை எனக்கு அனுப்பி விட்டாள்.  (பெட்டியோ ஒரு பிரதி விற்றதும் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன்.)

அவளிடம் இப்போது நான் செல்ல இருக்கும் இலங்கைப் பயணம் பற்றி நேற்று பேசிக் கொண்டிருந்தேன். 

”சம்பளப் பணத்தை எடுத்து வை, அங்கே போனதும் எனக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.”

இந்தியப் பெண்கள் நாலாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட இனம்.  நகைச்சுவைக்கும் அந்த இனத்துக்கும் ரொம்ப தூரம்.

சிநேகிதி அழ ஆரம்பித்து விட்டாள்.  ஐயோ சாரு, தயவு செய்து பணம் கேட்டு ஃபேஸ்புக்கில் எழுதாதீர்கள்.  உங்களை எல்லோரும் திட்டுவதைப் பார்த்து மனம் பேதலிக்கிறது.  ப்ளீஸ்.  ப்ளீஸ்.  ப்ளீஸ். (ஒரு பத்து ப்ளீஸ் போட்டாள்.) எழுதாதீர்கள். 

அப்புறம் அவளோடு சேர்ந்து நானும் அழ வேண்டியிருந்தது.  இனிமேல் ஜென்மத்துக்கும் பணம் கேட்டு எழுத மாட்டேன்.  காரணம், என் எழுத்தை நான் விற்க ஆரம்பித்து விட்டேன்.  நோ மோர் உஞ்சவிருத்தி.  இனிமேல் வியாபாரம்தான்.  நாவல் ஒரு பிரதி ஒரு லட்சம்.  ரெண்டு லட்சம்.  பத்தாயிரம். 

ஒரு தெலுங்கு எழுத்தாளர் இருக்கிறார்.  அவர் புத்தகத்தை அவரே பிரசுரிக்கிறார்.  விலை கிடையாது.  பின்னட்டையில் அவர் வாக்கியம்:

”சமூகத்தினரே, நான் உங்களுக்காக உழைக்கிறேன்.  உங்களுக்காக என் வாழ்வைப் பணயம் வைக்கிறேன்.  இந்தப் புத்தகம் என் ரத்தம்.  இதன் விலை லட்சங்களில் வைக்க வேண்டும்.  இதற்கு எவ்வளவு அதிக விலை கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்கள்.  அது உங்கள் கடமை.  உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள்.” 

நான்கூட மென்மையாக எழுதியிருக்கிறேன்.  இன்னும் வலுவாக, இன்னும் காட்டமாக இருக்கும் அவருடைய விலை அறிவிப்பு.

முற்றும் துறந்த ஒரு முனிவர் சொல்கிறார், ஒரு பண்பாட்டின் அடையாளம் அதன் எழுத்தாளன் என்று.  இலங்கை வாழ் தமிழ் சனங்களுக்குத் தெரியவில்லை.  போகட்டும்.   

ராஜாவிடமிருந்து ஒரு கடிதம்:

ஒரு மாபெரும் ஞானியைப் பின்தொடர்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வாசகனுக்கு நீங்கள் தரும் மதிப்பு நெகிழ்ச்சி தரக் கூடியது. உங்கள் நூல்கள் தரும் ஞானம் விலைமதிப்பு இல்லாதது. இன்னும் கூடுதலான மகிழச்சியை அனுபவிக்கவே நீங்கள் காட்டும் திசையில் பயணிக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, இறை, இரை, இன்னபிற லவ்கீகத்தை அனுபவித்துக்கொண்டு உங்களோடு பயணிக்கிறேன். ஞான குருவுக்கு நன்றிகள் கோடி.

அன்புடன்,

ராஜா.

உங்கள் எல்லோருடைய அன்புக்கும் நான் பிரதியாகத் தரக் கூடியது என் எழுத்துதான்.  தொடர்ந்து தீவிரமாக எழுதுவேன். 

நூறாவது பிரதியின் என்.எஃப்.டி. லிங்க்:

https://tinyurl.com/petiyo100thCopy

பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்குவதற்கு வினித்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.  வினித் எண்: 84384 81241