சொல் கடிகை – இரண்டாம் பாகம் – 1.குயவீதி

சொந்த ஊர் பற்றியோ, சொந்த மொழி பற்றியோ, குடும்பம் பற்றியோ, இளமை மற்றும் கடந்த காலம் பற்றியோ எனக்கு எந்தவித நாஸ்டால்ஜிக் உணர்வும் கிடையாது.  நான் வளர்ந்த நாகூர் கொசத்தெருவைப் பார்க்கும்போது மட்டும் ஒரு ஆச்சரிய உணர்வு உண்டாகும்.  (இந்தக் குப்பைக் காட்டிலிருந்தா வந்தோம்?)  தில்லி மீது ஒரு ஏக்கம் உண்டு.  ஆனால் 1980களின் தில்லி இப்போது இல்லை.  கடந்த நானூறு ஐநூறு ஆண்டுகளாக ஒரே மாதிரி இருந்த தில்லியை மெட்ரோ என்ற ரயில் பாதை மெட்ரோபாலிடன் நகரமாக மாற்றி விட்டது.  எண்பதுகளின் தில்லிக்கும் இப்போதைய தில்லிக்கும் சம்பந்தமே இல்லை.  அது வேறு.  இது வேறு.  எண்பதுகளின் தில்லியை மிக விரிவாக எக்ஸைல் நாவலில் சித்தரித்திருக்கிறேன். அப்போதெல்லாம் தில்லியில் இரவு ஒன்பது மணிக்கே (அல்லது, எட்டுக்கா?) மதுபானக் கடைகளை மூடி விடுவார்கள்.  எங்குமே பார் வசதி இல்லை.  பாருக்குத் தடை இருந்த காலம். வீட்டில் வைத்துத்தான் குடிக்க வேண்டும்.  பஞ்சாபிகளுக்கு மது ஒரு taboo இல்லை என்பதால் வீட்டிலேயே வைத்துக் குடிப்பார்கள்.  நாங்கள் – கேப்பி என அழைக்கப்படும் கே. பெண்ணேஸ்வரன், வெ.சா. எல்லாம் ரவீந்திரன் வீட்டில் குடிப்போம்.  வெ.சா.வுடன் பிணக்கு வந்தவுடன் நானும் மோகனும் கேப்பியும் மோகன் வீட்டில் குடிக்கும்போது பதினோரு மணி அளவில் சரக்கு தீர்ந்து விடும்.  அப்போது மோகனின் நண்பர்கள் யாராவது பைக்கை எடுத்துக் கொண்டு ஹரியானாவில் இருக்கும் குடுகாவ்(ங்) போய் சரக்கு வாங்கி வருவார்கள்.  அது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.  நாங்கள் மோகனோடு சரக்கு போடுவது கரோல் பாக்.  குடுகாவ்(ங்) கரோல் பாகிலிருந்து 33 கி.மீ. தூரம்.  ஆனாலும் மதுப் பிரியர்கள் – உண்மையில் அவர்களை மதுத் தியாகிகள் என்றே அழைக்க வேண்டும் – எங்களுக்காகப் போய் வாங்கி வருவார்கள்.  இப்போது என்றால், இந்தா என்பதற்குள் குடுகாவ்(ங்) வந்து விடுகிறது.  மெட்ரோ அந்த அளவுக்கு தில்லியை இணைத்து விட்டது. 

இந்த தில்லியைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் எனக்கு நாஸ்டால்ஜியா இல்லை.

ரஜினிகாந்த் பற்றி நினைக்கும்போது ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும்.  இவரால் இந்த அளவு உயரத்துக்கு வந்த பிறகு, எப்படி இவருடைய பழைய நண்பர்களோடு சகஜமாகப் பழக முடிகிறது? நான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்து விட்டதாக நினைக்கவில்லை.  வாடகை வீட்டில் வசிப்பவர்களை நான் அந்த லிஸ்டில் சேர்க்க மாட்டேன்.  நான் இப்போதும் எப்போதும் வாடகை வீடுதான்.  அதற்காக, சொந்த வீட்டில் வசிப்பவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்களாகச் சொல்ல மாட்டேன்.  உயர்ந்த நிலை என்றால், ஒரு ரஜினிகாந்த், ஒரு சுந்தர் பிச்சை, இப்படி. 

தமிழ்நாட்டைத் தவிர மற்ற சமூகங்களில் எழுத்தாளர்களும் நடிகர்களைப் போல் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.  அந்தக் கெட்ட சிந்தனையெல்லாம் நமக்கு வேண்டாம். 

ஆக, நான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையாவிட்டாலும் என்னால் என்னுடைய பழைய ஸ்கூல் நண்பர்களோடு சகஜமாகப் பழக முடியவில்லை.  அவர்களின் பேச்சோடு என்னால் பயணிக்கவே முடியவில்லை.  அவர்களின் பேச்சோடு எந்த விதத்திலும் தொடர்புபடுத்திக் கொள்ளவே முடியவில்லை.  அவர்கள் ஏதோ ஒரு மிக அந்நியமான பாஷையைப் பேசுவது போல் தோன்றுகிறது.  அவர்கள் பேசுவது எதுவுமே புரியவில்லை.  உதாரணமாக, ஒருத்தன் சொன்னான், டேய் ரவி, இப்போ என் மகன் சிங்கப்பூர்ல வேலைல இருக்காண்டா.  நிம்மதியா இருக்கேன். 

இதைக் கேட்டவுடன் எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது போல் ஆகியது.  மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்தால் இவனுக்கு ஏன் நிம்மதியாக இருக்கிறது?  கூடவே இருந்தால் அத்தனை தொந்தரவு பண்ணுகிறானா?  இப்படி அம்பது கேள்விகள் தோணும்.  இல்லாவிட்டால் இன்னொரு கேள்வி வரும்.  டேய் ரவி, வீடு கட்டிட்டீல்ல? 

அடப்பாவி, நாம் என்ன கொத்தனாரா வீடு கட்டுவதற்கு?  அல்லது, சிவில் எஞ்ஜினியரா என்று தோணும். 

இது எல்லாவற்றையும் விடக் கொடுமை, டேய் ரவி, முன்னே நீ நல்லா குண்டா அழகா இருப்பியேடா, இப்போ என்னடா இப்டி எளச்சுப் போய்ட்டே?  ஷுகரா? 

இப்படியே நூற்றுக்கணக்கான கேள்வி கேட்டு நம்மைப் பைத்தியம் ஆக்கி விடுவார்கள்.  அதிலும் எனக்கு ஷுகர் என்ற வார்த்தையைக் கேட்டால் சப்த நாடியும் ஒடுங்கி விடும்.  பொதுவாகவே எனக்கு உடல்நலன் பற்றி விசாரித்தால் அப்படித்தான் ஆகும்.  இரண்டு நாட்களுக்கு முன்னால் சித்த மருத்துவர் பாஸ்கரனைப் பார்க்கப் போயிருந்தேன் இல்லையா, அப்போது என் நண்பரின் புதல்வனிடமிருந்து ஃபோன் வந்தது.  அவனுமே எனக்கு நண்பன் மாதிரிதான்.  எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்.  அவன் அவனுடைய அப்பா மாதிரி.  அதற்கு முந்தின நாள்தான் அவன் அப்பா என்னிடம் என் ஷுகர் அளவைப் பார்த்து (140) “சாஆஆஆஆர்… நூத்தி நாப்பதாஆஆஆஆ?” என்று அலறி எனக்கு கிலியை ஏற்படுத்தியிருந்தார். 

எங்கே இருக்கீங்க அங்கிள்?

டாக்டர் கிட்டடா.

ஐயோ, உடம்புக்கு என்ன?

ஒண்ணுமில்லடா, எய்ட்ஸ் பாசிட்டிவ்.  அதனால வந்தேன்.

ஐயோ, என்ன அங்கிள் சொல்றீங்க?

(அதற்குள் என் பக்கத்திலிருந்து ஒரு பேரழகியான வாசகி கப்பென்று சிரித்து விட்டாள்.  அங்கே மருத்துவரைப் பார்க்க இருபது பேர் அமர்ந்திருந்தார்கள்.  நான் பேசியது அனைவருக்கும் கேட்டது.  அவர்களும் சிரித்ததை கவனித்தேன்.  பையனுக்குத் தெரிந்து விட்டது.)

அங்கிள், உங்களுக்கு இதே வேலையாப் போச்சு.  எதுக்கு டாக்டர்கிட்ட போனீங்க, ஒடம்புக்கு என்ன, சொல்லுங்க?

ஒடம்புக்கு ஒண்ணுமில்லடா.  சும்மா செக்கப்புக்கு வந்தேன்.

***

அதை விடுங்கள்.  என் பழைய நண்பர்களைப் பார்த்துப் பேசினால் அவர்கள் பேச்சோடு என்னால் கூடவே செல்ல முடிந்ததில்லை.  பிய்த்துக் கொண்டு வந்து விடுவேன்.

இதையெல்லாம் மீறி, எனக்கு நாலைந்து பேரை சந்திக்க வேண்டும் என்ற தீராத ஆவல் இருந்தது.  முதல் ஆள் சுகத குமார்.  தில்லி சிவில் சப்ளைஸில் நான் பணியில் இருந்த போது 1978இலிருந்து 1988 வரை என் நிழலைப் போல் இருந்த நண்பன்.  நான் சிமெண்ட் பிராஞ்சில் இருந்தேன்.  அவன் டெபுடி கமிஷனரிடம் ஸ்டெனோ.  1988க்குப் பிறகு அவனோடு தொடர்பு விட்டுப் போயிற்று.  என்னை ரெவி என்றுதான் அழைப்பான்.  மலையாளி.  பார்க்கவும் பக்கா மலையாளி போல்தான் இருப்பான்.  எல்லா மலையாளிகளையும் போலவே மலையாள உச்சரிப்பில் தமிழ் பேசுவான். 

எத்தனையோ முறை நான் தில்லிக்குப் போனேன்.  அவனை எங்கே என்று தேடுவது?  ஃபேஸ்புக்கிலும் கண்டு பிடிக்க முடியவில்லை.  சரி, சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம் என்று போனேன்.  சிவில் சப்ளைஸ் பழைய இட்த்திலிருந்து ஐடிஓவுக்கு மாறி விட்டது.  ஐடிஓவுக்குள் போனால் அடையாள அட்டை வேண்டும் அது இது என்று ரொம்பவும் அலட்டினார்கள்.  நான் சென்ற சமயத்தில் ஆதார் அட்டை வந்திருக்கவில்லை.  திரும்பி விட்டேன்.

அதேபோல் இன்னொரு நண்பன் லியாகத் அலி கான்.  நான் திருச்சியில் இருந்த காலகட்டத்தில் நண்பன் ஆனவன்.  வா போ என்று ஒருமையில்தான் அழைத்துக் கொள்வது.  நான் தில்லி சென்ற பிறகு தொடர்பு விட்டுப் போயிற்று.  இவனையும் ஃபேஸ்புக்கில் கண்டு பிடிக்க முடியவில்லை.  இவனும் நானும் கூட ஒரு மூன்று ஆண்டுகள் ரத்தமும் சதையுமாக இருந்தோம். 

சுகதனும் லியாகத் அலி கானும் இலக்கியத்துக்கு வெளியே உள்ளவர்களானாலும் அவர்களோடு என்னால் சகஜமாகப் பழக முடிந்தது. 

இங்கே ஒரு விஷயத்தை இடைச்செருகலாகச் சொல்லியாக வேண்டும்.  என்னால் சராசரி மனிதர்களோடு பழகவே முடியவில்லை.  அவர்களின் பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே அவர்களெல்லாம் பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பி வந்தவர்கள் போலவே தெரிகிறது.  அதனால் அவர்களுக்கு நானும் எனக்கு அவர்களும் எதிரிகளைப் போல் தோன்ற ஆரம்பிக்கிறோம்.  அதன் காரணமாகவே நான் சராசரி மனிதர்களை சந்திப்பதே இல்லை.  சந்திக்க நேர்ந்தாலும் தவிர்த்து விடுகிறேன்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம்.  தமிழ்நாட்டைப் பொருத்தவரையில்தான் இப்படி.  மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளில் நிலைமை இவ்வாறு இல்லை.  அங்கே உள்ள சராசரி மனிதர்கள் மனநோயாளிகளைப் போல் நடந்து கொள்வது இல்லை.   அவர்களோடு பேசுவதும் பழகுவதும் மிக இயல்பாக இருக்கிறது.   

சுகதனும் லியாகத் அலி கானும் தமிழ்நாட்டு மனநோய்மைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.  சுகதனுக்குத் தமிழ் தெரிந்தாலும் தமிழ்நாடு தெரியாது.  லியாகத் அலி கான் உர்தூ. 

மூன்றாவதாக நான் தேடிக் கொண்டிருந்த ஆத்மாவின் பெயர் துரை.  காரைக்காலில் நான் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் பியூசி (இப்போதைய பன்னிரண்டாம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது என் வகுப்புத் தோழராக நண்பரானவர்.  ர் விகுதியை கவனியுங்கள்.  அப்போது என் வயது பதினேழு.  துரையின் வயதும் பதினேழு.  ஆனால் அந்த வயதிலேயே நாங்கள் ஒருவருக்கொருவர் வாங்க போங்க என்று மரியாதையுடன்தான் அழைத்துக் கொள்வோம்.  இது மிக மிக அரிதாக நடப்பது.  என் வாழ்வில் ஒரே ஒருமுறை – துரையுடன் மட்டுமே இப்படி நடந்துள்ளது.  இதற்குக் காரணம் இப்போது யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது.  துரை அந்தப் பதினேழு வயதிலேயே ஒரு கனவானைப் போல் இருப்பார், கனவானைப் போலவே நடந்து கொள்வார். 

துரை வீட்டுக்கு நான் அடிக்கடி சென்றிருக்கிறேன்.  ஒரு நாற்காலி.  அதற்கு முன்னே ஒரு பெரிய மேஜை.  மேஜையின் இந்தப் பக்கம் இரண்டு மூன்று நாற்காலிகள்.  ஒற்றை நாற்காலியில் துரை அமர்ந்திருப்பார்.  எதிரே நான்.  அப்போதே ஒரு சி.இ.ஓ. கணக்காகத்தான் தெரியும்.  சி.இ.ஓ. என்ற வார்த்தையெல்லாம் அப்போது பழக்கமில்லை என்றாலும்.  ஆள் கொஞ்சம் உயரமும் கூட என்று நினைக்கிறேன். 

காரைக்கால் செல்லும்போதெல்லாம் துரை பற்றி நினைத்துக் கொள்வேன்.  இவரை காரைக்காலில் எங்கே போய்த் தேடுவது?  தெருப் பெயரும் ஞாபகம் இல்லை. சென்ற ஆண்டு என் ஆவணப்படத்துக்காக காரைக்காலில் மூன்று தினங்கள் தங்கியிருந்தபோது கூட மனம் துரையைத் தேடியது.  ஆனால், அவர் எங்கே இருக்கிறாரோ, அமெரிக்காவோ ஆஸ்திரேலியாவோ.  மகளுடனோ மகனுடனோ.  அப்படி நினைத்த போது ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேன்.  சொல்கிறேன்.

முந்தாநாள் துரையிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.  பதினேழு வயதில் பிரிந்தவரிடமிருந்து எழுபது வயதில் கடிதம்.  அந்தக் கடிதம்:

அன்பார்ந்த  சாரு ,

26.10.2013 தேதியிட்ட ‘ CULT  WRITER ‘  பத்தி  படித்தேன். காரைக்கால் அறிஞர்  அண்ணா  கலைக்கல்லூரியில் நாம் படித்த  காலத்தில் (1970 -71) பலமுறை உங்களைச் சந்திக்க அந்த “குய வீதி” இல்லத்திற்கு  வந்திருக்கிறேன் . அந்தத்   தெருவும்  நாகூர் -நாகப்பட்டினம்  சாலையும்  சந்திக்கும் இடத்தில் ஒரு வீட்டின் சுவற்றில்  “குய வீதி” என்று எழுதிய தகரம் பொருத்தப் பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  ‘கொசத்தெரு’என்று  அழைக்கப்படும் அந்தத் தெருவுக்கு நீங்கள்தான் “குய வீதி” என்ற பெயரைத் திருத்தி பெயர்ப் பலகையும் வைத்ததாக உங்கள் நாகூர்  நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்போது நீங்களும் ‘கொசத்தெரு’  என்று  எழுதியிருப்பதைப் படித்தபோது  பழைய நினைவுகள்  தோன்றின. உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

அன்புடன்,

இரா. துரைராஜன்,

காரைக்கால்.

இந்தக் கடிதத்தில் என்னை ஆச்சரியப்படுத்தின விஷயம், காரைக்கால்.  எப்படி ஒரு மனிதர் இந்தக் காலத்தில் தன் வாழ்நாள் முழுவதும் தன் பிறந்த ஊரிலேயே வாழ முடியும்? ஒருவேளை அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் போய் விட்டு எழுபது வயதில் சொந்த ஊருக்கு வந்து விட்டாரா?  தி.ஜானகிராமன் தில்லியில் இருந்த போது, தன் கடைசிக் காலத்தைத் தன் சொந்த ஊரில் கழிக்க விரும்பினதாகப் படித்திருக்கிறேன்.  அந்த மாதிரியா இது?  இங்கேயும் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேன்.  சொல்கிறேன்.  

அப்பாடா, கடைசியில் துரை கிடைத்து விட்டார்.  ஒரே வாக்கியத்தில் பதில் எழுதினேன்.  உங்கள் தொலைபேசி எண் என்ன?

பதில் வந்தது. 

உடனே அழைத்தேன். 

முதல் விஷயமாக அந்தக் காரைக்கால் மேட்டரைக் கேட்டேன்.  எப்படி ஒருவர் இத்தனைக் காலமாகத் தன் பிறந்த ஊரிலேயே இருக்க முடியும்? 

துரை தன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே எனக்கு பதில் விளங்கி விட்டது.  காரைக்காலிலோ பாண்டிச்சேரியிலோ வளர்ந்தவர்கள் அமெரிக்காவோ ஆஸ்திரேலியாவோ செல்ல மாட்டார்கள்.  பாண்டியும் காரைக்காலும் சொர்க்கம்.  அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் புதுச்சேரி காரைக்காலோடு ஒப்பிட்டால் நரகம்.  யார் சொர்க்கத்தை விட்டு நரகத்துக்குப் போவார்கள்?  சொல்தா (Soldier) குடும்பமாக இருந்தால் ஃப்ரான்ஸ் போவார்கள்.  அவ்வளவுதான்.  சொல்லப் போனால் ஃப்ரான்ஸை விட காரைக்காலும் புதுச்சேரியும் நல்ல ஊர்கள்.  ஆகவே, துரை என்னைப் போலவே பி.யு.சி.யில் ஃபெயிலாகி –

உடனே குறுக்கிட்டு விட்டேன்.  என்னது, ஃபெயிலா? 

அப்பாடா, எனக்கு அப்போதுதான் ஜென்ம சாபல்யமே அடைந்தது போல் இருந்த்து.  பதினேழு வயதிலேயே ஒரு கனவானைப் போல் வாழ்ந்த துரையே ஃபெயில் என்றால், நானெல்லாம் ஃபெயிலானதில் ஆச்சரியமே இல்லை.

மீண்டும் பியுசி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, டிகிரி படித்து, ஒரு பள்ளியில் இளநிலை எழுத்தராக ஆகி, அதிலேயே பலப்பல பதவி உயர்வுகளைப் பெற்று கடைசியில் கமிஷனர் பதவி வரை உயர்ந்து, அறுபது வயதில் பணி ஓய்வு பெறாமல், அறுத்தெட்டு வயது வரை பணி நீட்டிப்பு கிடைத்து, இப்போதுதான் ஆசுவாசம் அடைகிறார் துரை. 

”மகத்தான வாழ்க்கை என்று சொல்ல முடியாது.  ஆனால் மகிழ்ச்சியான, திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தேன்” என்று முடித்தார்.

இப்படி ஒரு வாழ்க்கை புதுச்சேரி, காரைக்காலில் மட்டுமேதான் சாத்தியம்.  ஃப்ரான்ஸில் கூட கிடைக்காது.  ஏனென்றால், ஃப்ரான்ஸில் நம் மகனோ மகளோ ட்ரக் அடிக்டாக ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  இப்படி பலவிதமான வாய்ப்புகள் ஃப்ரான்ஸில் உண்டு.  அது எதுவும் பாண்டியிலும் காரைக்காலிலும் இல்லை.  அமைதியான, சந்தோஷமான வாழ்வுக்கு பாண்டிச்சேரியும் காரைக்காலும் உத்தரவாதம். ஃப்ரான்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்வதைப் போல் வாழலாம்.

நான் யோசித்துப் பார்த்தேன்.  என் வாழ்க்கை எப்படி இருந்தது?  ரண களம்.  போர்க்களம்.  பங்க்கர் வாழ்க்கை.  ஜெயமோகனின் இரண்டு பேர் கதையில் வரும் அல்லவா? 

ஒரு ஆள் புதுமைப்பித்தனிடம் கேட்பான்.

எப்படி ஐயா உங்களுக்கு க்ஷயரோகம் வந்தது?

ஊரே என் முகத்தில் காறித் துப்பியது.  அதனால் வந்தது.

அந்தக் கதைதான் என் கதையும். (முந்தாநாள் கூட அப்படி ஒரு ஆத்மா என்னைக் காறித் துப்பிய படலம் நடந்தது.  போகட்டும், இப்படி வாழ்ந்தால் இப்படித்தான் என்று கடந்து வந்து விட்டேன்.)

ஆம், எனக்கு நடந்த எதுவுமே எனக்கு நடக்கவில்லை.  எது நடந்தாலும் அதைத் தூக்கி என் அப்பனின் காலடியில் போட்டு விடுவேன்.  அதனால் எனக்கு வலியே தெரிவதில்லை.  அப்பன் என்றால் கடவுள் என்று நினைத்தீர்களா?  அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் நான் சொன்னது அது இல்லை. எழுத்துதான் என் அப்பன்.  எனக்கு நடப்பது எல்லாமே எழுத்தாக மாறி விடுவதால் எதுவுமே எனக்கு வலி இல்லாமல் போய் விடுகிறது.   

என் வாழ்நாளின் மகத்தான உரையாடல்களில் ஒன்று நேற்று நடந்தது.  அதை ஒரு அதிசயம் என்றே சொல்வேன். 

மிக உறுதியுடன், மிக நிச்சயத்துடன் நான் துரையிடம் கேட்டேன்.

நீங்கள் டீட்டோட்டலர்தானே?

ஆமாம் சாரு.  காரைக்காலில் வாழ்ந்தும் டீட்டோட்டலர்.

சரி, பதினேழு வயதில் சந்தித்துப் பழகிய ஒருவரை எழுபது வயதில் சந்திக்கும்போது எப்படி இத்தனை உறுதியுடன், இத்தனை நிச்சயத்துடன் டீட்டோட்டலரா என்று என்னால் கேட்க முடிந்த்து?  அந்த அளவுக்கு துரை பதினேழு வயதில் கனவானாக இருந்தார் என்பது என் ஞாபக அடுக்கில் தங்கியிருக்கிறது.  பதின்பருவத்துக்கு உண்டான எந்த ரவுடித்தனமும் இல்லாமல் இருந்தார் துரை.

துரையின் கடிதத்திலிருந்தே தெரிந்திருக்கும்.  நான் கொசத்தெரு என்று எழுதியிருந்ததால் கடிதம் எழுதியிருக்கிறார்.  என் நூல்கள் ஒன்று கூட விடாமல் படித்திருக்கிறார்.  இருந்தாலும் என்னை ஏன் இதுகாறும் தொடர்பு கொள்ளவில்லை?  என்னுடைய நேரத்தை அவர் கடிதத்தால் வீணடிக்கக் கூடாது என்பதால்.

என் பால்ய காலத்தில் என் தெருவின் பெயர் காரணமாக எனக்கு மிகவும் தாழ்வு மனப்பான்மை இருந்தது.  அதன் காரணமாகவே கொசத்தெரு என்ற பெயரை குயவீதி என்று மாற்றினேன்.  தகரத்தால் ஆன பெயர்ப்பலகையையே அப்படி மாற்றச் செய்தேன்.  ஆனால் பிற்காலத்தில் அந்தத் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு அகன்று விட்டது.  பெயர்ப் பலகையில் மாற்றினால் போதாது, மக்களின் மனதிலிருந்து மாற்ற வேண்டும் என்ற எதார்த்தம் தெரிந்து விட்டது.  ஒரு தலித் பையன் பள்ளிக்கூடம் போக முடியவில்லை.  அவன் சாதி காரணமாக, அவனுடைய சக மாணவ மணிகளால் அவன் குத்திக் கொல்லப்படுகிறான்.  இதுதான் இன்றைய எதார்த்தம்.  ஃப்ரான்ஸில் இப்படி நடந்தால் ஃப்ரான்ஸ் தேசமே கொழுந்து விட்டு எரியும்.  சமீபத்தில் அப்படி எரிந்ததை நீங்கள் பார்த்தீர்கள்.  இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சாதி வெறி இப்போது கூடியிருக்கிறது.  இந்த நிலையில் வெறும் பெயரை மட்டும் மாற்றி என்ன ஆகி விடப் போகிறது என்றுதான் கொசத்தெரு என்று எழுதினேன். 

நேற்று துரையுடன் நீண்ட நேரம் பேசியது பெரும் சந்தோஷத்தை அளித்தது.  ஒரு சக இலக்கியவாதியுடன் பேசிக் கொண்டிருந்ததைப் போலவே இருந்தது என்பது முக்கியம்.  சராசரி மனிதர்களுக்கு உரிய எந்த நோய்க்கூறும் அவர் பேச்சில் இல்லை.  இலக்கிய வாசிப்பு ஒரு மனிதனை எத்தனை மேன்மையானவனாக உருவாக்குகிறது என்பதற்கு துரை ஒரு உதாரணம். 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படம் என்பது அசாத்தியமான விஷயம்.  ஸ்டுடியோவுக்குப் போய்தான் எடுக்க வேண்டும்.  அப்படிப் போய் எடுப்பதற்கு ஏதாவது தகுந்த காரணம் இருக்க வேண்டும்.  அதனால் துரையோடு நான் புகைப்படம் எடுத்துக் கொள்ள இயலாமல் போனது.