தினமும் பத்து மணி நேரம்

ஹாய் சாரு,

நான் உங்கள் ப்ளாகைத் தொடர்ந்து வாசிப்பவன்.  சமீபத்தில் நீங்கள் இளைஞர்களின் பணி நேரம் பற்றிய நாராயண மூர்த்தியின் கருத்து பற்றி விமர்சித்திருந்தீர்கள்.  உங்கள் கட்டுரைகளில் நீங்கள் தினமும் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் படிக்கவும் எழுதவும் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள்.  இந்த எழுபது வயதிலும் உங்களால் அது சாத்தியப்படுகின்ற போது மற்றவர்களால் ஏன் தினமும் பத்து மணி நேரம் உழைக்க முடியாது?  நம்மிடம் passion இருந்தால் அது சாத்தியம்தானே? 

அகஸ்திய ராஜ்

டியர் அகஸ்திய ராஜ்,

மிகவும் சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் உங்களுக்கு பதில் சொல்லி விடலாம்.  நீங்கள் பணி புரியும் நிறுவனத்தின் முதலாளி நீங்களாக இருந்தால் ஒரு நாளில் இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்யலாம்.  வேலை செய்யவும் தோன்றும்.  காரணம், நிறுவனம் உங்களுடையது.  இதுவே வேறு ஒருவரின் நிறுவனத்தில் நீங்கள் கூலிக்கு வேலை செய்தால் மாதம் முப்பது நாளும் தினமும் பத்து மணி நேரம் வேலை செய்ய முடியாது.  மிக விரைவில் பைத்தியம் பிடித்து விடும்.  இந்தியா முழுவதையும் பைத்தியக்கார விடுதியாக மாற்றுவதற்கே நாராயண மூர்த்தி அப்படிச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.  

என் விஷயத்துக்கு வருவோம்.  என்னைப் பின்பற்றாதீர்கள் என்று எத்தனையோ முறை எழுதியிருக்கிறேன்.  என் நிறுவனத்துக்கு நானே முதலாளி.  நானே தொழிலாளி.  ஒன் மேன் ஷோ.  அதனால் நான் பன்னிரண்டு மணி நேரம் உழைக்கிறேன்.  மட்டுமல்லாமல் என் வாழ்வின் அர்த்தமே என் எழுத்துதான்.  என் குடும்பம், என் வாழ்க்கை, என் உயிர், என் நண்பர்கள் எல்லாமே எனக்கு அடுத்த பட்சம்தான்.  உங்களுக்கு உங்கள் வேலை அப்படியா?  இந்த லௌகீக வாழ்வுக்குப் பணம் தேவை.  அந்தப் பணத்தை ஈட்டுவதற்காக உழைக்கிறீர்கள்.  அவ்வளவுதான்.  மதர் தெரஸாவும் உழைத்தார்.  மற்றவர்களுக்காக.  அவருடைய ஆத்மாவுக்கு எது சந்துஷ்டியை அளித்த்தோ அதற்காக அவர் தினமும் பதினெட்டு மணி நேரம் உழைத்தார்.  அலுவலகத்தில் போய் வேலை செய்வது அப்படியா? 

ராணுவம், போலீஸ், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் இருப்பவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் பணியாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்கள்.  அவர்களை விட்டு விட்டுப் பார்த்தால் மற்றவர்கள் தினமும் ஆறு மணி நேரம் வேலை பார்த்தால் போதும்.  அதிலும் சனி ஞாயிறு விடுமுறை.  ஆனால் அந்த ஆறு மணி நேரத்தில் அவர்கள் ஃபோன் பேசக் கூடாது.  வேறு எந்த அனாவசிய வெட்டி வேலையும் செய்யக் கூடாது.  ஆறு மணி நேரமும் பம்பரமாக இயங்க வேண்டும். 

மட்டுமல்லாமல், நான் தினமும் பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்ப்பதால் என் மனைவி அவந்திகா தன் வாழ்வையே எனக்காகவும் என் எழுத்துக்காகவும் தியாகம் செய்ய வேண்டியதாயிற்று.  எங்கள் முப்பதாண்டு தாம்பத்திய வாழ்வில் இரண்டு சினிமா தான் பார்த்திருக்கிறோம்.  பதினைந்து ஆண்டுகளாக மெரினா கடல்கரை அருகில் வாழ்ந்தாலும் ஒரே ஒருமுறைதான் அங்கே சென்றிருக்கிறோம்.  முப்பது ஆண்டுகளில் ஒரு பத்து முறைதான் ஓட்டலில் உணவருந்தியிருக்கிறோம்.  இருவருமாகச் சேர்ந்து வெளியூர் சென்றதே இல்லை.  சாவு வாழ்வுக்குக் கூட நாங்கள் சேர்ந்து போனதில்லை.  மும்பையில் நடந்த என் மகன் கல்யாணத்துக்குக் கூட நான் காலையில் போய் விட்டு அன்று இரவே திரும்பி விட்டேன்.  தந்தையின் மரணச் செய்தி வந்தபோது, ”வருவேனா இல்லையா என்று தெரியாது, எழுதிக் கொண்டிருக்கிறேன், முடித்து விட்டால் வருகிறேன், இல்லையேல் பிரேதத்தை எடுத்து விடுங்கள்” என்று சொன்னவன் நான்.

இப்படிப்பட்ட என்னைப் போய் மற்றவர்களுடன் நீங்கள் ஒப்பிடலாமா?

இந்தக் காரணங்களால்தான் ”நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதினேன்.  என் எழுத்துக்காக என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் நான் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 

மேஜிக் நிகழ்ச்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.  உடம்பு பூராவும் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு பிறகு எந்தக் காயமும் இல்லாமல் வருவார் மந்திரவாதி.  கூரிய வாளால் தலையைத் துண்டாக அறுத்துப் போடுவார்.  முண்டத்தோடு நடப்பார்.  பிறகு தலை வந்து உடம்பில் ஒட்டிக் கொள்ளும்.  அதேபோல் சிலர் இரண்டு பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு மத்தியில் கயிற்றைக் கட்டி நடப்பார்கள்.  கீழே அதல பாதாளம்.  அம்மாதிரியான ஒரு மந்திரவாதி நான்.  அதையெல்லாம் சாதாரண மனிதர்கள் பின்பற்றக் கூடாது. 

உதாரணமாக, குஷ்வந்த் சிங் அவர் வாழ்ந்த நூறு வயது வரை தினமும் குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.  ஆனால் தமிழ்நாட்டில் குடிப்பவர்கள் அம்பது வயதில் செத்து விடுகிறார்கள்.  காரணங்கள் இரண்டு.  குஷ்வந்த் உயர் ரக ஸ்காட்ச் விஸ்கி குடித்தார்.  எழுபது வயது வரை தினமும் இரண்டு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தார்.  பொதுவாக சமூகம் குஷ்வந்த் குடித்ததை எடுத்துக் கொள்ளும்.  நீச்சலை விட்டு விடும். 

நான் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குவதன் காரணங்கள் பல.  சிறுவயதிலிருந்தே தியானமும் யோகாவும் செய்கிறேன்.  சிறுவயதிலிருந்தே ஏதாவது ஒரு வகையில் ஒரு மூலிகையை மருந்தாகவோ உணவாகவோ சேர்த்துக் கொள்கிறேன்.  பல ஆண்டுகள் நான் அனிஸ் என்ற ஃப்ரெஞ்ச் மது அருந்திக் கொண்டிருந்தேன்.  ஜீரகத்தினால் செய்த மூலிகை மது அனிஸ்.  பிறகு அது தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்பதால் வைனுக்கு மாறினேன். 

பத்து மணி நேர வேலைக்கு வருவோம்.  தினமும் பத்து மணி நேரம் வேலை பார்த்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகித் தற்கொலை செய்து கொள்வார்கள்.  தேசமே சின்னாபின்னமாகி விடும்.  உலகத்திலேயே ஜப்பானில்தான் தற்கொலை எண்ணிக்கை அதிகம்.  காரணம், அவர்களுடைய வேலைப்பளுவும் குடும்பத்தின் சிதைவும்தான்.  ஜப்பானிய சமூகமே தனிமை நோயில் வாடுகிறது.  அத்தனை பேருமே தனியாக இருக்கிறார்கள்.  குடும்பத்திலும் தனிமைதான்.

என் நண்பர் ஒருவர் ஒரு உணவகம் ஆரம்பித்தார்.  பகலில் அலுவலக வேலை.  இரவில் உணவக வேலை.  தினமும் பதினைந்து மணி நேரம் வேலை பார்த்தார்.  வீட்டுக்கு வரவே அதிகாலை மூன்று மணி ஆகி விடுகிறது.  மனைவியோடும் குழந்தைகளோடும் நேரம் செலவிட முடியவில்லை.  உணவகத்திலும் லாபம் இல்லை.  உணவகத்தை மூடி விட்டார்.  இப்போது மாலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய் விடுகிறார்.  எனவே, நீங்கள் பணி புரியும் நிறுவனத்துக்கு நீங்களே முதலாளி என்றாலும் அதிலும் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் பணி புரிந்தால் பணம் வரும், குடும்பம் காலி. 

எனவே நாராயண மூர்த்தி சொல்வது மிகவும் சமூக விரோதமான கருத்து என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.  சமூகத்தில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே இங்கு சமூகத்துக்கு விரோதமான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.  

சாரு