சித்த பிரமை

திருப்பூர் என்று நினைக்கிறேன். ஊர் பெயர் மறந்து விட்டது. அங்கே என் வாசகர் ஒருவர் தன் குடும்பத்தோடு என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வாசகர், அவர் மனைவி, அவர்களின் பதின்மூன்று வயது மகள். வாசகருக்கும் அவர் மனைவிக்குமான உடல்நலப் பிரச்சினைகளைக் கூறி மருந்து பெற்றிருக்கிறார். மகளுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனாலும் பாஸ்கரன் குழந்தையின் நாடியையும் பார்த்து விடுகிறேனே என்று சொல்லி சிறுமியின் நாடி பார்க்கிறார். பார்த்தால் சிறுமிக்கு சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் பிரமை என்ற உளவியல் பிரச்சினை இருப்பது தெரிய வருகிறது. ஆங்கிலத்தில் டிப்ரஷன் என்று சொல்கிறோம் அல்லவா, அதுதான் பிரமை. இது பற்றி பெற்றோரிடம் கேட்க, அவர்கள் “ஆமாம் சார், குழந்தை யாரிடமும் பேசுவதே இல்லை, எங்களிடமும் பேசுவதில்லை, பள்ளிக்கூடத்திலும் பேசுவதே இல்லை என்று டீச்சர் சொல்கிறார்கள்” என்கிறார்கள்.

அதற்கான மருந்தைக் கொடுக்கிறார் பாஸ்கரன். ஒரு மாதம் கழித்து அதே ஊருக்குச் செல்கிறார் பாஸ்கரன். என் வாசகர் தன் குடும்பத்தோடு மீண்டும் பாஸ்கரனைச் சந்திக்கிறார். சந்தித்துப் பேசும்போது என் வாசகர் குழந்தையின் பிரச்சினை தீர்ந்து விட்டது, இப்போது எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிறாள் என்று சொல்லும்போதே அழுதுவிட்டாராம்.

டிப்ரஷன் காரணமாக சமீபத்தில் ஒரு சினிமா இசையமைப்பாளரின் பதின்மூன்று வயது மகள் தற்கொலை செய்து கொண்ட துயரகரமான செய்தி பெருமளவு பேசப்பட்டது உங்களுக்குத் தெரியும். நவீன வாழ்க்கை உருவாக்கின ஒரு பிரச்சினை இந்த டிப்ரஷன். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் பதின்பருவத்துச் சிறார்கள். இது போதாது என்று இந்தியர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதற்கான ஒரு உபாயத்தைச் சொல்கிறார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. எல்லோரும் வாரத்துக்கு எழுபது மணி நேரம் உழைக்க வேண்டுமாம். நாராயண மூர்த்தியின் ஆலோசனை. விடுமுறையே இல்லாமல் எல்லோரும் தினமும் பத்து மணி நேரம் உழைக்க வேண்டும். உழைத்தால் வெகு சீக்கிரம் இந்திய மக்கள் தொகை முப்பது கோடியாகக் குறைந்து விடும்.

அதை விடுங்கள். டிப்ரஷன் என்கிற நவீன காலப் பிரச்சினைக்கும் சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

இன்னொரு நவீன கால நோய்மை நீரழிவு நோய். சர்க்கரை வியாதி. நான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்கள் இந்தப் பிரச்சினையுடன் இருப்பதை கவனிக்கிறேன். பாஸ்கரனின் மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் இதிலிருந்து முற்றாக விடுபடுவதையும் அறிகிறேன். பாஸ்கரனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலோபதி மருந்துகளை நிறுத்த வேண்டாம். கூடவே பாஸ்கரனின் மருந்துகளை உட்கொள்ளுங்கள்.

நேற்று பாஸ்கரனோடு பேசிக் கொண்டிருந்த போது நம்பிக்கையுடன் மருந்தை உட்கொண்டால் நல்ல பலன் தெரியும் என்றார். நம்பிக்கை முக்கியம் என்பது அவர் கருத்து. ஆனால் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எதன் மீதும் நம்பிக்கையே வராது. துளிக்கூட நம்பிக்கை இல்லாமல், ஏதோ சாரு சொல்கிறாரே என்றுதான் பாஸ்கரனின் மருந்தை எடுத்துக் கொண்டார். அவருக்கு வந்த கொரோனா காரணமாக, எதைச் சாப்பிட்டாலும் பெட்ரோல் நாற்றமும் வேறு பல கழிவுகளின் நாற்றமும் வந்து பெரும் அவதிப்பட்டார். எந்த மருத்துவத்தினாலும் அவருக்கு அந்த நாற்றம் போகவில்லை. அவருடைய நரம்பு மண்டலத்தின் கதி கலங்கி விட்டது போல. பாஸ்கரனின் மருந்தில் ஒரு மாதத்தில் அவருடைய பிரச்சினை பாதி தீர்ந்து விட்டது. தொடர்ந்து சாப்பிட்டால் பூரணமாக குணமாகி விடும்.

நான் அடிக்கடி சொல்லி வருவதுதான். நான் கடவுள் நம்பிக்கை அற்றவனாக இருந்த போது, கடவுள் இருந்தால் எனக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவார் என்று சொல்வது வழக்கம். ஒரு கலை உன்னதமாக இருந்தால், அது தன்னை சோதிக்க வரும் நம்பிக்கையற்றவரையும் கூட நம்பிக்கையாளராக மாற்றி விடும். அதுதான் அந்தக் கலையின் உன்னதம். சித்த மருத்துவத்துக்கும் அது பொருந்தும். நீங்கள் துளிக்கூட நம்பிக்கை இல்லாமலேயே பாஸ்கரனின் மருந்தை உட்கொள்ளுங்கள். பாஸ்கரன் தரும் மருந்து அவர் கண்டு பிடித்தது அல்ல. அகத்தியர், போகர், கோரக்கர் என்று ஒரு நூறு சித்தர்கள் கண்டு பிடித்தது. பாரம்பரிய ஓட்டத்தில் அது பாஸ்கரனிடம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே நாம் அதை அதன் மீது நம்பிக்கையே இல்லாமல் எடுத்துக் கொண்டாலும், நம்முடைய சித்தர்கள் அதை உங்கள் உடம்பிலும் மனதிலும் வேலை செய்ய வைப்பார்கள். சித்த மருத்துவத்தின் மேன்மை அது.

பாஸ்கரன் எனக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். நன்றியே சொல்லாதீர்கள் பாஸ்கரன் என்றேன். ஏனென்றால், என் சக மனிதர்கள் நோய்மையில் கிடப்பதைக் கண்டு என் மனம் வாடுகிறது. ஒரு பயிர் வாடிக் கிடந்தால் கூட வாடும் மனம் என்னுடையது. இறையின் படைப்பில் உச்சமாக இருக்கும் மானுட உடல் வாடினால் பொறுப்பேனா?

என் வீட்டுத் தோட்டத்தில் குப்பைக் கூடையை வைக்கும் இடத்தில் ஒரு செடி. குப்பைக் கூடை அதன் மீது பட்டுப் பட்டு செடியின் நாலைந்து இலைகள் வாடி விட்டன. பணிப்பெண்ணிடம் எத்தனை சொன்னாலும் திரும்பத் திரும்ப செடியின் அருகிலேயே குப்பைக் கூடையை வைத்தாள். செடியின் இடத்தை மாற்ற முடியாது. குப்பைக் கூடையை எடுத்து இன்னொரு பால்கனியில் வைத்து விட்டேன். இப்போது அந்த இலைகளின் வாட்டம் போய் செழிப்பாகி விட்டன. செடிக்கே இப்படி என்றால், மனிதர்களின் வாட்டம் என்னை எப்படி பாதிக்கும்? ”அதனால்தான் நோய்மையில் வாடும் மனிதர்களை உங்கள் பக்கம் நகர்த்துகிறேன், அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று பாஸ்கரனிடம் சொன்னேன்.

நாளை மதியம் அவரைக் காண்பதற்காக அசோக் நகர் செல்கிறேன். மதியம் பன்னிரண்டரை மணி அளவில் செல்வேன். நோயற்ற வாழ்வு வாழுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

பாஸ்கரனின் தொடர்பு முகவரியைத் தருகிறேன். கூட்டத்தைத் தவிர்க்க அவரிடம் முன்பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்.

ஞாயிறுதோறும் இந்த முகவரியில் டாக்டரை சந்திக்கலாம்:DR. பாஸ்கரன்19A, பாரதி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை – 600033 தொடர்பு எண்: +91 63796 98464

மேலும் விவரங்களுக்கு: https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA